கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 நவ
2016
00:00

கேள்வி: எனக்கு விண்டோஸ் 10 சிஸ்டம் பயன்படுத்த எண்ணம் இல்லை. புதியதாக ஒரு லேப்டாப் கம்ப்யூட்டர் வாங்கச் சென்ற போது, விண்டோஸ் 7 சிஸ்டம் ஒரிஜினல் கிடைக்காது என்றும், நகலி தான் தர முடியும் என்று அந்த விற்பனையாளர் கூறுகிறார். மிகவும் புகழ்பெற்ற லேப்டாப் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் தனி விற்பனையகம் அது. விண்டோஸ் 10 விற்பனை செய்வதற்காக இதனைக் கூறுகிறாரா? இனி விண்டோஸ் 7 சிஸ்டம் அதிகாரபூர்வமாகக் கிடைக்காது எனவும் சொல்கிறார். தெளிவு படுத்தவும்.
ஆர். ஜே. திவ்ய கீர்த்தி, சென்னை.
பதில்:
ஆம், இனிமேல் அதிகார பூர்வ விண்டோஸ் 7 சிஸ்டத்தினை, புதிய கம்ப்யூட்டரில் பதிந்து வாங்க முடியாது. நீங்கள் வற்புறுத்தினால், நகலியைப் பதிந்து தரலாம். அது முறையல்ல. இதற்குக் காரணம், அண்மையில், மைக்ரோசாப்ட் நிறுவனம், விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8.1 சிஸ்டங்களை, கம்ப்யூட்டர் தயாரித்து விற்பனை செய்திடும் நிறுவனங்களுக்கு (Original Equipment Manufacturers (OEMs) வழங்குவதை நிறுத்திவிட்டது. எனவே, Dell and Toshiba, HP போன்ற நிறுவனங்களிடமிருந்து, மேற்குறிப்பிட்ட இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் கம்ப்யூட்டரை வாங்க முடியாது. 2009 ஆம் ஆண்டு, விண்டோஸ் 7 வெளியானது. ஏழு ஆண்டுகள் விற்பனையில் இருந்தது. விண்டோஸ் 8/8.1 நான்கு ஆண்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. 2020 மற்றும் 2023 ஆம் ஆண்டுகள் வரை, இந்த சிஸ்டங்களுக்கான சப்போர்ட் வழங்கப்படும். இருந்தாலும், புதிய கம்ப்யூட்டர்களில் இவை கிடைக்காது. விண்டோஸ் 10 சிஸ்டத்தினைப் பரவலாக்கி, அனைத்து விண்டோஸ் பயன்படுத்தும் சாதனங்களிலும், விண்டோஸ் 10 சிஸ்டத்தினையே அமைக்க மைக்ரோசாப்ட் திட்டமிடுகிறது. இனி, விண்டோஸ் 10 மட்டுமே, அதிகார பூர்வ சிஸ்டமாக மைக்ரோசாப்ட் தரும். வேறு விண்டோஸ் பதிப்புகள் கிடைக்காது.
நகலியாக விண்டோஸ் 7 பதிந்து வாங்குவதைக் காட்டிலும், விண்டோஸ் 10 சிஸ்டம் கட்டணம் செலுத்தி வாங்கிப் பயன்படுத்துவது கூடுதல் வசதிகளை மட்டுமின்றி, முழுமையான பாதுகாப்பினையும் தரும்.

கேள்வி: பல ஆண்டுகளாக பேஸ்புக் தளத்தில் அக்கவுண்ட் வைத்து பல நண்பர்களைப் பெற்றுள்ளேன். வளர்ந்த இந்த காலத்தில் சில பதிவுகள் சில நண்பர்களுக்குச் செல்ல வேண்டாம் என்று எண்ணுகிறேன். அதே நேரத்தில் அவர்களை எப்போதும் 'unfriend' செய்திட விருப்பம் இல்லை. குறிப்பிட்ட ஒரு ஸ்டேட்டஸ் தகவலை, சில நண்பர்கள் மட்டும் பார்க்காமல் ஒதுக்கி பதிய முடியுமா?
என். சிவராஜ், சேலம்.
பதில்
: பேஸ்புக் பலவிதமான டூல்கள் மூலம் நமக்கு அளப்பரிய வசதிகளைத் தருகிறது. இவற்றை நாம் தெரிந்து கொள்வதும் இல்லை. பயன்படுத்துவதும் இல்லை. அந்த வகையில் உங்கள் கேள்வியை வரவேற்கிறேன். நீங்கள் விரும்பும் வகையில் அமைத்து தகவல் பதிந்திட வழிகள் உள்ளன. இதோ இங்கு அவற்றைத் தருகிறேன்.
முதலில், பேஸ்புக் அக்கவுண்ட்டில், பிரவுசர் ஒன்றின் மூலம் நுழையவும். உங்கள் பக்கத்திற்குச் செல்லவும். தகவல் பதியத் தரப்படும் ஸ்டேட்டஸ் பாக்ஸில், உங்கள் தகவலைப் பதியவும். இனி “Post” பட்டனுக்கு இடதுபுறமாக உள்ள “Friends” பட்டனில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர் “More Options” என்பதில் கிளிக் செய்திடவும். போஸ்ட் பட்டனுக்கு இடது புறம் இருக்கும். இப்போது கிடைக்கும் கட்டத்தில் “Custom” என்பதில் கிளிக் செய்திடவும். இதனைத் தொடர்ந்து “Custom Privacy” டயலாக் பாக்ஸ் காட்டப்படும். இதில் உள்ள “Don't share this with என்ற பிரிவில், “These people or lists” என்ற பாக்ஸில், எந்த நண்பர்கள் இந்த தகவலைப் பார்க்கக் கூடாதோ, அவர்கள் பெயரைக் கிளிக் செய்திடவும். நீங்கள் டைப் செய்திடத் தொடங்கியவுடன், அந்த எழுத்து கொண்ட உங்கள் நண்பர்கள் பெயர் காட்டப்படும். இந்த பட்டியலில் இருந்து, நீங்கள் எண்ணும் நண்பர்களின் பெயர்களைத் தேர்வு செய்திடலாம். இந்த பெயர்கள் “These people or lists” என்ற பிரிவில் காட்டப்படும்.
இதே போல, உங்கள் நண்பர்களில் யார் மட்டும் பார்க்கலாமோ, அவர்கள் பெயரை மட்டும் இணைக்கலாம். மாறா நிலையில், உங்கள் நண்பர்கள் அனைவரின் பெயர்களும் இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அந்த தகவல் எனில், “Friends” பாக்ஸில் “X” என்பதில் கிளிக் செய்து, அவர் பெயரை நீக்குங்கள். பின்னர், அந்த குறிப்பிட்ட நபரை “Share this with” என்ற பிரிவில் “Share this with” என்ற பாக்ஸில் சேர்த்துவிடுங்கள். மேலே “Don't share this with” என்ற பிரிவில் பெயர்களை அளித்தது போல இதில் செயல்படவும். முடித்தவுடன் “Save Changes” என்பதில் கிளிக் செய்திடவும்.
இனி, உங்களுடைய தகவல் கட்டத்திற்குத் திரும்பவும். உங்களுடைய குறிப்பிட்ட தகவலை யார் எல்லாம் பார்ப்பார்கள் என்று உறுதிப்படுத்திக் கொள்ள, உங்கள் மவுஸை “Custom” என்ற பட்டன் மீது சற்று நகர்த்தவும். அங்கு எழும்பி வரும் கட்டத்தில், இதனைப் பார்க்கப் போகிறவர்கள் பெயர்கள் காட்டப்படும். இந்த பட்டன் தான், நாம் தொடக்கத்தில் “Friends” எனக் குறிப்பிட்ட பட்டன். நீங்கள் மாற்றங்களை மேற்கொண்டதால், அதன் பெயர் மாறியுள்ளது. இனி “Post” என்பதில் கிளிக் செய்து, உங்கள் தகவலை, நீங்கள் தேர்ந்தெடுத்த நபர்கள் மட்டும் பார்க்கும் வகையில் போஸ்ட் செய்திடவும்.

கேள்வி: என் வீட்டு பிராட்பேண்ட் இணைப்பில் வை பி வசதி தரும் ரெளட்டர் உள்ளது. எனக்கு அடுத்த வீட்டில் இருப்பவர் ஒரு நாள், தன் வீட்டில் இணையம் வேலை செய்திடவில்லை என்று கூறி, அவர் லேப்டாப் கம்ப்யூட்டருடன் என் வீட்டிற்கு வந்து, என் வை பி இணைப்பின் பாஸ்வேர்ட் வாங்கிப் பயன்படுத்தினார். தொடர்ந்து பயன்படுத்துவாரோ என்ற சந்தேகத்தில் உள்ளேன். அவ்வாறு அடுத்த வீட்டில் இருந்து பயன்படுத்த முடியுமா? முடியும் என்றால், அதனை எப்படி தடுக்கலாம்?
எஸ். மஹாலட்சுமி, சென்னை.
பதில்:
இது போன்ற சிக்கல்கள் தற்போது பலரிடம் காணப்படுகிறது. உங்கள் நண்பர் வீட்டிலும் இணைய இணைப்பு உள்ளதால், அது சரியாகி, அவர் அதை மட்டுமே பயன்படுத்துகிறார் என்று நம்பவும். அவர் பயன்படுத்த முடியுமா என்பது, உங்கள் நண்பரின் வீடு உங்கள் ரெளட்டர் அமைந்திருக்கும் இடத்திலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதைப் பொறுத்தது. இதற்குச் சிறந்த தீர்வு, உங்கள் ரெளட்டர் மோடத்தின் பாஸ்வேர்டை மாற்றிவிடுவதுதான். யாருக்கும் எந்தவித மனத்தாங்கலும் இருக்காது. உங்கள் நண்பர் உங்கள் இணைப்பினை வை பி மூலம் பயன்படுத்தும்போது, நீங்கள் பாஸ்வேர்ட் மாற்றியதைத் தெரிந்து கொள்வார். ஆனால், உங்களிடம் கேட்க மாட்டார். அடிக்கடி பாஸ்வேர்ட் மாற்றுவதும் நல்லது. எல்லாரும் எப்போதும் இணைய தொடர்பில் இருக்க விரும்புகின்றனர். ஸ்மார்ட் போனில் இணையத் தேடல் மேற்கொள்கின்றனர். எனவே, வீட்டிற்கு வரும் நண்பர்கள், விருந்தினர்களிடம் “காபி குடிக்கிறீங்களா?” என்று கேட்பதைப் போல, “வை பி பாஸ்வேர்ட் வேண்டுமா?” என்று கேட்பது வழக்கமாகி உள்ளது.

கேள்வி: நான் ஜிமெயில் அக்கவுண்ட் பல ஆண்டுகளாக வைத்துள்ளேன். என் நண்பர், “ஜிமெயில் அக்கவுண்ட்டினை வைத்திருப்பவர்கள், அவர்கள் கணக்கினை எந்த ஐ.பி. முகவரி மூலம் பார்க்கப்பட்டது என அறிந்து கொள்ளலாம்'' என்று கூறுகிறார். அதை எப்படி பார்ப்பது? இதன் மூலம் வேறு யாரும் நம் பாஸ்வேர்டைத் திருடி பார்த்திருந்தால் அதையும் அறிந்து கொள்ள முடியும் என்று கூறுகிறார். அது எவ்வாறு சாத்தியம்?
என். மைத்ரேயன், கோவை.
பதில்:
ஜிமெயில் அக்கவுண்ட்டில் உங்கள் பக்கத்திற்குச் செல்லுங்கள். வந்த மற்றும் பார்த்த அஞ்சல்கள் இருக்கும் பக்கம் காட்டப்படும் அல்லவா! இதன் வலது புறம் கீழாகச் சென்றால், “Details” என்று ஓர் இடம் இருக்கும். அதில் கிளிக் செய்தால், இன்னொரு சிறிய விண்டோ காட்டப்படும். அதில் உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட் என்று, எப்போது, எந்த ஐ.பி. முகவரியிலிருந்து அணுகிப் பார்க்கப்பட்டது என்று காட்டப்படும். உங்கள் ஐ.பி. முகவரி அல்லாமல், வேறு ஒரு முகவரி எனில், அந்த முகவரி எந்த ஊரில் இருந்து என அறியலாம். கட்டாயம் அது யார் எனத் தெரிந்து கொள்ள வேண்டும் எனில், காவல் துறை “சைபர் கிரைம்” மூலம் அணுகினால், அவர்கள் இணைய சேவை நிறுவனத்தை அடையாளம் கண்டு, யார் எனத் தெரிந்து கொள்வார்கள். என் நண்பர், தன் லேப்டாப்பிலும், மொபைல் போனிலும் ஜிமெயில் அக்கவுண்ட்டினை இயக்கி வைத்திருந்தார். லேப்டாப்பில், இந்த வசதியைப் பயன்படுத்திப் பார்க்கையில், இந்த அக்கவுண்ட் இன்னொரு இடத்திலும் திறந்து பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற செய்தி காட்டப்பட்டது. நண்பர் அது தன் மொபைல் போன் மூலம் பார்க்கப்படுகிறது என உணராமல், வேக வேகமாக பாஸ்வேர்டை எல்லாம் மாற்றினார். பின்னர், ஆற அமர யோசிக்கையில் தன் தவறை உணர்ந்து கொண்டார். இந்தப் பக்கத்தில் உள்ள “Show an alert for unusual activity” என்னும் ஆப்ஷனை டிக் செய்து வைத்துக் கொண்டால், நீங்களே திடீர் என வேறு ஒரு ஐ.பி. முகவரியில் இருந்து உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டினைத் திறந்தால், உடன் உங்களுக்கு தகவல் வரும். உங்கள் அக்கவுண்ட்டினை யாராவது திறந்து பார்த்திருக்கலாம் என்று சந்தேகம் வந்தால், உடனே உங்கள் பாஸ்வேர்டினை மாற்றவும். அல்லது இருவழி உறுதி என்ற வழியைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். இதில் பதிவு செய்த உங்கள் மொபைல் போனுக்கு, ஒவ்வொரு முறை நீங்கள் அக்கவுண்ட்டினைத் திறக்கும்போதும் குறியீடு எண் தரப்படும். அதனை உள்ளீடு செய்தாலே, உங்கள் அக்கவுண்ட் திறக்கப்படும்.

கேள்வி: விண்டோஸ் 10 இயக்கத்தில், தற்போது பாஸ்வேர்ட் பயன்படுத்தி வருகிறேன். அதற்குப் பதிலாக, மொபைல் போனில் உள்ளது போல, 'பின்' எண் பயன்படுத்தலாம் என்றும், அதனையும் மற்றவர் அறியாதவகையில் மிகக் குழப்பமாக அமைக்கலாம் என்றும் கூறுகிறார்கள். எப்படி அமைக்கலாம்? வழி காட்டவும்.
ஆர். ஜி. கண்ணகி, திருப்பூர்.

பதில்: பாஸ்வேர்டுக்குப் பதிலாக, 'பின்' பயன்படுத்தலாம். முதலில் செட்டிங்ஸ் திறக்கவும். பின் Accounts என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் விண்டோவில், Sign in Options என்பதில் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும். இதில் PIN என்பதில் கொடுத்துள்ள Add என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இங்கு தற்போது நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பாஸ்வேர்டினைக் கொடுக்க வேண்டும். ஏனென்றால், இதனை மாற்ற அனுமதி பெற்றவர் பாஸ்வேர்ட் தெரிந்திருப்பவர் மட்டுமே. இதனை உறுதி செய்தவுடன், Set up a PIN என்று ஒரு பெரிய பாக்ஸ் கிடைக்கும். இங்கு ஏற்கனவே ஒரு 'பின்' எப்படி அமைக்கப்பட வேண்டும் என வரையறை செய்யப்பட்டிருக்கும். எத்தனை கேரக்டர் குறைந்த பட்சம் மற்றும் அதிக பட்சம் இருக்க வேண்டும். சிறிய எழுத்துகள் / பெரிய எழுத்துகள் கட்டாயமாக இருக்க வேண்டுமா? தேவை இல்லையா? இலக்கங்கள் கட்டாயமாக இருக்க வேண்டுமா? இல்லையா என்பது போன்ற வரையறைகள் அமைக்கப்பட்டிருக்கும். இதனை Pin Policy எனக் கூறுவார்கள். அதன்படி புதிய 'பின்' ஒன்றை உருவாக்கி, அதற்கான கட்டத்தில் உள்ளீடு செய்திடவும். பின் அதனை உறுதி செய்திட மீண்டும் அதனை அடுத்து கீழே இருக்கும் கட்டத்தில் உள்ளீடு செய்திட வேண்டும். பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியே வர வேண்டும். அடுத்து கம்ப்யூட்டரை இயக்க முற்படுகையில், முன்பு பயன்படுத்திய பாஸ்வேர்டுக்குப் பதிலாக, புதிதாய் உருவாக்கிய 'பின்' எண்ணைத் தந்தால் போதும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X