இப்படியும் சில மனிதர்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 நவ
2016
00:00

சென்னை, அடையாறில் இருக்கும் சி.எல்.ஆர்.ஐ., ஊழியர்களுக்கான குடியிருப்பு வளாகம் அது. அங்கிருக்கும் மைதானத்தில் குழந்தைகள் விளையாடுவதை, மைதானத்தின் ஓரமாய், தன் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்தார், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதன்மை ஆய்வாளராக பணிபுரியும், 46 வயது ஞானபாரதி. தூரத்திலேயே நம்மைஅடையாளம் கண்டு கொண்டவர்,சட்டென சக்கர நாற்காலியை நம் பக்கமாய் திருப்பி கிளப்பினார்.

என்ன நடந்தது சார் உங்களுக்கு?
2002ம் ஆண்டு நடந்த ரயில் விபத்துல, என் முதுகுத் தண்டுவடம் பாதிச்சு, கழுத்துக்கு கீழே உணர்ச்சியே இல்லாம போயிடுச்சு. அப்போ இருந்து, தூங்குற நேரம் போக மீதி நேரம் முழுக்க, சக்கர நாற்காலியில தான் வாழ்க்கை! இந்த சூழல்ல, தண்டுவடம் பாதிக்கப்பட்டவங்க சந்திக்கிற மனச்சிக்கல்கள் புரிய ஆரம்பிச்சது. இதுக்கு ஏதாவது செய்யணுமேன்னும் தோணுச்சு. அதான், தண்டுவட பாதிப்புக்கு உள்ளானவங்களுக்கு ஆலோசனை வழங்கி, மறுவாழ்வு ஏற்படுத்துற விதமா, நானும், சில நண்பர்களும் சேர்ந்து, 2011ல இந்த அமைப்பை துவக்கினோம். தமிழகத்தை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்டவங்க, இந்த அமைப்புல உறுப்பினரா இருக்காங்க!
தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பின் தலைவராக இருக்கும் ஞானபாரதி, தற்போது ஒரு முக்கிய பிரச்னைக்காக போராடிக் கொண்டிருக்கிறார். 'தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டசிறப்பு சக்கர நாற்காலி வழங்கப்படும்'ன்னு, கடந்த ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி, 110 விதியின் கீழ், தமிழக முதல்வர் ஓர் அறிவிப்பு வெளியிட்டாங்க. ஆனா, ஓர் ஆண்டு ஆகியும் இப்போ வரைக்கும் அந்த பிரத்யேக சக்கர நாற்காலிகள் எங்களுக்கு கிடைக்கலை. ஏற்கனவே மனதளவுல துவண்டு போயிருக்கிற எங்களை, இந்த தாமதம் இன்னும் வதைக்குது' வேதனை ததும்பச் சொல்கிறார் ஞானபாரதி.

தாமதத்துக்கு என்ன காரணம்னு விசாரிச்சீங்களா?
மாவட்டத்துக்கு, 30 நாற்காலிகள்ங்கிற அடிப்படையில, மொத்தம், 960 நாற்காலிகள் தர்றதா சொல்லியிருந்தாங்க. அதுல என்னென்ன கூடுதல் வசதிகள் இருக்கணும்னு, எங்க அமைப்பு தரப்புல இருந்து, சில தேவைகளைச் சொன்னோம். ஆனா, அதை பூர்த்தி செய்ற விதமா நாற்காலிகள் வடிவமைக்கப்படலை! அதுமட்டுமில்லாம, 20 ஆயிரம் ரூபாய்க்கு ஏற்றதாகவும் அந்த நாற்காலி இல்லை. இந்த குறைகளை நிவர்த்தி செஞ்சு தரணும்னு கேட்கிறோம். இழுத்தடிச்சுட்டே இருக்கிறாங்க!
அலட்சியம் ஏற்படுத்துற வலி... அய்யோ... வெந்த புண்ணுல வேல் பாய்ச்சுற மாதிரி இருக்கு! ஏன் இப்படி சொல்றேன்னா, தண்டுவடம் பாதிக்கப்பட்டவங்க, எல்லா தேவைகளுக்கும் இன்னொருத்தரை நம்பி தான் இருக்கணும். கழுத்துக்குகீழே எந்த உணர்ச்சியும் கிடையாதுங்கிறதால மலம், சிறுநீர் வெளியேறுறதைக் கூட உணர முடியாது. எந்நேரமும் படுத்தே கிடக்கிறதால, முதுகு, தொடை பகுதிகள் அடிக்கடி புண்ணாயிடும். அந்த ரணங்கள்
தர்ற நரக வேதனை தாங்க முடியாம, நிறைய பேர் தற்கொலை பண்ணியிருக்காங்க. சகல வசதிகளோட வரப்போற பிரத்யேக சக்கர நாற்காலி மூலமா, நம்ம தேவைகளை ஓரளவுக்கு நாமளே பூர்த்தி பண்ணிக்கலாம்ங்கிற நம்பிக்கை இருந்துச்சு. ஆனா, அதிகாரிகளோட இந்த அலட்சியம், மனசை ரொம்பவே பாதிக்குது. தண்டுவட பாதிப்புக்கு உள்ளானவர்களின் சிரமங்களை, ஆதங்கத்தோடு பகிர்ந்து கொள்கிறார் ஞானபாரதி. சக்கர நாற்காலியில் இருந்து படுக்கைக்கு இலகுவாய் மாறுவதற்கு ஏதுவாக, கழற்றி மாற்றும் வசதி கொண்ட கைப்பிடி; தண்டுவட பகுதியில் அழுத்தம் தராத ஜெல் குஷன்; பயனாளிகள் பின்னோக்கி கவிழ்ந்து விடாமல் இருப்பதற்கான, 'ஆன்டி டிப்பிங் லீவர்' உள்ளிட்ட பிரத்யேக வசதிகளைக் கொண்ட சக்கர நாற்காலி தான் இவர்களின் எதிர்பார்ப்பு! ஆனால், தயாராகியிருப்பது என்னவோ, இவை எதையும் கணக்கில் கொள்ளாத, மிகச் சாதாரணமான சக்கர நாற்காலிகள்! இது குறித்து, அமைப்பு சார்பில் தமிழக முதல்வரின் தனிப் பிரிவில் புகார் அளித்தும், இதுவரை எவ்விதமான பதிலும் இல்லை என்கிறார் ஞானபாரதி.

கடந்து போன காலங்களை நினைச்சுப் பார்க்கிறதுண்டா...?
என்ன இப்படி கேட்டுட்டீங்க. எங்களை மாதிரியான ஆட்கள் சந்தோஷமா இருக்கிறது, அந்த நினைவுகள்ல தானே! திரும்பவும் அந்த வாழ்க்கையை, ஒரே ஒருநாளாவது வாழ்ந்திடணுங்கிறது தான், எங்க எல்லாருக்குமே இருக்கிற ஆசை. நாங்களும் ஒரு காலத்துல நல்லா நடந்து திரிஞ்சவங்க தானே! ப்ப்ச்ச்ச்... ஒரே நாள்ல எங்க வாழ்க்கை இப்படி தலைகீழா மாறிடுச்சு. அந்த யதார்த்தத்தை மனசளவுல ஏத்துக்கிட்டு, நாங்க மீண்டு
வந்திருக்கிறதே பெரிய போராட்டம்! இதை மனசுல வைச்சாவது, எங்க தேவைக்கு அரசு செவி சாய்க்கணும். சில நாட்களுக்கு முன் தமிழக முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், 'தமிழக மக்களாகிய நீங்கள் செய்த பிரார்த்தனைகளால் தான், தற்போது நான் மறுபிறவி எடுத்துள்ளேன்' என்று குறிப்பிட்டிருந்தார். 'தண்டுவடம் பாதிக்கப்பட்ட நாங்க, அந்த சக்கர நாற்காலி மூலமா கிடைக்கிற மறுபிறவிக்காகத் தான் காத்திருக்கிறோம்' என்கிறார் ஞானபாரதி.

ஒரே ஒரு வார்த்தையில்...: நாம்: மனிதர்களிடம் அதிகரித்து வரும் நோய்? பொறுப்பின்மை
த.ஞானபாரதி:

Advertisement

 

‘இப்படியும் சில மனிதர்கள்’ பகுதிக்கு உங்களை வியக்க வைத்த மனிதர்களைப் பற்றி எங்களுக்கு சொல்ல...044–2854 0092, pudhupayanam@dinamalar.in
மேலும் புதுப்பயணம் செய்திகள்:வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sekar KR - Chennai,இந்தியா
26-நவ-201619:09:37 IST Report Abuse
Sekar KR அரசு கொடுப்பதாக அறிவித்து விவரக்குறிப்பு படி அதை செய்யாமல் அதிலும் காசை பார்த்து அலட்சியம் ஏற்படுத்துற வலி... அய்யோ... வெந்த புண்ணுல வேல் பாய்ச்சுற மாதிரி மாதிரி தான் இருக்கும். வலியும் வேதனையும் தனுக்கு வந்தால் தான் தெரியும். இப்போதாவது தெரிந்திருக்கும் என்றுதான் நினைக்கிறேன். அரசு அலட்சியம் காண்பிக்காமல் இக்கார்களின் மன வலியை போக்கவும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X