வாசகர் உபதேசம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2016
00:00

பல்கலை கழக அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே, பாம்பு கடித்து, மாடு ஒன்று இறந்து கிடந்தது; அதை, ஏழெட்டு சுகாதார பணியாளர்கள், டிராக்டரில் ஏற்றினர். சுகாதார சீர்கேடுகள் நிகழா வண்ணம், அதை புதைக்குமாறு சொல்லி, வீட்டுக்கு கிளம்பினேன்.
வீட்டின் உள்வாசலில், ஐந்து ஜோடி புதிய காலணிகள் காணப்பட்டன. 'யார் வந்திருக்கின்றனர்...' என்கிற கேள்விக்குறியுடன், வீட்டிற்குள் நுழைந்தேன். ஹாலில் அமர்ந்திருந்த ஐவர், 'சரேலென' எழுந்து, ''வணக்கம் சார்,'' என்றனர்.
''வணக்கம்; நீங்க...'' குழப்பமாய் பார்த்தேன்.
''சார்... என் பெயர் ராஜேந்திரன்; முன்னாள் ராணுவ வீரன். இவர், சீனிவாசன்; மின் வாரியத்துல பணிபுரிகிறார். இவர், அய்யூப்கான்; 'சமரசம்' இதழ்ல, முகவரா இருக்கார். இவர், ரவி; சினிமாக்களுக்கு, வெளிப்புற படப்பிடிப்புகளை நடத்தி தரும், பணி செய்கிறார். இவர், வசந்தகுமார்,'' என்று அறிமுகப்படுத்தியவர், ''எங்களோட நாகை, தஞ்சை, கும்பகோணம் வாசகர் கூட்டமைப்பின், கூட்டங்களில் கலந்து, பேசியிருக்கீங்க... இப்போதாவது, எங்கள ஞாபகம் வருதா...'' என்றார்.
சிரித்தபடி, ''வாங்க வாங்க...'' என்று வரவேற்று, ''ஒரு எழுத்தாளனுக்கு, உங்களப் போன்ற வாசகர்கள் தானே முதலாளி. உங்கள என்னால எப்படி மறக்க முடியும்...'' என்று கூறி, எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்து, ''வகிதா... எல்லாருக்கும் பிஸ்கெட்டும், டீயும் கொண்டு வா,''என்றேன்.
''பல்கலை கழகத்துக்கு வந்தீங்களா இல்ல ஏதாவது நண்பர்கள் வீட்டு திருமணத்திற்கு வந்தீங்களா...'' என்று கேட்டேன்.
'உங்களப் பாக்கத் தான் சார் வந்தோம்...' என்றனர் கோரஸாக!
''என்ன விஷயமாக, என்னை பாக்க வந்தீங்க...''
''நீங்க, சில காலமா கதைகள் எதுவும் எழுதல; என்ன காரணம்ன்னு தெரிஞ்சிட்டு போக வந்தோம்,'' என்றார், ராஜேந்திரன்.
''இப்பயெல்லாம் அவ்வளவாக தமிழ் பத்திரிகைகள், தொடர் கதைகள், சிறுகதைகள் வெளியிடுறதில்ல. அதோட எனக்கு வேலை பளுவும் அதிகமாயிருச்சு. உயர் ரத்த அழுத்தம், ரொம்ப சிரமப்படுத்தது. இதுல நான் எழுதி, வெளியிட்ட, 'திருக்குர்ஆன் நீதிக் கதைகள்' தொகுப்புகள், சரி வர விற்பனை ஆகல. அந்த மன வருத்தமும், என் எழுத்தை பாதிச்சுருக்கு; முதல்ல சில வாரங்கள் எழுதாம இருந்தேன்; அது, அப்படியே நீண்டு, மூணு வருஷமாகி விட்டது,'' வெறுமையாக முறுவலித்தேன்.
''வெறும் வாசகர்களாய் இருந்த எங்கள, துணுக்கு, தமாசு, ஒரு பக்க சிறுகதை எழுத்தாளர்களாக மாற்றியது, உங்களோட உற்சாக பேச்சுகள் தான். இப்ப, நீங்களே இப்படிச் சொல்லலாமா...'' என்றார், ரவி.
''இப்ப, நான் எழுதலன்னு யார் அழுதா... வாசகர்கள், என்னை மறந்தே போயிருப்பாங்க.''
''அரைத்த மாவையே, அரைக்கும் எழுத்தாளர்கள வேணா, வாசகர்கள் சீக்கிரமே மறந்து போயிடுவாங்க. ஆனா, உங்க எழுத்துகள், புதிய தகவல்கள அள்ளித் தெளித்து, வாசகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்துபவை. இப்ப, நீங்க கதை எழுதலன்னு, எத்தனை வாசகர்கள் அழறாங்களோன்னு எங்களுக்கு தெரியாது; ஆனா, நாங்க அழறோம்,'' என்றார், வசந்தகுமார்.
''உங்களின், 'பாதரச நிலவில் மரணப்புயல், விழியோரம் அருவி, வெள்ளி நிலவே வினோதா மற்றும் நீலக்குயிலே கண்ணம்மா' போன்ற 'வாரமலர்' இதழ் தொடர்கள, யாரால மறக்க முடியும்... 'கல்கண்டு' இதழில், நீங்க எழுதிய துப்பறியும் தொடர்கள் அனைத்துமே, தனித்துவமானவை,'' சிலாகித்தார், சீனிவாசன்.
''நீங்க எழுதிய, 'திருக்குர்ஆன் நீதிக்கதைகள்' உலக மொழிகள் அனைத்திலும், மொழி பெயர்க்கக் கூடிய தரத்தில் இருக்கு. முஸ்லீம் மத குரு ஒருவர், அக்கதைகளை, 'குர்னோவியம்' என வர்ணித்தார்,'' என்றார், அய்யூப்கான்.
''நீங்க, நல்ல எழுத்தாளர் என்பதுடன் சிறப்பான இலக்கிய மேடை பேச்சாளர். நீங்க, வாசகர்களுடன் நட்பு பாராட்டும் விதம் அலாதியானது. உங்க எழுத்தை விட, உங்க அன்பே, எங்கள அதிகம் வசீகரிக்குது. உங்க வீட்டு விழாக்களில் எங்களை வரவேற்று, பிரியாணி பரிமாறியது நெகிழ்ச்சியான விஷயம்,'' என்றார், வசந்தகுமார்.
''மத நல்லிணக்கத்திற்கு, நீங்க பாடுபட்டது போல, கடந்த, 20 ஆண்டுகளில், வேறெந்த எழுத்தாளரும் பாடுபட்டதில்ல,'' என்றார், சீனிவாசன்.
''உங்களுடைய புகழ்ச்சி வார்த்தைகள், என்னை எந்த விதத்திலும் பாதிக்காது. ஏற்கனவே, நிறைய எழுதியிருக்கேன்; என்னை, இன்னும் மறக்காதவர்கள், அரசு நூலகங்களுக்கு சென்று, அங்குள்ள தொகுப்புகளை வாசிக்கட்டும்.''
''உங்கள சந்தித்து, நலம் விசாரித்து, மீண்டும் எழுதுமாறு வலியுறுத்த தான் வந்தோம். உங்க படைப்புகளை, மீண்டும் வாசிக்க, எங்கள் கண்களும், இதயங்களும், ஏங்குகின்றன,'' என்றார்,சீனிவாசன்.
''திருக்குர்ஆன் நீதிக்கதைகள், 450 எழுதியிருக்கீங்க; இன்னும், நீங்க, 550 நீதிக் கதைகள் எழுதி, சாதனை படைக்கணும். இப்ப வேணா அத்தொகுப்புகளின் விற்பனை, மந்தமாக இருக்கலாம்; எதிர்காலத்தில், அதே தொகுப்புகள், விற்பனையில் புதிய சாதனை படைக்கலாம். உங்கள் மறைவிற்கு பின், உலக சமுதாயம், உங்கள தலையில் தூக்கி வைத்து கொண்டாடினாலும் கொண்டாடும்,'' என்று சிலாகித்து பேசினார், அய்யூப்கான்.
''பத்திரிகைகள், தொடர்கதைகள், சிறுகதைகள் வெளியிடுவதை, குறைத்து விட்டதாக சொல்றீங்க... 'வாரமலர்' போன்ற இதழ்கள், தொடர்ந்து, சிறுகதைகளுக்கு முக்கியத்துவம் தருகின்றன. அதிலாவது, தொடர்ந்து சிறுகதைகள் எழுதலாமே...''
பதில் சொல்லாமல் மவுனித்தேன்...
''வேளைப்பளு அதிகம்ன்னு சொல்றீங்க... தினமும் இரண்டரை மணி நேரம், எழுத்துக்கு ஒதுக்கி வைங்க. சிறுகதைக்கான தலைப்பை, கதைச் சுருக்கத்தை, பணி நேரத்திலேயே யோசித்து வைங்க. திட்டமிட்டு செயல்பட்டால், மாதத்திற்கு, குறைந்தபட்சம் பதினைஞ்சு சிறுகதைகளாவது எழுதிடலாம்.''
நெட்டுயிர்த்தேன்.
''தினம், ஒரு சிறுகதை எழுதி முடித்த பின், 45 நிமிஷம் வாக்கிங் போங்க; 'டயட்டில்' இருந்து, எடைய குறைங்க; குடிப்பழக்கம் இருந்தா குறைங்க; எழுதும் சூழ்நிலையை வீட்டிற்குள்ளும், மனதிற்குள்ளும் உருவாக்குங்க; எழுத எழுத புதுப்புது கதைக் கருக்கள் தோன்றும். கற்பனை வறட்சி நீங்கும்,'' என்று அறிவுரை வழங்கினார், ராஜேந்திரன்.
''நீண்ட நாட்கள் எழுதாமல் இருந்து, மீண்டும் எழுத முயற்சித்தால், எழுத்தில் நடுக்கம் தோன்றும். ஒரு வாக்கியம் எழுத, ஒரு யுகமாகும்; பிரமை பூக்கும்; கதைகள் எழுதுவதற்கு முன், ஏதாவது சிறு விஷயம் பற்றி, பத்து பத்து வாக்கியங்கள் எழுதி பாக்கலாமே... தொடர்ந்து, முழு அர்ப்பணிப்பு உணர்வோடு எழுத முயற்சித்தால், 'ரைட்டர்ஸ் பிளாக்கை' வென்றெடுக்கலாம்,'' என்று தனக்கு தெரிந்த விஷயங்களை கூறினார், ரவி.
''என்னடாது... சிஷ்யர்களுக்கு, குருநாதர் உபதேசம் செய்த காலம் போய், சிஷ்யர்கள், குருநாதருக்கு உபதேசம் செய்யும் காலம் வந்து விட்டதே என, சங்கடப்படாதீங்க. தந்தைமார், மகன்களுக்கு அறிவுரை கூறுவர்; அதே மகன்கள் படித்து, வேலைக்கு போய், திருமணமும் செய்து கொண்ட பின், வயோதிக தந்தைக்கு, அறிவுரை கூறுவர். நல்ல விஷயங்கள, யார் வாயிலிருந்தும் கேட்கலாம்; தப்பில்ல!''
''எழுத்துக்கு ஓய்வு, வயது இல்ல. ஒரு எழுத்தாளனின், 'மாஸ்டர் பீஸ்' அவனது, 70 வயதிலும் வெளியாகலாம். கலை, இலக்கியம், விளையாட்டு துறைகளில், 'செகண்ட் இன்னிங்ஸ்'ன்னு ஒண்ணு இருக்கு. முதல், 'இன்னிங்சில்' சாதித்ததை விட, இரண்டாவது, 'இன்னிங்சில்' அதிகம் சாதிப்போர், நிறைய பேர். நாங்க, உங்களுடன் இருக்கோம்; எங்களின் அன்புக்கு, கைமாறு ஏதாவது செய்ய விரும்பினால், புதிய படைப்புகளை எழுதி, தமிழ் வாசகருக்கு பரிசளியுங்க,'' என்று உருக்கமாக வேண்டுகோள் வைத்தார், சீனிவாசன்.
வசந்தகுமார், ஒரு பைலை எடுத்து, என்னிடம் நீட்டி, ''இந்த பைலில், நீங்க கதை எழுதும், பச்சை நிற, 'கான்கர்' பேப்பர், 10 குயரும், கறுப்பு நிற, 'மைக்ரோடிப்' பேனாக்கள், ஐந்தும் உள்ளன. நாங்கள் பரிசளித்த பேப்பர் - பேனாவால், மீண்டும் கதைகளை நீங்கள் எழுதுங்க; எங்களது பேச்சுகளில், அதிக பிரசங்கித்தனம் இருந்தால், மன்னியுங்கள்,'' என்றதும், நெகிழ்ந்து, நெக்குருகி போனேன்.
''என் செகண்ட் இன்னிங்ஸ் இன்றிலிருந்து ஆரம்பம்; நான் எழுதும் படைப்புகள் அனைத்தும், உங்களின் அன்புக்கு சமர்ப்பணம். வாசகர் கூட்டமைப்பு தொடர்ந்து இயங்க, ஆவன செய்யுங்க நண்பர்களே!'' தலையசைத்தபடி, ஐவரும், விடை பெற்றனர்.
வீட்டை விட்டு வெளியேறியதும், ஐவரில் ஒருவர், ஒரு சீட்டை எடுத்தார். அதில், அவர்களுக்கு பிடித்த, தற்சமயம் எழுதாமலிருக்கிற பத்து எழுத்தாளர்களின் பட்டியல் இருந்தது.
''ஒரு எழுத்தாளரை முடுக்கி, மீண்டும் எழுத தூண்டி விட்டோம். நம்முடைய அடுத்த இலக்கு, திருச்சி திவாகர். அவரை நேரில் சந்தித்து, செகண்ட் இன்னிங்ஸ் துவங்க சொல்வோம். தமிழ் இலக்கியத்தின் வெற்றியே நம்முடைய வெற்றி; நம் இலக்கு நோக்கிய பயணம் தொடரும்,'' அவர்களில் ஒருவர் கூற, லட்சிய உத்வேகத்துடன், கம்பீர நடை போட்டது, ஐவர் அணி.

ஆர்னிகா நாசர்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V .வெங்கடேஷ் - சிங்கப்பூர் ,சிங்கப்பூர்
13-டிச-201612:55:38 IST Report Abuse
V .வெங்கடேஷ் இவ்வளவு மொக்கையா ஒரு கதையை வாரமலரில் எதிர்பார்க்கவில்லை..ஆர்னிகா நாசரின் சொந்த சோக கதை மாதிரி இருக்கு..
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
11-டிச-201620:42:37 IST Report Abuse
Girija blade number one
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X