கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 டிச
2016
00:00

கேள்வி: வேர்டில் டாகுமெண்ட் ஒன்றைத் தயாரிக்கும்போது, சில வரிகளை ஹை லைட் செய்தால், மீண்டும் அதனை நிறுத்த முடியவில்லை. No Color கிளிக் செய்து அல்லது, வேர்ட் பைலை மூடி மீண்டும் திறந்துதான் பயன்படுத்த முடிகிறது. இந்த செயல்பாட்டினை, நாம் பயன்படுத்தியவுடன் மூடுவது எப்படி?
ஆர். கீர்த்தி வாசன், தஞ்சாவூர்.
பதில்:
மிக எளிது, நீங்கள் No color தேர்ந்தெடுக்க, ஹைலைட் செய்திடும் ஐகானில் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவினைப் பயன்படுத்தி இருப்பீர்கள். வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கவும், இதே மெனுவினைத் திறந்திருப்பீர்கள். அதில் No color என்னும் ஆப்ஷன் அடுத்து, Stop Highlighting என கிரே வண்ணத்தில் இருக்கும். சற்று உற்றுப் பார்த்தாலே தெரியவரும். இதில் கிளிக் செய்தால், உடனே, ஹைலைட் செய்திடுவதற்கான ப்ரஷ் கர்சர் மறைந்துவிடும். டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கையில், ஹைலைட்டிங் செய்யப்பட மாட்டாது.

கேள்வி: இணைய தளங்களைப் பார்க்கையில், சில வேளைகளில் திரைக் காட்சி ஸூம் ஆகிவிடுகிறது. எழுத்துகள் எல்லாம் பெரிய அளவில் தெரிகின்றன. ஆனால், அதனை முந்தைய நிலைக்குக் குறைக்க முடிவதில்லை. இது ஏன் இப்படி ஆகிறது? ஏன் பழைய நிலைக்கு வர வைத்திட முடியவில்லை? தயவு கூர்ந்து விளக்கம் அளிக்கவும்.
ஆர். எஸ். குமரேசன், மதுரை.
பதில்
: நீங்கள் கண்ட்ரோல் அழுத்தியவாறு, மவுஸின் ஸ்குரோல் வீலைச் சுழற்றியிருப்பீர்கள். மீண்டும் அதனை எதிர்வாக்கில் சுழற்றினால், காட்சித் திரையின் அளவு குறையும். இதே போல, கண்ட்ரோல் கீ அழுத்திய நிலையில் '+' அழுத்தினால் பெரிதாகும். “-- _''அழுத்தினால் அளவு குறையும். பழைய 100% அளவிற்கு எந்த நிலையிலிருந்தும் திரும்ப, கண்ட்ரோல் கீ அழுத்தி ஸீரோ கீ (Ctrl+-0) அழுத்தவும்.

கேள்வி: ஜிமெயில், யாஹூ மெயில் அக்கவுண்ட்களை முற்றிலுமாக நீக்குவது பற்றி முன்பு எழுதியிருந்தீர்கள். எனக்கு ட்விட்டரில் இரண்டு அக்கவுண்ட்கள் உள்ளன. பழைய பெயரில் உள்ள அக்கவுண்ட்டினை நீக்க விரும்புகிறேன். நீக்க முடியுமா? இதற்கு என்ன செய்திட வேண்டும்?
எஸ். பிரேமா செல்வன், பெங்களூரு.
பதில்:
ட்விட்டர் அக்கவுண்ட்டினையும் நீக்கலாம். நீக்கும்போது, உங்கள் பதிவுகள், பின்பற்றுபவர்கள் குறித்த டேட்டா, பேவரிட் மற்றும் பிற டேட்டா ஆகியவை முழுதுமாக நீக்கப்படும். ட்விட்டர் அக்கவுண்ட்டினை நீக்கும் முன், அதனை முடக்க (“deactivate”) வேண்டும். முடக்கிவிட்டால், ட்விட்டர் உடனே உங்கள் அக்கவுண்ட்டில் உள்ள அனைத்து டேட்டாவினையும் உடனே நீக்கிவிடும். பின்னர், அதனை முழுமையாக அழித்துவிட, வரிசையில் வைக்கும். 30 தினங்களுக்குப் பின்னர், முழுமையாக அழிக்கும் வேலையில் இறங்கும். இந்த கால கட்டத்தில், மீண்டும் உங்கள் கணக்கினை உயிர்ப்பிக்க விரும்பினால், வழக்கம்போல, யூசர் அக்கவுண்ட், பாஸ்வேர்ட் கொடுத்து சென்று, உயிர்ப்பித்து இயக்கலாம்.
எப்படி அக்கவுண்ட்டினை நீக்கலாம் என்று பார்க்கலாம். இதற்கு ஸ்மார்ட் போன் வழியாகச் சென்று நீக்க முடியாது. பெர்சனல் கம்ப்யூட்டர் வழியாகத்தான் செல்ல வேண்டும். ட்விட்டர் இணைய தளத்தில் நுழைந்து “Settings” தேர்ந்தெடுத்து அதன் அமைப்பு பிரிவுகளைப் பார்க்கவும். இதன் கீழாக உள்ள “Deactivate My Account” என்னும் பிரிவில் கிளிக் செய்திடவும். ட்விட்டர், உங்கள் கணக்கு குறித்து அறிவித்து, ஏன் இதனை நீக்க விரும்புகிறீர்கள் என்று கேட்கும். அனைத்திற்கு பதில் அளிக்கவும். இறுதியில் நீக்குவதனை உறுதிப்படுத்த “Delete @account” என்பதில் கிளிக் செய்திட வேண்டும். உடன், உங்கள் அக்கவுண்ட் முடக்கி வைக்கப்பட்டதாக சில நிமிடங்களில் அறிவிப்பு கிடைக்கும். ஒரு மாத காலத்திற்குள் இதனை மீண்டும் உயிர்ப்பிக்க மேலே கூறியபடி செயல்படவும். சில நிமிடங்களில், மீண்டும் பயன்படுத்த உங்கள் ட்விட்டர் அக்கவுண்ட் கிடைக்கும்.

கேள்வி: விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறிய பின்னர், என் லேப் டாப் திரையில், டெக்ஸ்ட் சில வேளைகளில் பளிச் என்றிருக்கிறது. சில வேளைகளில் அந்த அளவிற்கு இருப்பதில்லை. இது எதனால்? இதனைச் சரி செய்திட வேர்ட் புரோகிராமில் மாற்ற வேண்டுமா? சிஸ்டத்தில் மாற்ற வேண்டுமா?
ஆர். கபிலன், கோவை.
பதில்:
வேர்டில் மாற்றினால், பின் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பின் மற்ற செயலிகளில் என்ன செய்வது? எனவே, சிஸ்டத்தில் தான் மாற்ற வேண்டும். உங்கள் மானிட்டரின் ரெசல்யூசனை நீங்கள் குறிப்பிட்டிருக்கலாம். இருப்பினும், விண்டோஸ் 10 தரும் ஒரு சிறிய வசதியை இங்கு பயன்படுத்தலாம்.
இந்த வசதிக்குப் பெயர் Adjust Clear Type என்பது. விண்டோஸ் 8.1 மற்றும் 10ல் இதனை மேற்கொள்ளலாம். தேடல் கட்டத்தில், இந்த பெயரை டைப் செய்து தேடவும். விண் 8.1ல், சார்ம் பிரிவில் அல்லது அப்படியே திரையில் டைப் செய்தால், இந்த வசதி உள்ள இடம் காட்டப்படும். Clear type text Tuner என ஒரு விண்டோ காட்டப்படும். அதில் தரப்படும் கட்டத்தில் Turn on Clear Type என்பதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தி, பின்னர் Next என்பதில் தொடர்ந்து கிளிக் செய்திடவும். காட்டப்படும் விண்டோக்களில், டெக்ஸ்ட் உள்ள கட்டம் காட்டப்படும். அதில் உங்களுக்குத் தெளிவாகக் காட்டப்படும் கட்டத்தினைத் தேர்ந்தெடுத்து, Next கிளிக் செய்து கொண்டே செல்லவும். இறுதியில் முடித்த பின்னர், டெக்ஸ்ட் திரையில் அதிக பட்சம் தெளிவாகவும் துல்லியமாகவும் காட்டப்படும்.

கேள்வி: என் ஒன் ட்ரைவில் சில முக்கிய டாகுமெண்ட்களைப் பதிந்து வைத்தேன். அவற்றில் சிலவற்றை என் கம்ப்யூட்டருக்கு மாற்ற வேண்டும். மொபைல் போனிலிருந்து ஒன் ட்ரைவில் சேவ் செய்ததை, கம்ப்யூட்டருக்கு மாற்ற முடியுமா? என் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 10 இயங்குகிறது.
சி.என். கிருஷ்ண காந்த், திருவனந்தபுரம்.
பதில்:
நீங்கள் விண்டோஸ் 10 சிஸ்டம் வைத்திருப்பதால், இது மிகவும் எளிதாகும். முதலில் File Explorer திறக்கவும். இடது பக்கமாகச் சென்று, One Drive என்பதில் கிளிக் செய்து திறக்கவும். இதில் உள்ள போட்டோக்கள், பைல்கள், தாமாகவே, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ட்ரைவிலும் சேவ் ஆக வேண்டும் என்றால், ஒன் ட்ரைவில் ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் பிரிவுகளில் Choose which folders to sync என்பதில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர், எந்த போல்டர்களை இணைக்க வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். படங்கள் என்றால், Pictures போல்டரை கிளிக் செய்திடவும். இனி உங்கள் படங்கள் ஒன் ட்ரைவிலும், கம்ப்யூட்டரின் Pictures போல்டரிலும் சேவ் செய்யப்படும். பின்னர், இவற்றிற்கு இடையே பைல்களை மாற்றிக் கொள்ளலாம். அழிக்கலாம்.

கேள்வி: என்னிடம் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டர் உள்ளது. இதில் ஜாவா பயன்படுத்தலாமா? சிலர் கூடாது என அச்சுறுத்துகின்றனர். உங்கள் வழி காட்டுதல் தரவும். நன்றி.
கா. முத்தையா, சிவகாசி.
பதில்:
விண்டோஸ் எக்ஸ்பி என்றால், அதில் ஜாவா பயன்படுத்தவே கூடாது என்று அடித்துச் சொல்வேன். அதற்கான காரணங்களைத் தருகிறேன். மைக்ரோசாப்ட் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திற்கான சப்போர்ட் பைல்கள் தருவதை 2014 ஏப்ரல் மாதம் முழுவதுமாக நிறுத்திவிட்டது. அதனால், இந்த சிஸ்டத்திற்கு, வைரஸ் அல்லது வேறு பிழைக் குறியீடுகளுக்கான தீர்வினை மைக்ரோசாப்ட் வழங்கவே வழங்காது. அப்படி என்றால், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திற்கான ஜாவா அப்டேட் பைல்களும் வழங்கப்பட மாட்டாது. இருப்பினும், நீங்கள் வேறு வழிகளில், ஜாவா அப்டேட் செய்திடலாம். ஆனால், ஜாவா சரியாக எக்ஸ்பி சிஸ்டத்தில் இயங்கும் என்பதற்கான உறுதி இல்லை. மேலும் ஜாவா என்பது, வைரஸ் புரோகிராம்களால் எளிதில் தாக்கப்படக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ள ஒரு இயங்கு தளமாகும். அத்துடன், எக்ஸ்பி இப்போது, வைரஸ்களால் தாக்கப்படக் கூடிய ஒரு சிஸ்டமாகும். உங்களிடம் எக்ஸ்பி சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டர் இருந்தால், அதனைப் பயன்படுத்தி, இணையத்தை அணுகுவது என்பது தற்கொலைக்குச் சமம். நீங்கள் இணையத் தொடர்பு இன்றி, எக்ஸ்பி உள்ள கம்ப்யூட்டரை இயக்க ஜாவா தேவை இல்லை. ஏனென்றால், ஜாவா பிரவுசருக்குள்ளாகக் காணப்படும் டேட்டாவினைப் பார்க்கவே பயன்படும் ஒரு செயலியாகும்.
எக்ஸ்பியில் ஜாவாவைப் பயன்படுத்துவதும், இணையத்தை அணுகுவது உடனடியாக ஆபத்தை வரவழைக்காது என்ற அசட்டுத் துணிச்சல் எல்லாம் வேண்டாம். உடனேயும் வரும். அடுத்த வாரமும் அந்த ஆபத்து வரலாம்.

கேள்வி: பயர்பாக்ஸ் பிரவுசரை நான் பயன்படுத்தி வருகிறேன். சில வாரங்களாக, கீழ் இடதுபுறம் டெஸ்க்டாப்பில், பயர்பாக்ஸ் பிரவுசருக்கு ஓர் அப்டேட் இருப்பதாகத் தகவல் காட்டப்படுகிறது. அதில், கிளிக் செய்து அப்டேட் செய்திட எண்ணி, கர்சரைக் கொண்டு செல்லும் முன் அந்தக் கட்டம் மறைந்துவிடுகிறது. எப்படி நான் என் பிரவுசரை அப்டேட் செய்திடலாம். அதற்கான லிங்க் எங்கே கிடைக்கும்?
கா. ஷண்முகராஜ், திண்டுக்கல்.
பதில்:
எனக்கென்னமோ, நீங்கள் செய்தி உள்ள கட்டத்தைப் பார்த்த பின்னர், தானாக அது அப்டேட் ஆகி இருக்கும் என்றுதான் தோன்றுகிறது. அது அப்டேட் ஆகி, மேம்படுத்தப்பட்டு விட்டதா என அறிய வழி உள்ளது. பயர்பாக்ஸ் பிரவுசரைத் திறக்கவும். மேல் வலது பக்கத்தில், உள்ள மெனு பட்டனில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், Help என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இது அந்த மெனுவில் கீழாகக் கிடைக்கும். இங்கு உள்ள கேள்விக் குறி ஐகானில் கிளிக் செய்திடவும். அடுத்து, About Firefox என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு விண்டோ ஒன்று திறக்கப்படும். அதில் உங்கள் பிரவுசர், அண்மைக் காலத்தில் வெளியிடப்பட்ட அப்டேட் பைலால் மேம்படுத்தப்பட்டு இருக்கிறதா என்று காட்டப்படும். அப்படி மேம்படுத்தபப்டவில்லை என்று தெரிந்தால், Install Updates என்பதில் கிளிக் செய்து அப்டேட் செய்திடவும்.

கேள்வி: நான் கூகுள் குரோம் பிரவுசர் பயன்படுத்தி வருகிறேன். யு ட்யூப் மற்றும் பேஸ்புக்கில் உள்ள விடியோ காட்சிகளை இதில் காணும்போது, படங்களில் இளஞ்சிகப்பு மற்றும் பச்சை நிறங்கள் கலந்து தெரிகின்றன. என் மானிட்டரில் பிரச்னை இல்லை. வி.எல்.சி.யில் படங்கள் சரியாக உள்ளன. இதனை எப்படி சரி செய்வது?
கே. கண்ணபிரான், திருவாரூர்
.
பதில்: இதற்கான தீர்வு தரப்பட்டுள்ளது. பிரவுசரின் மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகள் கொண்ட ஐகானில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Settings என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். செட்டிங்ஸ் பக்கத்தில், கீழாகச் சென்று Advanced Settings என்பதைத் தேர்ந்தெடுக்கவும். மீண்டும் கீழாகச் சென்று, System என்ற பிரிவிற்குச் செல்லவும்.
இங்கு Use hardware acceleration when available என்று இருக்கும் இடத்தில் உள்ள சிறிய கட்டத்தில் உள்ள டிக் அடையாளத்தில் கிளிக் செய்வதன் மூலம் எடுத்துவிடவும். இனி இந்த வண்ணக் கோலங்கள் பிரவுசரில் படம் பார்க்கும் போது கிடைக்காது.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X