தன்னுடைய, 19 வயது, கல்லுாரியில் படிக்கும் மகன் அஜயுடன், என்னைப் பார்க்க வந்தார் அந்தப் பெண்மணி. வந்தவுடன், தன் வாழ்க்கையே அஸ்தமித்து போய்விட்டதைப் போன்ற குரலில், 'கொஞ்ச நாட்களாகவே என் மகன் சரியில்லை; நான் சொல்வது எதையும் கேட்பதில்லை; குடும்ப நிலைமையைப் புரிந்து கொள்வதும் இல்லை; தனக்கு என்ன விருப்பமோ அதை கேட்டு அடம் பிடிக்கிறான்' என்றார்.தொடர்ந்து, சற்றே உணர்ச்சிவசப்பட்ட நிலையில், 'கடந்த ஒரு மாதமாக, என் மகன் கல்லுாரிக்கே போவதில்லை. விலை உயர்ந்த பைக் வேண்டும் என, கேட்டு அடம் பிடிக்கிறான். அதை வாங்கிக் கொடுத்தால் தான் போவேன் என்கிறான். அவ்வளவு விலை கொடுத்து, அந்த பைக்கை வாங்கித் தரும் அளவிற்கு, பொருளாதார நிலை இல்லை. வீட்டில் அவனோடு என்ன பேசினாலும் ஒரே சண்டை; வாக்குவாதம். வீட்டு வேலைகள், பொறுப்புகள் எதிலும் அவன் பங்கு பெறுவதில்லை. மீறிக் கேட்டால், அவன் பயன்படுத்தும் வார்த்தைகள் மோசமாக உள்ளன. என்னிடம் எந்த மரியாதையும், அன்பும் அவனுக்கு இல்லாமல் போய்விட்டது எனச் சொல்லி அழுது விட்டார்.அம்மா பேசுவதைக் கேட்ட பையன், அவன் பங்கிற்கு அம்மா மேல் புகார் பட்டியல் வாசித்தான். இவர்களுடைய கருத்தை கேட்டபின், பிரச்னை புரிந்தது.அவன் சொல்வதை பொறுமையாக கேட்ட நான், அம்மாவை வெளியில் காத்திருக்கச் சொல்லிவிட்டு, அஜயிடம் பேசினேன். எதிர்பாராமல் ஏற்பட்ட அவன் அப்பாவின் இழப்பு, அம்மாவிற்கு எத்தகைய அதிர்ச்சியை கொடுத்திருக்கும் என்பதை சொன்னேன்.
தொடர்ந்து அவனிடம், 'நீ அந்த சமயத்தில், வாழ்க்கையை முழுமையாக புரிந்து கொள்ள முடியாத பையன். அப்பாவின் இழப்பை, உன் அம்மாவால்
உன்னிடம் பகிர்ந்து கொள்ள முடிந்திருக்காது. உன் அம்மாவை, அந்த துயரத்திலிருந்து வெளியில் கொண்டு வந்தது எது தெரியுமா?
உனக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்தத் தர வேண்டும். அப்பாவின் இழப்பு, உன்னை எந்த விதத்திலும் பாதித்துவிடக் கூடாது என்ற அக்கறை தான். அதனால் தான், உன் அம்மாவால் தன்னுடைய இழப்பிலிருந்து எளிதாக வெளியில் வர முடிந்தது' என்று, நான் சொன்னவுடன், ஆரம்பத்தில் கவனமே இல்லாமல் இருந்தவன், நான் பேசப் பேச உணர்ச்சிவசப்படுவது தெரிந்தது. தொடர்ந்து, அவனுடைய பொறுப்புகளை எடுத்துச் சொன்னேன்.
கவுன்சிலிங், அஜயிடம் நல்ல மாற்றத்தை கொடுத்தது.
நளினி.சி
மனநல ஆலோசகர்,
98847 78288