''சிவராமா... உன்னை அவசரமா பாக்கணும்; எங்க இருக்க...'' என்று போனில் ஒலித்த தன் நண்பன் பரந்தாமனின் குரலில் தெரிந்த அவசரத்தை உணர்ந்து, ''வீட்டுக்கு வா...'' என்றார்.
''வீடு சரி படாது; லைப்ரரி பக்கத்துல உள்ள மரத்தடிக்கு வந்துடு,'' என்றார் பரந்தாமன்.
இருவருக்கும் இடையே, 40 ஆண்டுகள் பழக்கம். ஒரு சில விஷயங்கள் தவிர, பெரும்பாலும், இருவரும் எதையும் மறைத்தது இல்லை.
மரத்தடியில் காத்திருந்தார், சிவராமன். சிறிது நேரத்தில் அங்கு வந்த பரந்தாமனின் முகம், கலவரமடைந்திருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தவர், பின், மெதுவாக, ''சிவராமா... ஒரு பெரிய பிரச்னை. எனக்கு, ஒரு யோசனை தோணுது. ஆனா, அது தப்பா போச்சுன்னா விஷயம், ரொம்ப மோசமாயிரும், அதான், உன்கிட்ட ஐடியா கேட்கலாம்ன்னு இங்க வரச் சொன்னேன்,'' என்றார்.
''என்ன பரந்தாமா... என்ன விஷயம் இவ்வளவு, 'பில்டப்' தர்றே... எவ்வளவு பெரிய பிரச்னைன்னாலும் அத அழகா சமாளிப்பவனாச்சே நீ...'' என்றார், சிவராமன்.
''என் பொண்ணு வினிதா, காலேஜ்ல, கூட படிக்கற பையனை, காதலிக்கிறா. நான் கூட, அவன பாத்திருக்கேன். ஏதோ, 'நோட்ஸ்' வாங்க வீட்டுக்கு வர்றான்னு இதுவரை நினைச்சிருந்தேன். இப்பத் தான் தெரியது, அவ, அவன காதலிக்கிறான்னு...'' என்று அவர் முடிக்கும் முன், ''என்னப்பா... நம்ப வினிதா காதலிக்கிறாளா...'' ஆச்சரியப்பட்டார் சிவராமன்.
''இப்ப விஷயம் அது இல்ல; என் பெண்ணும், அந்தப் பையனும், காலேஜ்ல மறைவான இடத்துல உட்கார்ந்து கொஞ்சம் நெருக்கமா பேசிட்டு இருந்திருப்பாங்க போல...'' பரந்தாமன் சொல்லும் போதே, சிவராமனின் கண்களில், வெறுப்பு தெரிந்தது.
''நெருக்கமா பேசிட்டுருந்தாங்கன்னா... ''
''என்னப்பா... பெத்த பொண்ணப் பத்தி என்கிட்டயே கேட்கிறே...'' என்று கூறி, தலை குனிந்தார் பரந்தாமன்.
''சாரி... விஷயத்த சொல்லு.''
''அதை, அந்த காலேஜில படிக்கிற ஒரு பையன், வீடியோ எடுத்து, என் நம்பருக்கு அனுப்பியிருக்கான்.''
''என்ன...'' அதிர்ச்சியானார் சிவராமன்.
''ஆமாம்... அந்த கன்றாவிய பாத்து தொலைச்சேன்,'' கோபத்துடன், தலையில் அடித்துக் கொண்டார், பரந்தாமன்.
''கஷ்டம் தான்... நீ பொண்ண கூப்பிட்டு கண்டிப்பேன்னு அனுப்பியிருக்கான் போல,'' கொஞ்சம் ஆறுதலாய் சொன்னார் சிவராமன்.
''அதான் இல்ல; ஐந்து லட்சம் ரூபாய் வேணுமாம், 'பிளாக்மெயில்' செய்றான்; இல்லேன்னா, 'வாட்ஸ் - அப்'ல போடுவானாம். காலேஜ் நாறிடும்கிறான். எனக்கு என்ன செய்றதுன்னு ஒண்ணும் புரியல,'' என்று கண் கலங்கினார்.
அவரது தோளை, ஆதரவாய் அணைத்தார் சிவராமன்.
''இது என் மனைவி, மகளுக்கு தெரியக்கூடாது; எப்படியாவது, இப்பிரச்னையை தீர்க்கணும்,'' என்றவரின் குரல் தழு தழுத்தது.
''அவன் கில்லாடிதாம்பா... டைரக்டா உன்ன, 'அப்ரோச்' செய்துருக்கான்; பொண்ணு விஷயத்துல, அப்பா பயப்படுவார்ன்னு தெளிவா புரிஞ்சு வச்சிருக்கான். இந்த, 'ஸ்மார்ட்' போனால நடக்கற கெடுதல்ல, இதுவும் ஒண்ணு,'' கவலைப்பட்டார் சிவராமன்.
''இப்ப, இந்த பிரச்னைய, ஒண்ணு, போலீஸ் கிட்ட கொண்டு போகணும்; ஆனா, அது எல்லாருக்கும் தெரிஞ்சு, என் குடும்பத்துக்கே கரும்புள்ளியா போயிடும். இல்ல, அவன் கேட்ட பணத்தை கொடுக்கலாம்; ஆனா, விஷயம் அதோட முடிஞ்சிடும்ன்னு சொல்ல முடியாது. இந்த வயசிலேயே, இப்படி ஒருத்தன் குறுக்கு வழியில, பணம் பறிக்க நினைக்கிறானே... பாவம்ப்பா அவனும், அவனை பெத்தவங்களும்,'' என்றதும், சிவராமனுக்கு கோபம் வந்தது.
''அட... நாட்டுக்கு ஒரு காந்தி போதும்ப்பா... உன்னை, ஒருத்தன் மிரட்டுறான்; நீ, அவன நினச்சு கவலைப்படற. ஒண்ணு செய்யலாம்... கூலிப்படையை வெச்சு அவன போட்டு தள்ளிடலாம்!''
''என்னப்பா சொல்ற...'' திகைத்தார் பரந்தாமன்.
''வேற வழி! இது மாதிரி குறுக்கு வழியில, பணம் தேடறவனுக்கு, அதுதான் சரியான தண்டனை. இவன் மாதிரி ஆளுங்க தான், நம்பள மாதிரி சாதுவானவங்களையும், கெட்டவனா மாத்திடறாங்க,'' கோபப்பட்டார் சிவராமன்.
''இல்ல சிவராமா... என் பொண்ணு மேலயும் தப்பிருக்கே...''
''என்ன பெரிய தப்பு... அவ என்ன கொலையா செய்துட்டா... சரி, அவ செய்தது தப்புன்னாலும், அத பிளாக் மெயில் செய்து, பணம் சம்பாதிக்க நினைக்கும் இவன் செய்வது சரியா, இந்த மாதிரி ஆட்கள சும்மா விடக் கூடாது,'' என்றார்.
''எனக்கு யோசனை சொல்வேன்னு நினைச்சா, விஷயத்த பெருசாக்குறியே... எனக்கொரு யோசனை தோணுது; சரிவருமான்னு சொல்லு,'' என்றவர், தான் நினைக்கும் விஷயத்தைக் கூறியதும், சிவரமானின் கண்கள், அகல விரிந்தது.
'எப்படி இவனால் மட்டும் இப்படி சிந்திக்க முடிகிறது...' ஆச்சரியத்தின் எல்லைக்கே போனார்.
''பரந்தாமா... நீ, க்ரேட்ப்பா... எதையும், அன்பால சாதிக்க முடியும்ன்னு சொல்ற... இது, நேர்வழி மட்டுமில்ல; ரொம்ப உயர்ந்த வழியும் கூட. உனக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். நான், உன் கூடவே இருக்கேன்,'' என்று தைரியம் கொடுக்க, பரந்தாமனுக்கு, மனதிலிருந்து பெரிய பாரம் இறங்கியது போல் தோன்றியது.
மறு நாள், பரந்தமானுக்கு போன் செய்த அவன், ''சார்... வீடியோ பாத்தீங்கள்ல... என்ன முடிவு செய்துருக்கீங்க...'' என்று கேட்டான்.
''தம்பி... நீ கேட்டதை கொடுத்துடறேன்; ஆனா, ஒரே தடவையில முடியாது. முதல்ல, ஒரு லட்சம் ரூபா தர்றேன்; அதுவும், வர்ற ஞாயிற்றுக் கிழமை. எந்த இடத்திற்கு வரணும்ன்னு நீயே சொல்லு,''என்றார்.
எதிர்முனை சற்று யோசித்து,''சரி... ஆனா, போலீஸ் கீலிசுன்னு போன, அவ்வளவு தான்,'' என்ற மிரட்டலுடன், தொடர்பு துண்டிக்கப்பட்டது.
அந்த ஞாயிற்றுக் கிழமைக்குள், பரபரப்பாக, சில காரியங்களை செய்து முடித்தார் பரந்தாமன்.
ஞாயிறுக்கிழமை காலை, அவனிடமிருந்து பரந்தாமனுக்கு போன் வந்தது.
''என்ன பணம் ரெடியா...''
''ரெடி தம்பி... எங்க வரணும்...''
''பஸ் ஸ்டாண்டு பக்கத்துல, கிரே கலர் மாருதி கார் நிற்கும்; வாங்க,'' என்று கூறியதும், லைன் கட்டாகியது.
அடுத்த, 10 நிமிடத்தில், அவன் சொன்னபடி, கிரே கலர் மாருதி கார் அருகில் பரந்தாமன் நிற்க, அடுத்த விநாடி, கார் கண்ணாடி கீழிறங்க, ''எங்க பணம்...'' அதட்டலாக கேட்டான்.
அவனைப் பார்த்த போது, 'டிவி'யில் டான்ஸ் போட்டியில் கலந்து கொள்பவன் போல் இருந்தான்.
''இதோ...'' என்று, பணம் உள்ள, 'லெதர்' பேக்கை, நீட்டினார் பரந்தாமன்; அவன் வாங்கிக் கொண்டான்.
''மீதி, உடனே வந்து சேரணும்... அப்புறமா, வீடியோவ, 'டெலிட்' செய்துடறேன்,'' என்று அவன் சொன்னதும், ''தம்பி... ஒரு சின்ன உதவி...'' கெஞ்சலாக கேட்டார், பரந்தாமன்.
'என்ன...' என்பது போல் பார்த்தான்.
''பக்கத்துல என்ன, 'ட்ராப்' செய்யறியா...'' கெஞ்சும் குரலில் கேட்டார் பரந்தாமன்.
அவன் யோசித்தான்; சுற்றும் முற்றும் பார்த்தான்.
''சரி ஏறுங்க... ஏதாவது, 'பிளான்' செய்தீங்க, ஜாக்கிரதை,'' மிரட்டியபடி, கார் கதவை திறந்தான்.
பரந்தாமன் ஏறிக் கொள்ள, மாருதி கார், அவர் சொன்ன இடத்தில் நின்றது.
அது ஒரு திருமண மண்டபம்; இறங்கிய பரந்தாமன் அவனை பார்த்து, ''தம்பி... நீயும் வாப்பா,'' என்று அழைத்தார். அவன் கீழே இறங்காமல், மண்டப வாயிலில் இருந்த மணமக்களின், பேனரைப் பார்த்தான். உடனே, திடுக்கிட்டு, நிலைகுலைந்தான். அது, பரந்தாமன் மகள், வினிதாவும், அவள் காதலித்த அபிலாஷும்!
பரந்தாமன் மணமேடைக்கு செல்ல, அவனை காரிலிருந்து வலுக்கட்டாயமாக இறக்கினார், சிவராமன். அதிர்ச்சியிலிருந்து விலகாமல், மண்டபத்துக்குள் நுழைந்தான். தனக்கு அருகில் அவனை அமர வைத்தார், சிவராமன். நிச்சயதார்த்த விழா ஆரம்பமானது.
அவனை நோக்கி திரும்பிய சிவராமன் மெதுவாக, ''தம்பி... இத நீ எதிர்பாக்கல இல்ல; பணம் சம்பாதிக்க, ஒரு குடும்பத்தின் கவுரவத்தோடும், ஒரு பெண்ணின் வாழ்க்கையோடும் விளையாடும் கேடு கெட்ட, குறுக்கு வழிய நீ தேர்ந்தெடுத்தே... ஆனா, என் நண்பன், யார் மனசும் புண்பட கூடாதுன்னு நேர் வழியே கடைப்பிடித்தான்.
''தம்பி... நீ பிறவிலேயே கெட்டவன் இல்ல. ஏதோ, உன்னோட சூழ்நிலை, இப்படி உன்னை கெட்ட வழியிலே திருப்பிடுச்சு. அதனால தான், உன்னையும் திருத்தணும்; அதேநேரம், தன் மகளின் காதலை, அது நியாயமா, நல்ல பையனா இருந்தா, அதையும் அங்கீகரிக்கணும்ன்னு நினைச்சாரு. அதுக்கு தடையா இருந்த ஜாதியை, தூக்கி போட்டாரு. உடனே, மாப்ள வீட்ல போய் பேசினாரு. 'படிக்கும் போது, கல்யாணம் வேணாம்; நிச்சயம் மட்டும் போதும்'ன்னு அவங்க சொல்ல அதற்கு சம்மதித்து, இப்ப இந்த நிச்சயதார்த்த விழாவ நடத்துறாரு.
''இப்ப பாரு... எல்லாருக்கும் சந்தோஷம். உனக்கும் ஒரு லட்சம் ரூபா கொடுத்திருக்காரு... சந்தோஷம் தானே...'' என்றார். பதில் பேச திராணியில்லாமல், முகம் வெளிறியவன், அழ ஆரம்பித்தான்.
'சே... எவ்வளவு உயர்ந்த மனிதரிடம் இவ்வளவு ஈனத்தனமாக நடந்து கொண்டாமே...' என்று நினைத்தான்.
நிச்சயம் முடிந்து, கீழிறங்கி வந்தார் பரந்தாமன். அவர் பாதங்களில் விழுந்தான்; அவன் தோளை அணைத்து தூக்கிய பரந்தாமன், ''தம்பி... குற்ற உணர்ச்சியில் வருத்தப்படாத... பணத்துக்காக, நீ போட்ட பிள்ளையார் சுழி தான், இப்ப நடந்த நிச்சயதார்த்தம். இந்த உலகத்துல, எல்லாரும் நல்லவங்க தான்; தவறான பாதையில போகும் போது, திருத்த ஆள் இல்லாததால், கெட்டவங்களா மாறிடறாங்க. இனிமே, நீயும் நல்லவந்தான். உன்ன பத்தி விசாரிச்சேன். உனக்கு அப்பா கிடையாது; அம்மா செல்லம்; நடுத்தர குடும்பம்; ஜாலியா செலவழிக்க பணம் தேவை; நண்பர்களும் சரியில்ல. அதனால, இப்படி ஆயிட்ட... கெட்ட வழிய விடு; நல்லா படி; முன்னேறலாம்...'' என்றபோது, கூனி, குறுகி போனான்.
'இப்படிப்பட்ட மனிதர் வாழும் உலகில், தானும் வாழ்வதே கொடுப்பினை...' என நினைத்து, அவர் தந்த பணத்தை திருப்பி கொடுத்தவன், ''அப்பா... குறுக்கு வழிக்கு தான், அறிவு பயன்படும்; நேர்வழிக்கு அன்பே போதும்ன்னு, எனக்கு கத்து கொடுத்துட்டீங்க; ரொம்ப நன்றி,'' என்று சொல்லி, திருந்தியவனாய் வெளியேறினான்.
கீதா சீனிவாசன்