கிளிப் போர்ட் பயன்பாட்டில் இத்தனை வசதிகளா என்று வியக்க வைக்கும் அளவிற்கு அருமையான தகவல்களுடன் கூடிய சிறந்த கட்டுரையாக “நகலெடுத்து ஒட்டுவதில் புதிய வசதிகள்” கட்டுரை அமைந்துள்ளது. அத்தனை செயலிகளின் சிறப்பைக் காட்டும் படங்கள், படிப்பவர்களுக்குத் தகவலைக் கொண்டு சேர்க்கின்றன. ஒவ்வொரு கிளிப் போர்டின் புரோகிராமின் தனிச் சிறப்பைக் கண்டறிந்து தந்திருப்பது, இதற்கென கட்டுரை ஆசிரியர் எவ்வளவு நேரம் எடுத்து இதனை எழுதியுள்ளார் என்று தெரிகிறது. அவரின் இந்த அரிய முயற்சிக்கு கம்ப்யூட்டர் ஆசிரியர் என்ற முறையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
பேரா. டாக்டர் கா. ஜெயவேல், மதுரை.
செயலிகளுக்கிடையே டெக்ஸ்ட் மற்றும் படங்களை காப்பி செய்து ஒட்டுவதில் அவற்றின் பார்மட் தரும் பிரச்னைகள் எப்போதும் நேரம் எடுக்கும் செயல்பாடாகவே அமைந்து வந்தது. தங்கள் கட்டுரையில் தரப்பட்டுள்ள 'கிளிப் போர்ட் ப்யூஷன்' குறித்த தகவல்கள் எனக்குப் பெரும் உதவியாய் இருந்தன. உடனே, அதனைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டேன். ஆசிரியருக்கு நன்றி.
கே. எஸ். ராஜசேகரன், புதுச்சேரி.
“பத்தாயிரம் டேட்டா வரை நகலெடுத்து, தேக்கி வைத்துப் பயன்படுத்தலாம்” என்ற தகவலைப் படித்ததும் அதிர்ந்து போனேன். இப்படி ஒரு வசதியா! இதுவரை தெரியாமல் இருந்துவிட்டோமே என்ற எண்ணம் தான் ஏற்பட்டது. க்ளிப் போர்ட் மாஸ்டர் என்னும் அந்த செயலி, உண்மையிலேயே இந்த வகையில் பெரிய மாஸ்டர் தான். கம்ப்யூட்டர் மலர் தொடர்ந்து அரிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்கி வருகிறது என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
என். கலைவாணி, சென்னை.
விண்டோஸ் 10 இயக்க முறைமையினை, நூறு கோடி சாதனங்கள் பயன்படுத்தும் வரை மைக்ரோசாப்ட் ஓயாது. ஆண்டு தோறும், இதனைப் பயன்படுத்துபவர் எண்ணிக்கை தொடர்ந்து நிச்சயமாக உயரும் என்பதில் ஐயமில்லை. தற்போதைய வளர்ச்சி இதனையே காட்டுகிறது. நாமும் இதனைப் பயன்படுத்த முன்வர வேண்டும்.
இரா. தம்பிதுரை, திருநெல்வேலி.
சத்தம் எதுவுமின்றி நம் நாட்டில் புரட்சி ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றால், அது கூகுள் நிறுவனம், இந்திய ரெயில் டெல் நிறுவனத்தின் துணையுடன் அமைத்துத் தரும் இலவச வை பி சேவை தான். ஊட்டி ரயில் நிலையத்தில், தன் நூறாவது மையத்தினை அமைத்துள்ளது, அந்த பகுதி மலை வாழ் மக்களை, இணையத்திற்கு அறிமுகப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
எஸ். ராஜசேகர், கோவை.
நாம் அமைக்கும் ஆங்கில வாக்கியங்களில் நிறுத்தற் குறிகளைக் கூடத் திருத்தும் செயலி எனக்கு வியப்பினைத் தந்தது. அதனைச் சோதித்துப் பார்த்த போது, அதன் செயல்பாடு மிகவும் போற்றத்தக்கதாக இருந்தது. என் மாணவர்களிடம், நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து செயலிகள் குறித்தும் வகுப்பெடுத்தேன். மாணவர்கள் சார்பாக கட்டுரை ஆசிரியருக்கு நன்றி.
பா. கெளதமன், திருச்சி.
யாஹூ மெயில் திருட்டு பற்றி கூறி, தற்போதைக்கு என்ன பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவித்துள்ள தங்களுக்கு நன்றி.
கா. சோமசேகர், மதுரை.