எதனையும் தன் முன் மாதிரியாகக் கொள்ளாமல், பத்தாண்டுகளாக, தனக்கென டிஜிட்டல் உலகில் தடம் பதித்திட்ட ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் வளர்ச்சியை மிக அழகாகவும் சுருக்கமாகவும் தந்த உங்கள் கட்டுரை, ஒரு பாடக் கட்டுரை போல அமைந்துள்ளது. எழுதிய ஆசிரியருக்கு பாராட்டுகள்.
பேரா எஸ். நித்யானந்தன், செய்யாறு.
இரண்டு டெராபைட் ப்ளாஷ் ட்ரைவினைப் பாக்கெட்டில் கொண்டு செல்லலாம் என்ற செய்தியைப் படிக்கும் போது, மனம் வியந்தது. அதன் உத்தேச விலையைக் கண்ணுற்றபோது, வியப்பு இன்னும் அதிகரித்தது. ஆனாலும், நாம் வாங்கும் அளவிற்கு ஒரு நாள் இதன் விலை இருக்கும் என்ற நம்பிக்கையுடன் நாம் காத்திருப்போம். டிஜிட்டல் உலகில் ஏற்படும் மாற்றங்கள் மெய் சிலிர்க்க வைக்கின்றன.
ஆர். சியாமளா, புதுச்சேரி.
புதியதாக வந்திருக்கும், 'டிஜிட்டல் தகவல்கள்' என்னும் தொகுப்பு மிகப் பயனுள்ளதாய், பல்முனை நோக்கில் தகவல்களைத் தருவதாய் அமைந்துள்ளது. இதனை வாரந்தோறும், அல்லது மாதம் இருமுறை எனத் தொடருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ஆர். சகாயராணி, நாகூர்.
இந்தியாவில் இன்னும் 95 கோடி பேர் இணைய இணைப்பின்றி உள்ளனர் என்பது, நாம் கொண்டிருக்கும் முன்னேற்றங்களுக்கு எதிர்மறையாக அல்லவா உள்ளது! ஒருபுறம் சாப்ட்வேர் பிரிவில் உலகில் முன்னணி, இன்னொரு பக்கம் நம் மக்களில் பலர் எதுவும் அறியாதவர்களாய் என இரு வேறுபட்ட நிலை இருப்பது வேதனைக்குரியது. நம் இளைஞர்கள், இந்தப் பிரச்னையைக் கையில் எடுத்து, இணையத்தை அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்லலாமே. செய்வார்களா?
ஜே. சையத் உசேன், வேலூர்.
'இலவச ஆண்ட்டி வைரஸ்கள்' என்னும் பட்டியலில் புதியதாய் நீங்கள் தந்திருக்கும் 'கொமடோ ஆண்ட்டி வைரஸ்' பயன்படுத்திப் பார்த்தேன். எளிதான இடைமுகம் கொண்டுள்ளது. உங்கள் கட்டுரையில் தரப்பட்டுள்ள அனைத்தையும் சோதனை செய்து பார்க்க திட்டமிட்டுள்ளேன். தகவல்கள் தந்துள்ள கட்டுரை ஆசிரியருக்கு நன்றி.
ஒய். நாகேஸ்வரன், திருப்பனந்தாள்.
விளம்பரங்கள் மூலம் மொபைல் போன் நிறுவனங்கள் நம்மை மடக்க நினைக்கையில், சிப்களின் தன்மை கூறும் 'கோர்' குறித்த தங்களின் குறிப்புகள் மிகவும் பயனுள்ளவையாகவும், வழி காட்டுபவையாகவும் உள்ளன. மிக்க நன்றி.
ஆர். இசைராணி, செங்கல்பட்டு.
ஆங்கிலத்தில் இனி யாருமே தவறுகளுடன் எழுதக் கூடாது என்ற இலக்கினை பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் கூட கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால், உங்களின் முயற்சியில் தரப்படும் கட்டுரைகள் அந்த நிலைக்கு நம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களைக் கொண்டு செல்லும் என்பது உறுதி. முன்பு கிராமர்லி செயலி குறித்து மட்டும் தந்தீர்கள். தற்போது, அதே போன்று இயங்கிப் பல வகைகளில் சிறப்பாகக் கற்றுத் தரும் இணைய தளங்களையும் செயலிகளையும் விரிவாகத் தந்துள்ளீர்கள். தங்களுக்கு ஆங்கில ஆசிரியர் என்ற முறையில் சிரம் தாழ்ந்த வணக்கமும் நன்றியும்.
என். கதிரவன், செங்கல்பட்டு.
கேள்வி பதில் பகுதியில் நீங்கள் தந்துள்ள 'மொத்தமாக புக்மார்க்' செய்திடும் வசதி, பலவகைகளில் நம் இணையத் தேடலை நெறிப்படுத்துகிறது. டிப்ஸ் தந்தது என் உழைப்பின் நேரத்தை மிச்சப்படுத்துகிறது. இது போல பல குறிப்புகளைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ஆர். சுதாகரன், ஓசூர்.