கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 டிச
2016
00:00

கேள்வி: நான் யாஹூ மற்றும் கூகுள் ஜிமெயில் ஆகியவற்றில் இமெயில் அக்கவுண்ட் வைத்துள்ளேன். ஜனவரி முதல் வாரத்தில், இணைய இணைப்பு இல்லாத, அல்லது சரியாகக் கிடைக்காத என் கிராமத்திற்குப் போகிறேன். எனக்கு வரும் மெயில்களுக்கு ''விடுமுறையில் உள்ளேன். அடுத்த வாரம் பதில் அளிக்கிறேன்'' என்ற செய்தியைத் தானாகத் தரும் வசதியை யாஹூ கணக்கில் அமைக்க வேண்டும். ஜிமெயில் தளத்தில் அமைப்பது எனக்குத் தெரியும். யாஹூ தளத்தில் எப்படி அமைப்பது என வழி காட்டவும்.
எல். மஹேஸ்வரி, காரைக்கால்.
பதில்
: இணையத்திலேயே இதற்கான தேடலை மேற்கொண்டிருந்தால், வழி கிடைத்திருக்குமே. ஜிமெயில் அக்கவுண்ட்டில் அமைத்தது போலவே யாஹூ தளத்திலும் அமைக்கலாம். இருப்பினும், படிப்படியான வழிகளைக் கூறுகிறேன்.
ஏதேனும் ஒரு பிரவுசர் வழியாக, www.mail.yahoo.com என்ற தளத்தில் நுழையவும். உங்களுடைய லாக் இன் பக்கம் காட்டப்படும். உங்களுடைய மெயில் ஐ.டி. மற்றும் பாஸ்வேர்ட் தரவும். “Sign In” என்பதில் கிளிக் செய்திடவும். உங்களுக்கு வந்திருக்கும் அனைத்து மெயில்களுடன், உங்களுடைய இன்பாக்ஸ் காட்டப்படும். மேலாக, வலது பக்க மூலையில் உள்ள சக்கர ஐகானில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் கீழ் விரி மெனுவில், “Settings” என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது உங்கள் இன் பாக்ஸ் இருந்த இடத்தில், செட்டிங்ஸ் பக்கம் காட்டப்படும். இந்த செட்டிங்ஸ் டயலாக் பாக்ஸில், இடது புறமாக, பல ஆப்ஷன்ஸ் காட்டப்படும். இவற்றில், “Vacation Response” அல்லது “Holiday Response” என்பதில் கிளிக் செய்திடவும்.
இங்கு முதலில், நீங்கள் விடுமுறையில் செல்லவிருக்கும் காலத்திற்கான தேதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர், அந்த நாட்களுக்குக் காட்டப்பட வேண்டிய விடுமுறைக் கால தகவலினைத் தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் எப்போதும் பார்க்க வேண்டிய முக்கிய வேலை இருந்தால், ஓர் ஆண்டுக்குக் கூட இந்த காலத்தினை செட் செய்திடலாம். “உங்கள் அஞ்சலைப் பெற்றேன். அப்புறமாகப் படித்துப் பார்த்து பதில் தருகிறேன்” என்ற வகையில் கூட செய்தி அமைக்கலாம்.

கேள்வி: விண்டோஸ் 10 சிஸ்டம் தற்போது அவ்வளவாகப் பயன்படுத்தப்படவில்லை என்று கூறுகிறார்களே! உண்மையான நிலை என்ன? விண்டோஸ் 10 இப்படியே மறைந்துவிடுமா?
த. மாயநாதன், பண்ருட்டி.
பதில்
: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் பதிப்புகளில், விண்டோஸ் 10 தான் இறுதி. இந்த சிஸ்டத்திற்குத்தான் தொடர்ந்து அப்டேட் வழங்கப்பட்டுக் கொண்டே இருக்கப்படும். கம்ப்யூட்டர் பயன்பாடு குறித்துத் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வரும் NetMarket Share என்னும் அமைப்பு, சென்ற மாதம் ஓர் அறிக்கையினை, ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து வெளியிட்டது. உலக அளவில் இயங்கும் கம்ப்யூட்டர்கள், லேப்டாப் கம்ப்யூட்டர்கள் ஆகியவற்றில் இயங்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில், விண்டோஸ் 91% பங்கினைக் கொண்டுள்ளது. ஆப்பிள் மேக் சிஸ்டம் 7% கம்ப்யூட்டர்களில் மட்டுமே காணப்படுகிறது. அனைத்து லினக்ஸ் பதிப்புகளும் இயங்கும் கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கை 2% மட்டுமே.
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் வெவ்வேறு பதிப்புகளில், இன்றைக்கும் அதிக அளவில் பயன்படுத்தப்படுவது, விண்டோஸ் 7 தான். மொத்த பெர்சனல் கம்ப்யூட்டர்களில், இந்த இயக்க முறைமை 48% கம்ப்யூட்டர்களை இயக்குகிறது. விண்டோஸ் 10 சிஸ்டம் 23% க்கும் சற்றே அதிகமான கம்ப்யூட்டர்களில் உள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தால், எல்லா வழிகளிலும் கை விடப்பட்ட, விண்டோஸ் எக்ஸ்பி, இன்னும் 8.44% கம்ப்யூட்டர்களில் உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக, மைக்ரோசாப்ட் இந்த சிஸ்டம் குறித்து எந்த கவனமும் செலுத்தவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. விண்டோஸ் 8.1 சிஸ்டம், 8% கம்ப்யூட்டர்களிலும், விண்டோஸ் 8 சிஸ்டம் 2% கம்ப்யூட்டர்களிலும் இயங்குகின்றன. விண்டோஸ் விஸ்டா 1% கம்ப்யூட்டர்களில் காணப்படுகிறது.
விண்டோஸ் 10 பயன்படுத்துவோர் எண்ணிக்கை நிச்சயமாக அதிகமாகும். இதன் செயல்பாட்டில், இதுவரை பெருங்குறை என இதுவரை யாரும் சொல்லவில்லை. கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் மேம்படுத்த முடியாததாலும், தாங்கள் வடிவமைத்த சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள், விண்டோஸ் 7 சிஸ்டத்தில் மட்டுமே சிறப்பாக இயங்க முடியும் என்பதாலும் மட்டுமே, விண்டோஸ் 7 இன்றைக்கும் அதிக கம்ப்யூட்டர்களில் காணப்படுகிறது. இந்த நிலை நிச்சயம் மாறும். எனவே, விண்டோஸ் 10 செயல்பாடு, அதன் தொடரும் தன்மை குறித்து உங்களுக்கு எந்தச் சந்தேகமும் வேண்டாம்.

கேள்வி: நான் விண்டோஸ் 10 பயன்படுத்தி வருகிறேன். வீட்டில் உள்ள கம்ப்யூட்டரை என் தந்தையும் பயன்படுத்துகிறார். அவர் வயது 86. அவர், விண்டோஸ் 7 போல, விண்டோஸ் 10 சிஸ்டத்தின் இன்டர்பேஸ் அமைக்க முடியுமா என்று கேட்கிறார். இதற்காக, “விண்டோஸ் கிளாசிக் ஷெல்” என்று ஒரு புரோகிராம் இருப்பதாகக் கேள்விப் பட்டேன். ஆனால், விண்டோஸ் ஸ்டோரில் இது கிடைக்கவில்லை. இது எங்கு கிடைக்கும் எனக் கூற முடியுமா? இதனைப் பயன்படுத்தலாமா?
எஸ். மரிய அற்புதம், நாகர்கோவில்.
பதில்
: “கிளாசிக் ஷெல்” (Classic Shell) என்பது இலவசமாகத் தரவிறக்கம் செய்யக் கூடிய ஒரு புரோகிராம் தான். முன்பு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் ஸ்டோரில் இது தரப்பட்டது. தற்போது இல்லை. ஆனால், இதனைத் தயாரித்து வழங்கும் நிறுவனத்தின் இணைய தளத்தில் இது கிடைக்கிறது. அந்த தள முகவரி: www.classicshell.net.
விண்டோஸ் இயக்கத்தின் ஸ்டார்ட் மெனு, விண்டோஸ் 10 இயக்கத்தில் முழுமையாக மாற்றப்பட்டிருப்பது உண்மைதான். இதற்கு முந்தைய விண்டோஸ் பதிப்பு, குறிப்பாக விண்டோஸ் 7 சிஸ்டத்தில் உள்ளது போல வேண்டுமாயின், இந்த புரோகிராமினைப் பயன்படுத்தலாம். இதனைத் தேடிச் செல்கையில், வேறு சில தளங்களில் இந்த புரோகிராம் இருக்கும். ஆனால், இதனைத் தரவிறக்கம் செய்கையில், வேண்டத்தகாத சில புரோகிராம்களும் இணைந்தே கம்ப்யூட்டரில் இடம் பெறும். இது கம்ப்யூட்டரின் பாதுகாப்பிற்கு உகந்தது அல்ல. இதனைத் தயாரித்து வழங்கும் நிறுவனத்தின் www.classicshell.net தளத்திலேயே, முன்பு, இந்த தளம் மூன்று மாதங்கள் ஹேக்கர்களால் தாக்கப்பட்டு இருந்ததாக, அறிவிப்பு வெளியானது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த புரோகிராம் பயன்பாடு தேவையா? அப்படியும் தேவை என்று விரும்பினால், இந்த தளத்தில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் பதில்களும் (FAQ) பகுதியை முழுமையாகப் படித்துவிட்டுப் பின் முடிவு செய்திடவும்.
இந்த புரோகிராம் தரும் பயன் போலவே தருவதற்கு, இணையத்தில் Start10 மற்றும் Start Menu 8 எனப் புரோகிராம்கள் உள்ளன. அவை குறித்தும் நன்கு அறிந்து கொண்டு அவற்றை அணுகலாம்.

கேள்வி: சில மாதங்களுக்கு முன்பு கட்டணம் செலுத்தி, விண்டோஸ் 7 லிருந்து, விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறிக் கொண்டேன். மாறிய பின்னர் கிடைத்த டெஸ்க்டாப்பில், ஏற்கனவே இருந்த சில புரோகிராம்களுக்கான ஐகான்களைக் காணவில்லை. இவற்றை எப்படி மீண்டும் இதில் உருவாக்குவதென்றும் தெரியவில்லை. குறிப்பாக, நான் அடிக்கடி பயன்படுத்தும் வேர்ட், எக்ஸெல் போன்ற புரோகிராம்களுக்கான ஐகான்கள் இல்லை. இவற்றை எப்படி உருவாக்கி அமைத்துப் பயன்படுத்துவது என்பதற்கு டிப்ஸ் தரவும்.
என். ஜனார்த்தனி, மயிலாடுதுறை.
பதில்
: நீங்கள் எப்படியோ, சில ஐகான்களை மறைத்துவிட்டீர்கள். ஆப்பரேட்டிங் சிஸ்டம் மேம்படுத்துதலினால், ஏற்கனவே இருந்த ஐகான்கள் நிச்சயம் மறைந்திருக்காது. அவற்றை மறுபடியும் காண, டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில், மவுஸால் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், “View” என்பதைத் தேர்ந்தெடுங்கள். இப்போது கிடைக்கும் மெனுவில், “Show desktop icons” என்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என உறுதி செய்திடவும். இப்போது அனைத்து ஐகான்களும் காட்சி அளிக்கும்.
நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மானிட்டர்கள் பயன்படுத்துவதாக இருந்தால், அவை எந்த மானிட்டரின் திரைக் காட்சியின் ஓரமாக மறைந்திருக்கும். அந்நிலையில், மேலே சொன்னபடி செயல்பட்டு, இறுதியாகக் காட்டப்படும் பட்டியலில்,“View” என்பதற்குப் பின்னர் “Auto arrange icons” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
இந்த ஐகான்கள் அனைத்தும் “.ico” என்ற பின் ஒட்டுடன் முடியும் பைல்களாகும். இந்த பின்னொட்டில் முடியும் பைல்கள் அனைத்தையும் தேடிக் கண்டுபிடிக்க, கார்டனாவின் தேடல் கட்டத்தில் கேள்வி எழுப்பவும். இப்போது கிடைக்கும் பைல்கள் பட்டியலைப் பார்க்கவும். அதில் நீங்கள் தேடும் ஐகான்களின் பெயர்கள் இருந்தால், அவற்றை அப்படியே, மவுஸ் கர்சரால் பிடித்து, இழுத்துச் சென்று, டெஸ்க்டாப்பில் விடவும். நீங்களாகவும் புரோகிராம் ஒன்றின் ஐகானை அமைக்கலாம். ஐகான் அமைக்கப்பட வேண்டிய புரோகிராம் இருக்கும் போல்டருக்குச் செல்லவும். அதன் அப்ளிகேஷன் பைல் மீது ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், “Create shortcut” என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர் உருவாகும் ஷார்ட் கட் மீது கர்சரை வைத்து இழுத்துச் சென்று தேவையான இடத்தில் அமைத்துக் கொள்ளவும்.

கேள்வி: விண்டோஸ் டிபண்டர் செயலி மூன்று விண்டோஸ் இயக்க முறைமைகளில் எப்படி தரப்பட்டது, அதன் இன்றைய நிலை என்ன என்ற கட்டுரை தந்தீர்கள். ஆனால், விண்டோஸ் 10 இயக்கத்தில், விண்டோஸ் டிபண்டரை எப்படி வடிவமைப்பது என்று விரிவாகத் தரவில்லை. வைரஸ் மற்றும் மால்வேர் புரோகிராம்களைத் தடுப்பதில், இது சிறப்பாகச் செயல்படும் என்பதால், இதனை எப்படி அமைப்பது என்று விரிவாகப் பதில் தரவும்.
ஆர். சீனிவாசகம், திருமங்கலம்.
பதில்:
நீங்கள் குறிப்பிடும் கட்டுரையில், இதனை இயக்குவது குறித்து டிப்ஸ் தரப்பட்டது. நீங்கள் கேட்டுக் கொண்டுள்ளதால், அதனை எப்படி வடிவமைப்பது என விரிவாகக் குறிப்புகள் தருகிறேன். விண்டோஸ் 10ல் உள்ள விண்டோஸ் டிபண்டரில், மைக்ரோசாப்ட் புதிய தொழில் நுட்பங்களையும், சிறப்பு வசதிகளையும் தந்துள்ளது. விண்டோஸ் டிபண்டர் செயலியின் செட்டிங்ஸ் பக்கம், விண்டோஸ் 10 இயக்கத்தின் செட்டிங்ஸ் பக்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அதனாலேயே பலருக்கு இதனை வடிவமைப்பதில் சிக்கல்களை எதிர் கொள்கின்றனர்.
விண்டோஸ் இயக்கத்தில், கண்ட்ரோல் பேனலில் இதனைப் பெறலாம். விண்டோஸ் கீ + எக்ஸ் கீகளை அழுத்தினால், திரையில் இடது புறம் ஒரு மெனு கிடைக்கும். அதில் கண்ட்ரோல் பேனல் தேர்ந்தெடுத்து, கிடைக்கும் பக்கத்தில், Windows Defender என்று இருப்பதில் கிளிக் செய்திடவும். உடன் விண்டோஸ் டிபண்டர் பக்கம் கிடைக்கும். உங்கள் கம்ப்யூட்டர் பாதுகாப்பில் உள்ளதாகக் காட்டப்படும். இங்கு Settings என்பதில் கிளிக் செய்தால், விண்டோஸ் டிபண்டரை வடிவமைக்கத் தேவையான ஆப்ஷன்கள் தரப்படும். இவை, Real Time Protection, Cloud based Protection, Exclusions, Enhanced Notifications மற்றும் Windows Defender Offline ஆகியவை ஆகும். இவை அனைத்தையும் இயக்கி வைக்கலாம். இறுதியாக, உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கும் விண்டோஸ் டிபண்டரின் பல்வேறு செயலிகளின் பதிப்பு எண்கள் கிடைக்கும்.
விண்டோஸ் 10ல் உள்ள, விண்டோஸ் டிபண்டர், அனைத்து மால்வேர் மற்றும் வைரஸ்களைத் தடுப்பதில் மிகச் சிறப்பாக இயங்குவதால், வேறு எந்த தர்ட் பார்ட்டி ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் இல்லாமல், இதனைக் கொண்டே, கம்ப்யூட்டருக்கு முழுமையான பாதுகாப்பினைப் பெறலாம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X