வழக்கம்போல, என்னுடைய கிளினிக்கிற்கு, கிளம்பிக் கொண்டிருக்கையில், வடசென்னை போலீஸ் ஸ்டேஷனிலிருந்து பேசிய இன்ஸ்பெக்டர், 'உடனடியாக வர முடியுமா?' என்று கேட்டார். சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன் சென்றேன். வாசலில் காவேரி அம்மா. என்னை பார்த்ததும் அழத் துவங்கினார். எனக்கு விஷயம் சட்டென புரிந்தது. 'நிஷா எங்கே?' என்றேன். நிஷாவின் பழக்கம், 'கிளப்டோமேனியா!' அதாவது பார்க்கும் பொருள், ஆசைப்பட்ட பொருள் என, அனைத்தையும் திருடுவது. அன்று நிஷா, பக்கத்து வீட்டில் தங்க சங்கிலி ஒன்றை திருடிவிட, அவர்கள் போலீசில் புகார் தந்து விட்டனர்.
இப்பிரச்னைக்கு என்னிடம் சிகிச்சை எடுப்பதால், நிஷாவின் மருத்துவ ஆய்வுக் குறிப்புகள் அடங்கிய பைலை, இன்ஸ்பெக்டரிடம் காட்டியதும், நிஷாவை எங்களோடு அனுப்பி விட்டார். நம்மில் பலர், செய்த செயலையே திரும்பத் திரும்ப செய்து கொண்டிருப்போம். இது எண்ண சுழற்சி நோயின் அறிகுறி. கட்டுப்படுத்த முடியாத எண்ணங்கள் மூளையில் தோன்றி, அந்த எண்ணத் துாண்டுதலின்படி, ஒரு செயலை திரும்ப திரும்ப செய்வதே இந்நோயின் அறிகுறி. இதை ஆங்கிலத்தில், 'அப்சசிவ் கம்பல்சிவ் டிஸ்ஆர்டர்' என்போம். இதில் பல வகைகள் உள்ளன. இதில் ஒரு வகை தான், 'கிளப்டோமேனியா!'
ஆரம்பத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சில விசித்திரமான செயல்களைச் செய்வர். அவர்களின் எண்ணம், அவர்களை துன்புறுத்திய படியே இருக்கும். அந்த சிந்தனையில் இருந்து வெளியேற முடியாமல் கஷ்டப்படுவர். நோயின் வீரியம் அதிகமாக, அதிகமாக, பார்க்கும் பொருளை எல்லாம் திருடுவர். நோயின் தீவிரத்தைப் பொறுத்து, சிகிச்சை முறைகள் உள்ளன. நிஷாவிற்கு தேவையான சிகிச்சைகள் அளித்தேன். இன்று நன்றாக இருக்கிறார். பேங்க் எக்ஸாம் எழுதி, முடிவுக்காக காத்திருக்கிறார்.
பா.சங்கீதா
மனநல ஆலோசகர்
9841322660