பாட்மின்டன் விளையாட்டு கூடத்தில், எங்களுடன் விளையாடிய ஒருவர், சில நாட்களாய் வராமல் போகவே, ஏன் என்று விசாரித்தேன்.
'மகளுக்கு, திருமணம் பேசுவதால், அது சம்பந்தமான அலைச்சல்...' என்றார்.
சிறிது நாட்கள் கழித்து, மறுபடியும் பேசிய போது, 'நல்ல இடமாக அமைந்து விட்டது; அது சம்பந்தமாக, பல பணிகள், பொறுப்புகள்...' என்றார்.
திருமணத்திற்கு அழைத்தார்; சென்றிருந்தேன். அவருக்கு இருந்த திருமண பரபரப்பிலும், 'எப்ப விளையாட வர்றீங்க...' என்றேன்.
'இனிமே என்ன... என் கடமை முடிஞ்சது; பெண் - மாப்பிள்ளை மறுவீடு, விருந்து விசேஷங்கள் எல்லாம் முடித்து, ஒரு வாரத்தில் வந்து விடுவேன்...' என்றார்.
சிறிது நாட்கள் கழித்து மறுபடியும் அழைக்க, ஏதேதோ காரணம் கூறினார்.
'இனியும் காரணம் சொல்லாதீர்கள்... சட்டென்று கிடைக்கும் ஒருநாளில், மட்டையை தூக்குங்கள். ஒருநாள் வந்து, ஆடி விட்டுப் போங்கள். அப்புறம் பாருங்கள், நெருப்பாய் பற்றிக் கொள்ளும்...' என்றேன். வந்தார்; அது நடந்தது.
ஊருக்கு போய் வந்ததும், அதுதான் முதல் வேலை என்று சம்பந்தமில்லாமல் பயணத்தையும், பணியையும் முடிச்சு போடுவோரை பார்க்கிறேன். பணியை ஆரம்பித்து வைத்த பின் புறப்படுங்கள்; பாதி வேலை முடிந்திருக்கும்.
'ஊருக்கு போய் வந்து, இந்த வேலையை எடுத்துக் கொள்கிறேன்...' என்பது சாக்குப்போக்கே தவிர, வேறு அல்ல. ஊரிலிருந்து வந்ததும், புதுச்சுமை ஒன்று காத்திருக்க, மறுபடியும், தள்ளிப் போடல் தான்.
மனிதர்கள் பலருக்கும், விதவிதமான மன அடைப்புகள் இருக்கின்றன. 'இதெல்லாம் முடியட்டும்; அப்புறம் அது...' என்று எண்ணற்ற விஷயங்களை தள்ளிப் போடுகின்றனர்.
பணத்தை தயார் செய்த பின், அப்புறம் ஆபரேஷன் என்கின்றனர்; அவசியம் இல்லை. ஒருமுறை மருத்துவரை சந்திக்கும் ஆரம்பத்தை மட்டும் செய்து விட்டாலே போதும்; அவர் சொல்லி தரும் முக்கியத்துவம், நமக்குள் மகத்தான சக்தியை திரளச் செய்து, பணத்திற்கு ஏற்பாடு செய்ய வைக்கும்.
செலவை பற்றி மலைப்பாக நினைக்க, 'ப்பூ... இவ்வளவு தானா...' என்று, நாம் அறிய வருகிற தொகை, 'ஆபரேஷனை இவ்வளவு காலம் கடத்தியிருக்க வேண்டியதில்லை...' என்கிற உணர்வை தரும்.
நாம் நினைக்கும் - விரும்பும் எந்த ஒரு செயல்பாடும், எண்ணற்ற கூறுகளை கொண்டது. அதாவது, பல கட்டங்களை கொண்ட பணிகளாக உள்ளன. அதற்கான முதல் கட்டப் பணிகளை ஆரம்பித்து விட்டால் போதும். மெல்ல, அதுவே தன்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக் கொள்ளும்.
'வர வர வீட்டுக்காரங்க தொல்லை தாங்க முடியலை. நமக்குன்னு ஒரு வீடு கட்டணுங்க; மனை தான் தயாரா இருக்குல்ல...' என்பார் மனைவி. இல்லங்கள், பலவும் உருவான வரலாறு, இல்லத்தரசிகளிடமிருந்தே ஆரம்பிக்கின்றன.
'அதுக்கெல்லாம் நாளுங்(?) கிழமையும் (?) வர வேணாமா... பணத்திற்கு எங்க போறது...' என்று தவிர்க்கிற கணவர், முதலில், ஒரு கட்டடப் பொறியாளரை அணுகி, 'என் சக்திக்கு ஏற்ற வீடு ஒன்றை வடிவமைத்து தாருங்கள்...' என்று, நின்றால் போதும். பின் இருக்கவே இருக்கிறது, அரசு அலுவலகம் நோக்கி, நடையாய் நடை!
'அப்ரூவ'லுக்கு நாக்கு தள்ளிப் போகும் என்பது, பலரும் அறிந்த ஒன்று தான். இப்படிப்பட்ட, ஆரம்ப செலவுகளை செய்து முடித்து, தினமும், அந்த, 'ப்ளு பிரின்டை' எடுத்து, கண்முன் விரித்து விட வேண்டும்.
'பணத்திற்கு என்ன செய்யலாம்...' என்று, சீத்தலை சாத்தனார் மாதிரி, எழுத்தாணியால் தலையில் குத்தி கொள்ளாவிட்டாலும், பென்சிலால் உறங்கி கிடக்கிற எழுச்சியற்ற மூளையை, தினமும் தட்டிப் பார்க்கலாம். நம்பவே மாட்டீர்கள் ஒருநாள், பிரமாதமாய் ஒரு பொறி தட்டும்; யோசனை தோன்றும்.
என்னது மனையே இல்லையா... ஊருக்கு ஒதுக்குப்புறமாய் உள்ள, ஒரு மனையை தேர்ந்தெடுத்து, தவணை கட்ட ஆரம்பிக்கலாம்.
'அங்கே போய் எவன் வீடு கட்டுவான்; சரியான வனாந்திரம்...' என எண்ணாமல், வீடு கட்டும் முயற்சிக்கு, இது நல்ல அச்சாரம்.
இதை விற்று, மேலும் உருட்டி, புரட்டி உள்ளூர் மனையை வாங்கலாம்; சிறு துளி பெரு வெள்ளம்!
திருமண பேச்சும் இப்படித்தான், இதுவும் பல கூறுகளையும், கட்டங்களையும் கொண்டது. 'பெண், குதிராய் (நெல் கொட்டி வைக்கும் கலன்) வளர்ந்து நிற்கிறாள்; இன்னும், திருமணம் பேசாமல் எப்படி...' என்கிற அனத்தலிலிருந்து விடுபட, அந்தந்த சமூக சேவை நிலையங்களில், பதிவு செய்து வைக்கலாம். இந்த, 'கிளி'யை கொத்திக் கொண்டு போக, ஒரு ராஜகுமாரன் முன் வந்தால் போதும்; மற்றவை சாதாரணமாக நடக்கும்.
'அது அதுக்கு, வேளை வர வேணாமா... ஆண்டவன் எப்ப கண் திறக்கிறானோ, அப்ப பாத்துக்கலாம்...' என்று, திண்ணை தத்துவம் பேசுவது, வேலைக்கு ஆகாது.
'பார்ப்போம்... வருகிற போது வரட்டும்...' என்று இருப்பதை விடுத்து, அதை நோக்கி நகர்வது, நம் கையில் தான் உள்ளது!
லேனா தமிழ்வாணன்