பூமி மேல் போர் தொடுக்காதே - கவிப்பேரரசு வைரமுத்து
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜன
2017
00:00

முதல் இரண்டு உலகப் போர்கள் முடிந்து விட்டது என்று சரித்திரம் அறிவித்து விட்டது. ஆனால், மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது என்பதை அது அறிவிக்கவேயில்லை. அது கண்ணுக்குத் தெரியாத யுத்தம்; கை குலுக்கி கொண்டே நடக்கும் யுத்தம்; கொல்கிறவன் கொல்கிறான் என்றும் சாகிறவன் சாகிறான் என்றும் அறிந்து கொள்ள அவகாசம் தராத யுத்தம். இது மனிதனுக்கும் மனிதனுக்கும் மட்டுமல்ல மனிதனுக்கும் இயற்கைக்குமான போர்; மண்ணுக்கும் விண்ணுக்குமான போர்; மூன்றாம் உலக நாடுகளுக்கும் முன்னேறும் நாடுகளுக்குமிடையே நிகழும் முடிவு தெரியாத போர்.
இந்த போரை இப்போதே நிறுத்த முயன்றால் மானுடம் மிஞ்சலாம். இல்லையேல் பூமி, தன் படைக்கப்பட்ட நோக்கத்திலிருந்து விட்டு விலகி வெகுதூரம் போய்விடலாம்.
முதலில் இந்த பூமி மனிதர்களுக்காக படைக்கப்பட்டதல்ல என்பதை மனிதர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அறியப்பட்ட இருபது லட்சம் உயிரினங்களில் ஒரு ஜீவராசி தான் மனிதன். பூமிக்கு சாற்றொப்ப கடைசியாய் பேரினம் மனித இனம் தான். பறவைகளும் விலங்குகளும் புழுக்களும் பூச்சிகளும் மீன்களும் நுண்ணுயிர்களும் இந்த பூமியின் பங்குதாரர்களாய் இருந்தவரை எந்த மாறுதலும் இல்லை இயற்கையில்.

இயற்கைக்கு எதிராக
காடுகள் அழித்து கூடுகள் கட்டியதில்லை பறவைகள். தங்கள் வழித்தடங்களுக்காக இயற்கையின் கோடுகளை தாண்டியதில்லை விலங்கினங்கள். தம் கழிவுகளில் வெளிப்படும் மீத்தேன் வாயு தவிர இயற்கைக்குப் பெரிதாக துரோகம் செய்யவில்லை விலங்குகள். சொல்லப் போனால் பறவைகளின் எச்சங்கள் காடுகளை வளர்த்தன.
இயற்கையின் விதிகள் தடுமாறும் போதெல்லாம் நுண்ணுயிர்கள் சமன் செய்தன. பூச்சிகளின் மகரந்த சேர்க்கையால் தாவரக் கூட்டம் தழைத்தது. மனிதன் வினைப்படும் வரைக்கும் இயற்கைக்கு எதிராய் பூமி துளைக்கப்பட்டதில்லை; வானம் கிழிக்கப்பட்டதில்லை.
கடைசிப் பேருயிராய் வந்து சேர்ந்தான் மனிதன். அதன் பிறகு தான் பூமியின் சரித்திரம் மனிதனுக்கு முன் மனிதனுக்கு பின் என்று பிளவு கொண்டது. பூமிக்கு வந்து போன உயிர்களிலும், வந்து வாழும் உயிர்களிலும் வல்லமையும் வஞ்சகமும் உள்ள உயிர் மனிதன் தான். பூமியை மனிதன் தான் செதுக்கினான் என்பது எத்துணை பெரிய உண்மையோ, அத்துணை பெரிய உண்மை அவன் தான் சிதைத்தான் என்பதும். மனிதன் மாறுதலை உண்டாக்கினான்; அதற்கு நாகரிகம் என்று பெயர்சூட்டிக் கொண்டான். நாகரிகம் தான் மனிதனின் வளர்ச்சி; ஆனால், பூமிக்கு பின்னடைவு.

மண்ணில் கிடந்த இரும்பு
மண்ணில் பிறந்த ஒன்று அது அதுவாக இருந்தவரை பூமி பழுதுறவில்லை. ஒன்று இன்னொன்றாக மாற்றப்படும் சம்பவங்கள் நிகழ்ந்த போதெல்லாம் மனிதன் எழுந்தான்; பூமி விழுந்தது. மண்ணில் கிடந்த இரும்பு இரும்பாக இருந்தவரையில் சம்பவம் ஏதுமில்லை; அது ஆயுதமாக மாற்றப்பட்ட பிறகு என்ன நேர்ந்தது என்பதற்கு சாட்சிகள் தேவையில்லை. ஆயுதம் கண்டறிந்த பிறகு பூமியின் பூர்வகுடிகளான விலங்குகளையும், பறவைகளையும் மனிதன் வேட்டையாடி வெளியேற்றினான்.
உணவே தொழில்; தொழிலே உணவு என்றானது வேட்டை. புற்றுக்குள் கைவிட்டு ஈசல் அள்ளித்தின்னும் கரடியைப் போல இயற்கைக்குள் கைவிட்டு உள்ளதை உண்டு வந்தான் மனிதன். போகப் போக உணவு அரிதானது; அல்லது அற்றுப் போனது. வேட்டையில் ஈடுபட்ட மனிதனும் வேட்டையாடப்பட்ட போது அவன் சோர்வுற்றான்.
வேட்டையில் அவன் கண்ட சோர்வும், தோல்வியும் விவசாயத்தில் முடிந்தது. தான் தேடிச் செல்லும் உணவு தன்னை தேடி வரலாகாதா என்ற கேள்வியில் விழுந்தது விவசாயத்திற்கான வித்து. விவசாயத்தின் உபரி உற்பத்தி வணிகத்தில் போய் முடிந்தது. வணிகம் அரசியலை ஈன்றது. அரசியல் தன் இருப்புக்கு தனியுடைமைகளையும் மதங்களையும் கல்வியையும் கலைகளையும் வருணங்களையும் வர்க்கங்களையும் உற்பத்தி செய்து உடனிருத்தி கொண்டது.

விவசாய கலாசாரம்
வானியலும் புவியியலும் வகுத்து கொடுத்த வசதிக்கேற்ப உலகின் வெவ்வேறு பாகங்களில் விவசாயம் தொடர்ந்தது. விவசாயக் கலாசாரம் மட்டும் விளங்கிய வரை மண்ணை மட்டுமே மனிதன் கூறு செய்தானன்றி வானம் வகிரப்படவில்லை. இங்கிலாந்தில் என்று தொழில் புரட்சி தோன்றியதோ அன்று விழுந்தது வானத்தில் வடு.
பிரத்யேக ஏற்பாடுகள் செய்து கொண்டதன் மூலமாக இந்தப் பிரபஞ்சத்தின் சிறந்த கோள்களுள் ஒன்று பூமி என்று சொல்லலாம். பூமியின் சிறப்புக் காப்புறுதிகளுள் ஒன்று இயற்கை உச்சத்தில் கட்டிக் கொடுத்திருக்கும் ஓசோன் கூரை. காற்று மண்டலத்துக்கு மொத்தம் மூன்றடுக்கு. பூமிக்கு மேலே பனிரெண்டு கிலோ மீட்டர் உயரம் வரை உள்ளது முதல் அடுக்கு. இதில் தான் இருக்கிறது பூமிக்கான காற்றின் தொண்ணூறு விழுக்காடு.
முதல் அடுக்கின் முடிவில் தொடங்கி ஐம்பது கிலோ மீட்டர் உயரம் வரை இருப்பது இரண்டாம் அடுக்கு; இதில் ஓரளவு தான் இருக்கும் உயிர்காற்று.
அறுபது கிலோ மீட்டருக்குமேல் இருப்பது மூன்றாம் அடுக்கு; அது காற்றற்ற வெற்றடுக்கு. ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்துக்கு மேலிருப்பது வெட்டவெளி ஒளியும் ஒலியுமற்ற பால்வெளி. விண்கலங்களும் செயற்கைகோள்களும் விடப்படுவது அங்கே தான்.

ஓசோன் கூரை
இந்த நான்கடுக்குகளிலும் பூமிக்கு முக்கியமானது, பத்து முதல் நாற்பது கிலோ மீட்டர் உயரம் வரை அமைந்திருக்கும் ஓசோன் கூரை தான். குறைந்த காற்றழுத்த மண்டலத்துக்கும் அதிக அழுத்த மண்டலத்துக்கும் இடையில் காணப்படும் மெல்லிய உறை அது; மூன்று ஆக்ஸிஜன் அணுக்களால் ஆனது; பூமியை உருகவிடும் கருகவிடும் புற ஊதாக் கதிர்களை வடிகட்டி வடிகட்டிப் பூமிக்குச் சாந்தப்படுத்தி அனுப்பி வைக்கும் சக்திமிக்கது. இத்தனை யுகங்களாய் இந்த பூமியின் மீது வெயிலின் கூரான வேல்வந்து நேராகப் பாயாமல் தடுத்துத் காத்த தாயகக்கூரை அது தான்.
அந்தக் கூரையைத்தான் இன்று கிழித்தெறிந்துவிட்டான் இந்த நூற்றாண்டுத் தொழிற்புரட்சி மனிதன். இருபத்து ஒன்பது மில்லியன் சதுர கிலோ மீட்டருக்குக் கிழிந்து கிடக்கிறது ஓசோன் கூரை. பூமிக்கெதிரான புற ஊதாக் கதிர்களின் படையெடுப்பு எளிதாகிவிட்டது. கிழிந்த கூரையைத் தைப்பதற்கு மாறாய் இன்னும் கிழிக்கவே எத்தனிக்கிறோம்.
ஆண்டுக்கு இருநூறு மில்லியன் டன் கார்பன் மோனாக்சைடும், ஐம்பது மில்லியன் டன் ஹைட்ரோ கார்பனும், நூற்று ஐம்பது மில்லியன் டன் சல்பர் டை ஆக்சைடும், நூற்றுத் தொண்ணுாறு மில்லியன் டன் சாம்பலும் காற்றில் கலந்து உடைந்த கூரையை மேலும் மேலும் உடைக்கின்றன.
மனிதன் கவலைப்படுகிறானோ இல்லையோ இந்த மாபெரும் ஆபத்தையெண்ணி மலைச் சிகரங்கள் மட்டும் தனித்தனியே அழுது கொண்டிருக்கின்றன. கூடிக் கொண்டே போகிறது புவிவெப்பம். ஒரு டிகிரி வெப்பம் கூடியதற்கே மென்சிறகு கொண்டே சில பறவை இனங்களும் கம்பளித் தோல் கொண்ட சில விலங்கினங்களும் பூமியை விட்டே போய்விட்டன.

அழியும் உயிரினம்
புவி வெப்பத்தால் ஒரு மணி நேரத்திற்கு ஓர் உயிரினம் அழிந்து கொண்டேயிருக்கிறது. இன்னும் மூன்றே மூன்று டிகிரி வெப்பம் கூடினால் போதும்; உலகின் முப்பத்து மூன்று விழுக்காடு விலங்கினங்கள் அழிந்து போகும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதை நம்பித் தீர்வதற்கான திட ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
ஆர்கன்சாஸ் மாநிலத்தில் தலைக்குமேல் பறந்த ஐயாயிரம் பறவைகள் பொத்தென்று தரையில் விழுந்து செத்தொழிந்த காட்சியை இப்போதும் நீங்கள் பார்க்கலாம் இணையத்தில். பருவங்களை ஏமாற்றி திடீரென்று வெப்பம் கூடிப் போன ரஷ்யாவில் சூடு தாங்காமல் நீராடப் போன பலர் நீர் நிலைகளிலேயே செத்து மிதந்ததை உலகறியும். சரிந்து கிடந்த பருத்திப் பொதிகளைப் போல் விஸ்கான்சின் நகரத்தில் ஒரே நேரத்தில் இறந்து கிடந்தன சில நூறு பசுக்கள்.
கடந்த நூறாண்டுகளில் 160 கோடியிலிருந்து 640 கோடிக்குத் தாவியிருக்கிறது உலக மக்கள் தொகை. ஆனால், அதே காலப்பகுதியில் மனிதகுலம் இழந்திருக்கிறது உலகச் சதுப்பு நிலக்காடுகளில் பாதியை.

அழிவும், இழப்பும்
இழப்பு என்பது பூமிக்கொன்றும் புதியதல்ல; அழிவு என்பது மனிதகுலத்துக்கு அதிசயமும் அல்ல; ஆனால், அழிவுகளையும் இழப்புகளையும் சமன் செய்து கொள்ளும் சக்தி இதுவரை இருந்தது மண்ணுக்கும் விண்ணுக்கும். இப்போது இரண்டுமே தங்கள் சக்திகளை இழந்து வருகின்றன.
துருவங்கள் உருகுகின்றன; பருவங்கள் மாறுகின்றன. காலம்காலமாய் விவசாயிகள் கொண்டிருந்த மரபுசார் அறிவை மறுதலிக்கிறது இயற்கை. விவசாயத்தையே பெரிதும் நம்பி வாழும் மூன்றாம் உலக நாடுகள் தங்கள் நிலங்களில் வேளாண் குடி மக்களே மடிந்து மக்கி உரமாவதைத் தடுக்க முடியவில்லை.
அவர்களின் வானம் இடம் மாற்றி வைக்கப்பட்டுவிட்டது, மண்ணை ரசாயனம் தின்றுவிட்டது, நீர்நிலைகளைக் குடித்துவிட்டன சாயக் கழிவுகள்.
புவி வெப்பமாதல் உலகமயமாதல் என்ற இரண்டு பூதங்களால் ஒரு விவசாயி ஒரே நேரத்தில் விழுங்கப் படுகிறான். அவன் வானிலையை, வளர்ந்த நாடுகள் தீர்மானிக்கின்றன. அவன் உற்பத்திப் பொருளின் விலையைப் பங்குச் சந்தைகளும், தங்கச்சந்தைகளும் தீர்மானிக்கின்றன. இந்தியா போன்றே வளரும் நாடுகளில் ஒரு வேளாண்குடி மகனின் மதிப்பு ஓர் இறைச்சி ஆட்டின் மதிப்பைவிடக் குறைவாகவோ சற்று அதிகமாகவோ இருக்கிறது.
ஓர் ஆய்வறிக்கை சொல்லும் தகவலின்படி 1997 முதல் 2011 வரை இந்தியாவில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை மட்டும் 2,14,500 பேர். ஒவ்வொரு பனிரெண்டு மணி நேரத்திற்கும் ஒரு விவசாயி இந்தியாவில் தற்கொலை செய்து கொள்கிறான்.

உலகச்சங்கிலியின் கண்ணி
இந்திய ஐதீகப்படி இவர்களனைவரும் விதிவந்து செத்தவர்கள் என்று விலக்கி விட முடியாது. ஒரு மனிதனைத் தற்கொலைக்குத் தள்ளுவதும் பாதி கொலைதான். இனியேனும் மூன்றாம் உலக நாடுகளின் வானத்தில் வைத்த வாளையும் கழுத்தில் வைத்த கத்தியையும் வளர்ந்த நாடுகள் அகற்றிவிட வேண்டும். ஒவ்வொரு மனிதனும் உலகச் சங்கிலியில் ஒரு கண்ணி என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.
செவ்வாய் கிரகத்தில் மனிதனைக் குடியேற்றும் முயற்சி நடப்பதாய் செய்தி வருகிறது. செவ்வாய் கிரகம் என்பது தொண்ணூற்றேழு விழுக்காடு கரியமில வாயு கொண்ட வளி மண்டலத்தால் சூழப்பட்டிருப்பது. பூமி என்பது 0.03 விழுக்காடு கொண்ட கரியமில வாயுவும் எழுபத்தொன்பது விழுக்காடு நைட்ரஜனும் இருபத்தொரு விழுக்காடு பிராண வாயுவும் கொண்ட வளிமண்டலத்தால் சூழப் பட்டிருப்பது.
எதை விட்டுவிட்டு எதில் குடியேறுவது? இருக்கும் ரோஜாவை எரித்துவிட்டா நீங்கள் முள்ளை முகர்ந்து பார்க்கப் போகிறீர்கள்? முதலில் நாமிருக்கும் பூமியை நாம் காப்போம். வானத்தைக் கிழிக்காத, காற்றைத் தொலைக்காத, பூமியை எரிக்காத வாழ்க்கை முறைக்கு மனிதகுலத்தை மாற்றிப் பார்ப்போம். வளர்ந்த நாடுகளுக்கு என் கட்டுரை சலிப்பைத் தரலாம்.
கட்டுரையை வாசிக்கும் பொழுது சிலர் கையில் கிடைத்த கண்ணாடி கோப்பையை என் மீது வீசலாம்; அதையே என் கட்டுரைக்கான வெற்றிக் கோப்பை என்று வீட்டுக்கு எடுத்துச் செல்கிறேன்.

Advertisement

 

மேலும் பொங்கல் மலர் செய்திகள்:வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X