நல்லதையே சொல்வோம்!
சில நாட்களுக்கு முன், அறிமுகமில்லாத தம்பதியர், என் வீட்டு வாசலில் நிற்க, யாரென்று விசாரித்து, அவர்களை உள்ளே அழைத்து வந்தாள், என் மனைவி. வந்தவர்கள், தங்கள் உறவினர் மகனுக்கு, எங்கள் தெருவைச் சேர்ந்த ஒரு பெண்ணை பார்த்திருப்பதாக கூறி, அப்பெண்ணை பற்றி விசாரித்தனர். அவர்களுக்கு காபி கொடுத்து உபசரித்து, 'அப்பெண், நாங்கள் பார்த்த வரை, பழகியவரை நல்ல பெண்; அத்துடன், வேலைக்கு சென்று, குடும்பத்தையும் பார்த்துக் கொள்கிறாள்...' என்றாள், என் மனைவி. வந்தவர்களும், திருப்தியுடன் விடை பெற்றுச் செல்ல, என் மனைவியிடம், 'அப்பெண் சரியான வாயாடி, அகராதியா பேசுவா; யாரையும் மதிக்க மாட்டான்னு சொல்லுவ... இப்போ வந்தவங்ககிட்ட, ஏன் மாத்தி சொன்ன...' என்றேன்.
'நீங்க சொல்றது உண்மை தான்; என்னிடம் கூட ஒருமுறை சண்டைக்கு வந்தவள் தான். யார் தான் தப்பு செய்யல; திமிரா இருக்கல. நல்லபடியா, அவளுக்கு திருமணம் முடிஞ்சா, அதுக்கு பின் அவள் திருந்தலாமில்லயா... அதனால தான், விசாரிக்க வந்தவங்க கிட்ட அவளப் பற்றி நல்ல விதமாக சொல்லி வச்சேன்...' என்றாள்.
கால்கட்டு போட்டால் திருந்தி விடுவர் என்பது, ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் பொருந்தும். பிறந்த வீட்டு பிரச்னைகள், சிக்கல்கள் மற்றும் ஏக்கங்கள் இவற்றிலிருந்து விடுபடும் பெண்கள், புகுந்த வீட்டில் திருந்தி வாழவும் வாய்ப்புள்ளது என்ற என் மனைவியின் கருதில் உண்மை இருப்பதாக தோன்றியது. நம்மால் முடிந்த வரை, நல்லதையே சொல்வோம்; அதனால், நன்மை விளைந்தால், நமக்கும் ஆத்ம திருப்தி ஏற்படுமே!
— ஏ.பாண்டிசெல்வம், மதுரை.
'டிவி' தொடரால் நேர்ந்த சோகம்!
எங்கள் பக்கத்து வீட்டு பெண்ணிற்கு, ஒன்று மற்றும் மூன்றாம் வகுப்பு படிக்கும் இரு பிள்ளைகள் உள்ளனர். அவளது கணவர் வெளிநாட்டில் வேலை செய்வதால், காலையில், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிய பின், பகல், 11:00 மணியிலிருந்து, தொலைக்காட்சி தொடர்களில் மூழ்கி விடுவாள்.
மாலையில், பள்ளி விட்டு வரும் குழந்தைகளுக்கு, அவசர அவசரமாய், 'ரெடிமேட்' உணவு அல்லது நூடூல்ஸ் போன்றவற்றை தயார் செய்து கொடுத்து, மூன்று தெரு தள்ளியிருக்கும் டியூஷனுக்கு, அனுப்பிவிட்டு, நாடகம் பார்க்க ஆரம்பித்து விடுவாள். இதில் கொடுமை என்னவெனில், இரவு, 7:30 மணி முதல், 9:00 மணி வரை நாடகம் பார்ப்பதற்கு தொந்தரவாக இருக்கும் என நினைத்து, தன் மொபைல் போனை, 'சுவிட்ச் ஆப்' செய்து விடுவாள்.
சமீபத்தில், டியூஷன் சென்ற அவளின் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மகள், திடீரென, வாந்தி, பேதி ஏற்பட்டு, சுருண்டு மயங்கி விட்டாள். பதறி போன டியூஷன் ஆசிரியை, அவள் அம்மாவுக்கு போன் செய்ய, அது, 'சுவிட்ச் ஆப்'பில் இருக்கவே, உடனே, சிறுமியை தூக்கிக் கொண்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று, முதலுதவி செய்து, ஆட்டோவில் இருவரையும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளாள்.
தன் குழந்தையின் நிலையை பார்த்து பதறி போனாள், அந்தப் பெண். மொபைல் போன் ஏன் ஸ்விட்ச் ஆப்பில் இருந்தது என்ற விபரத்தை அறிந்த, டியூஷன் ஆசிரியை, குழந்தையின் அம்மாவை, கண்டபடி திட்டி தீர்த்து விட்டாள். ஆசிரியையிடம் மன்னிப்பு கேட்ட அப்பெண், அன்றிலிருந்தே, தொலைக்காட்சி தொடர்களை பார்ப்பதை நிறுத்தி, இப்போது, குழந்தைகளை கவனிக்க ஆரம்பித்துள்ளாள். இவரைப் போன்ற சீரியல் பைத்தியங்கள், இதுபோல் ஏதாவது விபரீதம் ஏற்பட்டால் தான் திருந்துவரோ!
— வி.மஞ்சுளா, ராமநாதபுரம்.
மாதிரி படிவங்கள்!
சமீபத்தில், எங்கள் ஊர் தபால் நிலையத்திற்கு சென்றிருந்தேன். பொதுமக்கள், படிவங்களை, சிரமம் இல்லாமல், பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக மாதிரி படிவங்களை பூர்த்தி செய்து, வரிசையாக ஒட்டி வைத்திருந்தனர்.
இதனால், அங்கு வருவோர், பணம் போடுவது மற்றும் பணம் எடுப்பது எப்படி என்று, இப்படிவங்களை பார்த்து, எவ்வித சிரமமும் இல்லாமல், பூர்த்தி செய்து, வந்த வேலையை, எளிதாக முடித்துச் செல்கின்றனர்.
அனைத்து தபால் நிலையங்களும், இதை பின்பற்றினால், விவரம் புரியாதவர்களுக்கு உதவியாக இருக்குமே... செய்வரா!
— மருத.வடுகநாதன், வேதாரண்யம்.