கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 டிச
2016
00:00

கேள்வி: அண்மையில் எனக்கு வங்கியிலிருந்து வந்த மின் அஞ்சலில், அவர்களுடைய தளச் சான்றிதழ் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், நெட் பேங்கிங் பயன்படுத்த இயக்கப்படும் குரோம் பிரவுசர் பதிப்பு 30 அல்லது அதற்கு மேலாக இருக்க வேண்டும் எனக் கூறுகிறது. என்னுடைய குரோம் பிரவுசரின் பதிப்பு எண் என்ன என்று எப்படிப் பார்ப்பது?
ஆ. ஜெயபாலன், விழுப்புரம்.
பதில்:
உங்கள் குரோம் பிரவுசரைத் திறந்து கொள்ளுங்கள். முகவரிக் கட்டத்தில் http://whatversion.net/chrome/ என டைப் செய்து என்டர் தட்டவும். உடன் வரும் இணையப் பக்கத்தில், உங்கள் குரோம் பிரவுசரின் பதிவு எண் காட்டப்படும். இது போன்ற வங்கிகளின் இணைய தளங்கள், தொழில் நுட்ப ரீதியில் மாற்றங்கள் பெறுகையில், உங்கள் பிரவுசரை மேம்படுத்தப்பட்டதாக மாற்றிக் கொள்வதுடன், முன்பு உருவான குக்கிகள், டவுண்லோட் ஹிஸ்டரி மற்றும் தற்காலிக பைல்களை நீக்குவது நல்லது. இன்னொரு வழியும் உள்ளது. chrome://version/ என்று டைப் செய்து தட்டினால், தொழில் நுட்ப ரீதியாகப் பல தகவல்கள் கொண்ட வரிகள் காட்டப்படும். அதில் முதல் வரிசையில், குரோம் பிரவுசரின் பதிப்பு எண் கிடைக்கும்.

கேள்வி: எங்கள் வீட்டில் ஒரு புதிய ஸ்மார்ட் டி.வி. வாங்கியிருக்கிறோம். இன்னும் இணைய இணைப்பில் வை பி வரும் வகையில் ரெளட்டர் மோடம் இணைக்கவில்லை. டிவியில் யு.எஸ்.பி. போர்ட் உள்ளது. இதில் இணைய இணைப்பு தரும் யு.எஸ்.பி. ஸ்டிக்கை இணைத்தால், டிவியை இணையத்துடன் இணைக்க முடியுமா?
ஆர். நிர்மலா, தேனி.
பதில்:
இல்லை. யு.எஸ்.பி. போர்ட் இருப்பதாலேயே, அதில், இணைய இணைப்பு தரும் அடாப்டரை இணைத்துப் பயன்படுத்தலாம் என்பதில்லை. இந்த இணைய அடாப்டர்கள் அல்லது 'டாங்கிள்' எனப்படுபவை, விண்டோஸ் அல்லது மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைந்து இயக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், பெரும்பாலான ஸ்மார்ட் டி.வி.க்கள், ஏதேனும் ஒரு வகை ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைந்து செயல்படும் வகையில்தான் வடிவமைக்கப்பட்டிருக்கும். எனவே, வழக்கமாக, லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் இணைத்து செயல்படுத்தப்படும் இணைய இணைப்பு அடாப்டர்களை, டி.வி.யில் இணைத்து இயக்க முடியாது.
நேரடியாக வயர் வழி இணைப்பு பெற்று இணையம் இயக்கும் வகையில் இணைப்பு இருந்தாலும், அதனை ஏற்றுக் கொள்ளும் வகையில், உங்கள் டி.வி. அமைக்கப்பட்டுள்ளதா என்பதை, தொழில் நுட்பம் தெரிந்த ஒருவரிடம் அல்லது உங்களுக்கு டிவியை சர்வீஸ் செய்திடும் மையப் பணியாளரிடம் கேட்டு செயல்படுத்தவும்.

கேள்வி: பி.டி.எப். பைல்களைப் படிக்க, நான் அடோப் அக்ரோபட் ரீடரைப் பயன்படுத்துகிறேன். அண்மையில் இதன் புதிய பதிப்பிற்கு மாறினேன். முன்பு, ஏதேனும் ஒரு பைலைப் படித்து முடித்து அப்படியே மூடி வைத்தால், மீண்டும் திறக்கையில், விட்ட இடத்தில் திறக்கும். இப்போது அவ்வாறு திறப்பதில்லை. இது எதனால் ஏற்பட்ட மாற்றம்? விண்டோஸ் 10 சிஸ்டம் அப்டேட் செய்து வைத்துள்ளேன். வழி காட்டவும்.
கா. சுரேந்திரன், கோவை.
பதில்
: அடோப் அக்ரோபட் ரீடர் எந்தப் பதிப்பானாலும், அதில் இந்த வசதி உள்ளது. இதனைச் செயல்படுத்த, அக்ரோபர் ரீடரை இயக்கவும். பி.டி.எப். பைல் ஒன்றைத் திறக்க வேண்டிய அவசியமில்லை. அக்ரோபர் ரீடரில், Edit > Preferences என்று செல்லவும். Preference டயலாக் பாக்ஸில், Categories என்னும் பிரிவில், “Documents” என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர், “Restore last view settings when reopening documents” என்பதில் உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளத்தினை அமைக்கவும். தொடர்ந்து ஓகே கிளிக் செய்து, preference டயலாக் பாக்ஸை மூடவும்.
இனி, அடுத்து, ஒரு பி.டி.எப். பைலைத் திறந்தால், அதற்கு முன்னர், அந்த பைல் எந்த இடத்தில் மூடப்பட்டதோ, அந்த இடத்தில் திறக்கப்படும்.
சுமத்ரா பி.டி.எப். (Sumatra PDF) மற்றும் PDF Xchange Viewer ஆகிய செயலிகளில், இந்த வசதி மாறா நிலையில் தரப்பட்டுள்ளது. ஆனால், பிரவுசர்களிலேயே திறக்கப்படும் பி.டி.எப். பைல்களில் இந்த வசதி இல்லை. நீங்கள் படிக்க விரும்பும் பக்கத்திற்குத் தேடித்தான் செல்ல வேண்டியதிருக்கும். ஏனென்றால், குரோம், பயர்பாக்ஸ் மற்றும் எட்ஜ் போன்ற பிரவுசர்களில் தரப்படும் பி.டி.எப். ரீடர்கள், சில அடிப்படை வசதிகளை மட்டுமே கொண்டுள்ளன.

கேள்வி: வாட்ஸ் அப் குரூப் ஒன்றில் என் மொபைல் போன் எண்ணையும் சேர்த்துள்ளனர். தொடக்கத்தில் இதில் உள்ள நண்பர்கள் எப்போதாவது தகவல்கள் பதிவார்கள். ஆனால், இப்போது உறுப்பினர்கள் அதிகமாக உள்ளதால், அடிக்கடி இரவில் கூட தகவல்கள் பதியப்படுகின்றன. இது பீப் ஒலியையும் திரை ஒளிர்வதையும் காட்டுகிறது. இதனால், என் உறக்கம் கெடுகிறது. இந்தக் குழுவிலிருந்து வெளியேறாமல், இதனை நிறுத்த முடியாதா?
எஸ். பூங்குழலி, கோவை.
பதில்:
குழுவாக அமைந்து தகவல்களைச் சுடச்சுட பகிர்ந்து கொள்வது நல்ல அனுபவமே. ஆகவே தான், வாட்ஸ் அப் குழுக்கள் இன்று கோடிக்கணக்கில் இயங்கி வருகின்றன. ஆனால், தகவல் பரிமாற்றத்தில் நாம் ஈடுபடாமல், மற்ற பணிகளில் இருக்கும்போது, குரூப்பில் தகவல்கள் வருகையில் ஏற்படும் பீப் ஒலி நமக்கு நிச்சயம் எரிச்சலைத் தரும். இதனை நாம் முழுமையாக நிறுத்திவிடும் வசதி உள்ளது.
உங்கள் போனில், வாட்ஸ் அப் செயலியைத் திறக்கவும். உங்களுக்குத் தொல்லை கொடுக்கும் வாட்ஸ் அப் குழுவினை இயக்கவும். இந்த குழுவின் பெயரில் தட்டவும். இப்போது Group Info திரையில் நுழைந்திருப்பீர்கள். இந்த திரையில், Mute என்பதில் தட்டவும். இதன் பின், எத்தனை நாட்களுக்கு நோட்டிபிகேஷனை நிறுத்தி வைப்பது என்ற ஆப்ஷன்கள் காட்டப்படும். அது 8 மணி நேரம், ஒரு வாரம் அல்லது ஓராண்டு என இருக்கும். உங்கள் விருப்பப்படி, ஏதேனும் ஒன்றினைத் தேர்ந்தெடுக்கவும். அவ்வளவுதான். நீங்கள் தேர்ந்தெடுத்த காலத்திற்கு எந்தவித நோட்டிபிகேஷனும் இந்த குழுவுக்குக் கிடைக்காது.

கேள்வி: நான் கேமரா மற்றும் மொபைல் ஸ்மார்ட் போன் மூலம் நிறைய படங்கள் எடுக்கிறேன். இவற்றை கம்ப்யூட்டருக்கு மாற்றி, டிவிடிக்களில் சேமித்து வைக்கிறேன். இது சரியான முறையல்ல என்றும் விரைவில் இவை வீணாகிவிடும் என்றும் என் நண்பர் கூறுகிறார். இது சரியா? அப்படியானால், மாற்று வழி என்ன?
கே. எஸ். செந்தில் குமார், ஜெயங்கொண்டம்.
பதில்:
கம்ப்யூட்டர் மலர் முந்தைய இதழ் ஒன்றில், பலவகைப்பட்ட ஸ்டோரேஜ் மீடியம் பற்றி எழுதியுள்ளேன். இந்தப் பிரச்னையை இரு வழிகளில் தீர்க்கலாம். இப்போது சி.டி. மற்றும் டி.வி.டி. கொண்டு யாரும் அதிக எண்ணிக்கையில், பல ஆண்டுகளுக்கு வரும் வகையில் சேர்த்து வைப்பதில்லை. ஏனென்றால், இவை காலப் போக்கில் கெட்டுப் போய், அதில் பதிய வைக்கப்பட்டுள்ள பைல்களை மீண்டும் தராது. எனவே, இவற்றைப் பல இடங்களில் கிடைக்கும் க்ளவ்ட் ஸ்டோரோஜ் இடத்தில் சேமித்து வைக்கலாம். அல்லது பெரிய அளவில் கிடைக்கும் போர்ட்டபிள் ஹார்ட் டிஸ்க்கில் சேமித்து வைக்கலாம். போட்டோக்களை சேமித்து வைப்பதில், அவற்றின் பார்மட் குறித்தும் சிந்திக்க வேண்டும். போட்டோ ஷாப் போன்ற செயலிகள் மட்டுமே திறக்கும் பார்மட்டில் படங்களைச் சேமித்து வைத்தால், பின் நாளில், போட்டோ ஷாப் கிடைக்கவில்லை என்றால், படங்கள் பத்திரமாக இருந்தும் திறந்து பார்க்க இயலாத நிலை ஏற்படலாம். அதற்குப் பதிலாக .jpg அல்லது .tif பார்மட்களில் சேமித்து வைத்தால், பல செயலிகள் கொண்டு திறந்து பயன்படுத்தலாம். இவையும் காலப் போக்கில் மறையக் கூடிய பார்மட் எனில், எந்த பார்மட் புதியதாக நடைமுறைக்கு வருகிறதோ, அவற்றிற்கு மாற்றக் கூடிய வழிகளைப் பயன்படுத்தி இவற்றை மாற்றிக் கொள்ள வேண்டும்.
மூன்றாவதாக இன்னொரு நடைமுறையும் தற்போது பின்பற்றப்படுகிறது. தனி நபர் க்ளவ்ட் ஸ்டோரேஜ். நாமாக, நம் அலுவலகத்தில் அல்லது வீடுகளில் தனிப்பட்ட முறையில் க்ளவ்ட் ஸ்டோரேஜ் பயன்படுத்துவது. இது சற்று பணம் கூடுதலாகத் தேவைப்படும் வழியாகும். இதனை நாமே வைத்து இயக்கலாம். நம் மொபைல் ஸ்மார்ட் போன் மற்றும் கம்ப்யூட்டர்களிலிருந்து தாமாகவே படங்கள், டாகுமெண்ட்கள் இதில் சென்று சேமிக்கபப்டும் வகையில் அமைக்கலாம். ஒரே க்ளவ்ட் ஸ்டோரேஜ் சாதனத்தில், குடும்ப நபர்கள் அல்லது நண்பர்கள் பகிர்ந்து சேமிக்கலாம். தற்போது இந்த முறை பரவலாகப் பரவி வருகிறது.

கேள்வி: வாட்ஸ் அப் செயலியை என் ஸ்மார்ட் போனில் இயக்கி வருகிறேன். இதில் ஒரு சிலர் குழுவாகத் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். எப்படி ஒரு குழுவை அமைக்கலாம் என்று தெரியவில்லை. வழி காட்டவும்.
என். செம்மலர், சேலம்.
பதில்
: நண்பர்களுடன் தகவல்களைப் பகிர்ந்து உறவாட, தொடர்ந்து இணைப்பில் இருக்க, வாட்ஸ் அப் செயலி ஒரு நல்ல, எளிய சாதனம். எஸ்.எம்.எஸ். மூலம் குழுக்களை அமைப்பது போல இதிலும் அமைத்துத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாம். எப்படி இந்த குழுக்களை அமைத்து இயக்குவது என்ற தகவல்களைப் பார்க்கலாம்.
முதலில் உங்கள் ஸ்மார்ட் போனில், வாட்ஸ் அப் செயலியை இயக்கிக் கொள்ளவும். ஆப்பிள் ஸ்மார்ட் போன் எனில், New Group என்பதில் தட்டவும். ஆண்ட்ராய்ட் எனில், மெனு ஐகானில் கிளிக் செய்து, பின் கிடைக்கும் மெனுவில் New Group என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர், உங்கள் Contact பட்டியல் சென்று, யாரை எல்லாம் குழுவில் இணைக்க வேண்டுமோ, அவர்கள் பெயர்களை தட்டி அமைக்கவும். முடிந்த பின்னர், Next என்பதில் தட்டவும். பின்னர் குழுவிற்கான பொதுப் பொருள் (Subject) ஒன்றை அமைக்கவும். அல்லது அதற்கான சிறிய படம் ஒன்றையும் அமைக்கலாம். தொடர்ந்து Create என்பதில் தட்டவும். இப்போது உங்கள் குழு இயங்கத் தயாராய் இருக்கும். இதில் அனுப்பப்படும் செய்தி, தகவல்கள், படங்கள் இந்தக் குழுவில் இணைக்கப்பட்டுள்ள அனைவரின் ஸ்மார்ட் போன்களில் காட்டப்படும். இந்தக் குழுவினை நிர்வகிக்க, அதன் பெயரில் கிளிக் செய்திடவும். இங்கு புதிய நபர்களை இணைக்கலாம். இணைந்த நபர்களை நீக்கலாம். உங்களுடன் இன்னொரு நபரையும் Admin ஆக நியமிக்கலாம். அவருக்கும், நண்பர்களை இணைக்க, நீக்க வழிகள் கிடைக்கும். அதே போல, குழுவின் பெயரை மாற்றலாம். பின் மீண்டும் பழைய பெயரையே அமைக்கலாம். அனைவரும் தொடர்பில் இருக்க வேண்டும் என்பதே பேஸ்புக் நிறுவனரின் இலக்கு. அதற்கு இந்த வாட்ஸ் அப் இப்போது பெரிய அளவில் உதவி வருகிறது.
இன்னொரு கொசுறு செய்தி சொல்லட்டுமா? பெர்சனல் கம்ப்யூட்டரிலும் வாட்ஸ் அப் செயலியை இயக்கலாம். ஆனால், ஒரு ஸ்மார்ட் போனின் பதிலியாகத்தான் இது செயல்படும். உங்கள் ஸ்மார்ட் போன், வாட்ஸ் அப் செயலியை இயக்கிய நிலையில் பெர்சனல் கம்ப்யூட்டர் அருகே இருக்க வேண்டும். பெர்சனல் கம்ப்யூட்டரில் இருப்பதனால், வாட்ஸ் அப் செயலியில் பெறப்படும் இணைப்புகளை எளிதாகத் தரவிறக்கம் செய்திட முடியும். வேகமாக டைப் செய்திட முடியும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X