கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 ஜன
2017
00:00

கேள்வி: பொதுவாக, யு.எஸ்.பி. ட்ரைவ்களை, அவற்றிலிருந்து டேட்டா படிக்கப்படும்போதும், எழுதப்படும்போதும், கம்ப்யூட்டரின் இணைப்பிலிருந்து எடுக்க கூடாது என்றும், Safely remove hardware பயன்படுத்தி மட்டுமே நீக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. கம்ப்யூட்டர் ஒன்று செயலின்றி, hibernate அல்லது வேறு இயங்கா நிலையில் இருக்கையிலும், இந்த முன் எச்சரிக்கையினைப் பின்பற்ற வேண்டுமா?
ஆர். சிவராஜன், திருப்பதி.
பதில்
: Safely Remove Hardware அனுமதித்த பின்னரே, யு.எஸ்.பி. ட்ரைவ் ஒன்றினை, கம்ப்யூட்டரிலிருந்து எடுக்கலாம் என்பது, டேட்டா பரிமாற்றத்தை மட்டும் கவனத்தில் வைத்து சொல்லப்படுவது அல்ல. இன்னும் சில பைல்கள் எழுதப்படாமல், காத்துக் கொண்டிருக்கலாம். குறிப்பிட்ட பைல் சார்ந்த சாப்ட்வேர் மூடப்பட்டிருந்தாலும், பைல்கள் பின்னால் எழுதப்படலாம். suspended, hibernated, அல்லது asleep நிலையில் கூட இந்த நிலை ஏற்படலாம். பிளாப்பிகளைப் பொறுத்த வரை, அவை ஒருமுறை அடையாளம் காணப்பட்டால், அதுவே அந்த பிளாப்பியின் நிரந்தர அடையாளம் ஆக இருக்கும். கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அதனைப் பயன்படுத்திக் கொள்ளும். ஆனால், யு.எஸ்.பி. ட்ரைவ் பொறுத்தவரை, ஒவ்வொருமுறை பயன்படுத்தப்படும் போதும், தனித்தனியாக, புதியதாக அடையாளம் காணப்படும்.
எனவே, கம்ப்யூட்டர் இயங்காத தூங்கும் நிலையில் இருந்தாலும், அதனை இயக்கி, Safely Remove Hardware டூல் பயன்படுத்தி, ட்ரைவினை நீக்குவதே நல்லது.

கேள்வி: வெளிநாட்டிலிருந்து டெல் கம்ப்யூட்டர் ஒன்று வாங்கினேன். விண்டோஸ் 8 உடன் வந்தது. பின்னர், விண் 8.1 மற்றும் விண்டோஸ் 10 க்கு மாற்றிக் கொண்டேன். அதில் இயங்கும் ஹார்ட் ட்ரைவ் பிரச்னை கொடுக்கிறது. அதனை மாற்றியே ஆக வேண்டும் போல் தெரிகிறது. அதில் உள்ள டேட்டா, படங்கள் ஆகியவற்றை இன்னொரு போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவிற்கு மாற்றிவிட்டேன். புதிய ஹார்ட் ட்ரைவ் இணைத்தால், விண்டோஸ் 10 கட்டணம் இன்றி பதிய முடியுமா? அல்லது, கட்டணம் செலுத்தித்தான் கிடைக்குமா?
கே.கார்த்திக், சென்னை.
பதில்
: நல்ல கேள்வி. என்றாவது ஒரு நாள், விண் 10 பயன்படுத்துபவர்கள் அனைவரும் எதிர் கொள்ளக் கூடிய நிலை ஒன்றைச் சந்தித்து கேள்வி கேட்டுள்ளீர்கள். விண்டோஸ் 10 அதற்கான அடையாளமும் அனுமதியும் தரும் 'ப்ராடக்ட் கீ' யைப் பதிந்து வைத்துக் கொள்வதில் ஒரு புதிய முறையைக் கையாள்கிறது. அந்த கீ, கம்ப்யூட்டரில் பதிந்து வைக்கப்பட்டுள்ளது. மதர்போர்டில் இருந்து இந்த கீ கிடைத்துவிடும். எனவே, மதர்போர்டில் பிரச்னை ஏற்பட்டால் தான் சிக்கல் ஏற்படும். விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு எங்கே போவது என்ற கேள்வி எழுகிறதா? https://www.microsoft.com/en-us/software-download/windows10/ என்ற முகவரியில் அதன் நகலைப் பெற்றுக் கொள்ளலாம். இன்ஸ்டால் செய்வதற்கான கோப்புகளைப் பதிந்து எடுத்துக் கொள்வதற்கான செயல்முறைகள் இங்கு தரப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றி, விண் 10 சிஸ்டம் பதிந்து கொள்வதற்கான கோப்புகளைப் பெற்றுக் கொள்ளவும். அல்லது, உங்கள் ஹார்ட் ட்ரைவினைக் கம்ப்யூட்டரில் பதிந்து தரும் தொழில் நுட்பம் தெரிந்தவரிடம், உங்கள் விருப்பத்தை முன்கூட்டியே தெரிவித்து உதவி பெறவும்.

கேள்வி: பல ஆண்டுகளாக, இன்டர்நெட் எக்ஸ்புளோரரைப் பயன்படுத்திய நான், தற்போது குரோம் பிரவுசரை விண்டோஸ் 7 இயக்கத்தில் பயன்படுத்தி வருகிறேன். மீண்டும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் அல்லது பயர்பாக்ஸ் பிரவுசருக்கு மாறலாமா என்று யோசிக்கிறேன். பெரும்பாலோர் என்ன பயன்படுத்துகின்றனர் என்று அறிய ஆவல். தங்களின் ஆலோசனை என்ன?
கே.சுதா ராணி, மன்னார்குடி.
பதில்
: நீங்கள் ஏன் குரோம் பிரவுசரிலிருந்து மாறுவதற்கு விரும்புகிறீர்கள் என்று கூறவில்லை. இருப்பினும், உங்கள் கேள்விக்கான தகவல்களைத் தருகிறேன். விண்டோஸ் சிஸ்டம் பயன்படுத்துபவர்களில் 23% பேர், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைப் பயன்படுத்துகின்றனர். குரோம் பிரவுசரை 55% பேர் பயன்படுத்தி வருகின்றனர். பயர்பாக்ஸ் பிரவுசரை 11% பேரும், புதிய எட்ஜ் பிரவுசரை 5% பேரும் பயன்படுத்துகின்றனர். எந்த பிரவுசரைப் பயன்படுத்தினாலும், அதன் பாதுகாப்பு கருதி வெளியிடப்படும் மேம்படுத்தல்களை அவ்வப்போது மேற்கொள்ள வேண்டும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருக்கான பாதுகாப்பு தரும் பைல்களைத் தருவதை, மைக்ரோசாப்ட் நிறுத்த இருப்பதால், குரோம் பிரவுசரையே நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

கேள்வி: இந்தக் கேள்வியைக் கேட்கலாமா வேண்டாமா? என்ற தயக்கத்திற்குப் பின்னர், கேட்கிறேன். கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் குறித்த பல கட்டுரைகளில், 'ட்ரைவர்' என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இதன் முழுப் பொருள் எனக்கு விளங்கவில்லை. என்னைப் போல் பலர் இருக்கலாம். தயவு செய்து விளக்கவும்.
ஆ. செந்தமிழ்ச் செல்வி, திருப்பூர்.
பதில்:
கம்ப்யூட்டர் மலரில், “தெரிந்து கொள்ளுங்கள்” என்ற தலைப்பில் சிறு சிறு கட்டங்களில், இது போன்ற அடிப்படை கம்ப்யூட்டர் அறிவியல் கோட்பாடுகளுக்கு விளக்கங்கள் தரப்படுகின்றனவே. 'ட்ரைவர்' குறித்தும் தரப்படுகிறது. இருப்பினும், சந்தேகம் என இருந்தால், கேள்விகள் கேட்டு தெளிவு படுத்திக் கொள்வதில் தயக்கமே இருக்கக் கூடாது. 'ட்ரைவர்' என்பது ஒரு வகையான சாப்ட்வேர் புரோகிராம். இது பிரிண்டர், மவுஸ் அல்லது வை பி ரெளட்டர் போன்ற சாதனங்களை, உங்கள் கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தோடு தகவல்களைப் பரிமாறிக் கொள்ள உதவுகிறது. அதே போல, இந்த புரோகிராம் மூலம், ஆப்பரேட்டிங் சிஸ்டமும், குறிப்பிட்ட சாதனத்துடன் தகவல்களைப் பகிர்ந்து கொண்டு, செயல்படுவதற்கான கட்டளைகளைத் தருகிறது. இந்த 'ட்ரைவர்' சாப்ட்வேர் புரோகிராமினை, சாதனத்தைத் தயாரித்து வழங்கும் நிறுவனமே தயார் செய்து தருகிறது. ஆப்பரேட்டிங் சிஸ்டம் தயாரிப்பவர்கள், மைக்ரோசாப்ட் / ஆப்பிள் போன்ற நிறுவனங்கள், இந்த வகை சாதனங்கள் இயங்க, பொதுவான வரைமுறைகளை, தரத்தினை நிர்ணயம் செய்து அறிவிப்பார்கள். அவற்றின் அடிப்படையில், இந்த ட்ரைவர் சாப்ட்வேர் புரோகிராம்கள் வடிவமைக்கப்பட்டு தரப்படும். ஒரு சாதனத்தை, கம்ப்யூட்டரில் இணைத்து இன்ஸ்டால் செய்கையில், இந்த ட்ரைவர் புரோகிராம் தான் இயக்கப்பட்டு, கம்ப்யூட்டருக்கும் சாதனத்திற்குமான இணைப்பை ஏற்படுத்தித் தருகிறது.
ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் மேம்படுத்தப்படுகையில், இந்த ட்ரைவர் சாப்ட்வேர் புரோகிராம்களும் மேம்படுத்தப்பட வேண்டும். பல வேளைகளில், இவை தானாகவே மேம்படுத்தப்படும். அல்லது, மேம்படுத்தப்படும் நிலை ஏற்படுகையில், உங்களுக்கு ஒரு பாப் அப் மெனு தரப்பட்டு, இது போல குறிப்பிட்ட சாதனம் இயங்க சாப்ட்வேர் மேம்பாட்டிற்கான புரோகிராம் தயாராக உள்ளது. மேம்படுத்திவிடலாமா? என்று உங்களிடம் அனுமதி கேட்டு, நீங்கள் அனுமதி தந்த பின்னர், அது மேம்படுத்தப்படும். அவ்வாறு மேம்படுத்தப்படுவதே நல்லது. இதனால் தான், கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்ட ஏதேனும் ஒரு சாதனம் சரியாக இயங்கவில்லை என்றால், சாதனத்தைத் தயாரித்து வழங்கிய நிறுவனத்தின் இணைய தளம் சென்று, அதற்கான மேம்படுத்தல் தேவையா எனக் கண்டறிந்து, உடனே மேம்படுத்த வேண்டும்.

கேள்வி: என் கம்ப்யூட்டரில் பெரும்பாலும் வேர்ட் டாகுமெண்ட்களைத் தமிழில் தான் தயாரிக்கிறேன். இதனால், அனைத்து வரிகளிலும், இலக்கணப் பிழைகள் இருப்பதாக வேர்ட் நெளிவான கோடுகளை இட்டுக் காட்டுகிறது. இந்த இலக்கணப் பிழை சுட்டுவதை நிறுத்தவும், நாம் மீண்டும் விரும்பும்போது இயக்கவும் முடியுமா? அதற்கான ஷார்ட் கட் கீ என்ன?
சா. சம்பந்த மூர்த்தி, சோழவந்தான்.
பதில்:
வேர்ட் புரோகிராம், நீங்கள் தமிழில் ஆவணங்களைத் தயாரித்தாலும், அவை ஆங்கிலச் சொற்களுக்கான எழுத்துக் கோவைகளாகவே எடுத்துக் கொண்டு, நீங்கள் குறிப்பிட்டது போல, பிழைகளைச் சுட்டிக் காட்டும் கோடுகளைச் சொற்களின் அடியில் அமைக்கிறது. இதனை நிறுத்தவும் இயக்கவும் ஷார்ட் கட் கீ இல்லை. புரோகிராமினை வடிவமைத்துக் கொள்ளலாம். கீழே குறிப்பிட்டது போலச் செயல்படவும்.
முதலில், Word Options டயலாக் பாக்ஸைத் திறக்கவும். உங்களுடைய எம்.எஸ். ஆபீஸ் புரோகிராம், ஆபீஸ் 2007 எனில், ஆபீஸ்
பட்டனில் கிளிக் செய்து, பின்னர் காட்டப்படும் பைல்கள் பெயர்கள் உள்ள கட்டத்தி கீழாக உள்ள Word Options என்பதில் கிளிக் செய்திடவும். அதன் பின்னர் வந்துள்ள எம்.எஸ். ஆபீஸ் புரோகிராமில், ரிப்பனில் உள்ள File டேப்பில் கிளிக் செய்து, அதன் பின்னர் Opions என்பதில் கிளிக் செய்திடவும்.
இந்த டயலாக் பாக்ஸின் இடது பக்கம் Proofing என்ற இடத்தில் கிளிக்கிடவும். இங்கு Mark Grammar Errors As You Type என்பதன் அருகே தரப்பட்டிருக்கும் கட்டத்தில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். தொடர்ந்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இனி, தமிழ், ஆங்கிலம் என எந்த மொழியில் ஆவணங்களை அமைத்தாலும், பிழைகள் சுட்டிக் காட்டும் கோடுகள் இருக்காது. மீண்டும் பிழைகள் சுட்டிக் காட்டப்பட வேண்டும் என்றால், மேலே சொன்னபடி சென்று, சுட்டிக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் டிக் அடையாளம் அமைக்கவும்.
எப்போதும் இந்த ஏற்பாடு வேண்டாம், குறிப்பிட்ட டாகுமெண்ட் அமைக்கும்போது மட்டும் எனில், மேலே சுட்டிக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் டிக் அடையாளத்தை ஏற்படுத்திவிட்டு, கீழாக, Exceptions For என்று இருக்கும் இடத்தில், அப்போதைய டாகுமெண்ட் பெயர் காட்டப்படுவதனைப் பார்க்கலாம். அதன் கீழாக, Hide Grammar errors in this document only என்று இருக்கும் இடத்தில் உள்ள கட்டத்தில் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தி, பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியே வரவும். இந்த ஏற்பாட்டில், நீங்கள் பயன்படுத்தும் அந்த குறிப்பிட்ட டாகுமெண்ட்டில் மட்டும் இலக்கணப் பிழைகள் சுட்டிக் காட்டப்பட மாட்டாது.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்களில் டேபிள்களை உருவாக்கி, அதில் டேட்டாவை இட்ட பின்னர், நெட்டு வரிசைகளை மாற்றி அமைக்க வேண்டிய தேவை ஏற்படுகையில், மாற்றத்தினை எப்படி எளிதாக மேற்கொள்ளலாம்? டிப்ஸ் தரவும்.
பா. பரமேஷ், காங்கேயம்.
பதில்:
இந்த தேவை பலருக்கு ஏற்படும். ஆவணத்தில் டேபிள் அமைத்த பின்னால், சில விளக்கங்களை எழுதுகையில் நெட்டு வரிசைகளை (Column) இடம் மாற்றி அமைக்க எண்ணுவோம். இதற்கான வழிகளை இங்கு பார்க்கலாம்.
டாகுமெண்ட்டினைத் திறந்து கொள்ளவும்.
எந்த நெட்டு வரிசையினை இடம் மாற்றி அமைக்க வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Ctrl+X கீகளை அழுத்தவும். அல்லது ரிப்பனில், ஹோம் டேப்பில், Cut என்பதில் கிளிக் செய்திடவும். டெக்ஸ்ட்டில் எதனையாவது தேர்ந்தெடுத்தால் தான், இந்த Cut காட்டப்படும். இதனால், குறிப்பிட்ட அந்த நெட்டு வரிசை நீக்கப்படுகிறது. அது பத்திரமாக, கிளிப் போர்டில் அமர்ந்து கொள்ளும்.
அடுத்து, எந்த நெட்டு வரிசைக்கு முன்பாக இதனை அமைக்க வேண்டுமோ, அந்த நெட்டு வரிசையின், முதல் செல்லுக்குச் சென்று, கர்சரை நிறுத்தவும். பின்னர், Ctrl +V அழுத்தவும்; அல்லது ரிப்பனில் உள்ள ஹோம் டேப்பில், Paste என்பதில் கிளிக் செய்திடவும்.
ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் டாகுமெண்ட்டில், Track Changes என்ற டூலை இயக்கி வைத்திருந்தால், மேலே சொல்லப்பட்ட செயல்பாடுகள் நடைபெறாது. எனவே, அந்த டூலின் இயக்கத்தினை நிறுத்திய பின்னர், இதனை மேற்கொள்ள வேண்டும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X