எம்.ஆர். ராதா சுட்டது போதாதா என்ற எம்.ஜி.ஆர்., - மனம் திறந்த பாண்டு | பொங்கல் மலர் | Pongalmalar | tamil weekly supplements
எம்.ஆர். ராதா சுட்டது போதாதா என்ற எம்.ஜி.ஆர்., - மனம் திறந்த பாண்டு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 ஜன
2017
00:00

ஐநூறுக்கும் மேற்பட்ட சினிமாக்களில் நகைச்சுவை நடிப்பால் தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர். சிறந்த ஓவியரும் கூட. ஜவுளி வர்த்தகத்தில் உலகத்தை வலம் வந்து கொண்டிருப்பவர். அ.தி.மு.க.,வின் கொடி, சின்னத்தை உருவாக்கியதில் இவருக்கும் பங்குள்ளது. இவர் சிரிப்பு நடிகர் பாண்டு.

சமீபத்தில் மதுரை நகைச்சுவை மன்ற ஆண்டு விழாவில் பங்கேற்க வந்தவர், தினமலர் வாசகர்களுக்காக மனம் திறந்ததாவது...

* பாண்டு-உண்மையான பெயரா?
அப்பா ஜவுளி வியாபாரி. நாடு முழுவதும் சுற்றி வந்து கொண்டிருப்பார். அவர் தொழில் ரீதியாக பண்டரிபுரி சென்றிருந்தார். அப்போது நான் பிறந்த தகவலை அவரிடம் தெரிவித்து உள்ளனர். உடனே 'பாண்டுரங்கன்' என பெயர் வைக்கும்படி கூறி விட்டார். பிறகு சினிமாவிற்காக பாண்டு ஆனேன்.

* சகோதரர் 'இடிச்சபுளி' செல்வராஜூக்கு அந்த பெயர் வந்தது எப்படி?
டி.ராஜேந்தரின் வசந்த அழைப்புகள் படத்தில் அவர் நடித்தார். அப்போது புளியை பிடித்து வைத்தது போல அவரது கதாபாத்திரத்தில் இடிச்சபுளி மாதிரி நடித்திருந்தார். இதனால் அவருக்கு அந்த பெயர் ஏற்பட்டது.

* நீங்கள் சிறந்த ஓவியராமே?
படிக்கும் காலத்தில் நன்றாக ஓவியங்கள் வரைவேன். சென்னை ஓவியக்கல்லூரியிலும் சேர்ந்து படித்துள்ளேன்.

* பின் எப்படி சினிமாவிற்கு வந்தீர்கள்?
எம்.ஜி.ஆர்., நடித்த பல்வேறு படங்களில் இணை இயக்குனராக, என் அண்ணன் பணிபுரிந்தார். அண்ணன் மூலம் தான் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தது.
1967 ல் எம்.ஜி.ஆர்., சிவாஜி தமிழகத்தில் பெரிய ஹீரோக்களாக திகழ்ந்தனர். எம்.ஜி.ஆரை சந்தோஷப்படுத்த எண்ணி, நூறு சிவாஜி படங்களை பிலிம் நியூஸ் ஆனந்தனிடம் பெற்று, அதை எம்.ஜி.ஆர்., போல ஓவியமாக்கினேன். அந்த ஓவியம் ஒரு பத்திரிகையில் வெளியானது. அதை பார்த்த எம்.ஜி.ஆர்., என்னை அழைத்து வரக்கூறியதாக அண்ணன் தெரிவித்தார்.
எம்.ஜி.ஆர்., என்ன பரிசளிக்க போகிறாரோ என்ற சந்தோஷத்துடன் நானும் சென்றேன். முதலில் சாப்பிட்டு விட்டு வந்து பார் என்றார். அதன்படி அவரது வீட்டில் சாப்பிட்டு விட்டு சந்தித்தேன்.
ஓவியத்தை குறிப்பிட்டவர், என்னை சந்தோஷப்படுத்த எண்ணி நீ வரைந்த இந்த ஓவியம், சிவாஜியை சங்கடப்பட வைத்திருக்கும் தெரியுமா? அவரது இடத்திலிருந்து யோசித்தாயா? என என்னை கண்டித்து அனுப்பினார். பரிசை எதிர்பார்த்திருந்த நான் ஏமாற்றத்துடன் திரும்பினேன்.

* பிறகு எப்படி அவருடன் நெருக்கம் ஏற்பட்டது?
எம்.ஜி.ஆர்., சங்கடத்தை தீர்க்க சில நாட்கள் யோசித்தபடி இருந்தேன். அவருடன் நடித்த கதாநாயகிகளுடன், அவர் இருப்பது போன்ற போட்டோக்களை பெற்று, அதில் அவரது முகம் ஏற்படுவது போல ஓவியத்தை உருவாக்கி அவரது பார்வைக்கு அனுப்பினேன்.
'எங்கள் தங்கம்' படப்பிடிப்பில் இருந்த எம்.ஜி.ஆர்., இதற்காக என்னை அழைத்தார். நானும் தயங்கியபடி சென்றேன். ஓவியத்தை பார்த்து பாராட்டி, ஐந்து பவுன் செயின் பரிசளித்த போது தான் எனக்கு உயிரே வந்தது.

* மறக்க முடியாத அனுபவம் உண்டா?
எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.,வை தோற்றுவித்த காலகட்டம். அப்போது கட்சி கொடியை வரைய உத்தரவிட்டார். கருப்பு, சிவப்பில் கொடி வரைந்து காட்டினேன். அவருக்கு திருப்தி இல்லை. பின் அண்ணாசாலையில், அண்ணாத்துரை கையை காட்டியபடி நிற்பதை மனதில் வைத்து, கொடி ஓரத்தில் அண்ணாத்துரை கையை காட்டியபடி நிற்பதாக வரைந்து காட்டினேன். நன்றாக இருப்பதாக கூறியவர், கொடி காற்றில் பறக்கும் போது அண்ணாத்துரையின் கை மட்டும்
அசையுமே? என்றார். பின் அண்ணாத்துரையும், கையும் இருப்பது போல குறைத்து காட்டினேன். அதில் அவரது கை, சுடுவது போல இருந்ததை சுட்டிகாட்டிய எம்.ஜி.ஆர்., ''எம்.ஆர்.ராதா என்னை சுட்டது போதாதா,'' என்றார். பின் கையை சற்று உயர்த்தி காட்டி வரைந்த கொடியை ஓ.கே. என்றார். சின்னத்திற்கு இரு தாமரை இலைகள் இருப்பது போல தேர்வு செய்தார். அதிலும் என் பங்களிப்பு இருந்தது. பின் அதில் தற்போது இருப்பது போல மாற்றமும் செய்யப்பட்டது.
இதற்காக எம்.ஜி.ஆர்., எனக்கு எதுவும் தரவில்லையே என எண்ணினேன். தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரான எம்.ஜி.ஆர்., எல்லாரையும் அழைத்து விருந்து வைத்தார். என்னையும் அழைத்து ஐந்து பவுன் செயினும், அப்போதே ஒரு லட்சம் ரூபாயும் கொடுத்தார். இதை என் வாழ் நாளில் மறக்க முடியாது.

* எத்தனை படங்களில் நடித்துள்ளீர்கள்?
576

* பிடித்த நகைச்சுவை நடிகர்?
ஏ.கருணாநிதி

* நகைச்சுவை நடிகைகளுக்கு பஞ்சம் உள்ளதே?
உண்மை தான். மனோரமா, கோவை சரளா போல நகைச்சுவை நடிகைகள் வருவது குறைவதாக தான் இருக்கிறது.

* இன்றைய சினிமாக்களில் நகைச்சுவை எப்படி?
முன்பு ஒரு நடிகர் நடித்ததை இன்று பத்து பேர் செய்கின்றனர். நகைச்சுவை நடிகர் என்பவர், தான் சிரிக்காமல் மற்றவர்களை தான் சிரிக்க வைக்க வேண்டும். ஆனால் இன்றைய நகைச்சுவை நடிகர்கள், சிலர் நகைச்சுவை எனக்கூறி அவர்களே சிரித்து கொள்ளும் நிலைதான் உள்ளது.

எம்.ரமேஷ்பாபு

Advertisement

 

மேலும் பொங்கல் மலர் செய்திகள்:We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X