கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2016
00:00

கேள்வி: என் கம்ப்யூட்டரில் மால்வேர் உள்ளது போலத் தெரிகிறது. சில வேளைகளில், கைப்பற்றப்பட்டு, தகவல்கள் பயணப்படுத்தப்படுவது போலவும் உணர முடிகிறது. ஆனால், வழக்கமாக நான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். என் கம்ப்யூட்டர் இன்னொருவரால், மால்வேர் புரோகிராம் மூலம் கைப்பற்றப்பட்டுள்ளது என எப்படி அறிவது?
ஆர். சிவமுருகன், புதுச்சேரி.
பதில்
: சில வைரஸ் அல்லது மால்வேர்கள் நம் கம்ப்யூட்டரைக் கைப்பற்றியவுடன், நம்மால் கம்ப்யூட்டரை இயக்க முடியாதபடி செய்து, தகவல்களைத் திருடும். சில நாம் செயல்படுகையில், கொஞ்சம் கொஞ்சமாக நம் தகவல் பரிமாற்றத்தைக் கண்காணித்துப் பின் திருடும். இவற்றின் செயல்பாடுகளில் ஒரே சீரான நிலையைக் காண இயலாது. இருப்பினும், கீழே தரப்பட்டுள்ள செயல்பாடுகள், நீங்கள் கம்ப்யூட்டரை இயக்கும்போது தென்பட்டால், உங்கள் கம்ப்யூட்டர் மால்வேர் புரோகிராம்களால் தாக்கப்பட்டு, கைப்பற்றப்பட்டுவிடும் நிலையில் உள்ளதாகக் கொள்ளலாம்.
1. நீங்கள் பயன்படுத்தும் பிரவுசர், நீங்கள் விரும்பாமலேயே, நீங்கள் அமைக்காத முகவரி உள்ள தளம் ஒன்றுக்குச் செல்கிறது.
2. மாறா நிலையில் நீங்கள் அமைத்த தேடல் சாதனம் மாற்றப்பட்டுள்ளது. புதிய சர்ச் இஞ்சினில், நீங்கள் எதனைத் தேடினாலும், அது புதியதாக, உருவாக்கப்பட்ட இஞ்சின் உள்ள இணைய தளத்திற்குச் செல்கிறது.
3. ஆண்ட்டி வைரஸ், ஆண்டி ஸ்பைவேர் அல்லது ஆண்ட்டி மால்வேர் தளங்களுக்கு நீங்கள் செல்கையில், நீங்கள் தடுக்கப்படுகிறீர்கள்.
4. வெப் பிரவுசரைப் பயன்படுத்துகையில், பல்வேறு பாப் அப் விண்டோக்கள் கிடைக்கின்றன. அவற்றை உங்களால், மூட இயலவில்லை.
5. புதியதாக, நீங்கள் அமைக்காத பேவரிட் தள முகவரிகள் அல்லது புக்மார்க் அமைக்கப்படுகின்றன.
6. வெப் பிரவுசர் மிகவும் மெதுவாக இயங்குகிறது.
மேலே காட்டப்பட்டுள்ள அறிகுறிகள் தென்பட்டால், சரியான ஆண்ட்டி வைரஸ் அல்லது மால்வேர் புரோகிராமினை நீக்கும் செயலிகளை இயக்கி, அவற்றை நீக்கவும். வங்கிக் கணக்கு, மின் அஞ்சல் மற்றும் பிற பாஸ்வேர்டுகளை மாற்றவும். அடிக்கடி வங்கிக் கணக்கினைக் கண்காணிக்கவும். வங்கியுடன் தொடர்பு கொண்டு, நெட்பேங்க் வசதியினை முடக்கி வைக்கவும். முக்கிய பைல்களுக்கு பேக் அப் எடுத்து வைக்கவும். விண்டோஸ் இயக்கத்திற்கான அப்டேட் பைல்களை தரவிறக்கம் செய்து அப்டேட் செய்திடவும். ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை அப்டேட் செய்திடவும். இந்த சந்தேகம் ஏற்பட்ட காலத்திலிருந்து, புதியதாக இன்ஸ்டால் செய்த புரோகிராம்களை, அவற்றின் அனைத்து பைல்களுடன் நீக்கவும். ப்ளக் இன் மற்றும் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களில், மிக மிக தேவையானவை தவிர மற்றவற்றை நீக்கவும்.

கேள்வி: பிரவுசர் இயக்க ஷார்ட் கட் கீ அமைக்கிறோம். ஆனால், சிலர் தாங்கள் கட்டாயம் திறந்து செயல்பட வேண்டிய இணைய தளம் திறப்பதற்காக, ஷார்ட் கட் கீ அமைக்கின்றனர். இது எப்படி சாத்தியமாகிறது? அன்புடன் விளக்கம் தரவும்.
ஆர். சுந்தர வள்ளி, கமுதி.
பதில்:
எந்த இணையதளத்திற்குமான ஷார்ட் கட் ஒன்றை, விண்டோஸ் டெஸ்க்டாப்பில் அமைக்கலாம். முகவரி கட்டத்தில் காட்டப்படும் முகவரியினை, மவுஸ் மூலம் அப்படியே இழுத்துச் சென்று, திரையில் அமைத்தால், அது, அந்த இணைய தளத்திற்கான ஷார்ட் கட் கீயாகச் செயல்படும். அப்ளிகேஷன்களுக்கு நாம் ஏற்படுத்தும் ஷார்ட் கட் கீ ஒன்றையும், இணையப் பக்கங்களுக்கு ஏற்படுத்தலாம். பிரவுசரின் மெயின் மெனுவிற்குச் செல்லவும். அங்கு Tools தேர்ந்தெடுக்கவும். இதில் “Create application shortcuts” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இனி, குறிப்பிட்ட பக்கமானது முழுமையாகத் திரை முழுவதும் காட்டப்படும். வழக்கமான பிரவுசர் சார்ந்த எதுவும் காட்டப்பட மாட்டாது.

கேள்வி: என் லேப்டாப் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 10 பயன்படுத்துகிறேன். விண் 10 அப்டேட் ஆன பின்னர், முன்பு இருந்த குரோம் பிரவுசர் இயங்க மறுத்துவிட்டது. இப்போது பயர்பாக்ஸ் பயன்படுத்துகிறேன். விண்டோஸ் 10 சிஸ்டம் அண்மையில் அப்டேட் ஆனது. அப்போதும் இயங்கவில்லை. குரோம் விண்டோஸ் 10ல் இயங்காதா? அல்லது வேறு காரணம் இருக்குமா? தீர்வு பதிலாகத் தரவும்.
கே.எஸ். பாண்டியன், தஞ்சாவூர்.
பதில்
: குரோம் பிரவுசர், விண்டோஸ் 10 சிஸ்டத்தில் முழுமையாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு கிடைக்கிறது. இணையம் சென்று, மேம்படுத்தப்பட்ட குரோம் பிரவுசருக்கான பைலை தரவிறக்கம் செய்து, இயக்கிப் பார்க்கவும். ஏற்கனவே பதியப்பட்ட பிரவுசர் இருப்பின், அதன் மேல் வலது பக்கத்தில் இருக்கும் மெனு பட்டனில் கிளிக் செய்து, அண்மைய வெளியீடு வரை அப்டேட் செய்யப்பட்டுள்ளதா எனப் பார்க்கவும். அப்டேட் செய்திட வேண்டியது இருந்தால், உடனே அப்டேட் செய்திடவும். இல்லை எனில், உங்கள் குரோம் பிரவுசர் அப்டேட் ஆன நிலையில் இருக்கிறது எனப் பொருள். இதுவும், குரோம் பிரவுசர் இயக்கத்தினைச் சரியாகத் தரவில்லை என்றால், அதில் இயக்கப்படும் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களைப் பார்க்கவும். இவற்றில் ஒன்று கூட உங்களுக்குப் பிரச்னை தரலாம். அதனைக் கண்டறிந்து நீக்கவும். அல்லது, கம்ப்யூட்டரில் உள்ள குரோம் பிரவுசர் இன்ஸ்டலாஷனை நீக்கிவிட்டு, புதியதாகப் பெற்று பதியவும்.

கேள்வி: விண்டோஸ் 7 டெஸ்க்டாப் கம்ப்யூட்டரிலும், விண்டோஸ் 10 லேப்டாப் கம்ப்யூட்டரிலும் பயன்படுத்தி வருகிறேன். பல கம்ப்யூட்டர் இதழ்களில் படிக்கையில், இவற்றிற்கான பாதுகாப்பு மற்றும் பிற உதவி தரும் பைல்களைத் தருவதில் கால வரையறை குறித்து தகவல்கள் கிடைக்கின்றன. அதிலும் இருவகை உதவிகள் என எழுதுகின்றன. எனக்குப் புரியவில்லை. தயவுசெய்து விளக்கமாகப் பதில் தரவும்.
என். இசைப் பிரியா, சேலம்.
பதில்
: இது குறித்து முந்தைய கம்ப்யூட்டர் மலர் இதழ்களிலும் தகவல் தரப்பட்டுள்ளது. பல வாசகர்களின் மனதில் இது குறித்து அச்சம் உள்ளதால், மீண்டும் ஒருமுறை தருகிறேன்.
மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் சாப்ட்வேர் செயலிகள் மற்றும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகியவற்றிற்கு Microsoft Support Lifecycle என்ற பொதுவான கொள்கையைக் கடைப் பிடிக்கிறது. தன் பழைய விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை முழுமையாக முடிவிற்குக் கொண்டு வர, அதற்கான உதவி தரும் வழக்கத்தில் இத்தகைய முடிவுகளை எடுக்கிறது. ஏற்கனவே, விண்டோஸ் 98, எக்ஸ்பி மற்றும் விஸ்டா சிஸ்டங்களுக்கான அனைத்து உதவிகளையும் நிறுத்திவிட்டது. இந்த சிஸ்டங்களுக்கான புதிய வசதிகள் கிடைக்காது. பாதுகாப்பிற்குப் பிரச்னை ஏற்பட்டால், அவற்றைப் பாதுகாத்திடும் பைல்களும் வழங்கப்பட மாட்டாது.
விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கான, முதன்மை நிலை உதவி (Mainstream support), சென்ற 2015லேயே நிறுத்தப்பட்டது. தொடர் நிலை உதவி (extended support) வரும் 2020 ஆம் ஆண்டு வரை கிடைக்கும். முதன்மை நிலை உதவி என்பது முதலில் தரப்படும் ஆதரவு ஆகும். இதில் இயக்க முறைமையில் ஏதேனும் பிழை ஏற்பட்டால், அது சரி செய்வதற்கான பைல் தரப்படும். வாரண்டி எனப்படும் காப்பு உறுதி உண்டு. செயலிகளுடன் இணைந்து செயல்படுவதில் பிரச்னை ஏற்பட்டால், அது சரி செய்யப்படும். பொதுவாக ஐந்து ஆண்டுகளுக்கு இது வழங்கப்படும். தொடர் நிலை உதவி என்பதில் பாதுகாப்பு தொடர்பான மேம்படுத்தப்பட்ட கோப்புகள் மட்டுமே வழங்கப்படும். மற்றபடி குறிப்பிட்ட உதவி ஏதேனும் தேவைப்பட்டால், கட்டணம் செலுத்திப் பெற வேண்டும்.
விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு, முதன்மை நிலை உதவி 2020 ஆம் ஆண்டு வரை வழங்கப்படும். தொடர் நிலை உதவி 2025 ஆம் ஆண்டு வரை வழங்கப்படும். விண் 8 சிஸ்டத்திற்கு, இந்த உதவிகள் முறையே 2018 மற்றும் 2023 வரை வழங்கப்படும். தற்போது எந்த நிறுவனத்திடம் இருந்தும், விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 சிஸ்டம் இன்ஸ்டால் செய்யப்பட்டு கம்ப்யூட்டர்களை வாங்க முடியாது. அதற்கான உரிமங்களை விற்பனை செய்வதை மைக்ரோசாப்ட் நிறுத்திவிட்டது.
பலராலும் இன்றும் அதிகமாக விரும்பப்படும் விண்டோஸ் 7, 2009 ஆம் ஆண்டு அக்டோபரில் வெளியிடப்பட்டது. விண்டோஸ் விஸ்டாவிற்குப் பதிலாக வெளியானது. விண்டோஸ் 8 சிஸ்டம் அக்டோபர் 2012ல் தரப்பட்டது. அதன் மேம்படுத்தப்பட்ட சிஸ்டமான விண்டோஸ் 8.1 அடுத்த ஆண்டு கிடைத்தது. விண்டோஸ் 10, 2015 ஜூலையில் வெளியானது. இது முந்தைய சிஸ்டங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டது எனவும், ஒரு “சேவையாகவே” இது வழங்கப்படுவதாகவும் மைக்ரோசாப்ட் அறிவித்தது. புதிய வசதிகளுடன் இது அவ்வப்போது மேம்படுத்தப்படுகிறது. சென்ற ஆகஸ்ட் மாதம் அத்தகைய ஒரு மேம்பாடு வெளியானது.

கேள்வி: மொபைல் போன்களில் 'அவசர நிலை பட்டன்' என்பது என்ன? அனைத்து போன்களிலும் உண்டா? எந்த எண்ணை அழுத்த வேண்டும்? ஐபோன் போன்றவற்றில் இது உள்ளதா?
ஆர். வசந்தா, சென்னை.
பதில்:
ஆங்கிலத்தில் Panic button என்று அழைக்கப்படும் 'அவசர நிலை பட்டன்' ஒன்றை அனைத்து மொபைல் போன்களில் கட்டாயமாக அமைத்து விற்பனை செய்திட வேண்டும் என மத்திய அரசு ஆணை சென்ற ஏப்ரல் மாதம் வெளியானது. வரும் ஜனவரி 1 முதல் இது கட்டாயமாக அமலாக்கப்படும். அதே போல, 2018 ஜனவரி முதல் GPS எனப்படும் நம் இருக்கும் இடத்தைக் காட்டும் வசதியும் கட்டாயமாகத் தரப்பட வேண்டும். பெண்கள் பாதுகாப்பு சார்ந்து வெளியிடப்பட்ட இந்த ஆணையை, அமெரிக்கா உட்பட பல மேற்கு நாடுகள் பாராட்டியுள்ளன. பாதுகாப்பு கேட்கும் பட்டன் மட்டுமின்றி, பாதுகாப்பு தரும் காவலர்கள் சரியாகச் செயல்பட்டார்களா என்பதையும் இது காட்டிக் கொடுக்கும்.
இதற்கான கீ 5 அல்லது 9 ஆக இருக்கும். இதனை சாதாரண வசதிகள் கொண்ட மொபைல் போனில் கூட அமைத்துவிடலாம். ஆனால், ஜி.பி.எஸ். என அழைக்கப்படும் வசதியினை சாதாரண போன்களில் (Feature phones) அமைத்துத் தருவார்களா என்பது சந்தேகமே. இன்றும் கூட பெரும்பாலான சாதாரண போன்களில் ஜி.பி.எஸ். வசதி இருக்காது.
ஆப்பிள் நிறுவனத்தைப் பொறுத்த வரை, இந்தியாவிற்கு மட்டும் இந்த அவசர நிலைக்கான பட்டனை வழங்கும் என்று தெரிகிறது. இந்நிறுவனத்தின் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டமான iOS 10.2 சோதனைட் தொகுப்பில் இது இருந்தது. பின்னர், இந்தியா தவிர மற்ற நாடுகளில் இந்த பட்டன் வசதி நீக்கப்பட்டது. இந்த வசதியை, வரும் ஜனவரியில், இந்தியாவில் இயங்கும் தன் ஐபோன்களுக்கு மட்டும், ஆப்பிள் நிறுவனம் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது அனைத்து அவசர நிலைக்கான போன் எண்ணாக, 112 என்ற எண் அமலுக்கு வர உள்ளது.

கேள்வி: இந்தியாவில் எந்த மாநிலத்தில் இணையம் பயன்படுத்துபவர்கள் அதிகம்? எங்கு குறைவு? எங்கள் பள்ளியில் இந்த கேள்வியை எங்களுக்குத் தந்துள்ளனர். இதற்கான அதிகார பூர்வ விடையைத் தரவும்.
என். சுப்பிரமணியன், பழனிசெட்டிபட்டி, தேனி.

பதில்: உங்கள் ஆர்வத்திற்கு வாழ்த்துகள். இந்தியாவில், மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் தான் அதிக பட்சமாக, 2.947 கோடி பேர் இணைய இணைப்பு பெற்றுள்ளனர். நம் மாநிலம் அடுத்த இடத்தைப் (2,801 கோடி) பிடித்துள்ளது. ஆந்திர மாநிலம் 2.48 கோடி பேருடனும், கர்நாடகா 2.263 கோடி பேருடனும் உள்ளன. இது இந்திய அரசு வெளியிட்ட தகவல். மொத்த இணையப் பயனாளர்கள் 34 கோடியே 26 லட்சத்து 50 ஆயிரம் பேர் ஆவார்கள். மிகக் குறைவான இணைய இணைப்பு பெற்றவர்கள் உள்ள மாநிலம் இமாச்சல பிரதேசம்.
இங்கு 30 லட்சத்து 20 ஆயிரம் பேர் தான் இணைய இணைப்பு பெற்ற சந்தாதாரர்கள்.
மொத்த இணைய இணைப்பு பெற்ற இந்தியர்களில், 67% பேர் நகரங்களில் வாழ்கின்றனர். கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் தான், கிராமப்புற மக்கள் அதிகமாக இணைய இணைப்பு பெற்றுள்ளனர். இவை அனைத்தும், சென்ற மார்ச் இறுதி வரையிலான கணக்காகும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X