சிவகார்த்திகேயன் நடிக்கும், 'பீரியட்' பிலிம்!
இதுவரை, ஜாலியான கதைகளில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், ரெமோ படத்தில், லேடி கெட்டப்பில் நடித்து, திரும்பிப் பார்க்க வைத்தார். அதையடுத்து, தற்போது, மோகன்ராஜா இயக்கும் படத்தில், ஆக் ஷன் கதையில் நடிப்பவர், ரஜினிமுருகன் பட இயக்குனர் பொன்ராமின் புதிய படத்தில், 1980களில் நடக்கும், 'பீரியட்' கதையில் நடிக்கிறார். இப்படத்தில், சிவகார்த்திகேயன் - சமந்தா இருவரும், அக்காலத்திற்கேற்ப, தங்களது கெட்டப்பை, முழுமையாக மாற்றி நடிக்கின்றனர்.
— சினிமா பொன்னையா
லண்டன் மியூசியத்தில், பிரபாஷுக்கு மெழுகுச் சிலை!
லண்டனிலுள்ள, 'மேடம் டுசார்ட்ஸ்' மியூசியத்தில், உலகிலுள்ள பல பிரபலங்களின், மெழுகுச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில், பாலிவுட் சினிமாவைச் சேர்ந்த அமிதாப்பச்சன், ஷாரூக்கான் மற்றும் ஜஸ்வர்யா ராய் உட்பட, பலரது மெழுகுச் சிலைகள் இடம் பெற்றுள்ள நிலையில், தென்னிந்திய சினிமாவை சேர்ந்த எந்தவொரு நடிகர், நடிகையரின் மெழுகுச் சிலையும், இதுவரை அந்த மியூசியத்தில் இடம் பெறவில்லை. இந்நிலையில், பாகுபலி படத்தில் நடித்த தெலுங்கு நடிகர் பிரபாஷின் மெழுகுச் சிலையை, அந்த மியூசியத்தில் அமைக்க, தற்போது, முடிவு செய்துள்ளனர்.
— சி.பொ.,
வயது முதிர்ந்த கதாநாயகர்களை தவிர்க்கும் கீர்த்தி சுரேஷ்!
விஜயுடன், பைரவா படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், தற்போது, முன்னணி நடிகையாகி விட்டார். ஆனால், இளவட்ட கதாநாயகர்களின் படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கும் அவர், 50 வயது கதாநாயகர்களின் படங்களை தவிர்க்கிறார். அவ்வகையில், சீயான் நடிகருடன் நடிக்க வந்த வாய்ப்பை, தட்டிக் கழித்ததால், நடிகை மீது செம கோபத்தில் இருக்கிறார், மேற்படி நடிகர்.
— எலீசா
ரஜினி ஸ்டைலில் சிம்பு!
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில், மூன்று வேடங்களில் நடிக்கும் சிம்பு, மதுரை ரவுடியாக, மைக்கேல் என்ற வேடத்தில் நடித்து முடித்து விட்டார். அதையடுத்து, தற்போது, 60 வயது அஸ்வின் தாத்தா என்ற வேடத்தில், படையப்பா பட ரஜினி கெட்டப்பில், நடித்து வரும் சிம்பு, அப்புகைப்படத்தை, இணையதளத்தில் வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
— சி.பொ.,
மீண்டும் பிசியாகும் சிம்ரன்!
மாஜி கதாநாயகி சிம்ரன், திருமணத்திற்கு பின், கோலிவுட்டில் வலம் வர முயற்சி எடுத்தார்; ஆனால் கிடைத்ததெல்லாம், அண்ணி, அக்கா வேடங்கள் என்பதால், அவ்வாய்ப்புகளை தவிர்த்து வந்தார். இந்நிலையில், தற்போது, தன் கணவர் தீபக், வில்லனாக நடிக்கும், ஓடு ராஜா ஓடு என்ற படத்தில், கெஸ்ட் ரோலில் நடிக்கும் சிம்ரன், பார்த்திபன் நடிக்கும், கோடிட்ட இடங்களை நிரப்புக என்ற படத்தில், அவருக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
காணக்கிடைத்தது கார்த்திகைப் பிறை போல்!
—எலீசா.
சித்தார்த் படத்துக்கு இந்தி டைட்டில்!
தமிழில் தயாராகியுள்ள ஒரு படத்திற்கு, இங்கிலீஷ் படம் என்று தலைப்பு வைத்துள்ள நிலையில், சித்தார்த் நடித்து வரும், ஒரு படத்திற்கு, சைத்தான் கா பச்சா என்ற இந்தி தலைப்பு வைத்துள்ளனர். 'இதுதான், படத்தின் கதைக்கு, பொருத்தமாக இருக்கும்...' என்று கூறும் சித்தார்த், இதற்கு முன், ஜில் ஜங் ஜக் என்ற பெயரில், ஒரு படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
— சி.பொ.,
மற்ற நடிகர்களுக்கும் பின்னணி பாடும் தனுஷ்!
இதுவரை, தான் நடிக்கும் படங்களில், தனக்காக மட்டுமே, பின்னணி பாடி வந்தவர் தனுஷ். தற்போது, அவரை, நெஞ்சம் மறப்பதில்லை படத்தில், எஸ்.ஜே.சூர்யாவுக்காகவும், யாக்கை படத்தில், கிருஷ்ணாவுக்காகவும் பின்னணி பாட வைத்துள்ளார், யுவன் ஷங்கர் ராஜா. இதையடுத்து, சிம்பு பாணியில், மற்ற நடிகர்களுக்கு பின்னணி பாடவும் தயாராகியிருக்கிறார் தனுஷ்.
— சி.பொ.,
நயன்தாராவின் ஆயுர்வேத சிகிச்சை!
விஜயசேதுபதியுடன், நானும் ரவுடி தான் படத்தில் நடித்த நயன்தாரா, தற்போது, மோகன்ராஜா இயக்கத்தில், சிவகார்த்திகேயனுக்கு, நாயகியாகியிருக்கிறார். இப்படத்தில், சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கும் போது, தான், வயதானவளாக தெரிந்து விடக் கூடாது என்பதற்காக, தன் உடல் எடையை குறைத்துள்ள நயன்தாரா, கேரளா சென்று, ஆயுர்வேத சிகிச்சை மூலம், உடல் கட்டை, மேலும் இளமையாக்கி உள்ளார்.
அழகு பெண்ணே காத்தாயி; உன்னை அழைக்கிறாண்டி கூத்தாடி!
— எலீசா
மீண்டும் ஜனகராஜ்!
ரஜினி மற்றும் கமல் என, பல முன்னணி நடிகர்களின் படங்களில், காமெடியனாக நடித்தவர் ஜனகராஜ். கடந்த, எட்டு ஆண்டுகளுக்கு முன், பட்டையக்கிளப்பு என்ற படத்தில் நடித்த அவர், பின், தன் மகனுடன் அமெரிக்காவில், 'செட்டிலாகி' விட்டார். இந்நிலையில், தற்போது, மீண்டும் நடிக்க வந்திருக்கும் ஜனகராஜ், விஜயஸ்ரீ என்ற இயக்குனர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பவர், தொடர்ந்து குணச்சித்ர வேடங்களில் நடிக்க, வாய்ப்பு தருமாறு, தன் அபிமான இயக்குனர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
— சி.பொ.,
சர்ச்சையில் சிக்கிய ஜெயம்ரவி படம்!
ரோமியோ ஜூலியட் படத்தை இயக்கிய, லட்சுமண், தற்போது, இயக்கியுள்ள படம், போகன். ஜெயம்ரவி - அரவிந்த்சாமி இணைந்து நடித்துள்ள இப்படம், கூடு விட்டு கூடு பாயும் கதையில் உருவாகியிருக்கிறது. இப்படத்தின், 'டீசர்' சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதைப்பார்த்த ரசிகர்கள், தி சேன்ஞ் அப் என்ற ஹாலிவுட் பட பாணியில் இருப்பதாக, இணையதளங்களில் செய்தி வெளியிட்டு, சலசலப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
காதலில் விழுந்த படத்தில் நடித்த மூன்றெழுத்து நடிகை, 'ரீ - என்ட்ரி' கொடுத்துள்ளார். ஆனால், அம்மணி, பழைய சரக்காகி விட்டதால், கோலிவுட்டில் கண்டுகொள்ள ஆளில்லை. இருப்பினும், சில, 'லேட்டஸ்ட்' இயக்குனர்களுடன், ரகசிய சந்திப்பு நடத்தி, வாய்ப்பு கேட்டு வரும் நடிகை, அதிரடி கவர்ச்சிக்கு, தான் தயாராகி விட்டதை உணர்த்தும் வகையில், அவர்களிடம், தன் காமக் கொடூர ஆல்பங்களை சமர்ப்பித்து வருகிறார்.
அங்காடி நடிகையுடன், காதலில், 'கிசுகிசு'க்கப்பட்டு வரும் இரண்டெழுத்து நாயகன், தற்போது, தான் நடிக்கும் ஒரு மூன்றெழுத்து படத்தை, சில நண்பர்களுடன், சேர்ந்து தயாரித்து வருகிறார். அதனால், இப்படத்தில், தனக்கு பைனான்ஸ் உதவி செய்யுமாறு, அங்காடி நடிகையிடம், அவர் கை நீட்டிய போது, மறுத்து விட்டார், அம்மணி. இதனால், தக்க சமயத்தில், தனக்கு கைகொடுக்காத காதலி மீது, செம காண்டில் இருக்கிறார் இரண்டெழுத்து நாயகன்.
சினி துளிகள்!
* கவலை வேண்டாம் என்ற படத்தில், இரண்டாம் கதாநாயகியாக நடித்துள்ளார், சுனைனா.
* பலூன் மற்றும் எனக்கு வாய்த்த அடிமைகள் போன்ற படங்களில், தற்போது நடித்து வருகிறார், ஜெய்.
அவ்ளோதான்!