கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 டிச
2016
00:00

கேள்வி: விண்டோஸ் 10 பயன்படுத்தி வருகிறேன். பல சமூக இணைய தளங்களில் எழுதி வருகிறேன். இதனால், இணையத்துடன் அதிக நேரம் தொடர்பு கொண்டுள்ளேன். என்னுடைய கம்ப்யூட்டரில், மால்வேர் மற்றும் வைரஸ் புகச் சந்தர்ப்பம் அதிகமா? எத்தனை நாட்களுக்கு ஒரு முறை, கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திட வேண்டும்? CCleaner and Malwarebytes ஆகிய புரோகிராம்களைக் கம்ப்யூட்டரில் வைத்து எப்போதாவது பயன்படுத்தி வருகிறேன்.
ஆர். பாலமுருகன், திண்டுக்கல்.
பதில்:
நல்ல ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்று, கம்ப்யூட்டர் இயங்கும்போது, தானும் இயங்கி, கம்ப்யூட்டருக்குள் வரும் பைல்களைத் தன் கண்காணிப்பில் வைத்திருக்கும். எனவே, இத்தனை நாட்களுக்கு ஒருமுறை தான் ஸ்கேன் செய்திட வேண்டும் என்பதல்ல. இருப்பினும் வைரஸ் மற்றும் மால்வேர் புரோகிராம்கள் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள, நீங்கள் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் மூலம், முழுமையாக ஸ்கேன் செய்து கொள்வது நல்லது. மிக முக்கியமாக, நீங்கள் பயன்படுத்தும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை அப்டேட் செய்து கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான், அண்மைக் காலத்திய வைரஸ்களையும், மால்வேர் புரோகிராம்களையும் கட்டுப்படுத்த முடியும்.

கேள்வி: என்னுடைய கம்ப்யூட்டர் செயல்படும் வேகம் மிகவும் குறைந்துவிட்டது. இதற்கு, தேவையற்ற பைல்கள் அதிகம் இருப்பதே காரணம் என என் நண்பர் கூறுகிறார். தேவையற்ற பைல்கள் என்பவை யாவை? அவற்றை எப்படிக் கண்டறிந்து போக்குவது? அதனால், கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்குப் பிரச்னை வராதா? பைல்களைக் கண்டறிந்து நீக்க பல மணி நேரம் ஆகுமா? நான் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8.1 டூயல் பூட் சிஸ்டம் என் கம்ப்யூட்டரில் வைத்துள்ளேன்.
செ.கார்த்திகேயன், கும்பகோணம்.
பதில்
: தேவையற்ற பைல்கள் என்றில்லை, பொதுவாகவே, ஹார்ட் டிஸ்க்கில் அதிக எண்ணிக்கையில் பைல்கள் குவிந்து விட்டால், அவை வரிசையாகப் பதியப்படாமல் சிதறலாக இருந்தால், கம்ப்யூட்டரின் செயல்பாட்டில் மந்த நிலை ஏற்படும். நீங்கள் எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துகிறீர்கள் என்பதனைக் குறிப்பிடவில்லை. இருப்பினும் பைல்களை நீக்குவதற்கான வழிமுறைகளைக் கூறுகிறேன்.
தேவையற்ற பைல்களை நீக்குவதற்கு ஐந்து நிமிடங்கள் உங்களுக்கு இருந்தால் போதும். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் Disk Cleanup என்ற டூலை, ஸ்டார்ட் மெனுவின் தேடல் கட்டத்தின் மூலம் தேடிப் பின்னர் இயக்கவும். விண்டோஸ் 8.1ல், Free up disk space என்று டைப் செய்து தேடவும். பின்னர் அதனை இயக்கவும். விண்டோஸ் இந்த டூல்கள் மூலம், உங்கள் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கில் தேடி, தேவையற்ற பைல்களைப் பட்டியல் இடும். இவை நீங்கள் தரவிறக்கம் செய்த புரோகிராம் பைல்கள், தற்காலிக இன்டர்நெட் பைல்கள், பொதுவான தற்காலிக பைல்கள், இணையப் பக்கங்கள், விண்டோஸ் பிழைக் குறியீடு குறித்த அறிக்கைகள் எனப் பலவகைகளில் இருக்கும். இவற்றை நீக்கினால், எவ்வளவு இடம் உங்களுக்குக் கிடைக்கும் எனவும் தகவல் இருக்கும். இந்த பைல்களில் கிளிக் செய்தால், இவை உங்கள் கம்ப்யூட்டரில் எதற்குப் பயன்படும்? என்ற விபரம் கிடைக்கும். ஒவ்வொன்றும் தேவை இல்லை என முடிவு செய்தால், உடன் அருகில் உள்ள கட்டத்தில் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தவும். பின்னர், ஓகே கிளிக் செய்தால், பைல்கள் அனைத்தும் நீக்கப்படும்.

கேள்வி: வாட்ஸ் அப் புரோகிராமினை நம் பெர்சனல் கம்ப்யூட்டரிலும் இயக்கலாம் என்று அறிந்தேன். ஆனால், அதற்கான வழிகள் தெரியவில்லை. எப்படி விண்டோஸ் 10 இயங்கும் கம்ப்யூட்டரில் இயக்குவது என வழி காட்டவும். நன்றி.
ஆர். மாலினி, திருப்பூர்.
பதில்:
பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ் அப் செயலி, தற்போது பல நாடுகளில் அனைத்து எஸ்.எம்.எஸ். செயலிகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டது. மொபைல் போனில் மட்டுமின்றி, பெர்சனல் கம்ப்யூட்டரிலும் இந்த செயலி இயங்குகிறது. வாட்ஸ் அப் செயலியை பெர்சனல் கம்ப்யூட்டரில் பயன்படுத்த, அதற்கான புரோகிராமினை, இணையத்தில் இருந்து (https://www.whatsapp.com/download/) தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்திடவும். அதற்கு முன்னர், உங்கள் போனில், வாட்ஸ் அப் செயலி பதிக்கப்பட்டு இயக்கத்தில் இருக்க வேண்டும். ஏனென்றால், பெர்சனல் கம்ப்யூட்டரில், வாட்ஸ் அப் செயலி, தனிப்பட்ட செயலியாக இயங்காது. உங்கள் மொபைல் போனில் உள்ள, வாட்ஸ் அப் புரோகிராமின் எக்ஸ்டன்ஷன் புரோகிராமாகத்தான் இயங்கும். எனவே, பெர்சனல் கம்ப்யூட்டரில் பதிந்து பின்னர் அதனை இயக்கவும். அங்கு ஒரு க்யூ.ஆர். குறியீடு கட்டமாகக் காட்டப்படும். இப்போது, மொபைல் போனில் உள்ள வாட்ஸ் அப் செயலியை இயக்கி, அதன் விண்டோவில், வலது மேல் மூலையில் உள்ள மூன்று புள்ளிகளில் தட்டி, மெனுவினைப் பெறவும். மெனுவில் WhatsApp web என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது, மொபைல் போனில் உள்ள கேமரா மூலம், கம்ப்யூட்டரில் உள்ள க்யூ. ஆர். குறியீட்டினை ஸ்கேன் செய்திடவும். சரியாக ஸ்கேன் செய்தால், உங்கள் கம்ப்யூட்டரும், வாட்ஸ் அப் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் போனும் இணையாகிவிடும். இனி, நீங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்தாலாம். ஆனால், அந்நேரத்தில், உங்கள் ஸ்மார்ட் போன், இணைய இணைப்பில் வாட்ஸ் அப் இயக்கப்பட்டு, கம்ப்யூட்டர் அருகேயே இருக்க வேண்டும். ஆனால், போனில் மூலம் மேற்கொள்ளும் ஒலி மற்றும் விடியோ அழைப்புகளை, கம்ப்யூட்டரில் மேற்கொள்ளும் வசதி இன்னும் தரப்படவில்லை. ஒரு நாளில் அதுவும் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

கேள்வி: பல 1ஆண்டுகளாக, விண்டோஸ் மூவி மேக்கர் செயலி, மைக்ரோசாப்ட் நிறுவனத்தால், மேம்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. விண்டோஸ் 8.1லிருந்து மேம்படுத்தப்பட்ட விண்டோஸ் 10 சிஸ்டத்தில் இதனை வைத்து இயக்குகிறேன். ஆனால், இது விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கான தனி அப்ளிகேஷனாகத் தெரியவில்லை. அது போல ஒன்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளதா?
ஜே. அப்துல் ஜப்பார், தூத்துக்குடி.
பதில்:
கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக, விண்டோஸ் இயக்கத்தில் நமக்கு விண்டோஸ் மூவி மேக்கர் கிடைத்து வருகிறது. ஆனால், இது மேம்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. இப்போதும் கூட, இது மைக்ரோசாப்ட் தளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ள கிடைக்கிறது. இது Windows Essentials 2012 தொகுப்பின் ஒரு புரோகிராம் ஆகும். ஆனால், இதற்கான சப்போர்ட் வரும் ஜனவரி 10 முதல் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், விரைவில் விண்டோஸ் 10 பயன்படுத்துபவர்களுக்கு, விண்டோஸ் மூவி மேக்கர் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், விண்டோஸ் ஸ்டோரில், Movie Moments என்ற அப்ளிகேஷனும் கிடைக்கிறது. இதனைப் பயன்படுத்தி 60 விநாடிகளில் இயங்கக் கூடிய விடியோ பைலை உருவாக்கலாம். இருப்பினும், விண்டோஸ் மூவி மேக்கர் புதியதாக எப்போது கிடைக்கும் என்ற தகவல் இல்லை.
தற்போது கிடைக்கும் விண்டோஸ் மூவி மேக்கர் செயலி உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு நிறைவானதாக இல்லை என்றால், அதே போல வேறு சில 'ஓப்பன் சோர்ஸ்' புரோகிராம்கள் கிடைக்கின்றன. http://alternativeto.net/software/windows-movie-maker/ என்ற இணைய தளத்தில் இது கிடைக்கிறது. இது இலவசம். கட்டணம் செலுத்திப் பெறக்கூடிய மூவி மேக்கர்களும் இணைய தளத்தில் உள்ளன. 60 டாலர் செலுத்தினால் Pinnacle Studio 20 என்ற புரோகிராமும், 100 டாலர் செலுத்தினால், Adobe Premiere Elements 15 என்ற புரோகிராமும் கிடைக்கின்றன. Magix Movie Edit Pro, என்ற புரோகிராம், அவ்வப்போது சலுகை விலை அறிவிக்கப்பட்டும் கிடைக்கிறது.

கேள்வி: விண்டோஸ் 10 பயன்படுத்துகிறேன். பழைய திரை அமைப்பு போல ஐகான்களை அமைத்து செயல்படுத்த முடியுமா? முந்தைய விண்டோஸ் இயக்கத்திலேயே பழகி வந்த என் தந்தைக்காக இந்த ஏற்பாட்டினைச் செய்திட விரும்புகிறேன். அதற்கான வழி உள்ளதா?
கே. இராஜேஸ்வரி, மதுரை.
பதில்:
தங்கள் தந்தையின் கம்ப்யூட்டர் பழக்கத்தினை எளிதாக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு பாராட்டுகள். நீங்கள் எதிர்பார்ப்பது போல மாற்றங்களை ஓரளவிற்கு மேற்கொள்ள, விண்டோஸ் 10 வழிகளைத் தருகிறது. உங்களுடைய விண்டோஸ் 10 டெஸ்க்டாப்பில், This PC (முந்தைய My Computer) க்கு ஐகான் ஒன்றை உருவாக்கலாம். அதே போல, உங்கள் யூசர் போல்டர், நெட்வொர்க், ரீசைக்கிள் பின், கண்ட்ரோல் பேனல் ஆகியவற்றுக்கும் ஏற்படுத்தலாம்.
இதற்கு டெஸ்க்டாப்பில், காலி இடத்தில், ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Personalize என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு கிடைக்கும் Personalization பாக்ஸில், Themes என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Classic Settings என்று ஒரு பிரிவு இருக்கும். இதில், “Go to desktop icon settings” என்பதில் கிளிக் செய்திடவும்.
இங்கு நீங்கள் அமைக்க விரும்பும் அனைத்திற்குமான ஐகான்கள் இருக்கும். ஏற்கனவே அமைக்கப்பட்டவை உள்ள இடத்தில் டிக் அடையாளம் இருக்கும். நீங்கள் விரும்பும் ஐகானில் டிக் அடையாளம் ஏற்படுத்தி, பின்னர் Apply என்பதிலும் OK என்பதிலும் கிளிக் செய்து வெளியேறவும். திரையில் இந்த ஐகான்கள் இருக்கும். அவற்றின் பெயரை, ஐகான்கள் மீது ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில், உங்கள் விருப்பப்படி மாற்றிக் கொள்ளலாம். ஐகான்களை மாற்ற விரும்பினால், Change Icon என்பதில் கிளிக் செய்தால், புதிய ஐகான்கள் கொண்ட விண்டோ கிடைக்கும். இவற்றிலிருந்து தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.

கேள்வி: நான் சீனாவில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட் டி.வி. ஒன்று வாங்க இருக்கிறேன். ஏற்கனவே, வீட்டில் பிராட்பேண்ட் மற்றும் வை பி இணைப்பு வசதி உள்ளது. இந்த டி.வி. யில் வை பி இணைப்பு கிடைக்குமா? அதன் மூலம் இணைய இணைப்பினைப் பெறலாமா? எப்படி அதனை இயக்குவது?
எம். பரந்தாமன், சேலம்.
பதில்
: நீங்கள் வாங்க இருப்பது ஸ்மார்ட் டி.வி. என்பதனால், வை பி இணைப்பு மூலம், டி.வி.க்கு இணைய இணைப்பு கிடைக்கும். வை பி இணைப்பில் இயங்கும் என்பதை, அந்த டிவி விற்பனையாளர் அல்லது டெக்னீஷியனிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது, அந்த மாடல் எண் கொடுத்து, இணையத்தில் அதன் தொழில் நுட்ப அம்சங்கள் குறித்து அறிந்து கொள்ளுங்கள். உங்களுடைய டி.வி. செட்டிங்ஸ் சென்று, அதில் உங்களுடைய இணைய இணைப்பு பெயர், அதற்கான பாஸ்வேர்ட் கொடுக்கவும். ஒரு முறை கொடுத்துவிட்டால், அதனை டி.வி. தன் நினைவில் வைத்துக் கொள்ளும். பின்னர், தானாகவே இணைந்து செயல்படும். இதில் சிக்கல் ஒன்றும் இருக்காது. உங்கள் டி.வி.யை இன்ஸ்டால் செய்திட வரும் டெக்னீஷியனிடம் கூட இந்த இணைப்பை ஏற்படுத்தித் தர கேட்டுக் கொள்ளுங்கள். அவர் செய்து கொடுப்பார்.
உங்கள் மொபைல் போன், லேப்டாப் கம்ப்யூட்டரை, டிவியுடன் வை பி அல்லது புளுடூத் மூலம் இணைக்கலாம். ஸ்கைப், வாட்ஸ் அப் வழி விடியோ அழைப்பு பேசுகையில், உங்களைத் தொடர்பு கொள்பவரை, டி.வி. திரையில் பெரிய அளவில் பார்த்து மகிழ்ச்சி அடையலாம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X