கற்பக தருவான கல்யாண முருங்கை | நலம் | Health | tamil weekly supplements
கற்பக தருவான கல்யாண முருங்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 நவ
2016
00:00

பெண்கள் உள்ள வீடுகளில், கல்யாண முருங்கை மரம் கட்டாயம் இருக்கும். காரணம் இது பெண்மையை மேம்படுத்த உதவும் ஒரு மூலிகை. 85 அடி வரை வளரக்கூடிய இத்தாவர இலைகள், துவர்ப்பும், கசப்பும் கலந்த சுவையுடையன. இதன் இலைகள் அகன்றும், மலர்கள் சிவப்பாக இருக்கும்.
மரத்திலும், இலையிலும் முள் மாதிரியான வடிவம் இருப்பதால் இதனை கிராமங்களில் முள்முருங்கை என்றழைக்கின்றனர். இம்மரத்தின் இலைகள் பெண்களின் உதடுகளுக்கு அக்காலத்தில், 'முருக்கிதழ் புரையும் செவ்விதழ்' என்று உவமையாக ஒப்பிட்டுள்ளனர்.
வயல்வெளிகளில் வேலிப்பயிராகவும், வீடுகளில் அலங்கார செடிகளாகவும் வளர்க்கப்படுகிறது. கல்யாண முருங்கை மரம் வளர்ந்தால், பெண்களுக்கு கருப்பை நோய் வராது என்று நம்பிக்கை நம் முன்னோர் காலத்திலிருந்து உள்ளது. பெண்கள் உடம்பில் ஓடக்கூடிய ஹார்மோனில், ஏதேனும் குறைகள் இருந்தால் அதை நிவர்த்தி செய்வதுதான் இம்மூலிகையின் முக்கிய பணி.
இலைகள், விதைகள் மற்றும் மலர்களில் எரித்ரினைன், எரிசோவைன், எரிசோடைன், எரிசோனைன், எரிசோப்பின்,ஸ்டாக்கியாடின், எரிபிடின், ஃபெருலிக் அமிலம், கஃபியிக் அமிலம், அல்பினா, ஐசோப்ளவோன், டோகோசில் ஆல்கஹால் ஆகிய வேதிப்பொருட்கள் காணப்படுகிறது. கிராமங்களில் இதன் இலையுடன் மூன்று சிறு மிளகு சேர்த்து, அரைத்து மாவோடு கலந்து அடையாக செய்து சாப்பிடுவர். இன்னும் சில இடங்களில் கல்யாண முருங்கை இலையை சாறெடுத்து, பச்சரிசியுடன் சேர்த்து புட்டு போல் செய்து, உண்கின்றனர்.
இதன் இலை சிறுநீர் பெருக்கி, மலம் சிக்கல் நீக்கி, தாய்பால் பெருக்கி, வாந்தி, வயிற்றுவலி, பித்த சுரம், உடல் வெப்பம், வாய் வேக்காடு, வயிற்றுப்புழு ஆகியவற்றை நீக்குவதுடன், மாதவிலக்கு தூண்டச் செய்கிறது. நீர் கட்டிகளுக்கும், மூட்டுவலிக்கும், மருந்தாக பயன்படுகிறது. இலையை வதக்கி இளஞ்சூட்டுடன் வீக்கங்களின் மேல் கட்டினால், வீக்கம் கரையும்.
மாதவிலக்கின் போது, கடுமையான வலி ஏற்பட்டால் கல்யாண முருங்கையின், இலையை 50 மில்லியை சாறுபிழிந்து, 10 நாள் சாப்பிட வலி தீரும். 15 மி.லி., இலைச்சாறு, ஆமணக்கு, 15 மி.லி., நெய் கலந்து இரு வேளை, மூன்று நாட்கள் குடித்தால் வயிற்றுக் கடுப்பு குணமாகும். 50 மி.லி., இலைச்சாறுடன், 20 மி.லி.,
தேன் கலந்து சாப்பிட்டால், மலக்கிருமிகள் வெளியேறும்.
இதன் இலை சாற்றை தினமும் குடித்து வந்தால், கருத்தரிக்கும்; நீர்தாரை எரிச்சல் நீங்கும், உடல் எடை குறையும். இலையை நறுக்கி, வெங்காயம், தேங்காய், நெய் சேர்த்து வதக்கி, ஐந்து முறை சாப்பிட, தாய்மார்களுக்கு பால் சுரக்கும். இலைச் சாறுடன் தேங்காய், மஞ்சள் சேர்த்து அரைத்து, பூசிக் குளித்தால் சொறி, சிரங்கு தீரும். 60 மி.லி. இலைச்சாறுடன், 15 கிராம் உப்பு சேர்த்து காலையில் அருந்தினால் பேதியாகும். ஆஸ்துமா குணமடைய, கல்யாண முருங்கை இலைச்சாறுடன் 30 மி.லி., பூண்டு சாறு சேர்த்து, கஞ்சியில் கலந்து 30 நாட்கள் சாப்பிடவேண்டும். மோரில் இலைச்சாற்றினை கலந்து குடிக்க நீர்தாரை அலர்ஜி, நீர் எரிச்சல் தீரும்.
இம்மூலிகையின் பட்டை மற்றும் இலைகள் மருத்துவ பயன் கொண்டவை. பாம்புகடிக்கு, ஈரல் கோளாறுகளுக்கு, கண் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படும்.
10 கிராம் மரப்பட்டையை, 100 மில்லி பாலில் ஊறவைத்து, தினமும் 20 மி.லி., எடுத்துக்கொண்டால் வயிற்றுக் கடுப்பு குணமாகும்.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X