மற்ற தெய்வங்களை சிலை வடிவிலோ, படங்களிலோ தான் பார்க்க முடியும். ஆனால் கண்ணால் காணும் ஒரே தெய்வம் சூரியன் மட்டுமே. இவரது பிள்ளைகளும் கடமை தவறாதவர்கள், ''சூரிய உதயத்தைக் காணாத ஒவ்வொரு நாளும் நம் வாழ்நாளில் வீண்நாளே!'' என்கிறார் காஞ்சி மகாபெரியவர்.
மகாபாரதத்தில் குந்திபோஜன் என்ற மன்னனின் பங்கு அதிகம். ஏனெனில், இவன் தான் பஞ்சபாண்டவர்களின் தாயான குந்தியைப் பெற்றெடுத்தவன். துர்வாச முனிவர், இவனது அரண்மனைக்கு வந்த போது, அவருக்கு பணிவிடை செய்ய தன் மகளை அனுப்பி வைத்தான். இளவரசி என்ற தோரணையை மறந்து, மிகுந்த பணிவுடன் சேவை செய்தாள் குந்தி.
மனம் மகிழ்ந்த துர்வாசர், ''குந்தி! நீ நினைத்த தேவர்களை வரவழைக்கும் மந்திரங்களைக் கற்றுத்தருகிறேன். இதைச் சொன்னால் அந்த தேவன் உன் முன் தோன்றுவான்,'' என்றார். அந்த மந்திரங்களைத் தெரிந்து கொண்டதும், அதை உடனே சோதித்து பார்த்துவிட குந்திக்கு ஆசை ஏற்பட்டது.
அப்போது அவளது கண்ணில் முதலில் பட்டது சூரியன் தான். அவரை பூமிக்கு வரவழைக்கும் மந்திரத்தை சொன்ன மாத்திரத்தில், அவர் பூமிக்கு வந்து விட்டார். குந்தியோடு இணைந்து ஒரு மகனைப் பெற்றார். அந்த மகன் மார்பில் கவசம், காதில் குண்டலங்களுடன் பிறந்தான்.காதை 'கர்ணம்' என்பர். அதனால் அந்தக் குழந்தைக்கு 'கர்ணன்' என பெயர் வந்தது.
கன்னியாக இருக்கும் போது குழந்தை பெற்றால் ஊர் உலகம் என்ன சொல்லும்! எனவே யாருக்கும் தெரியாமல், குழந்தையை ஒரு பெட்டியில் வைத்து நதியில் மிதக்கவிட்டாள். அந்தக்குழந்தை தான் துரியோதனனின் ஆதரவுடன் வளர்ச்சி பெற்றான். கடவுளான கிருஷ்ணருக்கே தன் புண்ணிய பலனை அளித்து அழியாப்புகழ் பெற்றான். நட்புக்காக உயிரையும் கொடுத்தான்.
சூரியபகவான் எப்படி காலையும் மாலையும் உதித்தும், மறைந்தும் தன் கடமையைச் சரியாகச் செய்கிறாரோ, அதே போல அவரது பிள்ளைகளான சனீஸ்வரரும், எமதர்மனும் தங்கள் கடமையைச் சரியாகச் செய்து விடுவார்கள்.
யாராக இருந்தாலும் அவரவர் செய்த செயல்களுக்கு ஏற்ப சோதனையை அள்ளிக்கொடுத்து அவர்களைச் சீர்திருத்துவார் சனீஸ்வரர். நல்லது செய்திருந்தால் அவர்களுக்கு சுகமான வாழ்வைத் தருவார். யாராக இருந்தாலும், நேரம் காலம் பாராமல், பிரம்மா வகுத்த விதிப்படி உயிர்களைப் பறித்துச் செல்லும் வேலையைச் சரியாகச் செய்து விடுவார் எமதர்மராஜா. சூரியனே உலக உயிர்களுக்கு உணவளிப்பவர். அவரது கதிர்கள் மூலமே தாவரங்கள் உணவைத் தயாரிக்கின்றன. அவை தரும் தானியங்கள், காய், கனிகள் உலகத்திலுள்ள அத்தனை உயிர்களுக்கும் உணவாகின்றன. இப்படி எல்லாரையும் வாழ வைக்கும் சூரியனுக்கு நன்றிக் கடனாக தை முதல் தேதியில் பொங்கலிடுகிறோம். இந்த நல்ல நாளில், வானத்துக் கடவுளான சூரிய பகவான், உலகத்திற்கு நன்மை தர மனதார பிரார்த்திப்போம்.
தி.செல்லப்பா