உயிர் கொடுப்பான் தோழன்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2016
00:00

காலை, 5:00 மணிக்கே, உறக்கம் கலைந்து விட, தூக்கம் வராமல் புரண்டு படுத்த போது, மொபைல் போன் ஒலித்தது. 'இந்நேரத்துக்கு யார் போன் செய்றது...' என, பதைபதைப்புடன் எழுந்து, மொபைலை எடுத்தால், என் நண்பன் பரமேஸ்வரன் எனும் பரமுவின் அழைப்பு.
'எதுக்கு இந்நேரம் போன் செய்றான்... உடம்புக்கு ஏதாவது...' அதற்குள், நூறு சிந்தனைகள் எனக்குள்!
''ஹலோ...'' என்ற என் குரலைத் தொடர்ந்து, ''அங்கிள்... நான் சுரேஷ் பேசுறேன்; வந்து... அப்பா... அப்பா இறந்திட்டார்,'' என்றான் கலங்கிய குரலில்!
ஒரு நொடி, இதயமே நின்று விட்டது. ''ஏய் என்னப்பா சொல்ற... நேத்து சாயந்தரம் தான் ரொம்ப நேரம் பேசிட்டிருந்தோமே, அப்பக் கூட, நல்லா தானே இருந்தான்.''
''ஆமா அங்கிள்... ராத்திரி வழக்கம் போல, சாப்பிட்டு தூங்க போனார். காலையில, 3:00 மணிக்கு, அம்மாவை எழுப்பி, 'சுடு தண்ணி குடு; நெஞ்சு எரியுது'ன்னு சொல்லியிருக்கார். அம்மா தண்ணி எடுத்துட்டு வந்து பாத்தப்ப, உடம்புல, எந்த அசைவும் இல்ல. உடனே, ஹாஸ்பிட்டலுக்கு போயிட்டோம்; 'உயிர் பிரிந்து, ஒரு மணி நேரம் ஆச்சு'ன்னு டாக்டர் சொன்னார்,'' என்று சொல்லி, தேம்பித் தேம்பி அழுதான் சுரேஷ்.
''இதோ வர்றேன்,'' என்று, போனை வைத்து, கட்டிலில் அப்படியே சரிந்தேன்; மனசு, 'படபட' வென்று இருந்தது.
''இந்த நேரத்தில் யாருங்க போன்ல,'' என்றபடி, எழுந்த என் மனைவி, என் கண்களில் வழியும் கண்ணீரைக் கண்டு, அதிர்ந்து, ''ஐயோ யாருக்கு என்னாச்சு...'' என்று, என்னை உலுக்கினாள்.
''என் நண்பன் பரமு, 'ஹார்ட் அட்டாக்'ல இறந்திட்டானாம்; இப்ப தான், அவன் மகன் சுரேஷ் போன் செய்து சொன்னான்,'' என்றேன்.
''அடப்பாவமே... நம்பவே முடியலயே... நல்லவங்கள கடவுள் விட்டு வைக்க மாட்டானோ...'' என்று புலம்பினாள்.
ஒரு வழியாக மனதை திடப்படுத்தி, காலைக் கடன்களை முடித்துக் கிளம்பினேன்.
''நான் கிளம்பி போறேன்; நீ, கொஞ்ச நேரம் கழிச்சு, ரம்யாவ காலேஜுக்கு அனுப்பிட்டு, ஆட்டோவுல வந்துரு,'' என்று சொல்லி, பரமு வீட்டுக்கு, 'பைக்'கில் கிளம்பினேன்.
வண்டி ஓட்டவே முடியவில்லை; என் கட்டுப்பாட்டை மீறி, கண்ணீர் வழிந்தது. ஆனால், அந்த துக்கத்திலும், பரமுவுக்கு, நான் கொடுத்த, இரண்டு லட்சம் ரூபாய் நினைவுக்கு வர, 'ஒருவேளை மகனிடம் சொல்லியிருப்பானோ... ம்ஹூம்... சொல்லியிருக்க மாட்டான். மகன், மனைவிக்கு தெரியாமல் தானே, என்னிடம் கடன் வாங்கியிருந்தான்... சே சே... என் உயிர் நண்பன், பொணமா கிடக்கிறான். நா, காசை பத்தி நினைக்கிறேனே... நா ஒரு கேடு கெட்ட ஜென்மம்...' என்று, என்னை நானே திட்டிக் கொண்டேன்; அதற்குள் பரமுவின் வீடு வந்து விட்டது.
சிலர், 'ஷாமியானா' பந்தல் கட்டியபடி இருக்க, இன்னும் சிலர், ஆட்கள் உட்காருவதற்கு, நாற்காலிகளை இறக்கியபடி இருந்தனர். சங்கு, சேகண்டி ஒலிக்க ஆரம்பித்தது; பொழுதும் நன்றாக விடிந்து, ஆட்கள் வர துவங்கியிருந்தனர்.
கண்ணாடி பேழையில், பரமுவை வைத்துக் கொண்டிருந்தனர்.
வாசலிலேயே என்னைப் பார்த்து, ஓடி வந்த சுரேஷ், கட்டிப் பிடித்து, ''அங்கிள்... அப்பா... அப்பா...'' வார்த்தைகள் வராமல் கதறினான்.
''அழாத சுரேஷ்... நீ, ஆம்புள புள்ளை, தைரியமா இருக்கணும். ஊர்ல இருக்கறவங்களுக்கு போன் செய்து, விஷயத்தை சொல்லிட்டியா... இனி, நடக்க வேண்டிய காரியத்த பாக்க வேணாமா... அழாத,'' என்று, அவனுக்கு ஆறுதல் சொல்லி, உள்ளே போய் பரமுவையே, வெறித்துப் பார்த்தேன்.
'வாடா ராகவா...' என்று படுத்துக் கொண்டே, என்னை பார்த்து, சிரிப்பது போல் இருந்தது.
''அண்ணே... உங்க நண்பரை பாத்திங்களாண்ணே... நம்மள, இப்படி ஏமாத்திட்டு போயிட்டாரேண்ணே,'' கதறினாள், அவன் மனைவி.
அவளுக்கு ஆறுதல் கூறி, வெளியில் வந்து, நாற்காலியில் உட்கார்ந்தேன். என் நினைவுகள், பின்னோக்கி பறந்தது.
பரமுவும், நானும் கல்லூரியிலிருந்து இணைப்பிரியா தோழர்கள். பி.எஸ்சி., - எம்.எஸ்சி., - எம்.பில்., என்று மேலும் மேலும் படித்து, கல்லூரியில், பேராசிரியரானான், பரமு. நான், கல்லூரி படிப்பு முடிந்ததும், சர்வீஸ் கமிஷன் எழுதி, அரசு அலுவலரானேன். ஒருவழியாக, இருவருமே, 'ரிடையராகி' இரண்டு ஆண்டுகள் ஆகின்றன.
வேலை பார்க்கும் போது, பணி நிமித்தம் காரணமாய், இருவருக்கும் தொடர்பு இல்லாமல் போனது. பரமுவுக்கு, இலக்கியத்தில் நல்ல ஈடுபாடு; கதை, கவிதை என்று எல்லா பத்திரிகைகளிலும், கொடி கட்டிப் பறந்தான். அவன் படைப்புகள் வராத, வார இதழ்களே இல்லை. ஒரு பத்திரிகை ஆபீசில் தான், அவன் விலாசத்தை வாங்கி, அவனை போய் பார்த்து, மீண்டும், எங்கள் நட்பை புதுப்பித்துக் கொண்டேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக, நாங்கள் சந்திக்காத நாட்களே இல்லை.
தினமும், மாலை, 5:00 மணிக்கு இருவரும் சிவன் பார்க்குக்கு வந்து விடுவோம். கல்லூரி கால நினைவுகள், திருமணம், குழந்தைகள், அவர்களின் படிப்பு, அரசியல் என்று, 7:00 மணி வரை பேசிய பின், காலாற நடந்து, ரோட்டுக் கடையில் டீ குடித்து, விடை பெறுவோம்.
மூன்று மாதங்களுக்கு முன், ஒருநாள், மிகவும் சோர்வாக இருந்தான், பரமு.
'என்னடா... ரொம்ப, 'டல்'லா இருக்க; உடம்புக்கு முடியலயா...' என்றேன்.
'அதெல்லாம் நல்லா தான் இருக்கு; மனசு தான் சரியில்ல...' என்றான்.
'என்னாச்சு?'
'என் மகள, பெண் பாத்திட்டு போனாங்கன்னு சொன்னேன்ல... அவங்க, கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டாங்க...'
'அடப்பாவி... இவ்வளவு நல்ல விஷயத்துக்கா, மூஞ்சிய தூக்கி வச்சிக்கிட்டு இருக்க... ஏன், உனக்கு மாப்பிள்ளைய பிடிக்கலயா...'
'மாப்பிள்ளையை எங்களுக்கும், பொண்ண அவங்களுக்கும் பிடிச்சிருக்கு. ஆனா, ரொம்ப எதிர்பாக்கிறாங்க; எல்லாமே தயார் செய்துடலாம்; ஒரு ரெண்டு லட்சம் ரூபா, பற்றாக்குறையா இருக்கு. இதுக்காக, நல்ல இடத்தை விடவும் மனசில்ல. பத்து பவுனை குறைச்சு, பின்னால போடுறோம்ன்னு மாப்பிள்ளை வீட்ல சொல்வோம்ன்னு என் மனைவி சொல்றா. இவ்வளவு சம்பாதிச்சு, ரெண்டு லட்சம் ரூபாய்க்கு போயி அவங்க கிட்ட தவணை கேக்கிறது, கவுரவக் குறைச்சலா இருக்கு; அதான் யோசிச்சிட்டு இருந்தேன்...' என்றான்.
'இத்தன வருஷமா, உயிருக்குயிரா பழகுறோம்; எங்கிட்ட கேக்கணும்ன்னு, ஏண்டா உனக்கு தோணல...' என்றேன் கோபமாக!
'இல்ல; உங்கிட்ட அவ்வளவு பணம் இருக்குமா... என்னன்னு...' என்று இழுத்தான்.
'என் பொண்ணு கல்யாணத்துக்கு, கொஞ்சம் பணம் போட்டு வச்சிருக்கேன்; அதிலேந்து, ரெண்டு லட்சத்த எடுத்து தரேன். முடிஞ்சப்போ, திருப்பிக் குடு, சரியா...' என்று சொன்னதும் தான், அவன் முகத்தில் சிரிப்பு வந்தது.
'ரொம்ப தேங்க்ஸ்டா; சீக்கிரமே திருப்பி கொடுத்திடுறேன்...' என்று சொன்னவன், இன்று இல்லை. பணம் கேள்விக்குறியாக, என்னை தாக்கியது.
ஒரு வழியாக, பரமுவின் இறுதிச் சடங்குகள் முடிந்து, நானும், என் மனைவியும் வீட்டுக்கு வந்து குளித்து, சாப்பிட, இரவு, 9:00 மணியாகி விட்டது. தூக்கம் வரவில்லை; 'டிவி' பார்க்கவோ, புத்தகம் படிக்கவோ, பிடிக்கவில்லை.
பரமுவின் இழப்பு, மனதை மிகவும் பாதித்தது.
''என்னங்க... உங்ககிட்ட ஒண்ணு கேக்கலாமா...வந்து... நீங்க கொடுத்த ரெண்டு லட்சம் ரூபா என்ன ஆச்சு... உங்க பிரெண்டு குடுத்த மாதிரி தெரியலயே...'' என்றாள், என் மனைவி.
''அதான் எனக்கும் புரியல; மனைவி, மக்க கிட்ட சொன்னானா... இல்ல டைரியில எழுதி, கிழுதி வச்சிருக்கானான்னு தெரியல. பாக்கலாம்; பரமு என்னை, ஏமாத்த மாட்டான். எனக்கு நம்பிக்கை இருக்கு... எப்படியும், என் பணம் என் கிட்ட வந்து சேந்திரும். நீ மனசை போட்டுக் குழப்பிக்காம தூங்கு,'' என்று அவளை அனுப்பி விட்டு, ஹாலில் தூங்காமல், உட்கார்ந்திருந்தேன்.
இரண்டு நாட்கள் தொடர்ந்து பரமு வீட்டுக்கு சென்று, அவன் மனைவி, மகனுக்கு ஆறுதல் சொல்லி வந்தேன்.
மூன்றாம் நாள், அங்கே போன போது, சுரேஷ் மட்டும் தனியாக உட்கார்ந்திருந்தான். ''என்னப்பா, சொந்தக்காரங்க எல்லாம் ஊருக்கு போயிட்டாங்களா...'' என்றேன்.
''போயிட்டாங்க அங்கிள்... இனி, காரியத்துக்கு தான் வருவாங்க.''
''சரி சுரேஷ்... அப்பா எங்கேயாச்சும் கடன், கிடன் வாங்கியிருக்கானா... ஏதும், எழுதி வச்சிருக்கானா,'' என்றேன்.
''இல்ல அங்கிள்... டைரியில அப்படி எதுவும் எழுதல. வேற, 'புரோ' நோட்டு, 'செக்'ன்னு எதுவும் இல்ல. அப்படியே வாங்கியிருந்தாலும் எங்க கிட்ட சொல்லியிருப்பாரே... பேங்க்ல, கொஞ்ச பணம் இருக்கு; அம்மாவுக்கு, 'பென்ஷன்' வரும். அப்பா இல்லங்கிறதை தவிர, வேற எந்த குறையும், அவர் எங்களுக்கு வைக்கல,'' என்று கூறி, தேம்பித் தேம்பி, அழ ஆரம்பித்தான்.
எனக்கு, தர்மசங்கடம் ஆகிவிட்டது. அவனுக்கு ஆறுதல் சொல்லி, கிளம்பி விட்டேன். வீட்டிற்குள் நுழைந்ததுமே, என் மனைவி ஓடி வந்து, ''என்னங்க... சுரேஷ் கிட்ட கேட்டிங்களா, பணத்தை எப்ப குடுப்பானாம்,'' என்று படபடத்தாள்.
நான், மவுனமாக தலை குனிந்தேன்.
''என்னங்க... நான் கேட்டுக் கிட்டே இருக்கேன்; பதிலே பேசாம இருந்தா, என்ன அர்த்தம்?''
''என்னத்த சொல்லச் சொல்ற... எங்கப்பா, யார்கிட்டயும் கடன் வாங்கல; வாங்கினா, என்கிட்ட சொல்லியிருப்பார்ன்னு சொல்றான்.''
''சரி, அவன் அப்படி சொன்னா, நீங்க எடுத்துச் சொல்ல வேண்டியது தானே... அன்னிக்கி, நீங்க கேட்டப்பவே மறுத்திருக்கணும். ஒரு பொண்ணோட கல்யாணம் தடைபடக் கூடாதுன்னு, 'பிக்சட் டிபாசிட்'லயிருந்து எடுத்து குடுக்கச் சம்மதிச்சேனே என் புத்திய, 'ஜோட்டா'ல அடிக்கணும். முழுசா ரெண்டு லட்சம் ரூபா போயிடிச்சே... செத்துப் போனவர் எழுந்து வந்து பணத்தை கொடுத்திட்டு போவார்ன்னு நினைச்சிக்கிட்டே இருங்க. எல்லாம் என் தலையெழுத்து,'' என்று புலம்பியவளை குற்ற உணர்வுடன் பார்த்தேன்.
தொடர்ந்து வந்த நாட்களும், எனக்கு நரகமாகவே இருந்தது.
அன்று மதியம் சாப்பிட்டு, சோபாவில் சாய்ந்து கண்ணயர்ந்த நேரம், 'காலிங் பெல்' அடிக்கும் சத்தம் கேட்டு, விழித்தேன்.
கதவை திறந்த போது, வாசலில் கார் ஒன்று நின்றிருந்தது; பட்டு வேட்டி, சட்டை, பட்டு அங்கவஸ்திரம், நெற்றியில் சந்தன, குங்குமப் பொட்டு சகிதம், ஒரு வயதான முதியவரும், ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிந்த இளைஞன் ஒருவனும் நின்றிருந்தனர்.
''யாருங்க... என்ன வேணும்...'' என்றேன்.
''சார் வணக்கம்... அக்ரியில வேலை பார்த்த ராகவன் வீடு இதுதானுங்களே...'' என்றார் முதியவர்.
''ஆமா... நான் தான் ராகவன்; நீங்க யாரு?'' என்றேன்.
''உள்ளே போய் பேசலாமா,'' என்றார் முதியவர்.
''ஓ... சாரி உள்ள வாங்க,'' என்று, அவர்களை வீட்டிற்குள் அழைத்து சென்று, சோபாவில் உட்காரச் சொன்னேன்.
''சார், என் பேரு மாணிக்கம்... வேலன் பதிப்பகத்தோட உரிமையாளர்,'' என்றார் முதியவர்.
''அடடே... உங்கள பத்தி நிறைய கேள்விப்பட்டிருக்கேன்; ஆனா, பாத்ததில்ல. அதான், வெளியிலயே நிக்க வச்சு பேசிட்டேன்; சாரி சார்,'' என்று உண்மையிலேயே வருந்தினேன்.
''பரவாயில்ல; அது கெடக்கட்டும் விடுங்க... உங்களுக்கு, உங்க நண்பர் பரமேஸ்வரன், ஒரு கடிதம் கொடுத்திருக்கார்; அத குடுத்துட்டு போகலாம்ன்னு தான் வந்தேன்,'' என்று, இரண்டு கவர்களை என்னிடம் கொடுத்தார் மாணிக்கம்.
''பரமேஸ்வரனா... பரமு செத்து போய், ரெண்டு மாசம் ஆயிடிச்சே... உங்ககிட்ட எப்படி கடிதம்...'' என்று குழறினேன்.
''மூணு மாசத்திற்கு முன், என்கிட்ட இந்த கவரைக் குடுத்து, 'மாணிக்கம் சார்... இந்த கவருக்குள்ள, என் நண்பன் ராகவனுக்கு ஒரு கடிதம் வச்சிருக்கிறேன்; உங்க பதிப்பகத்திலிருந்து, எனக்கு வர வேண்டிய, 'ராயல்டி' தொகையை, நான் உயிரோடு இருந்தா, எங்கிட்ட குடுங்க; அதுக்குள்ள எனக்கு ஏதாவது ஆகி, நான் இல்லாமப் போனா, அந்த தொகையையும், இந்த லெட்டரையும், என் நண்பன் வீட்ல கொண்டு போய் குடுத்திடுங்க... எனக்காக, இந்த உதவியை செய்யுங்க'ன்னு, ரொம்ப வேண்டிக்கிட்டார். அவருடைய, தத்துவ புத்தகங்கள், இலக்கிய நாவல்களுக்கான, 'ராயல்டி' தொகை தான், இந்த பணம். நீங்களே, கடிதத்தை படிச்சு, விபரத்தை தெரிஞ்சிக்கங்க. இந்த காலத்தில, இப்படி ஒரு நேர்மையான நண்பரை பெற்று இருக்கீங்க; எனக்கும், அவர் நல்ல நண்பர் தான். அவரோட இழப்பு நம்ம எல்லாத்துக்கும், இலக்கிய உலகத்திற்கும் ஈடு செய்ய முடியாதது. சரிங்க ராகவன், நான் வரேன்,'' என்று கிளம்பி சென்று விட்டனர்.
என் மனைவியை கூப்பிட்டு, ''செத்து போனவரு, எழுந்து வந்து பணம் கொடுப்பாரான்னு கேட்டியே, இதோ குடுத்திட்டான், என் பரமு; எனக்காக உயிரையும் கொடுப்பான்டி,'' என்று, விம்மியபடியே கடிதத்தை பிரித்து, சத்தமாகப் படித்தேன்.
என் உயிர் நண்பன் ராகவனுக்கு... நீ இக்கடிதத்தை படிக்கும் போது, அநேகமாக, நான் இந்த உலகத்தில் இருக்க மாட்டேன் என நினைக்கிறேன். ஏனெனில், பல சமயங்களில் என் உள்ளுணர்வு சொல்லிய சம்பவங்கள் என் வாழ்வில் நிகழ்ந்துள்ளன. இப்போதும், என் உள்ளுணர்வு சொல்லியதால் தான், இக்கடிதத்தை எழுதுகிறேன்... எந்த அத்தாட்சியும் இல்லாமல், அவசரத்திற்கு பணம் கொடுத்து உதவினாய். அந்த நன்றியை, நான் காப்பாற்ற வேண்டாமா... மாணிக்கம், என் இனிய நண்பர்; அவர் உன்னை சந்திப்பார்...
என்றும் உன் பரமு.
நண்பனின் கையெழுத்தை பார்த்து கண்கள் கலங்க, அடுத்த கவரை பிரித்தேன்.
'கேஷாக' இரண்டு லட்சமும், மேற்கொண்டு, 25 ஆயிரம் ரூபாயும் இருந்தது.
''பாத்தியா... எவ்வளவு திட்டினே... பாரு... வட்டியோட நம்ம பணத்தை திருப்பி குடுத்திட்டான்; இப்ப என்ன சொல்ற... நீர் கொட்டினா அள்ளிடலாம்; வார்த்தையை கொட்டிட்டியே; அள்ளமுடியுமா...'' என்று அழுதபடியே, கவர்களை அவளிடம் கொடுத்தேன்.
''என்னை மன்னிச்சிடுங்க... அவர் தெய்வம்; நான் சாதாரண மனுஷி அதான் கண்டபடி பேசிட்டேன்,'' என்று அழுதபடியே, பரமுவிடம், மானசீகமாக மன்னிப்பு கேட்டாள், என் மனைவி.

அனு நாராயணன்
சொந்த ஊர் - அல்லிநகரம், தேனி; தற்போது வசிப்பது - சென்னை. வயது: 59, இவருக்கு கதைப் புத்தகங்கள் படிப்பதில், அதிக ஆர்வம் உண்டு. டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டு, இந்த போட்டியில், முதல் பரிசு பெறுவதே, தன்னுடைய லட்சியம் என்று கூறுகிறார்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
07-டிச-201612:06:09 IST Report Abuse
Manian சுமார் 1% விகித நண்பர்களே இப்படி அமைவார்கள்.கடவுள் பயம், மான அவமான உணர்வு, பண்புள்ள குடும்பத்தில் பிறந்தவர்களே உயிர் தோழர்கள், மற்றவர்கள் ஒட்டுண்ணிகள். ராகவன் மனைவிக்கு பரசு பள்ளிநாள் தோழன் இல்லை, எனவே அவள் தாய் உணர்வில் கோபப்பட்டது சரியே.அவ்வையார் சொன்னாறே: நன்றி ஒருவர்க்கு செய்தக்கால், அந்நன்றி என்று பயன் தரும் கொல் என வேண்டாம் - நின்று, வளர் தெங்கு தான் உண்ட நீரை தலையாலே தருதலால். பரமு குலையுடன் பலன் தந்த தென்னை, ராகவன் அந்த தென்னைக்கு நீர் பாய்ச்சி காத்த நண்பன்.
Rate this:
Cancel
Senthilnathan - Mumbai,இந்தியா
04-டிச-201615:08:32 IST Report Abuse
Senthilnathan இயல்பான நடையில் அருமையான கதை. படைத்த அனு நாராயணன் அவர்களுக்கும் பிரசுரித்த தினமலருக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.
Rate this:
Cancel
ஹரிராம்குமார் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
04-டிச-201614:02:53 IST Report Abuse
ஹரிராம்குமார் நல்ல கதை.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X