ஏமாற்றும் ஆண்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது? | நாயகி | Nayaki | tamil weekly supplements
Advertisement
ஏமாற்றும் ஆண்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 நவ
2016
00:00

மழையை பிடிக்காதவர்கள் யார்; மழைக்குப் பிடிக்காதவர்கள் தான் யார்; காதல்... மழை போல எல்லாரையும் அன்பால் நனைக்கிறது. கடந்த தலைமுறை இளைஞர்கள், காதலிக்க சொல்லி, 'பூ' நீட்டினர். கால மாற்றத்தால், இன்றைய இளைஞர்கள், அருவாளை நீட்டுகின்றனர். சுரேஷ் என்ற வாலிபரால், ஆசிட் ஊற்றி கொல்லப்பட்ட காரைக்கால் நந்தினி; சக மாணவன் உதயகுமாரால், கத்தியால் வெட்டி சாகடிக்கப்பட்ட கரூர் சொனாலி; தூத்துக்குடி தேவாலயத்தில், ரீகன் என்பவனால் வெட்டி சாய்க்கப்பட்ட பிரான்சினா; ராம்குமாரால், நுங்கம்பாக்கத்தில் ரத்த வெள்ளத்தில் மிதந்த சுவாதி; தீ வைத்து கொளுத்தப்பட்ட, விழுப்புரம் நவீனா; கட்டட தொழிலாளியால் மரணமடைந்த, கரூர் கூடலூர் பாரதி ப்ரியா; மார்பிங் புகைப்படத்தால் இறந்த, சேலம் வினுப்ரியா என, காதலின் பெயரில், கொல்லப்பட்ட இளம்பெண்களின் எண்ணிக்கை இன்று வரை நீள்கிறது. காதலித்த பெண்ணுக்கு, இப்படி மோசமான பரிசு கொடுக்கும் மனநிலை, சமீபகாலமாக இளைஞர்களிடம் வளர்ந்து வருகிறது என்பதற்கான எடுத்துக்காட்டு தான், கடந்த மூன்று மாதங்களில் நடந்த, இந்த மோசமான படுகொலைகள். இளைஞர்களின் மனதில் இப்படி ஒரு விஷ விதை எப்படி வளர்ந்தது... இறந்த பெண்களின் வயது, 25க்குள் இருப்பது, வேதனையானது. எந்த பிரச்னைக்கும் இரண்டு கோணம் இருக்கும். இக்கொலைகளுக்கு ஆண்கள் மட்டும் தான் காரணமா... அல்லது மறைமுகமாக பெண்களும் காரணம் ஆகின்றனரா என்பதை ஆராய்கின்றனர், நம் இளம் நாயகியர்...

ஆண், பெண் பேதமில்லாமல், ஒரே நேரத்தில், இரண்டு பேரை காதலிக்கும் கலாசாரம், தமிழகத்தில் பெருகி வருகிறது. இதில் பெண்களின் எண்ணிக்கை அதிகம். தான் உயிருக்கு உயிராக காதலிக்கும் பெண், தன்னை விட்டுப் போவதை எப்போதும் தாங்க முடியாது. உளவியல் அடிப்படையில், இளகிய மனமுடையவரால் அந்த துயரம் தாங்க முடியாமல் தான், பலர் போதையின் பாதைக்கு செல்கின்றனர்; சிலர், தாடி வைத்து அலைகின்றனர். சோகம் எல்லை மீறும் போது தான், சில விபரீதங்கள் நடக்கின்றன. அதே நேரத்தில், பெண்கள் பக்கம் இருக்கும் தவறுகளையும் சரி செய்ய வேண்டும். அது குறித்த புரிதல், இருதரப்பிலும் வந்தால் மட்டுமே, இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க முடியும்.

து.ஹரிதா, மூன்றாம் ஆண்டு, பி.பார்ம், பி.எஸ்.ஜி., காலேஜ் ஆப் பார்மசி, கோவை

மாறிவரும் வாழ்க்கை முறை தான், இதற்கு முக்கிய காரணம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. கூட்டுக் குடும்ப முறை சிதைந்த போது, தோளில் சாய்ந்து அழுவதற்கான உறவு, பெண்களுக்கு தேவைப்பட்டது. சிலர், அதை தவறாக புரிகின்றனர். இது ஒருபுறம் என்றால் பெண் தனக்கான கருத்தை சொல்வதற்கு கூட அனுமதிக்காத ஆணாதிக்கம், அவளை எப்படியாவது முடக்கவே பார்க்கும். ஆண்கள் ஏமாற்றி விட்டு போகும் போது, இதுபோன்ற கொலைகள் நடக்காமல் இருப்பதையும், இதே சூழல் அவர்களுக்கு நேரும் போது, கொடூரங்கள் நிகழ்வதும், இதையே எடுத்துக்காட்டுகிறது. குடும்பத்திலிருந்து இந்த மாற்றங்கள் வர வேண்டும். கடுமையான சட்டங்கள் வந்தால் மட்டும் போதாது; அதை தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போது தான், மனித உயிர்களின் மதிப்பு தெரியவரும்.
பி.மதுமிதாஸ்ரீ, சின்னத்திரை வசனகர்த்தா, சென்னை

குடும்ப உறவு, கல்வி நிறுவனங்கள், உடன் வேலை பார்க்கும் அலுவலகங்கள் இவை இல்லாமல், ஒரு பெண் ஒரு ஆணை எப்படி புரிந்து கொள்வாள். அதற்கான சந்தர்ப்பங்கள் எப்படி அமையும். பெண்கள் பின் செல்லாமல், அவர்களின் கவனத்தை ஈர்க்க முடியாது என்பது எதார்த்தம் தான். அதற்காக, டார்ச்சருக்கும், கவனத்தை ஈர்ப்பதற்குமான வேறுபாட்டையுமா இளைஞர்கள் உணரவில்லை. இதனால், பல பெண்கள், வீட்டை விட்டு வெளியில் வரும் ஒவ்வொரு வினாடியையும், வேதனையில் செலவிடுகின்றனர்.காதலை ஏற்கவில்லை எனில், ஆசிட் அடித்து விடுவோம் என, அனுதினமும் பெண்கள் மிரட்டப்படுகின்றனர். காதலுக்கும், இனக்கவர்ச்சிக்குமான வேறுபாட்டை, இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான், தான் செய்வது சரியா, தவறா என்பது புரியும். ஒரு பெண்ணின் கவனத்தை ஈர்த்து, அவள் மனதில் இடம் பெற, ஆயிரம் வழிகள் உண்டு. மனதை புரிந்து கொள்ளாதவனை, தன் வாழ்க்கை துணையாக எப்படி ஏற்பாள்... முதலில் மனதை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்; காதலை அப்புறம் பார்த்து கொள்ளலாம். இது புரியாமல் தான், பலருடைய கோபம், கொலை வெறியாக மாறுகிறது. அவர்களுக்கு மனநல ஆலோசனை தான் உடனடி தேவை.
டாக்டர்.பு.நாகமணி, அப்பல்லோ மருத்துவமனை, நுங்கம்பாக்கம்

பெண், தனக்கு சமமானவள் என்பதை பெரும்பாலான ஆண்கள் ஏற்பதில்லை. இந்த எண்ணம், கிராமப்புற இளைஞர்களிடம், 75 சதவீதமும், நகர்ப்புற இளைஞர்களிடம், 60 சதவீதம் உள்ளது. இந்த எண்ணம் தான், எல்லா பிரச்னைக்கும் அடிப்படை. கொலைகள் குறித்து, விலாவாரியாக செய்தி வெளியிடும் ஊடகங்கள், அத்தோடு நிறுத்தி கொள்கின்றன. சம்பந்தப்பட்ட இளைஞர் கைது செய்யப்பட்டு, தண்டனை கிடைப்பது வரை செய்திகள் வெளியிட்டால் மட்டுமே ஆண்களுக்கும் பயம் வரும். பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படும். ஆனால், நடைமுறையில் அப்படி இல்லை. இதை விட, சென்சிடிவான செய்திகள் கிடைத்தால், பழைய செய்திகள் அப்படியே கிடப்பில் போகின்றன. முன், பெண், தன் காதலை சொல்வதற்கான சுதந்திரம் கூட இல்லாமல் இருந்தது; இப்போது அப்படி அல்ல. பழகி கொண்டிருக்கும் இளைஞன், வாழ்க்கைக்கு ஒத்து வரவில்லை என்றால் அதை நிராகரிக்கும் துணிச்சல் பெண்களுக்கு வந்துள்ளது. அதை ஏற்று கொள்ளும் மனப்பக்குவம் தான் ஆண்களுக்கு இல்லை. அந்த மனோபாவம் தான், கொலை வரை செல்கிறது. இதை உடனடியாக மாற்ற முடியாது. ஆண்களுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சிறு வயதில் இருந்தே, ஆணும், பெண்ணும் சமம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அந்த மாற்றங்கள் மட்டுமே இதுபோன்ற கொடுமைகளுக்கான நிரந்தர தீர்வு.
பா.சங்கீதா, மனநல நிபுணர், சென்னை


வன்முறை, காதலுக்கு மட்டுமல்ல, எதற்கும் தீர்வாகாது. வற்புறுத்தி, மிரட்டி, அதன் பெயரில் நடந்தால், அதற்குப் பெயர் காதல் அல்ல. இது, ஆணாதிக்க சமூகம் தான் என்பதில் எந்த மாற்றமுமில்லை. அதே நேரத்தில் பெண்களிடம் பிரச்னைகள் இல்லாமல் இல்லை. அதற்காக கொலை செய்ய துணிவது, காட்டுமிராண்டித்தனம். காதல், காமம், உறவு என்பதை எல்லாம் தாண்டி, உயிரின் மதிப்பு, மற்ற எல்லாவற்றையும் விட மேலானது. மற்ற எவரையும் விட, ஒரு பெண்ணுக்கே உயிரின் மதிப்பு அதிகம் தெரியும். பெற்று வளர்த்தெடுக்கும் பெண்களால் தானே இயங்குகிறது இந்த உலகம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X