வாரம் ஓரு ப(ா)டம் | புதுப்பயணம் | NewTrip | tamil weekly supplements
வாரம் ஓரு ப(ா)டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 டிச
2016
00:00

பாட்டி, தாய், சகோதரி, மனைவி, மகள் என, என்னைச் சுற்றியிருக்கும் பெண் தெய்வங்களை வணங்கி, இந்நாளை துவக்குகிறேன்' என, காலையில்
பதிவிட்ட முகநூல் பதிவுக்கு நல்ல வரவேற்பு. வீட்டில்இருந்து பேருந்து நிறுத்தத்திற்கு வருவதற்குள்ளாகவே, 100, 'லைக்ஸ்' அள்ளியிருந்தேன். 'சூப்பர் பாஸ்; ஹேட்ஸ்ஆப்' என, பின்னூட்டங்களும் எகிறியிருந்தன.பேருந்தில் சிலரை இடித்து தள்ளிவிட்டு முந்தி ஏறியதில், பாதம் ஊன்றி நிற்க இடம் கிடைத்தது. என்னோடு அலுவலகத்தில் பணிபுரியும் பெண் அவர்; தினமும் அந்த பேருந்தில் தான் வருவார். தன் அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம், ஏதோ கிசுகிசுத்து சிரித்தபடி இருந்தார். ஒரு கட்டத்தில், அவர்களை வினோத ஜந்துக்களைப் போல், சுற்றியிருந்தவர்கள் பார்த்தனர். அப்பார்வை, அவர்களை உள்ளூற உறுத்தியிருக்க வேண்டும்; சட்டென்று பேச்சை நிறுத்திக் கொண்டனர்.'எப்படியோ, பஸ்ஸுல இருந்த எல்லாரையும் உங்களை திரும்பிப் பார்க்க வைச்சுட்டீங்க' அலுவலகத்தில், மதியம் உணவருந்தும் வேளையில் அவரிடம் கிண்டலாக கேட்டேன். 'ஏன் சார்... வாய்விட்டு சிரிச்சா அதென்ன, 'களுக்'னு சிரிக்குறான்னு கேட்குறீங்க; சத்தம் வராம அடக்கி சிரிச்சா வினோதமா பார்க்குறீங்க. நாங்க வேற எப்படி தான் சார் சிரிக்கிறது' அவர் கிண்டலாக கேட்க, நான் பதில் சொல்லவில்லை.சில நாட்களுக்குப் பின், பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். எனக்கு முன் இருக்கையில் இரு இளைஞர்கள்; இருவரும் நண்பர்கள். 'அன்னைக்கு ஏன்டா, 'வாட்ஸ் ஆப்'ல பேசிட்டு இருக்கும் போது, பாதியிலேயே காணாம போயிட்டே?' இது ஒருவன். ஒரு பெண்ணின் பெயரை குறிப்பிட்டு, அவளிடம் பேசச் சென்று விட்டதாக பதில் தந்தான் இரண்டாமவன்.'டேய்... எப்படிடா அவ நம்பர் கிடைச்சது?' இவன் பேச்சில் ஆர்வம் பெருகியது. ஒரு அலுவலகத்தின் பெயரை குறிப்பிட்டு, அங்கு ஒன்றாக பணிபுரிந்த போது பழக்கம் ஏற்பட்டதாக விளக்கம் தந்தான் அவன். அவர்களின் பேச்சில் அந்த பெண்ணின் பெயர், பணிபுரியும் அலுவலகம், வசிப்பிடம் என அடிப்படை தகவல்கள் எல்லாமே வெளிப்பட்டன. நாம் சத்தம் போட்டு பேசுவது, வேறொருவருடைய அந்தரங்கம் என்ற அடிப்படை உணர்வு கூட இல்லாமல் அவர்கள் பேசியது, எனக்கு வியப்பாக இருந்தது.
அன்று சிரிப்பை வாயினுள் அடக்கிக் கொண்ட பெண்களை, குற்றப் பார்வை பார்த்த நான் உட்பட, இளைஞர்களின் பொறுப்பற்ற பேச்சுக்கு எதிர்வினையாற்றாது, கடந்து சென்று கொண்டிருந்தது சமூகம். 'ஏன் இந்த பாகுபாடு?' மனதில் கேள்வி எழுந்த வினாடியில், ஒரு பெண்ணின் கோபக் குரல் பேருந்தில் வெடித்தது.'ஏன்டா பொறுக்கி நாயே... நீயெல்லாம் அக்கா, தங்கச்சி கூட பொறக்கலை' அப்பெண்ணின் வார்த்தைகள் உணர்த்தியது என்ன நடந்திருக்கும் என்பதை! உடனே, பெரியவர் ஒருவர், 'பொண்ணுங்க சாமி மாதிரிப்பா' என்றார். அதற்கு அந்த பெண், 'மொதல்ல மனுஷியா மதிங்க சார்' என்றாள். எனக்கு, என் முகநூல் பதிவு நினைவுக்கு வந்து போனது.

மனநிலைக்கேற்ப பெண்களை கொண்டாடுவதும், பின் தவிக்க வைப்பதுமான ஆண்களின் தன்னல போக்கை சாடும் படம்... இறைவி

யாழினி, திரைப்பட இயக்குனரான அருளின் மனைவி. இயக்கிய படம் வெளிவராத காரணத்தால், மதுவின் பிடியில் இருக்கிறான் அருள். மனைவி, குழந்தை என, எது குறித்தும் சிந்திக்காது, தன் படம், தன் கனவு என தன்னலத்தை முன்னிறுத்தியே வாழ்கிறான்.
பொன்னி, அருளின் விசுவாசியான மைக்கேலின் மனைவி. திருமணத்திற்கு முன், மலர் என்ற பெண்ணோடு மைக்கேலுக்கு தொடர்பு இருந்ததும், அவளுக்குத் தெரியும். பொன்னி கர்ப்பமாக இருக்கும் சூழலில், தன் முதலாளி அருளுக்காக ஒரு கொலை செய்துவிட்டு சிறைக்குச் செல்கிறான் மைக்கேல். கணவர்களின் தன்னலத்தால், தங்களின் ஆசை, கனவு உள்ளிட்டவற்றை யாழினியும், பொன்னியும் இழக்கின்றனர். 'கணவன் என்ன செய்தாலும், அவனோடு இணங்கிப் போவது தான் பெண்ணுக்கு அழகு' என்கிற பழமைவாத சிந்தனையை விட்டு வெளியேற முடியாது, இருவரும் தவிக்கின்றனர்.
ஒரு கட்டத்தில், மைக்கேலை கொலை செய்துவிட்டு சிறை செல்கிறான் அருள். அதன்பின், கணவன்களுக்காக ஒவ்வொரு முறையும் தங்களின் சுயத்தை தியாகம் செய்த பெண்கள் இருவரும், தங்களுக்கான வாழ்வை வாழத் துவங்குவர். யாழினி வேறொரு ஆணிடம் தஞ்சம் அடைய, பொன்னி தன் மனம் சொல்லும் பாதையில் பயணிக்கத் துவங்குவாள்.

Advertisement

 

‘வாரம் ஒரு ப(பா)டம்)’ பகுதி உங்களுக்கான டைரி. எழுதுங்கள்...உங்களின் அனுபவங்கள் மற்றவர்களுக்கு பாடம் ஆகட்டும். எங்கள் முகவரி...புதுப்பயணம், தினமலர், 39, ஒயிட்ஸ் ரோடு, சென்னை 600 014. pudhupayanam@dinamalar.in
மேலும் புதுப்பயணம் செய்திகள்:We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X