கலைவாணர் என்.எஸ்.கே. (14)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2016
00:00

ஒரு சமயம், திருக்குற்றாலத்தை அடுத்த, பாபநாசத்தில், நாடகம் நடத்துவதற்காக, சென்னையிலிருந்து, தம் குழுவினரோடு, புறப்பட்டு சென்றார் கலைவாணர். அவரது கார், உளுந்தூர்பேட்டையை அடைந்தபோது, பொழுது புலர்ந்தது. சாலையின் ஓரங்களில், கூலி வேலை செய்யும் ஆண், பெண் தொழிலாளர்கள், புழுதி மண்டிய உடம்புகளோடு, தங்களை சுற்றி, மண்வெட்டி, கடப்பாரை மற்றும் கூடை முதலிய சாமான்கள் கிடக்க, வேலை செய்த களைப்பில், ஆழ்ந்த நித்திரையில் இருந்தனர்.
அவர்களுக்கு மத்தியில், ஒரு குழந்தை அழுது கொண்டிருந்தது. குழந்தையின் அழுகுரல் கேட்டும், அதன் தாய், எழுந்திருக்கவில்லை. அவளுக்கு, எவ்வளவு அசதியோ... ஆனால், குழந்தையின், அழுகுரல் கேட்டு, காரை நிறுத்தச் சொன்னார் கலைவாணர்.
காரிலிருந்து இறங்கி, குழந்தையிடம் சென்று, அதை தூக்கிய கலைவாணருக்கு, அதன் அழுகைக்கு காரணம், பசி என்று தெரிந்தது.
'பாவம், பசியால் பச்சை புள்ளே துடிக்குது...' என்று, பரிதாபம் கொண்டவர், அதன் தாய் யாராக இருக்கும் என்று, படுத்துக் கிடந்தவர்களுக்கு நடுவே நின்றபடி பார்வையை சுழற்றினார். அதற்குள், படுத்திருந்தவர்களில், சிலர் விழித்தெழுந்தனர். தங்களுக்கு மத்தியில், குழந்தையோடு கலைவாணர் நிற்பதை வியப்போடு நோக்கினர்.
குழந்தையின் தாய், கண்களைக் கசக்கியபடி எழுந்தவள், தன் பிள்ளையை கலைவாணர் வைத்திருப்பதைப் பார்த்து ஓடி வந்து, குழந்தையை பெற்று, 'நீங்க, நல்லாயிருக்கணும்... எம்புள்ளையை, காப்பாத்தினீங்க! அது, ஒங்க கையிலே அகப்படாம இருந்தா, நடு ரோட்டுக்கு, ஊர்ந்து போய், ஏதாச்சும் வண்டில சிக்கியிருக்கும்...' என்று சொல்லி, குழந்தையை, மார்போடு அணைத்துக் கொண்டாள்.
அப்போது தான், குழந்தை மட்டுமல்ல, அங்கே படுத்திருந்த பலர், பட்டினியோடு இருந்ததை, அவர்களின் வாடிய முகம் மற்றும் ஒட்டிய வயிறுகளின் மூலம் அறிந்தார், கலைவாணர். உடனே, தன் டிரைவர் கையில், 100 ரூபாயை கொடுத்து, அருகில் உள்ள ஓட்டலுக்கு சென்று பலகாரங்கள் வாங்கி வரச் சொன்னார்.
ஒரு பர்லாங் தூரத்தில், சாலை ஓரத்தில், சின்னஞ்சிறிய, டீக்கடை இருந்தது. அங்கிருந்த இட்லி, பன் ஆகியவற்றை, அப்படியே, விலை பேசி வாங்கினார், டிரைவர்.
டிரைவர் தன் கை நிறைய, அள்ளி வந்த பலகாரங்களை அவர்களுக்கு கொடுக்க, கலைவாணரை மனமார வாழ்த்தி, பசியாறினர்.
கலைவாணரை பற்றி அவர்கள் கேள்விப்பட்டிருந்தனர்; திரைப்படங்களில் பார்த்திருந்தனர். ஆனால், திடீரென்று நேரில் தோன்றி, தங்களது பசியை போக்குவார் என்பதை எதிர்பார்க்கவில்லை. அதன் காரணமாக, அவர்களின் விழிகளில் தெரிந்த வியப்பு, நீண்ட நேரம் நிலைத்திருந்தது.
அக்குழந்தையின் தாயிடம், 25 ரூபாய் கொடுத்து, குழந்தையை கவனித்து, வளர்க்கும்படி கூறினார், கலைவாணர். அங்கிருந்த அனைவரும், அவரை வாழ்த்தி, வழியனுப்பினர்.
சில மாதங்களுக்கு பின், கலைவாணரின் நாடகம் ஒன்று பாபநாசத்தில் நடக்க இருந்தது. அதற்காக, தம் நாடக குழுவினரோடு, அங்கே சென்றிருந்தார். பாபநாசத்தில், அவரது நெருங்கிய நண்பர், விக்கிரமசிங்கபுரம் பண்ணையார் பாண்டியனுக்கு, சொந்தமான பங்களாவில் தங்குவது அவரது வழக்கம்.
நாடகம் நடத்துவதற்கு முதல் நாள், வேட்டைப் பிரியரான, அந்தப் பண்ணையார், கலைவாணரையும் அழைத்து சென்று, மணிமுத்தாறு அணைக்கட்டுப் பகுதிக்கருகே, வேட்டையாட சென்றார். அங்கு ஆர்வத்தோடு ஒருவர் ஓடிவந்து, கலைவாணரை வணங்கி, 'நீங்கள், பாபநாசத்திற்கு வந்திருக்கும் செய்தியைக் கேள்விப்பட்டேன். அங்கு வந்து, உங்களை காண துடித்தேன். எதிர்பாராத விதமாக, இங்கேயே வந்து விட்டீர்கள். என்னை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா... சில மாதங்களுக்கு முன், உளுந்தூர்பேட்டைக்கு அருகே, எனக்கும், என் மனைவிக்கும் பசியாற உணவு வாங்கி கொடுத்தீர்களே... அதை நான் மறந்து விடுவேனா...' என்றார், உணர்ச்சி பொங்க!
மிகவும் வற்புறுத்தி, தன் வீட்டுக்கு அழைத்தார். 'என் குடிசைக்கு, தாங்கள் வருகை தந்து, ஏதாவது சாப்பிட்டு விட்டு தான் போக வேண்டும்...' என்று அவரை உரிமையோடு அழைத்தார்.
'சரி வருகிறேன்...' என்று, அந்த மனிதனோடு கிளம்பினார் கலைவாணர்.
சின்னஞ்சிறு குடிசை ஒன்றில், தோரணங்கள் கட்டப் பட்டு, வழிநெடுக, 'வருக வருக கலைவாணரே வருக!' என்பது போன்ற, எழுத்துகள் பொறித்த, வரவேற்பு அட்டைகள் தொங்கின. இத்தனை ஏற்பாடுகளையும் செய்து வைத்து, தம்மிடம் வந்திருந்த அந்த கூலிக்காரரின் பக்தி, கலைவாணரை புல்லரிக்க செய்தது.
பண்ணையாரின் பங்களாவில் தங்கிய கலைவாணர், அதே மலர்ச்சியோடு, அந்தக் குடிசைக்குள்ளும் குனிந்து சென்றார். அறுந்து போன, கயிற்றுக் கட்டிலின் மீது, பாய் விரிக்கப்பட்டிருந்தது. அதன் மீது அமர்ந்தார், கலைவாணர். அந்தக் குடிசைக்குரியவர், அன்புடன், உபசரித்து அளித்த இட்லியை விரும்பிப் புசித்தார். 'எனக்கு இட்லி மிகவும் பிடிக்கும்; அதை, எப்படியோ தெரிந்து வைத்து, தயாரித்து வைத்திருக்கிறாயே...' என்று சொல்லியபடி சாப்பிட்டார், கலைவாணர்.
அவரது மனைவி, கலைவாணரை வணங்கி, 'அன்னிக்கு, நீங்க என் குழந்தைய காப்பாத்தியதோடு, நாங்களும் பசியாற பலகாரம் வாங்கி கொடுத்தீங்க. அந்த உதவிகளை, இருவரும் நினைச்சுக்கிட்டே இருக்கோம்...' என்றாள்.
உடனே கலைவாணர், 'அன்று நான் வாங்கி தந்த இட்லியை, எப்படியாவது திருப்பிக் கொடுத்துடணும்ன்னு நீயும், உன் கணவரும் திட்டமிட்டு இப்போது, தந்துவிட்டீர்களே...' என்றார்.
சிறிது நேரம், அவர்களுடன் பேசிவிட்டுக் கிளம்பிய கலைவாணர், மணிமுத்தாறுக்கு எப்போது வந்தாலும், அவர்களை காண வருவதாக தெரிவித்தார். யாரோ ஒரு ஏழைக் கூலியாள் கொடுத்த இட்லியை சாப்பிட்ட, கலைவாணரின் பரந்த உள்ளம் பற்றி, இன்றும், மணிமுத்தாறு அணைக்கட்டு பகுதியில், பலர் நெகிழ்ச்சியோடு குறிப்பிடுவது உண்டு.
கலைவாணர் பெரிய அளவில் புகழ் பெற்றிருந்த சமயம் அது... மங்கம்மா சபதம் எனும் படத்தை தாயரித்தனர், ஜெமினி ஸ்டுடியோவினர். இப்படத்தில் நடிக்க, கலைவாணர், மதுரம் மற்றும் அவரது நகைச்சுவை குழுவினர் ஒப்பந்தம் ஆகியிருந்தனர்.
கலைவாணர் புகழ் அடைந்திருந்தாலும், தொழிலில் அலட்சியம் காட்டாமல், குறிப்பிட்ட நேரத்தில், படப்பிடிப்புக்கு செல்வதை, குறிக்கோளாக வைத்திருந்தார்.
ஒருநாள், ஜெமினி ஸ்டுடியோவில், மங்கம்மா சபதம் படப்பிடிப்பிற்காக, 'செட்' நிர்மாணிக்கப்பட்டிருந்தது. அன்று, காலை, 7:00 மணிக்கு, கலைவாணரும், அவரது குழுவினரும் பங்கேற்கும் காட்சி எடுக்கப்படவிருந்தது. காலை, 6:45 மணிக்கு, ஸ்டுடியோவுக்கு வந்து விட்டனர், கலைவாணரும், மதுரமும். அவர்களுடன் நடிக்க வேண்டியவர்களில் ஒருவரான, புளி மூட்டை ராமசாமி மட்டும் வரவில்லை.
'காலம் தவறாமல் படப்பிடிப்பு வேலைகள் நடக்க வேண்டும்...' என்று நினைக்க கூடியவர், ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன். எனவே, 'அன்றைய படப்பிடிப்புக்கு, எல்லா நடிகரும் வந்துவிட்டனரா...' என்று விசாரித்தார்.
'கலைவாணரின் குழுவை சேர்ந்த புளிமூட்டை ராமசாமி மட்டும் இன்னும் வரவில்லை...' என்ற செய்தி, அவருக்கு கிடைத்தது.
'ஏன் அந்த நடிகர், இன்னும் வரவில்லை...' என்று கேட்டபடியே, தம் கைக் கடிகாரத்தை பார்த்தபடி, அறைக்கு வெளியே இருந்த தாழ்வாரத்தில், சிறு நடை நடந்தார். இச்செய்தி கலைவாணருக்கு எட்டியதும், 'மேக் - அப்' அறையிலிருந்து, வெளியே வந்து, எஸ்.எஸ். வாசன் அருகில் சென்றவர் மெல்ல கனைத்தார். அவரை நிமிர்ந்து நோக்கினார், வாசன்.
'வணக்கம்...' என்று, கை குவித்து, 'புளிமூட்டை ராமசாமி ஏன் இன்னும் வரவில்லை என்று, நீங்கள் கவலைப்பட்டதாக கேள்விப்பட்டேன்; அவன் எப்படியும், 7:00 மணிக்குள், வந்துடுவான்; நேரம் தவறாமை என்ற முக்கியமான பாடத்தை, எங்கள் குழுவினருக்கு கற்றுக் கொடுத்துள்ளேன்...' என்று கலைவாணர் சொல்லும் போது, காலை மணி, 6:59; அதேநேரத்தில், வேர்க்க விறுவிறுக்க, விரைந்தோடி வந்தார் புளிமூட்டை; ஜெமினி வாசன் முகம் மலர்ந்தது. கலைவாணர் மட்டுமல்ல, அவரது நகைச்சுவைக் குழுவினரும், தொழிலில், எத்தனை அக்கறையோடும், நேரம் தவறாமையை கடைப்பிடிக்கின்றனர் என்பதை அறிந்தவருக்கு, கலைவாணர் மீது மேலும் மதிப்பு, உயர்ந்தது.
தொடரும்.
நன்றி:
வ.உ.சி., நூலகம்
பதிப்பாளர் மற்றும் நூல் விற்பனையாளர்.

மா. பாலசுப்ரமணியன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X