ஐபோன் - பத்தாண்டு பயணம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2017
00:00

சரியாகப் பத்து ஆண்டுகளுக்கு முன்னால், ஜனவரி 9, 2007 அன்று, முதல் ஐபோன், ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களால், சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற “மேக்வேர்ல்ட் கருத்தரங்கில்” அறிமுகப்படுத்தப்பட்டது. இதனுடன் இணைந்து “ஆப்பிள் உலகம்” பிறந்தது. இதைக் கடவுளாகவே மதித்த பயனாளர்களில் சிலர், ஐபோனை "Jesus Phone" எனவும் அழைத்தனர். மொபைல் போன் உலகில், புதிய தொழில் நுட்பத்தினை, ஆப்பிள்' ஐபோன் மூலம் அறிமுகப்படுத்தியது. தனக்கென்று ஒரு தனி உலகம், இயக்க முறைமை, சாதன வடிவமைப்பு என ''ஆப்பிள் அப்ளிகேஷன் இயங்கு உலகம்'' ஒன்றை ஆப்பிள் நிர்மாணித்தது.
தொடர்ந்து இந்த பத்தாண்டுகளில், ஆண்டு தோறும் ஏதேனும் ஒரு புதுமையை ஐபோன்கள் கொள்ளத் தொடங்கின. மொபைல் போன் உலகில், பிறரால் அடைய முடியாத இடத்தைப் பிடித்துவிட்டோம் என, ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு நாளும் எண்ணி, ஓய்வெடுத்ததில்லை. தொடர்ந்து பல மாற்றங்களுடன், ஐபோனை வடிவமைத்து வழங்கிக் கொண்டே இருந்தார். இதற்கென உலகெங்கும் பல்லாயிரக்கணக்கான டெவலப்பர்கள் இயங்கத் தொடங்கினர். இவர்கள் ஆப்பிள் நிறுவனம் தந்த வழிகாட்டுதலின்படி இயங்கி, லாபமும் பார்க்கத் தொடங்கினர்.
தொடர்ந்து ஐபோன் பல மாற்றங்களை இந்த பத்தாண்டு காலத்தில் மேற்கொண்டது. பல வண்ணங்களைப் பூசிக் கொண்டது. திறனைக் கூட்டிக் கொண்டது. இன்று தொழில் நுட்ப ரீதியாக தனிக்காட்டு ராஜாவாகத் திகழ்கிறது. ஐபோன் வடிவமைப்பிலும், செயல்பாட்டிலும் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களை இங்கு பார்க்கலாம்.

ஐபோன்
முதல் முதலில், 4 ஜி.பி. மற்றும் 5 ஜி.பி. தேக்க அளவில், 2007ல் ஸ்டீவ் ஜாப்ஸ் ஐபோன்களை அறிமுகம் செய்தபோது, “நாம் அனைவரும் இணைந்து ஒரு புதிய சரித்திரத்தை, சகாப்தத்தினை உருவாக்க இருக்கிறோம்” என்று நம்பிக்கையுடன் குறிப்பிட்டார். 4000 பேர் அடங்கிய அந்த கருத்தரங்கில், கடந்த இரண்டரை ஆண்டுகளாக, இத்தருணத்திற்காகக் காத்திருந்தேன். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் வரக்கூடிய மொபைல் போன் மாடலை, ஆப்பிள் இன்று உங்களுக்குத் தருகிறது என்றார் ஸ்டீவ் ஜாப்ஸ். பத்து ஆண்டுகள் கழித்து அது நிரூபிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகைகளிலும் ஐபோன் ஒரு முன்னோடியாகவே இருந்து வருகிறது.
ஆப்பிள் போன்களுக்கென தனியே ஒரு சகாப்தம் உண்மையாகவே அன்று தொடங்கியது. ஐபோனுக்கான ரசிகர்கள் ஒரு புதிய சந்ததியாகவே உருவெடுத்தனர். முதல் ஆளாக ஐபோனைப் பெற்றுவிட வேண்டும் என வெறியுடன் சபதம் எடுத்தனர். வெளியான பின்னர், அப்போது மக்களிடையே இடம் பெற்றிருந்த இசை சாதனமான ஐபாட் பயன்பாடு குறைந்தது. ஐபோனிலேயே மக்கள் பாடல்களைத் தேக்கி அதே இசையைக் கேட்டு மகிழ்ந்தனர்.

ஐபோன் 3ஜி
2008 ஆம் ஆண்டு, ஜூன் 9ல் ஐபோன் 3ஜி வெளியானது. 8 ஜி.பி. மாடல் 199 டாலருக்கும், 16 ஜி.பி. மாடல், 299 டாலருக்கும் விலையிட்டு விற்பனை செய்யப்பட்டது. இதில் இயங்கிய ஐ.ஓ.எஸ். 2.0. அப்போது புதிய ஒரு இயங்கு உலகமாகப் பேசப்பட்டது. ஆப் ஸ்டோர், மொபைல் மி, புஷ் இமெயில் வசதிகள் முதன் முதலாக அறிமுகமாகி உலகெங்கும் ஆர்வத்துடன் பயன்படுத்தப்பட்டன.

ஐபோன் 3ஜி எஸ்
2009 ஆம் ஆண்டில், ஜூன் 8 அன்று, ஆப்பிள் தன் ஐபோன் 3ஜி எஸ் என்ற மாடலை வெளியிட்டது. 16 ஜி.பி. மற்றும் 32 ஜி.பி. என கொள்ளளவு உயர்ந்தன. திசை காட்டும் கருவி இணைக்கப்பட்டது. இதன் கேமரா திறன் உயர்த்தப்பட்டதாக இருந்தது. இதன் மூலம் தரமான விடியோ பதிவு கிடைத்தது. இதனால், அதுவரை பிரபலமாக இருந்த வீடியோ பதிவு சாதனமான கேம் கார்டர் சாதனம் மறையத் தொடங்கியது. ஐ.ஓ.எஸ். 3 சிஸ்டத்தில், காப்பி அண்ட் பேஸ்ட் வசதி தரப்பட்டது.

ஐபோன் 4
ஜூன் 7, 2010 அன்று வெளியான ஐபோன் 4 மாடல், பலரால் இன்றும் விமர்சிக்கப்படும் ஒரு போன் மாடலாகும். மூன்று மாடல்கள் (16 ஜி.பி (199 டாலர்), 32 ஜி.பி. (299) மற்றும் 64 ஜி.பி. (399) வெளியாகின.

ஐபோன் 4 எஸ்
ஐபோன் 4 எஸ் மாடல் போனில் பெர்சனல் அசிஸ்டண்ட் இணைக்கப்பட்டு, 2011 அக்டோபர் 14 அன்று அறிமுகமானது. ஐ க்ளவ்ட் சேவை வழங்கப்பட்டது. நிறைய தொழில் நுட்ப முன்னேற்றங்கள் இணைக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அறிமுகமாவதற்கு சில நாட்கள் முன்னால், ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மரணமுற்றார்.

ஐபோன் 5
செப்டம்பர் 12, 2012ல் ஐபோன் 5 குறித்து அறிவிப்பு வெளியானது. செப்டம்பர் 21, 2012ல் அறிமுகமானது. இத்துடன் ஐ.ஓ.எஸ். இயக்கம் 6 இணைந்து தரப்பட்டது. சிற்சில குறைகள் சொல்லப்பட்டாலும், பயனாளர்கள் இதனைப் பிரியத்துடன் கொண்டாடினர். முந்தைய போன்களைக் காட்டிலும் தடிமன் குறைவாகவும், உயரமாகவும் வடிவமைப்பில் இருந்தது. புதியதாக, போனின் பின்புறம் உலோகக் கவசம் தரப்பட்டது. முதன் முதலில், போன் சார்ஜ் செய்வதற்கு Lightning போர்ட் அறிமுகமானது. சிம் அளவில், புதியதாக "nanoSIM" என்ற வடிவமைப்பு இந்த போனுடன் தரப்பட்டது. மேலாக இருந்த 3.5 மிமீ ஆடியோ ஜாக், கீழாகத் தரப்பட்டது. பலர், இதனை மிக மோசமான முடிவு எனக் கூறினர்.
2013 ஆம் ஆண்டில், ஆப்பிள் இரு மாடல் ஐபோன்களை வெளியிட்டது. இவ்வாறு வெளியிடுவது அதுவே முதல் முறையாகும். அப்போது வெளியான ஐபோன் 5 எஸ், அளவில் மிகச் சிறியது எனப் பலரால் கருதப்பட்டது. அதற்குக் காரணம், அந்த வேளையில், அதிக எண்ணிக்கையில், ஆண்ட்ராய்ட் தொகுப்பில் இயங்கும் பேப்ளட் சாதனங்கள் பெரிய அளவில் நிறைய அறிமுகம் ஆயின. ஐபோன் 5 எஸ் மாடலில், வேகமாக இயங்கும் 64 பிட் டூயல் கோர் ப்ராசசர் தரப்பட்டது. முதல் முதலாக, ஹோம் பட்டனில், விரல் ரேகை உணர்வு தொழில் நுட்பம் அறிமுகமானது. பின் நாளில், இதனை மற்ற மொபைல் நிறுவனங்களும் தங்கள் போன்களில் தரத் தொடங்கினர். டூயல் எல்.இ.டி. ப்ளாஷ் போட்டோக்களின் தன்மையை உயர்த்தியது. இந்த போனின் வடிவமப்பில் முதல் முதலாகப் பின்புறப் பின்னணி மூன்று வண்ணங்களில் தரப்பட்டது.
அதே ஆண்டில் வெளியான ஐபோன் 5 சி, பிளாஸ்டிக் போன் என அழைக்கப்பட்டது. ஐந்து வண்ணங்களில் பின்புற பாலி கார்பனேட் கவசம் இருந்தது. ஐபோன் 5 ல் தரப்பட்ட ஹார்ட்வேர் உள்ளே இருந்தது.

ஐபோன் 6
2014 ஆம் ஆண்டில், ஐபோன் 6 அறிமுகமானது. திரை 4.7 அங்குல அளவில் இருந்தது. அதிவேக செயல்பாடு கொண்ட கேமரா, ப்ராசசர், வை பி மற்றும் எல்.டி.இ. இணைப்பு ஆகியவை மேம்படுத்தப்பட்டுத் தரப்பட்டன. என்.எப்.சி. என்னும் அண்மைக் களத் தொடர்பு தொழில் நுட்பம் முதல் முதலாக இதில் அறிமுகம் செய்யப்பட்டது. கேமரா பதிவில் புதிய இயக்கங்கள் முறை தரப்பட்டன.

ஐபோன் 6 எஸ், 6 எஸ் ப்ளஸ்
2015 ஆம் ஆண்டு, ஆப்பிள் தன் பயனாளர்களுக்கு ஏமாற்றமே தந்தது. மிகப் பெரிய அளவில், சொல்லிக் கொள்ளும் வகையில், ஐபோன் 6 எஸ் மற்றும் 6 எஸ் ப்ளஸ் மாடல்களில், புதிய மாற்றங்கள் எதுவுமில்லை. மாற்றம் அல்லது மேம்படுத்தல் என்று ஒன்றைச் சொல்வதானால், அதில் தரப்பட்ட முப்பரிமாண தொடு உணர் தொழில் நுட்பத்தைக் கூறலாம்.

ஐபோன் 6 எஸ்.இ.
2016 மார்ச் மாதம், புதியதாக, ஐபோன் 6 எஸ். இ. ( iPhone Special Edition (SE)) மாடல் வெளியானது. முந்தைய ஐபோன் 6 எஸ் இடத்தில் இது அமைந்தது. ஐ.ஓ.எஸ். இயக்கம் 9 இதில் தரப்பட்டது. ஜூலை, 2016ல், ஆப்பிள் நூறு கோடி ஐபோன்களை விற்ற சாதனையைப் படைத்தது.

ஐபோன் 7, 7 ப்ளஸ்
புதிய மாடல் போன்களாக, ஐபோன் 7 மற்றும் 7 ப்ளஸ் வெளியான போது, பெரிய அளவில் மாற்றங்களை எதிர்பார்த்த வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏறத்தாழ, ஐபோன் 6 மற்றும் 6 ப்ளஸ் போலவே அமைந்தன. இவற்றில் குறிப்பிட்ட மாற்றங்கள் எனில், நீரில் மூழ்கிய போதும் செயல்படும் தன்மை, பளிச் என அமைந்த திரைக் காட்சி, வேகமாக இயங்கிய ப்ராசசர் சிப்கள் ஆகியவற்றைச் சுட்டிக் காட்டலாம். யாரும் எதிர்பார்க்காத நிலையில், 3.5 மிமீ ஆடியோ ஜாக் இந்த மாடல்களில் தரப்படவில்லை. “ஆப்பிள் ஏர் பாட்” என்னும் புளுடூத் வசதி கொண்ட சாதனம் மூலம், ஆடியோவினை ரசிக்க வாடிக்கையாளர்கள் திருப்பப்பட்டனர். இது சரியா? என்ற விவாதம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஐபோன் 8
பல வதந்திகள், வர இருக்கும் ஐபோன் 8 குறித்து அவ்வப்போது வெளியாகிக் கொண்டுள்ளன. சிலவற்றை கம்ப்யூட்டர் மலரின் மொபைல் பக்கங்களில் வாசகர்கள் படித்திருப்பீர்கள். பத்தாண்ட்டு நிறைவுக்குப் பின் வருவதால், புதிய தொழில் நுட்பம், வசதி மற்றும் மாற்றங்கள் இருக்கும் என, ஆப்பிள் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். திரை இடம் முழுவதும் டிஸ்பிளே, OLED திரை, டச் ஐ.டி., திரையின் உள்ளாக கேமரா, முழுவதுமான கிளாஸ் வெளிக் கவசம், பல புதிய பாதுகாப்பு அம்சங்கள் எனப் பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தான் தருவதுதான் தொழில் நுட்பம், போன் எனத் தனக்கென ஒரு ராஜ பாட்டையை அமைத்துக் கொண்டு, உயர்விலையில் ஸ்மார்ட் போன்களைத் தொடர்ந்து வெளியிட்டு, நல்ல லாபம் ஈட்டும் நிறுவனமாக, ஆப்பிள் இயங்கி வருகிறது. ஐபோன்கள் அதிகம் பயன்படுத்தப்படுவது அமெரிக்காவில் மட்டுமே. இருப்பினும், தளராமல் தன் முயற்சியை மேற்கொண்டு, மொபைல் சந்தையில் தன் இடத்தை, பெயரை, புகழைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது ஆப்பிள் நிறுவனம். இந்த ஆண்டில் என்ன புதுமைகளைத் தர இருக்கிறது என நாம் காத்திருப்போம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X