கேள்வி: நான் அண்மையில் 'Malwarebytes' என்னும் புரோகிராமினை இன்ஸ்டால் செய்தேன். நேற்று, அதில் கிளிக் செய்த பொழுது, 'இந்த புரோகிராம், கம்ப்யூட்டரில் சில மாற்றங்களைச் செய்திட அனுமதிக்கிறீர்களா?' என்று கேட்டவுடன் பின் வாங்கிவிட்டேன். இதற்கு அனுமதி தரலாமா என்று தெரியவில்லை. டிப்ஸ் தரவும்.
கே. நஞ்சுண்டன், ஆத்தூர்.
பதில்: நீங்கள் பதிந்தது 'Malwarebytes' தான் என்றால், தாராளமாக அந்த புரோகிராம் கம்ப்யூட்டரில் மாற்றங்களை மேற்கொண்டு செயல்பட அனுமதிக்கலாம். கம்ப்யூட்டரில் உள்ள மால்வேர் புரோகிராம்களைக் கண்டறிந்து நீக்க வேண்டும் என்றால், இந்த மாற்றங்கள் தேவை தான். மால்வேர் புரோகிராமினை நீக்குவதே, கம்ப்யூட்டரில் மாற்றங்கள் ஏற்படுத்துவதுதான். அதற்காகவே, ஒவ்வொருமுறையும் இந்த புரோகிராம் இக்கேள்வியைக் கேட்கும். எனவே, 'yes' கொடுக்கவும்.
கேள்வி: விண்டோஸ் 10 இயக்கத்தில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்துகிறேன். இதில், ப்ளாஷ் இயக்கத்தை இயங்காமல் முடக்கி வைப்பது எப்படி எனத் தெரியவில்லை. கூகுள் தேடலிலும் சரியான விடை கிடைக்கவில்லை. சிலர், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைப் பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவுரை கூறுகின்றனர். ப்ளாஷ் முடக்கி வைக்க வழி கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தி. சேவுக மூர்த்தி, தேவகோட்டை.
பதில்: விண்டோஸ் 10 பெர்சனல் கம்ப்யூட்டரில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்துவதற்குப் பதிலாக, எட்ஜ் பிரவுசர் பயன்படுத்தலாம். அல்லது, குரோம் பிரவுசரைப் பயன்படுத்தலாம். இருப்பினும், இன்டர்நெட் எக்ஸ்புளோரரில், ப்ளாஷ் இயக்கத்தினை முடக்கி வைக்கக் கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ளவும்.
முதலில் இன்டர்நெட் எக்ஸ்புளோரரை டாஸ்க்பார், டெஸ்க்டாப் அல்லது ஸ்டார்ட் மெனுவிலிருந்து இயக்கவும்.
அடுத்து, Tools பட்டனில் கிளிக் செய்திடவும். இது மேல் வலது மூலையில், கியர் வடிவ ஐகானாக இருக்கும். தொடர்ந்து, Manage Addons என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் Shockwave Flash Object என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து 'Disable' என்பதில் கிளிக் செய்திடவும். முடிவாக, 'Close' என்பதில் கிளிக் செய்து முடிக்கவும்.
கேள்வி: கூகுள் தேடு தளத்தில் தேடுகையில், குறிப்பிட்ட வகை வலைத் தளங்களில் மட்டும் தேடித் தரும்படி கட்டளை அமைக்க முடியுமா?
நான் ஓர் ஆசிரியன். பெரும்பாலும் கல்வி சார்ந்த தளங்களில் மட்டுமே என் தேடலுக்கான பதில்களைப் பெற விரும்புகிறேன்.
என்.சுகன்யா, கோவை.
பதில்: கூகுள் தேடல்களில், பலவகையான வரையறையை மேற்கொள்ளலாம். நீங்கள் குறிப்பிட்டபடி தகவல்களைப் பெற அமைக்க வேண்டிய கட்டளை வடிவம் inurl:command ஆகும். எடுத்துக் காட்டாக computer resources என்ற சொற்கள் சார்ந்த தகவல்களை, கல்விக்கென உள்ள தளங்களில் மட்டும் தேடிப் பெற வேண்டும் என விரும்பினால், computer resources inurl:edu என்று கொடுக்க வேண்டும். இந்தக் கட்டளை edu வகை இணைய தளங்களில் மட்டும் தகவல்களைத் தேடித் தரும்.
கேள்வி: வேர்ட் புரோகிராமில், ஆவணங்களைத் தயார் செய்து, பின் அவற்றைத் திருத்தி, புதிய பார்மட் வசதிகளை அமைக்கையில், ஹோம் மெனுவிற்குச் செல்லாமல், டாகுமெண்ட் உள்ளாகவே, சிறிய மெனு ஒன்று கிடைத்தது. தற்போது அது கிடைக்கவில்லை. வேறு ஏதேனும் புரோகிராம் ஒன்றின் மேம்படுத்தல், இந்த சிறிய மெனு தோன்றுவதை மாற்றியிருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது. விளக்கம் அளிக்கவும்.
சி.அறிவரசன், தேரழுந்தூர்.
பதில்: நீங்கள் பயன்படுத்தும் வேர்ட் எந்த பதிப்பு என்று குறிப்பிடவில்லை. இருப்பினும், தற்போது அதிகம் புழக்கத்தில் உள்ள வேர்ட் 2007 மற்றும் வேர்ட் 2010 ஆகிய தொகுப்புகள் சார்ந்து இந்த பிரச்னைக்கான குறிப்பினைத் தருகிறேன். நீங்கள் குறிப்பிடும் வசதிக்கு 'மினி டூல் பார்' என்று பெயர். இந்த வசதி, வேர்ட் 2007 முதல் நமக்குக் கிடைத்து வருகிறது. நம் டாகுமெண்ட்டில் ஏதேனும் ஒரு சொல்லைத் தேர்ந்தெடுத்தவுடன் இது நமக்குக் காட்டப்படும். வேறு ஒரு எழுத்துருவுக்கு மாற்ற அல்லது சொல்லை அழுத்தமாக, சாய்வாக, அடிக்கோடுடன் என அமைக்க மற்றும் பல பார்மட் மாறுதல்களை மேற்கொள்ள, இந்த மினி டூல் பாரைப் பயன்படுத்தலாம். இது காணாமல் போனதற்கு வேறு ஒரு புரோகிராம் மேம்படுத்தல் ஆக இருக்காது. உங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தியவர்கள் இந்த மினி டூல் பார் மறையும்படி செயல்பாடுகளை மேற்கொண்டிருக்கலாம். அதனை மீண்டும் பெற கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ளவும்.
1. Office பட்டன் கிளிக் செய்திடவும்.
2. Word Optionsகிளிக் செய்க.
3. இடது பக்கம் உள்ள பிரிவில் Popular என்பதில் கிளிக் செய்திடுக.
4. இங்கு கிடைக்கும் பிரிவில் Show Mini Toolbar என்று உள்ள இடத்தில் டிக் அடையாளத்தை அமைக்கவும்.
5. பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
நீங்கள் பயன்படுத்துவது ஆபீஸ் 2010 தொகுப்பாக இருந்தால், கீழே கொடுத்துள்ளபடி செயல்படவும்.
1. File டேப்பில் கிளிக் செய்திடவும்.
2. இடது பக்கம் உள்ள பிரிவில் Help என்பதன் கீழாக உள்ள Options என்பதில் கிளிக் செய்திடவும்.
3. இங்கு General என்பதில் கிளிக் செய்திடுக.
4. இங்கு User Interface Options என்ற பிரிவில், Selection என்ற தலைப்பில், Mini Tool Bar என்பதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும்.
5. பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
கேள்வி: என் நண்பரின் லேப்டாப் ஒன்றில், வேர்ட் புரோகிராமில் டாகுமெண்ட் ஒன்றை உருவாக்கினேன். அப்போது, டாகுமெண்ட் பக்கத்தினைச் சுற்றி, புள்ளிகளால் ஆன கோடு ஒன்று காட்டப்பட்டது. ஆனால், அச்சிடுகையில் இல்லை. என் வேர்ட் புரோகிராமில் இது இல்லை. நான், விண்டோஸ் 7 தொகுப்பில், எம்.எஸ். ஆபீஸ் 2007 பயன்படுத்துகிறேன். எப்படி இதனை அமைப்பது, இதன் காரணமும் பயனும் என்ன என்று கூறவும்.
எம். ஆனந்தராஜ், தூத்துக்குடி.
பதில்: இந்த வசதி அனைத்து வேர்ட் புரோகிராமிலும் கொடுக்கப்பட்டுள்ளது. புள்ளிகளால் ஆன இந்தக் கட்டம், உங்கள் டாகுமெண்ட் அதற்கான பக்கத்தில் எந்த அளவிற்கு இடம் எடுத்துக் கொள்கிறது என்பதைக் காட்டுகிறது. இதற்கு டாகுமெண்ட்டினை Print Layout அமைப்பில் உருவாக்க வேண்டும். இதனை அமைக்க,
1. Word Options டயலாக் பாக்ஸைக் கொண்டு வரவும். வேர்ட் 2007ல், ஆபீஸ் பட்டன் கிளிக் செய்து, கீழாக உள்ள Word Options பட்டனை கிளிக் செய்திட வேண்டும்.
2. இந்த டயலாக் பாக்ஸின் இடது பக்கம் உள்ள Advanced என்பதில் கிளிக் செய்திடவும்.
3. இங்கு கிடைக்கும் ஆப்ஷன்ஸ் பட்டியலில் மவுஸை உருட்டிக் கொண்டு செல்லவும். Show Document Content என்ற பிரிவில் நிறுத்தவும்.
4. Show Text Boundaries என்ற செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்படுத்தினால், டெக்ஸ்ட் எல்லைக் கோடு காட்டப்படும். எடுத்துவிட்டால் காட்டப்பட மாட்டாது.
தேவையானதை ஏற்படுத்திய பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
கேள்வி: என் வீட்டில் பிராட்பேண்ட் இணைப்பு அண்மையில் தரப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, டேப்ளட் ஒன்றைப் பயன்படுத்தி வருகிறேன். இதில் வை பி இணைப்பு கொடுக்கலாம் என்று கூறினார்கள். அதில் இன்டர்நெட் இணைப்பு தருவதற்கான ஐகான், டேப்ளட் பி.சி.யில் எந்தப் பக்கத்திலும் இல்லை. இதனை எப்படி ஏற்படுத்துவது?
ஜே. அன்னபூரணி, சேலம்.
பதில்: டேப்ளட் பி.சி.யில் நீங்கள் எதிர்பார்ப்பது போல எந்த ஐகானும் அமைந்திருக்காது. டேப்ளட் பி.சி.யில், இதற்கு 'செட்டிங்ஸ்' செல்ல வேண்டும். அதில், “connections” அல்லது “network connections” Wi Fi என்ற பிரிவு உள்ளதா எனப் பார்த்து, அதனை கிளிக் செய்திடவும். இது, டேப்ளட் பி.சி. தயாரித்து அளித்த நிறுவனத்தைப் பொறுத்து மாறுபடும். அடுத்து, உங்கள் வீட்டில் தரப்பட்டிருக்கும் பிராட்பேண்ட் இணைப்பு, வை பி தரப்படும் வகையில் உள்ளதா என சோதித்துக் கொண்டு, அதனை இயக்கவும். இனி, டேப்ளட் பி.சி. செட்டிங்ஸ் பக்கத்தில், Airplane Mode, 'OFF' நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தவும். 'ON' நிலையில் இயக்கப்பட்டிருந்தால், வை பி இணைப்பு, டேப்ளட் பி.சி.யில் இயங்காது.
இனி, வை பி அல்லது நெட்வொர்க் கனெக்ஷன் பகுதியில், உங்கள் டேப்ளட் பி.சி. உணர்ந்தறியும் அனைத்து வை பி இணைப்புகளின் பெயர்களும் காட்டப்படும். உங்கள் இணைப்பின் பெயர் நிச்சயம் அந்தப் பட்டியலில் இருக்கும். அதில் தட்டி, இயக்கினால், உடன் பாஸ்வேர்ட் கேட்கப்படும். சரியாக பாஸ்வேர்டைக் கொடுத்தால், இணைப்பு கிடைக்கும். அடுத்த முறை, உங்கள் இணைய இணைப்பினை நீங்கள் இயக்கி இருந்தால், டேப்ளட் பி.சி. தானாகவே உணர்ந்து, அதில் இணைந்து கொள்ளும்.
கேள்வி: கம்ப்யூட்டர் வாங்குகையில், அசெம்பிள்டு மற்றும் ஓ.இ.எம். நிறுவனக் கம்ப்யூட்டர் என வேறு படுத்துகின்றனர். இவை எந்த வகைக் கம்ப்யூட்டரைக் குறிக்கின்றன?
டி.எஸ். கலையரசன், சென்னை.
பதில்: அசெம்பிள்டு கம்ப்யூட்டர் என்பது, கம்ப்யூட்டர் இயங்கத் தேவையான அனைத்து பாகங்களையும் தனித்தனியே வாங்கி, நிறுவனமாக இல்லாமல், தனி நபராக அவற்றை இணைத்து விற்பனை செய்தலைக் குறிக்கிறது. தனி நபர் செய்து தருவதால், அதற்கான வரிகளை (எக்சைஸ் வரி, விற்பனை வரி) அரசுக்கு யாரும் கட்டுவதில்லை. இந்த வகைக் கம்ப்யூட்டருக்கு பொறுப்பேற்கும் நிறுவனம் இல்லையாதலால், வாரண்டி கிடைக்காது.
OEM என்பது Original Equipment Manufacturer என் பதன் சுருக்கமாகும். கம்ப்யூட்டர் தயாரிப்பில் இருக்கும் நிறுவனங்கள், அதற்கு வேண்டிய அனைத்து பொருட்களையும், அவர்களே தயாரிப்பதில்லை. மவுஸ் மற்றும் கீ போர்டினை லாஜிடெக் தரலாம்.
ஹார்ட் டிஸ்க்கினை ஸீ கேட் நிறுவனம் வழங்கலாம்; இதே போல சிப் செட் ஒரு நிறுவனத்தாலும், அதில் அமையும் பேன் இன்னொரு நிறுவனத்தாலும், எஸ்.எம்.பி.எஸ். என்னும் மின் சக்தியைக் கையாளும் சாதனத்தை பிறிதொரு நிறுவனத்தாலும் வழங்கப்படலாம்.
இவற்றை அந்த நிறுவனங்களிடமிருந்து, தங்கள் தேவைக்கேற்ப மொத்தமாக வாங்கி, தங்கள் தொழிற்சாலையில் வைத்து, முறையாக இணைத்து, தங்கள் நிறுவனப் பெயரில் விற்பனை செய்திடும் நிறுவனங்களே ஓ.இ.எம். நிறுவனங்கள் என அழைக்கப்படுகின்றன.
சில நிறுவனங்கள், இவை பொருட்களை அதிகமாக வாங்குவதால், வாங்கும் நிறுவனத்தின் பெயரில் இவற்றை வழங்கும். பொருட்களில், கம்ப்யூட்டரைத் தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கும். சில நிறுவனங்கள், இது போன்ற ஏற்பாட்டிற்கு ஒத்துக் கொள்ளாமல், தங்கள் நிறுவனப் பெயரினையே பொறித்து வழங்கும்.
இந்த வகை தயாரிப்பில் அரசு உரிமம் பெற்ற நிறுவனங்களே இயங்க முடியும். கம்ப்யூட்டருக்கான விலையில், அரசுக்கான எக்சைஸ் வரி, விற்பனை
வரி அடக்கம். கம்ப்யூட்டர் நிறுவனம், தான் விற்பனை செய்திடும் கம்ப்யூட்டர்களுக்கு வாரண்டி கொடுக்கும்.