இந்தியாவில் இயங்கும் ஸ்மார்ட் போன்களில் பெரும்பாலான போன்கள், அடிக்கடி அதன் டிஸ்க்கில் தேக்கி வைக்க இடம் இல்லாத நிலையில் உள்ளன என்று வெஸ்டர்ன் டிஜிட்டல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிலை வருகையில், பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள், தங்கள் போன்களில் உள்ள அப்ளிகேஷன்களை நீக்கிவிடுகிறார்கள்.
உங்கள் ஸ்மார்ட் போனில், 'storage full' என்ற செய்தி எப்போதெல்லாம் கிடைக்கிறது? என்ற கேள்விக்கு பலர், 'தினந்தோறும்' என்று பதில் தந்துள்ளனர். இப்போது வரும் சில உயர் ரக ஸ்மார்ட் போன்களில், 256 ஜி.பி. வரை கொள்ளளவு கொண்ட தேக்ககங்கள் உள்ளன. ஆனால், இந்திய ஸ்மார்ட் போன்களில் பெரும்பாலான போன்கள், 16 ஜி.பி. தேக்ககத்துடன் நின்றுவிடுகின்றன. இதனால், தொடர்ந்து அவர்களால், கோப்புகளை சேமித்து வைக்க இயலவில்லை. எனவே, “போதுமான இடம் இல்லை” ('insufficient memory') இன்று பலரின் நிலையாக உள்ளது என வெஸ்டர்ன் டிஜிட்டல் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவில், சோதனை முறையில், 1,458 பேரிடம் அவர்கள் ஸ்மார்ட் போன் தேக்ககம் குறித்து கேட்டபோது, 33% பேர், “தங்கள் போன்களில் உள்ள தேக்ககம் தங்களுக்குப் போதுமானதாக இல்லை” என்று பதில் அளித்துள்ளனர்.
இதற்குக் காரணம், இன்றைய நிலையில், ஸ்மார்ட்போன்கள், பலவகை கோப்புகளை (படங்கள் மற்றும் வீடியோக்கள் உட்பட) தேக்கி வைக்கும் இடமாக உள்ளன. 84% பயனாளர்கள், தினந்தோறும் தொடர்ந்து 4 மணி நேரம் தங்கள் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்துகின்றனர். இவர்கள் அனைவரும் தங்கள் கோப்புகளை சேமித்து வைக்க, ஸ்மார்ட் போனில் உள்ள நினைவகங்களையே பயன்படுத்துகின்றனர். சராசரியாக, ஒரு ஸ்மார்ட் போனில் 10 அப்ளிகேஷன்கள் இயங்குகின்றன. இவற்றில் முதலிடம் பெறுவது சமூக இணைய தளங்களே. அடுத்து இசை மற்றும் சில பயன்தரும் அப்ளிகேஷன்களும் இடம் பெறுகின்றன.
ஆனால், ஏன் ஸ்மார்ட் போன்கள் மட்டுமே, இது போல தேக்கக இடம் இல்லாத நிலையை அடைகின்றன? வெஸ்டர்ன் டிஜிட்டல் மேற்கொண்ட ஆய்வில், வீடியோ கோப்புகளை மிக அதிகமாகத் தரவிறக்கம் செய்வதே இதற்குக் காரணம் என அறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து போட்டோக்களும், இசை கோப்புகளும் இடம் பிடிக்கின்றன. பேஸ்புக் போன்ற சமூக இணைய தளங்கள் அனைத்தும், தற்போது வீடியோ வழி தகவல் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றன. இதுவும், ஸ்மார்ட் போனின் டிஸ்க் இடத்தைப் பிடிப்பதாக அமைகின்றன. மேலும், இந்தியப் பயனாளர்கள், மற்ற நாடுகளில் உள்ள பயனாளர்களின் பழக்கத்திற்கு மாறாக, வீடியோ பைல்களைத் தங்கள் சாதனங்களுக்கு மாற்றிக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஏனென்றால், தேவைப்படும்போது, இணையத்தில் இருந்து 'ஸ்ட்ரீமிங்' வழியில் பெறுவதற்கு அதிகக் கட்டணம் செலுத்த வேண்டியதுள்ளது. நெட்வொர்க் இணைப்பும் சீராகக் கிடைப்பதில்லை.
ஆய்வில் பங்கு கொண்ட பயனாளர்களில் 60% க்கும் மேற்பட்டவர்கள், தாங்கள் தினந்தோறும் குறைந்த பட்சம் 10 எம்.பி. அளவிலான பைல்களைப் பகிர்ந்து கொள்வதாகத் தெரிவித்தனர். இவற்றில் பெரும்பாலும் வீடியோ பைல்களே எனவும் குறிப்பிட்டுள்ளனர். பெரும் நகரங்களில் எப்போதும் நகர்ந்து கொண்டே, பயணித்துக் கொண்டே இருப்பவர்களுக்கு, ஸ்மார்ட் போன்கள் ஓர் அத்தியாவசியத் தேவையாகிவிட்டன. சிறிய நகரங்களில் இருப்பவர்களுக்கு, இவை ஓர் ஆடம்பரத் தேவையாக மாறிவிட்டன. தொலைக் காட்சி நிகழ்வுகள், ஸ்மார்ட் போன்கள் வழியே கைகளுக்குள் அடங்கிவிட்டன. ஸ்மார்ட் போன்களில் தரவிறக்கம் செய்யப்படும் கோப்புகள் குறித்த புள்ளிவிபரங்களை ஆய்வு செய்கையில், தினந்தோறும் பெரும் அளவில் வீடியோ கோப்புகள் பதியப்படுவது தெரிய வந்துள்ளது. தொலைக் காட்சி நிகழ்ச்சிகள், இசைப் பாடல்கள் மற்றும் திரைப்படங்கள் கொண்ட கோப்புகள், பயனாளர்கள் பயணிக்கையில் தரவிறக்கம் செய்யப்படுகின்றன. அல்லது பார்த்து, கேட்டு ரசிப்பதற்கென பதியப்படுகின்றன. அத்துடன், ஆடியோ கோப்புகளும், போட்டோக்களும் பெரும் அளவில் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. ஸ்மார்ட் போன்களில் பெரும்பாலானவை இணைய இணைப்பு திட்டத்தில் இருப்பதனால், பலர் தங்களுக்குள் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள இதனைப் பயன்படுத்துகின்றனர்.
இதனால், அந்த தகவல்கள் அடங்கிய பைல்களும் பெரும் அளவில் ஸ்மார்ட் போன் நினைவகத்தில் தங்குகின்றன. இணைய வழி மட்டுமின்றி, புளுடூத் மற்றும் வயர் இணைப்பு வழியாகவும், கோப்புகள் பகிரப்படுகின்றன. இதனால், தேக்கக இடம் வெகு வேகமாக நிரம்புகின்றன.
இந்த ஆய்வில் இன்னும் சில ஆர்வமூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன. போனில் தரப்பட்டுள்ள தேக்ககத்தின் அளவினை அதிகப்படுத்த வேண்டிய தேவை வரும் நாட்களில் மிக அதிகமாகத் தேவைப்படலாம். தற்போது HD, 4K, மற்றும் HDR வகை கோப்புகள் அதிகமாகப் பரிமாறிக் கொள்ளப்படுவதால், நினைவகத் திறன் கூடுதலாகத் தேவையாய் உள்ளது. இவற்றை இயக்கி ரசிக்கத் தேவைப்படும் தொழில் நுட்பத்தினைத் தற்போது வரும் பெரும்பாலான ஸ்மார்ட் போன்கள் கொண்டுள்ளதால், பயனாளர்கள், இந்த வகை பைல்களைப் பெற்று தேக்கி வைக்கவும் பகிர்ந்து கொள்ளவும் முற்படுகின்றனர்.
பயனாளர்களில் 60% பேருடைய ஸ்மார்ட் போன்களில், “out of storage “ என்ற செய்தி கிடைக்கும்போது, அவர்கள் பெரும்பாலும் தாங்கள் கொண்டுள்ள மற்ற அப்ளிகேஷன்களை நீக்குகின்றனர். இதற்குக் காரணம், பல அப்ளிகேஷன்களைத் தரவிறக்கம் செய்து சில நாட்கள் மட்டுமே பயன்படுத்திப் பின்னர் இவற்றை இயக்காமலேயே வைத்துள்ளனர். அல்லது, எப்போதும் இவற்றை இணையத்திலிருந்து இறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நிலையில், அவற்றை நீக்குகின்றனர்.
இவ்வாறு ஏற்கனவே பதியப்பட்ட அப்ளிகேஷன்களை அழிப்பவர்களுக்குத் தாங்கள் பதிந்து வைக்க விரும்பும் பைல்களை, க்ளவ்ட் ஸ்டோரேஜ் இடங்களிலும் பதிந்து வைத்து, தேவைப்படும்போது பெற்றுப் பயன்படுத்தலாம் என்பது தெரியாமலே உள்ளது.
தற்போது வரும் சில சீன நிறுவன ஸ்மார்ட் போன்களில், இரண்டாவது சிம் பயன்படுத்தப்படும் இடத்தில், மாற்றாக, மெமரி கார்ட்களையும் பயன்படுத்தும் வகையில் அமைத்து வழங்குகின்றனர்.