அப்பா பொண்ணு!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

27 நவ
2016
00:00

மெல்ல படுக்கையில் புரண்ட தமயந்தி, எழுந்து, ஜன்னல் அருகே வந்த போது, அதிகாலை விடியலின் லேசான வெளிச்சத்துடன், ஈரக்காற்று முகத்தில் மோதியது. அதை அனுபவிக்க நினைத்த மனதை புறம்தள்ளி, ஹாலுக்கு வந்தாள்.
சின்னவள் இளவரசி, சுருண்டு, போர்வை குவியலுக்குள் காணாமல் போயிருந்தாள்; பெரியவள் ராணி, முட்டிக்கு மேல் நைட்டி ஏறிய நிலையில் மல்லாந்து படுத்திருந்தாள். 'ஒருக்களித்து, அடக்கமாக படு' என்று எத்தனை முறை சொன்னாலும் கேட்பதில்லை. மாறாக, 'போம்மா... நான், இன்னும் கொஞ்ச நாளைக்கு தான், இங்க இருக்கப் போறேன்; அப்புறம், கல்யாணம் செய்து, இன்னொரு வீட்டிற்கு துரத்திடுவீங்க. அது வரைக்கும் என்னை என் இஷ்டபடி தூங்க விடேன்... எப்பப் பாரு குறை சொல்லிக்கிட்டு...' என்பாள். அதனால், அவளை எழுப்பாமல், துணியை சரி செய்து, போர்வையை போர்த்தி, சமையலறை நோக்கிச் சென்றாள்.
அடுப்பை தொட்டுக் கும்பிட்டு, காபி போட்டு, மிதமான சூட்டில் ஆற்றி, கணவர் கார்த்திகேயனை எழுப்பினாள்.
அவர் காபி குடித்து முடித்ததும், ''ஏங்க, சீக்கிரம் கறிக் கடைக்கு போய், சின்னவளுக்கு ஆட்டுக்கறியும், பெரியவளுக்கு கோழிக் கறியும் வாங்கிட்டு வாங்க,'' என்றாள்.
அவர் சரி என்று கிளம்பி சென்றவுடன், அடுக்களைக்கு சென்று, தேங்காய் பர்பியும், ரிப்பன் பகோடாவும் செய்து வைத்தாள். பின், ஒரு டம்ளர் காபியுடன், வீட்டின் வாசலில் உள்ள வேப்ப மரத்தடியில் அமர்ந்தாள். காபியை மெல்ல ரசித்து குடிக்க, வேப்ப மரக்காற்று, வியர்வையை போக்கி, புத்துணர்ச்சி கொடுத்தது.
பொதுவாக, ஞாயிற்றுக் கிழமை என்றாலே, அன்றாட வேலைகளிலிருந்து விலகி, ஓய்வெடுக்கும் நாள் என்பர். ஆனால், தமயந்திக்கோ தலை கீழ்!
வார நாட்களில் அவ்வளவாக வேலை இருக்காது; ஞாயிற்றுக் கிழமையிலோ பம்பரமாக சுழல்வாள்.
அரசு ஊழியரான கணவரும், பிளஸ் 2 படிக்கும் இளவரசியும், மதிய உணவுடன் காலை, 7:00 மணிக்கு, வீட்டை விட்டு கிளம்பினால், 'ஸ்பெஷல் கிளாஸ்' முடித்து வரும் மகளையும் அழைத்துக் கொண்டு, இரவு, 7:00 மணிக்கு தான், வீடு திரும்புவர்.
சென்னையில், சட்டக் கல்லூரி ஒன்றில், விடுதியில் தங்கி படிக்கிறாள், ராணி. வெள்ளிக்கிழமை இரவு வீட்டிற்கு வந்து, திங்கட்கிழமை அதிகாலையில் கிளம்பி விடுவாள்.
அதனால், அவளுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான பலகாரங்களை ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே, செய்து விடுவாள் தமயந்தி. அன்று ஒருநாள் தான், கணவனும், பிள்ளைகளும் நிம்மதியாக உட்கார்ந்து, ஏதாவது கதைகள் பேசி, ரசித்து சாப்பிடுவர்.
ஆனால், தமயந்திக்கோ அவர்களுடன் உட்கார்ந்து பேசவோ, அரட்டை அடிக்கவோ நேரமிருக்காது. நாள் முழுக்க வேலை இருக்கும். மார்கெட்டிலிருந்து கணவர் வாங்கி வந்தவற்றை, பார்த்துப் பார்த்து, பக்குவமாக சமைப்பதில், அப்படி ஒரு சந்தோஷம் அவளுக்கு!
தமயந்தி வேப்பமரத்தடியில் உட்கார்ந்திருப்பதை பார்த்த எதிர்வீட்டு கமலா, ''என்ன தமயந்தி... இன்னிக்கு, என்ன பலகாரம் செய்தே...'' என்றாள்.
''தேங்காய் பர்பி...'' என்று தமயந்தி கூறும் போது, தூங்கி எழுந்து வெளியே வந்த ராணியைப் பார்த்து, ''என்னம்மா ராணி... காலேஜ் எல்லாம் எப்படி போகுது...'' என்றாள். அவள், ''நன்றாக போகுது ஆன்டி...'' என்றதும், ''எப்ப பாத்தாலும், உங்க அம்மா உன்னைப் பத்தி தான் பேசிக்கிட்டிருப்பா... கேட்டுக் கேட்டு, என் காது புளிச்சுப் போச்சு; அவ்வளவு பாசம் உன் மேல்,'' என்றாள், கமலா.
''யாரு எங்கம்மாவுக்கா... நீங்க வேற ஆன்டி. பாசம்ன்னு சொன்னா, அது, எங்க அப்பா தான்,'' என்றாள்.
தமயந்திக்கு இந்த வார்த்தை புதிதல்ல; சிறு வயதிலிருந்து, மகள்கள் இருவரும், அவளிடம் அவ்வளவாக ஒட்டுவதே இல்லை; அதற்கு காரணமும், அவளே தான்.
தமயந்திக்கு, சிறு வயதிலேயே, திருமணம் ஆகி விட்டது; கூட்டுக் குடும்பம். அவ்வளவாக வீட்டு வேலைகள் தெரியாத நிலையில், கார்த்திகேயன் தான் அவளுக்கு உதவியாக இருந்தான். மெல்ல வீட்டு வேலைகளை கற்றுக் கொள்ளும்போதே, ராணி, பிறந்து விட்டாள்.
பின், மூன்று ஆண்டுகள் இடைவெளியில், இளவரசி பிறந்தாள். இந்நிலையில், கூட்டுக் குடும்பம், தனி குடும்பம் ஆக, வீட்டு வேலைகளை தானும், குழந்தை வளர்ப்பை கணவனிடமும் ஒப்படைத்தாள்.
குழந்தைகள் அதிக நேரம், கார்த்திகேயனுடனே இருந்ததால், அவர்களுக்கு, அப்பாவையே அதிகமாக பிடித்துப் போனது. இருவரும் வளர வளர, தங்களது தேவைகள் அனைத்தையும், அப்பாவிடமே கேட்டு, பெற்றனர். தவிர்க்க முடியாத சமயங்களைத் தவிர, மீதி நேரம், அவர்கள் அம்மாவை நாடுவதில்லை.
சில நேரங்களில், 'அம்மா... என் நோட்டுக்கு, அட்டை போட்டுக் குடு; பாடம் சொல்லிக் குடு...' என்று கேட்கும் போதெல்லாம், 'எனக்குத் தெரியாது; போய் உங்கப்பாகிட்டேயே கேளுங்க...' என்று விரட்டி விடுவாள். இதனால், தாய்க்கும், மகள்களுக்கும் உள்ள இடைவெளி அதிகமானது.
கடந்த வாரம் கூட, 'அம்மா... நாம எல்லாரும், சினிமாவுக்கு போயிட்டு, ஓட்டலுக்கு போயிட்டு வரலாமா...' என்று இளவரசி ஆசையாக கேட்க, 'நான் வரல; வேணும்ன்னா, உங்கப்பா கூட போங்க...' என்றாள்.
உடனே, 'போயும் போயும், உன்னைக் கூப்பிட்டோம் பாரு; எங்கள சொல்லணும். நீங்க கிளம்புங்கப்பா...'என்று ராணி சொல்ல, மூவரும், பைக்கில் சினிமாவுக்கு கிளம்பிச் சென்றனர்.
அவர்கள் சென்ற பின், ராணியின் துணிகளை இஸ்திரி செய்து, மறுநாள் அவள் கிளம்புவதற்கான, எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள்.
அன்று இரவில், 'பிள்ளைங்க ஆசையா கூப்பிட்டா போக வேண்டியது தானே... ஏன் இப்படி இருக்கே...' என்று கடிந்தார், கார்த்திகேயன்.
இச்சம்பவத்தைப் பற்றி யோசித்தபடி இருக்கும் போதே, உள்ளே நுழைந்த கார்த்திகேயன், ''இந்தா... இந்த கறியை, மட்டன் பிரியாணி செஞ்சிடு; வஞ்சிர மீனையும், இறாலையும் வறுத்துடு; கோழியை குழம்பு வச்சுடு,'' என்றவர், ''பிள்ளைங்க எழுந்துட்டாங்களா... அவங்களுக்கு, சீக்கிரமா காபியும், பலகாரமும் குடு; 1:00 மணிக்குள்ள சாப்பாடு செஞ்சுடு சரியா,'' என்றார்.
''சரிங்க,'' என்று சொல்லி, 'மளமள' வென்று வேலைகளை ஆரம்பித்தாள், தமயந்தி.
மூவருக்கும் டிபன் பரிமாறினாள்; சாப்பிட்டு முடித்து, சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். பின், சமையலறையில் பாத்திரங்களை கழுவும் தமயந்தியிடம் வந்து, ''அம்மா... உடம்பு ரொம்ப சூடாயிடுச்சி; எண்ணெய் தேய்ச்சி விடு,'' என்றாள், இளவரசி.
பாத்திரங்களை துலக்கி மேடை மீது கவிழ்த்து வைத்தவள், இரு மகள்களையும் அமர வைத்து, எண்ணெய் தேய்த்து விட்டாள். பின், மதிய சமையலுக்கான வேலைகளை செய்தவளிடம், ''அம்மா... தலைக்கு சீயக்காய் தேய்ச்சி விடு,'' என்றாள், ராணி.
தமயந்திக்கு இருந்த டென்ஷனில், ''ஏண்டி... இவ்ளோ வயசாகுது இன்னும், தலைக்கு நான் தான் தேய்ச்சி விடணுமா... போய் நீங்களே தேய்ச்சி குளிங்க,'' என்றாள்.
அதற்குள், ''ஏன் தமயந்தி அவங்கள திட்டுறே... என் பொண்ணுங்களுக்கு முடி நீளமா இருக்கு; சீயக்காய் தேய்க்க கஷ்டமா இருக்காதா... கொஞ்ச தேய்ச்சி விடுமா,'' என்றார், கணவர்.
தமயந்திக்கு கோபம் எட்டிப் பார்த்தது.
''ஏன் சொல்ல மாட்டீங்க... இவ்வளவு நீள முடியை தேய்ச்சு விடுறதுக்குள்ள என் கை அசந்து போயிடுது. இதுல, இவங்க குளிச்சு முடிச்சு வரும் போது, சாப்பாடு தயாரா இருக்கணும்ன்னு வேற சொல்றீங்க... என்னால முடியாதுங்க; வேணும்ன்னா, நீங்களே உங்க பொண்ணுங்களுக்கு தலை தேய்ச்சு விடுங்க,'' என்றாள்.
''சரி... நானே தேய்ச்சு விடறேன்,'' என்று, மகள்களை, கிணத்தடிக்கு அழைத்துப் போனார். ஒரு மணையை போட்டு, அதில் ஒவ்வொருவராக உட்கார வைத்து, முடியை துணி துவைக்கும் கல்லில் பரத்தி வைத்து, சீயக்காய் தேய்த்து விட, இருவரும் குளிக்கச் சென்றனர்.
சமைத்து முடித்து, தமயந்தி இலையை போடவும், மூவரும், குளித்து முடித்து வரவும் சரியாக இருந்தது.
சாப்பாடு பரிமாறிய அம்மாவிடம், தன் முடியைக் காட்டி, ''பாரு... எங்கப்பா, எவ்ளோ அழகா தேய்ச்சு விட்டிருக்காரு... நீ என்னைக்காவது இப்படி, 'பளபள'ன்னு தேய்ச்சு விட்டுருக்கியா... நீ வேஸ்ட்; எங்கப்பா தான், உலகத்திலேயே பெஸ்ட்,'' என்றாள் ராணி.
இதைக் கேட்டதும் கண்கள் கலங்க, சிரமப்பட்டு, தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள், தமயந்தி. எல்லாரும் சாப்பிட்டு முடித்தவுடன், பாத்திரங்களை எடுத்து ஒழுங்கு படுத்தியவளுக்கு, கண்ணீரை அடக்க முடியவில்லை. சட்டென்று, கிணற்றடிக்கு சென்றவள், குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள்.
ஏதேச்சையாக அங்கு வந்த கார்த்திகேயன், மனைவி அழுவதை பார்த்தவருக்கு, சாப்பிடும் போது, ராணி சொன்னதும், உடனே, தமயந்தியின் கண்கள் கலங்கியதும் நினைவுக்கு வர, அவள் அருகில் அமர்ந்து, ''ஏதோ பசங்க, விளையாட்டாப் பேசினதுக்குப் போய், அழறியே...'' என்றார்.
அவள் பதில் சொல்லாமல் விசும்புவதைப் பார்த்து, ''ஆனாலும், நீயும் தப்பு செய்ற... உன் பொண்ணுங்க மேல எவ்வளவோ பாசம் வச்சிருக்கிற... அவர்களுக்கு வித விதமா துணி வாங்கறதும், சமைச்சுப் போடறதும், ஒரு வேலையும் செய்ய விடாம, எல்லாத்தையும், இழுத்துப் போட்டு செய்யறே... ஆனா, அவங்களா ஆசைப்பட்டு ஏதாவது கேட்டா, 'உங்கப்பாவ போயி கேளு'ன்னு விரட்டி விட்டுறே... அதனால தான், அவங்க, உன்னை விட, என் மேல ரொம்ப பாசமா இருக்காங்க,'' என்றார்.
மெல்ல நிமிர்ந்து, கண்களை துடைத்து, கணவரை உற்றுப் பார்த்தவள், ''உங்க பொண்ணு, என்னை, 'அம்மா வேஸ்ட்'ன்னு சொன்னதுக்காக, அழலீங்க; 'உலகத்திலேயே எங்கப்பா தான், 'பெஸ்ட்'ன்னு சொன்னாளே... அந்த சந்தோஷத்துல அழறேன்,'' என்றாள்.
பெற்றோரைத் தேடி வந்த மகள்கள், அம்மா பேசுவது ஒன்றும் புரியாமல், அப்படியே நின்று விட்டனர்.
''என்கிட்ட நல்லா பேசிட்டு, வயலுக்கு போன எங்கப்பா, ஒரு மணி நேரத்துல, பாம்பு கடிச்சு பிணமா வந்தாரு; அப்ப, எனக்கு வயசு, 15. நான், எவ்ளோ துடிச்சுப் போனேன் தெரியுமா... இந்த உலகத்திலேயே, ரொம்ப மகத்துவமானது அப்பா - அம்மா பாசம் தான். ஆனா, கடவுள், எங்கப்பாவ என்கிட்ட இருந்து, பாதியிலேயே பறிச்சிட்டாரு.
''நமக்கு திருமணமாகி, குழந்தைங்க பொறந்ததும், உங்க கண்ணுல தெரிஞ்ச அப்பா பாசத்தை பார்த்ததும், எங்கப்பா ஞாபகம் தான் வந்தது. அப்ப இருந்து, நம்ம பொண்ணுங்க மேல நீங்க காட்டுற பாசத்தை பார்த்து, ரசிக்க ஆரம்பிச்சேன். அதற்காகத் தான், நான் விலகி நின்னேன்.
''இன்னிக்கு நீங்க, 20 வயசு பொண்ணுக்கு, தலை தேய்ச்சி விட்டீங்களே... அத பார்த்து, சந்தோஷத்தில அழாம இருக்க முடியலீங்க,'' என்று கூறி, மீண்டும் அழ ஆரம்பித்தாள்.
அப்போது, மகள்கள் இருவரும், ஓடி வந்து, 'எங்களை மன்னிச்சிடுங்கம்மா...' என்று, தாயைக் கட்டி, 'உன் மனசு புரியாம, உன்னை ரொம்ப காயப்படுத்திட்டோம்...' என்றனர்.
மகள்கள் இருவரையும் அணைத்து, முத்த மழை பொழிந்த தமயந்திக்கு வார்த்தை வரவில்லை.
கார்த்திகேயனின் மனதோ, வேறு விதமாக இருந்தது.
'தன், 15 வயதில் இறந்து போன அப்பாவை நினைத்து, 40 வயதில், ஒரு பெண் அழ முடியுமா... இத்தனை வருஷங்களா தன் வாழ்க்கை ஓட்டத்தில் தன் அப்பாவின் பாசத்தையும், அனுபவித்து வாழ்ந்து வந்திருக்கிறாளே... இதற்கு என்ன காரணம்...
'இவள் அப்பா, இவள் மேல் வைத்திருந்த அன்பு, பாசம், அக்கறை தான் காரணம். இப்படி ஒரு பொண்ணு மனச ஜெயிக்கிற அப்பாவா, என்னால வாழ முடியுமா...' என யோசித்த போது, முடியும் என்று தோன்றியது.
மனைவியின் தோளைத் தொட்டு, ''போதும் தமயந்தி நீ அழுதது... இனிமே, நீ அழக் கூடாது. இத்தனை வருஷத்துல, நீ இதப்பத்தி, என்கிட்ட பேசினதே இல்ல; அது சரி... நீ பேசியிருந்தாலும், நான் என்ன சொல்லியிருக்கப் போறேன்... 'ஊர், உலகத்துல யாருடைய அப்பாவும் இறந்து போகலையா... வேலையை பாரு'ன்னுருப்பேன்.
''ஆனா, இப்ப உன் மனசு எனக்கு நல்லா புரியுது. நான் இப்ப இருக்கறதை விட, இன்னும் நல்ல அப்பாவா இருப்பேன். இது, என் மகள்கள் மேல சத்தியம்,'' என்றார். அவரது கையை அன்புடன் பற்றிய ராணியும், இளவரசியும், 'அம்மா... நீ ஆசப்பட்ட அப்பா, பொண்ணு பாசத்தை, நாங்க, உனக்கு தருவோம்; நீ இனிமே, அதை சந்தோஷமா, சிரிச்சிட்டே பார்க்கணும்; அழுதுக்கிட்டே இல்ல...' என்றனர்.

அனிதா ராஜேந்திரன்
வயது: 35
சொந்த ஊர்: புதுச்சேரி
படிப்பு: 10ம் வகுப்பு; இவர் எழுதிய முதல் சிறுகதை இது. ஆறுதல் பரிசு கிடைத்திருப்பது, நிறைய எழுத வேண்டும் என்ற ஊக்கத்தை அளித்திருப்பதாக கூறுகிறார்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (17)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar Sivam - alain,பிரான்ஸ்
16-டிச-201617:22:11 IST Report Abuse
Kumar Sivam இந்த கதை மனதை நெகிழ வைத்து விட்டது ......வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
Anees Umar - kadayanallur,இந்தியா
03-டிச-201617:10:11 IST Report Abuse
Anees Umar சூப்பர் ஸ்டோரி. கீப் இட் UP
Rate this:
Share this comment
Cancel
kutti - chennai,இந்தியா
03-டிச-201607:36:40 IST Report Abuse
kutti 20 வயது பெண்களை, தங்கள் மகள்களாக இருப்பினும் இடைவெளி காக்க வேண்டும் . பெண் தந்தை தலையை தேய்ப்பது ஏற்க முடிகிறது , அதுவும் தள்ளாத வயதில் . இதை ஏற்க முடியவில்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X