வரலொட்டி ரெங்கசாமி இதுவரை 29 தமிழ், 12ஆங்கில புத்தகங்கள் எழுதியுள்ளார். சிறுகதை, நாவல், தன்னம்பிக்கை, ஆன்மிகம் என்று இவரின் எழுத்து பரிமாணம் பலவிதமாக பரந்து பரவி இருக்கிறது. இவரது குறுநாவல்கள், ஒரு சர்வதேச தர குறும்படம் பார்த்த குதூகலத்தை தரும். அந்த அளவிற்கு படிக்கும் போது கதாபாத்திரங்களை, நம்முன் காட்சிப்படுத்துவார். இவரது கதைகளை முதலில் படிக்கும் போது, அந்த கதை மாந்தர்கள் நம் நண்பர்களாகி விடுவார்கள். மீண்டும் அதே கதையை படிக்கும் போது, பழைய நண்பர்களை பார்த்த பரவசம் கிடைக்கும்.
வாழ்க்கை கடலின் கரையோரத்தில் சேகரித்த தண்ணீர் துளிகளால், தீராத நதியாய் எழுத்து பிரவாகம் எடுப்பது இவரது தனித்துவம்.
வாழ்வியலின் வசந்தங்களும், வருத்தங்களும் வார்த்தைகளாய் வந்துவிழும் போது, இவரது எழுத்து வலைக்குள் வசமாகிறான் வாசகன்!
பகவத்கீதையின் குறிப்பிட்ட சுலோகங்களை, நிகழ்கால அனுபவம் என்ற பாலில் கதையாய் கலந்து, இவர் காபியாக தந்தபோது, ருசித்து மகிழ்ந்தது தமிழ், ஆங்கில வாசகர் உலகம். 'கண்ணா...நீ வருவாயா'(Krishna's Kiss) என்ற அந்த நூல்கள் இவர் பெயர் சொல்லும்.
இவரது எழுத்தின் சமீபத்திய சாதனை...கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது. ஏற்கனவே, இருவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து இருந்தாலும், வரலொட்டி ரெங்கசாமி எப்படி வேறுபடுகிறார்? கல்கி என்ற எழுத்தாளரையும், தமிழ் நாவல் உலகையும் உலக அளவில் உயர்த்தி செல்லும் இந்த பணி எப்படி சாத்தியமானது?
வரலொட்டியுடன் ஒரு நேர்காணல்...
* கல்கியின் எழுத்து மீது, இப்போது காதல் எப்படி வந்தது?
சமீபமாக தான் படித்தேன். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, புதுச்சேரிக்கு நண்பர்கள் சிலர் சேர்ந்து வேனில் சென்று கொண்டிருந்தோம். நண்பர்களுக்குள் வந்தியத்தேவன், ஆழ்வார்க்கடியான் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தார்கள். பிறகு என்னிடம் கேட்டார்கள். 'எழுத்தாளர், நீங்க சொல்லுங்கள்! ஆதித்த கரிகாலனை கொன்னது யாரு?' எனக்கு எதுவும் தெரியவில்லை.
'பொன்னியின் செல்வன் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்...தெரியாது என்கிறீர்களே! உங்களை எழுத்தாளர் என்று சொல்லிக்கொள்ள உங்களுக்கு வெட்கமாக இல்லையா' என்று ஆவேசமானார் நண்பர். நான் கூனி குறுகிப்போனேன். உடனடியாக 'பொன்னியின் செல்வன்' அனைத்து பாகங்களையும் வாங்கி, தேர்வுக்கு படித்தது போல படிக்க துவங்கி விட்டேன். அந்த அமரகாவியத்தை, 2400 பக்கங்களை, 29 நாட்களில் படித்து முடித்து விட்டேன்.
* ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டும் என்ற ஆசை ஏன் ஏற்பட்டது?
எந்த கதையும் என்னை இப்படி பாதித்தது இல்லை. எத்தனை திருப்பங்கள், எத்தனை கதாபாத்திரங்கள்! அவை சிந்திக்க, சிலிர்க்க, சிரிக்க, சீற வைக்கின்றன. சில நேரங்களில் அழவைக்கின்றன.
அந்த நேரத்தில் 'ஹாரிபாட்டர்' ஆங்கில நாவல்களில் மூழ்கி இருந்தது நமது இளைஞர் கூட்டம். 'இதுபோன்ற நாவல், தமிழில் எழுதிஇருக்கிறார்களா' என்று வம்பிற்கு இழுத்தாள் உறவினரான கல்லூரி மாணவி. 'பொன்னியின் செல்வன் படி' என்றேன். 'தமிழில் இருப்பதால், புரிந்து, உணர்ந்து படிக்க முடியவில்லையே' என்று அவள் வருந்தினாள். அப்போது தான் எனக்கு பொறிதட்டியது. நாம் ஏன் முயற்சிக்க கூடாது? மொழிபெயர்க்க துவங்கினேன். ஆறு ஆண்டு அயராத உழைப்பால், இப்போது புத்தகம் வெளியாகி விட்டது.
* ஏற்கனவே இருவர், ஆங்கில மொழிபெயர்ப்பு செய்து உள்ளார்களே?
அவர்களின் பணியை குறை கூறவில்லை. அவை வார்த்தை அளவில் சரியாக இருந்தது. கல்கியின் தமிழ் நாவல் படிக்கும் போது ஏற்படுமே ஒரு துள்ளல், அந்த உணர்வு ஆங்கிலத்தை படிக்கும் போதும் ஏற்பட வேண்டும் என்பதற்காகவே, நான் முயன்றேன். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறேன் என நினைக்கிறேன்.
'பொன்னியின் செல்வன் பைத்தியங்கள்' என்று நான் கூறும் நண்பர்கள் டாக்டர் மீனாட்சி சுந்தரம், ஆடிட்டர் விஜயன் ஆகியோர் தமிழ் பொன்னியின் செல்வனை ௭௦ தடவையாவது படித்து இருப்பார்கள். அவர்களிடம் ஆங்கிலத்தில் நான் எழுதியதையும் படிக்க சொன்னேன். படித்து விட்டு அற்புதமாக வந்திருக்கிறது; தமிழில் படித்த உணர்வு இருக்கிறது என்றார்கள்.
* ஆடிட்டர் பணியையும் பார்த்து, அந்த பிரம்மாண்ட நாவலை மொழி பெயர்ப்பது சவாலாக தெரியவில்லையா?
இது சவால் அல்ல; நாட்டுப்பற்று. கல்கி போன்ற 'கதைசொல்லிகள்' தமிழிலும் உண்டு, என்று உலகத்திற்கு சொல்ல வேண்டும். இளைய
தலைமுறை இந்த ஆங்கில புத்தகத்தை படித்து விட்டு, தமிழ் பொன்னியின் செல்வனை தேடி படிக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆறு ஆண்டுகள் வேறு எந்த வேலையும் பார்க்கவில்லை. நூறு புத்தகங்கள் எழுதியிருக்க வேண்டிய நேரத்தில், 5 பாகங்கள், 2400 பக்கங்கள் எழுதி முடித்து விட்டேன்.
கல்கி பயன்படுத்திய தமிழ்சொற்களின் உணர்வை குறைக்காத ஆங்கில சொற்களை தேடினேன்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜெயஸ்ரீ மணியல், ஆங்கில பேராசிரியர் எனது மாமனார் நரசிம்மன், ஆடிட்டர் யக்ஞ சுப்பிரமணியன் சிறு குறைகள் நீக்கி செம்மைப்படுத்தினர்.
பொழுதெல்லாம் எழுத்தோடு வாழ்ந்த போதும், எனக்கு கரிசனம் காட்டி, ஆர்வமூட்டிய மனைவி இந்து ஸ்ரீதர் நன்றிக்குரியவர்.
பிரபல ஆங்கில பதிப்பாளர்கள், இந்த புத்தகத்தை வெளியிட தயங்கியதும், நான் சோர்வடைந்த போது ஊக்கமளித்து, துணிச்சலாக வெளியிட்ட கவிதா பதிப்பகம் சேது சொக்கலிங்கம், இந்த சவாலான பணியின் சொந்தக்காரர்.
* ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் எழுதும் கலை எப்படி வசமாயிற்று?
கனமான இலக்கியம் எழுதும் போது, ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் விளக்குவது கடினம். எழுத்தாளர் சுஜாதாவுக்கு ஆங்கிலம் தெரியும்; ஆனால் தமிழில் எழுதினார். நான் எழுத்தாளர் அல்ல; கதை சொல்லி. எழுத்தாளர்கள், கதை சொல்லிகளாக தான் இருந்தாகணும். அம்மா சோறு போடும் போது சொன்ன தெய்வீக கதைகள், பத்து வயதிலேயே அத்தை படித்து காட்டிய கதைகள், தமிழ் ஆசிரியர்கள் தந்த மொழியறிவு, ஆடிட்டர் தொழிலில் நான் பெற்றுக் கொண்ட ஆங்கில எழுத்து புலமை, இரு மொழிகளிலும் ஆளுமை செலுத்த உதவுகிறது.
* யாருடைய எழுத்திற்கு நீங்கள் ரசிகர்?
எழுத்திற்கு சுஜாதா. கவிதைக்கு கண்ணதாசன்.
* விருதுகள் கிடைக்கவில்லை என்ற வருத்தம் உண்டா?
சுஜாதாவுக்கு ஒரு 'கலைமாமணி' விருது கூட கிடைக்கவில்லை. நல்ல புத்தகங்கள் வரவேற்கப்படும்; வாசிக்கப்படும். விற்கப்படும். அதுவே விருது.
* அடுத்து மொழி பெயர்க்க விரும்பும் காவியம்...?
பேராசை உள்ளது! பாரதியார் கவிதைகளுக்கு, ஆக்கபூர்வமான ஆங்கில மொழிபெயர்ப்பு இல்லை. அதனை செய்ய வேண்டும். ஓஷோவின் புத்தகங்களை ஏற்கனவே மொழி பெயர்த்துள்ளேன். ஆங்கில பொன்னியின் செல்வனை சென்னை புத்தக கண்காட்சி, கவிதா பதிப்பக அரங்கில் வாங்கலாம்!
வாழ்த்த 80568 24024
ஜி.வி.ரமேஷ் குமார்