கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2017
00:00

கேள்வி: புளுடூத் தொழில் நுட்பத்தில், நவீனப் பதிப்பாக புளுடூத் 5 வர இருப்பதாக முன்பு எழுதி இருந்தீர்கள். அது வந்துவிட்டதா? எந்த சாதனங்களில் இது கிடைக்கிறது? முன்பு வந்த தொழில் நுட்பத்துடன் இது இணைந்து செயலாற்றுமா?
டி.எம். ஜமாலுதீன், பெங்களூரு.
பதில்:
அனைத்து சாதனங்களையும் இணைக்கும் முயற்சியே Internet of Things என்பது. இதில் புளுடூத் தொழில் நுட்பம் பெரும் அளவிற்கு உதவி வருகிறது. வயர் இணைப்பு இல்லாமல், சாதனங்கள் ஒன்றுக்கொன்று இணைத்திட இந்த தொழில் நுட்பம் உதவி வருகிறது. இதன் ஐந்தாம் பதிப்பு சென்ற டிசம்பர் மாதம் வெளியானது. ஆனால், வர்த்தக ரீதியாக இன்னும் வரவில்லை. இதற்கென இயங்கும் Bluetooth Special Interest Group என்னும் அமைப்பு, புளுடூத் 5ன் வரையறைகளை ஏற்றுக் கொண்டு வெளியிட்டுள்ளது. இனி, இந்த வரையறைகளை, புளுடூத் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படும் சாதனங்களிலும், அவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் வழங்கத் தொடங்கிவிடுவார்கள். நான்கு மடங்கு அதிக அளவிலான தொலைவு இணைப்பு, இரண்டு மடங்கு கூடுதல் வேக செயல்பாடு, அதிக டேட்டா பரிமாற்றம், இதே போன்ற மற்ற தொழில் நுட்பங்களுடன் இணைந்த செயல்பாடு என இந்த புதிய பதிப்பு பல புதிய தொழில் நுட்ப வசதிகளைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2021 ஆம் ஆண்டில், உலக அளவில் ஆயிரம் கோடி பொருட்கள் இணைய இணைப்பில் இருக்க வேண்டும் என்ற இலக்குடன், டிஜிட்டல் உலகத்தினர் முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இதற்கு இந்த தொழில் நுட்பத்தின் வளர்ச்சி கை கொடுக்கும்.

கேள்வி: எட்ஜ் பிரவுசரை, விண்டோஸ் 10 சிஸ்டத்தில் பயன்படுத்துகிறேன். பி.டி.எப். பைல்களைத் திறந்து பயன்படுத்த, மிக எளிமையான Xchange PDF Xchange Viewer புரோகிராமினைப் பயன்படுத்துகிறேன். ஆனால், எப்போதும், எட்ஜ் பிரவுசரிலேயே பி.டி.எப். பைல்கள் திறக்கப்படுகின்றன. மேலே குறிப்பிட்ட புரோகிராமில் திறக்க, ஒவ்வொரு பைலிலும், ரைட் கிளிக் செய்து, இதனைத் தேர்ந்தெடுத்துத் திறக்க வேண்டியுள்ளது. நான் குரோம் பிரவுசரும் வைத்துள்ளேன். ஆனால், அதில் இது திறக்கப்படவில்லை. இதனை எப்படி மாற்றி எக்சேஞ்ச் வியூவரில் திறப்பது?
சி. முருகேசன், தேனி.

பதில்: புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் பிரவுசர் பயன்படுத்துகையில், இது போன்ற சின்ன சின்ன பிரச்னைகள் வருவது இயற்கையே. இதனைத் தீர்த்துவிடலாம். இப்போது வந்துள்ள பிரவுசர்களில், எட்ஜ் உட்பட, மிக எளிய அளவில், பி.டி.எப். ரீடர்கள் தரப்படுகின்றன. நாம் ஒரு பி.டி.எப். பைலைத் திறக்க முயற்சிக்கையில், பிரவுசர்கள் அதைத் திறக்கின்றன. இவற்றில், பி.டி.எப். குறித்த கூடுதல் வசதிகளை எதிர்பார்க்க முடியாது. எனவே, அதிக வசதிகள் கொண்ட பி.டி.எப். ரீடர் தேவை எனில், மாறா நிலையில் உள்ள இதனை மாற்றி, தர்ட் பார்ட்டி பி.டி.எப். ரீடர் புரோகிராமினை இயக்கலாம். அதற்கான வழிகள்:
பைல் எக்ஸ்புளோரரில், நீங்கள் திறக்க விரும்பும் பி.டி.எப். பைலைத் தேர்ந்தெடுக்கவும். அதில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், “Open with > Choose another app” என்பதைத் தேர்ந்தெடுத்து, அதில், நீங்கள் விரும்பும், ஏற்கனவே, இன்ஸ்டால் செய்யப்பட்ட தர்ட் பார்ட்டி, பி.டி.எப். ரீடர் புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். இதில் “Always use this app” என்பதனைத் தேர்ந்தெடுத்தால் தான், அதுவே நிலையான ஒன்றாக அமைக்கப்படும். இந்த மெனுவில், நீங்கள் விரும்பும் பி.டி.எப். ரீடர் புரோகிராம் காட்டப்படவில்லை என்றால், “More apps”, என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது “Look for another app in this PC” என்ற தொடர்பில் கிளிக் செய்து, நீங்கள் விரும்பும் பி.டி.எப்.ரீடர் புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து, அதனையே மாறா நிலை (Default) புரோகிராமாக அமைக்கவும்.
இன்னொரு வழியும் உள்ளது. கண்ட்ரோல் பேனல் திறக்கவும். அங்கு “Default Programs” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். தொடர்ந்து, “Associate a file type or protocol with a program” என்பதில் கிளிக் செய்திடவும். சிறிது நேரத்தில், பல பைல் வகைகள் காட்டப்படும். அந்தப் பட்டியலில் கீழாகச் சென்று, .PDF என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து, “Change program” என்ற பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். ஒரு பாப் அப் விண்டோ திறக்கப்பட்டு, நீங்கள் தேர்ந்தெடுக்க, அப்ளிகேஷன்கள் பட்டியல் ஒன்று தரப்படும். இந்த பட்டியலில், நீங்கள் விரும்பும் புரோகிராம் இல்லை என்றால், “More apps” என்பதில் கிளிக் செய்திடவும். இதிலும் இல்லை என்றால், see “Look for another app in this PC” என்பதில் கிளிக் செய்து, நீங்கள் விரும்பும் பி.டி.எப்.ரீடர் புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து, அதனையே மாறா நிலை (Default) புரோகிராமாக அமைக்கவும்.

கேள்வி: அண்மையில் ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றில் Deadlock என்ற சொல்லை கம்ப்யூட்டரின் செயல் இல்லா தன்மைக்குப் பயன்படுத்தி இருந்ததைப் படித்தேன். இதுவும், கம்ப்யூட்டர் 'க்ராஷ்' என்பதுவும் ஒரே தன்மை கொண்டதா? இல்லை எனில், இது எதனைக் குறிக்கிறது என்பதைத் துல்லியமாக விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
எஸ். கார்மேகம், புதுச்சேரி.

பதில்: கம்ப்யூட்டரில் ஒன்றுக்கு மேற்பட்ட செயலிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கையில், ஒரு செயலி, இன்னொன்று தன் பணியை முடிக்கட்டும் எனக் காத்திருக்கும். அதே போல, அந்த இன்னொரு செயலியும், இந்த செயலி முடிக்கட்டும் எனக் காத்திருக்கும். இரண்டின் செயற்பாட்டிற்கும் சிஸ்டத்தின் ஒரே திறன் தேவைப்படும். இரண்டும் தொடர்ந்து தங்கள் செயல்பாட்டில் முன்னேறாது. இது எப்படி உள்ளது என்றால், நான்கு சாலைகள் சந்திக்கும் நாற்சந்தியில், எதிர் எதிராக நான்கு திசைகளிலிருந்து வந்த கார்கள், ஒன்றுக்கு ஒன்று நேர் எதிராக நின்று கொண்டு உறுமும் நிலை தான். எந்தக் காரும் பின்புறமாகவோ முன்புறமாகவோ செல்ல முடியாத போது, ஒன்றுமே இயங்க முடியாது. இதைத் தான், கம்ப்யூட்டரில் Deadlock என்கின்றனர். இதனை Deadly Embrace என்றும் அழைப்பார்கள். கம்ப்யூட்டர் 'கிராஷ்' என்பது வேறு. அது சாப்ட்வேர் ஹார்ட்வேர் பிரச்னையால் ஏற்படும்.

கேள்வி: பேஸ்புக்கில் சிலரின் பதிவுகள் நல்ல வண்ணப் பின்னணியில் அமைக்கப்பட்டு கிடைக்கின்றன. நான் விண்டோஸ் 10 சிஸ்டத்தில் பேஸ்புக் பயன்படுத்தி வருகிறேன். இதன் செட்டிங்ஸ் அமைப்பில் தேடியும் இதற்கான வழிகள் தெரியவில்லை. உதவிக் குறிப்புகள் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
எஸ். கார்த்திகாயினி, சென்னை.

பதில்: உங்கள் கேள்வியிலிருந்து நீங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் பேஸ்புக் தளம் சார்ந்து கேட்கிறீர்கள் என்று தெரிகிறது. பேஸ்புக் மொபைல் போனில் பயன்படுத்தப்படும் பேஸ்புக் மெசஞ்சர் செயலியில் மட்டுமே இந்த வண்ண வசதியினை சோதனை முயற்சியில் மேற்கொண்டுள்ளது. மொபைல் போனில், பேஸ்புக் மெசஞ்சரைத் திறந்து, வழக்கம்போல உங்கள் அக்கவுண்ட் தளத்தில், ஸ்டேட்டஸ் தகவல் ஒன்றினை டைப் செய்திடத் தொடங்குங்கள். சொற்களை டைப் செய்தவுடன், கீழாகத் தேர்ந்தெடுக்க வண்ணங்கள் கொண்ட வரிசை தேர்ந்தெடுக்கப்படுவதற்குக் கிடைக்கும். இதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தால், அந்த வண்ணத்தில் உங்கள் நிலைத் தகவல் பின்னணி அமையும். இதன் மூலம், உங்கள் தகவல் மற்றவர்களின் தகவல்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டப்படும். எனவே, முக்கியமான, அனைவரின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட வேண்டிய தகவலாக இருந்தால் மட்டுமே, வண்ணச் சாயம் பூசுங்கள்.
இப்போதைக்கு, இந்த வண்ண வசதி, ஆண்ட்ராய்ட் போன்களில் மட்டுமே கிடைக்கிறது. ஆண்ட்ராய்ட் போன் வைத்திருப்பவர்கள், தங்கள் பேஸ்புக் மெசஞ்சர் செயலியை அப்டேட் செய்தால் மட்டுமே இந்த வசதி கிடைக்கும்.
பேஸ்புக் ஏற்கனவே, நம் ஸ்டேட்டஸ் தகவல் மிகக் குறைவான சொற்களில் (35 கேரக்டர்களுக்கும் குறைவாக) அமைக்கப்பட்டால், பெரிய அளவிலான எழுத்துகளில் தந்து வருகிறது. பெரிய எழுத்துகள் 24 பாய்ண்ட் அளவிலும், சிறிய வழக்கமான எழுத்துகள் 14 பாய்ண்ட் அளவிலும் உள்ளன. ட்விட்டருடன் போட்டியில் இது போன்ற புதுமைகளை பேஸ்புக் தந்து வருகிறது.
ஐபோன்களிலும், பெர்சனல் கம்ப்யூட்டரிலும் வண்ண வசதி கிடைக்க இன்னும் சில மாதங்களாகும். அதே போல, சில நாடுகளில் மட்டுமே இந்த வசதி தரப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இந்த வசதி தரப்படவில்லை.

கேள்வி: விண்டோஸ் 8 உடன் தரப்பட்ட டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் ஒன்று வாங்கி, பின்னர் அதனை விண்டோஸ் 10க்கு மேம்படுத்தினேன். இப்போது அந்த கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் கெட்டுவிட்டது. வேறு ஹார்ட் டிஸ்க் இணைத்தால், விண்டோஸ் 8 சிஸ்டம் தான் இணைக்க முடியுமா? விண் 10 சிஸ்டம் பைல்களை காப்பி செய்து இன்ஸ்டால் செய்தால், ப்ராடக்ட் கீ கேட்டால் என்ன செய்வது?
என். கோகுல் ராஜ், திருச்சி.

பதில்: நல்ல கேள்வி. விண்டோஸ் 10 சிஸ்டம் மட்டும், அதன் ப்ராடக்ட் கீயை புதிய வழியில் நினைவு கொள்கிறது. அந்த கீ சிஸ்டத்தில் பதிக்கப்படுகிறது. எனவே, உங்கள் மதர் போர்ட் பிரச்னை ஏற்பட்டு வீணாகிப் போனால் மட்டுமே, மீண்டும் பழைய உரிமத்தைப் பயன்படுத்தி விண் 10 அமைக்க முடியாது. எனவே, விண்டோஸ் 10 சிஸ்டத்தினை இன்ஸ்டால் செய்தால், அது ஏற்றுக் கொள்ளப்பட்டு இயங்கும். https://www.microsoft.com/en-us/software-download/windows10/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில், விண்டோஸ் 10 சிஸ்டம் பைல்களைப் பெறலாம். அங்கு இன்ஸ்டால் செய்வதற்கான வழிமுறைகள் தரப்பட்டிருக்கும். அவற்றைப் புரிந்து கொண்டு அதன்படி செயல்படவும். ஹார்ட் ட்ரைவினை இணைத்துத் தரும் டெக்னீஷியன் இதனைச் செயல்படுத்துவார்.

கேள்வி: அண்மையில், கருத்தரங்கு ஒன்றில் பேசிய ஒருவர், Narrow Band என்ற சொல்லை, பிராட்பேண்ட் குறித்து கருத்து தெரிவிக்கையில் பயன்படுத்தினார். Narrow Band என்பது கேலியாகக் குறிப்பிடப்படுகிறதா? அல்லது அதற்கும் ஒரு பொருள் உள்ளதா? அப்படியானால், அது எதனைக் குறிக்கிறது?
என். ஜீவகன், புதுச்சேரி.

பதில்: பிராட் பேண்ட் போலவே, Narrow Band என்பதுவும் தகவல் தொடர்புக்கான அலைக்கற்றை வரிசையைக் குறிக்கப் பயன்படுகிறது. அலைக்கற்றை வரிசை கிலோ ஹெர்ட்ஸ், மெகா ஹெர்ட்ஸ் அல்லது கிகா ஹெர்ட்ஸ் எனக் குறிப்பிடப்படுகிறது. தொலைபேசி வழியாக டயல் செய்து, இணைய இணைப்பு பெற்று டேட்டா பரிமாறிக் கொள்ளப்படுவது Narrow Band ஆகும். இந்த அலைக்கற்றை வரிசையில், நொடிக்கு 50 கிலோ பைட்ஸ் அளவிலேயே தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. இதற்கு மோடம் மற்றும் தொலைபேசி கேபிள்கள் பயன்படுத்தப்படுகின்றன. பிராட்பேண்ட் அலைக்கற்றை வரிசையில் டேட்டா பரிமாற்றம் நொடிக்கு 50 கிலோ பைட்ஸுக்கும் அதிகமாகப் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. எனவே, Narrow Band என்பது, குறைவான அகலக் கற்றை அலை வரிசை வழியாக டேட்டா அனுப்பப்படுவதாகும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krishnamoorthy narayanan - SRIRANGAM. TRICHY,இந்தியா
10-ஜன-201706:09:48 IST Report Abuse
krishnamoorthy narayanan கம்ப்யூட்டர் மலருக்கு ஒரு கேள்வி கேட்ட்க விரும்புகிறேன் கம்ப்யூட்டர் சட் டவுன் செய்வது நல்லதா அல்லது ஸ்லீப் மோடில் உபயோகிப்பது நல்லதா . தயவு செய்து உங்கள் கருத்துக்கள் குறைவும். நன்றி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X