பொற்காப்பு! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements
பொற்காப்பு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 ஜன
2017
00:00

ஒரு காட்டில் வயதான கிழப் புலி ஒன்று மிகவும் பலவீனமாக வசித்து வந்தது. ஓடியாடி இரையை தேட முடியாத அளவிற்கு, வயதாகி இருந்ததால், ஏதாவது தந்திரம் செய்தே, இரையை தேடவேண்டியிருந்தது.
காட்டில் ஒரு மிகப் பெரிய ஏரி இருந்தது. அதன் கரையில், கொடிய பசியோடு இரைக்காக காத்திருந்தது
கிழட்டுப் புலி.
அங்கே பழுத்து போய் பொன்னிறத்துடன் காட்சி தந்த, தர்ப்பை புல் ஒன்றை கையில் வைத்தபடி, உணவுக்காக வெகு நேரம் காத்திருந்தது.
அப்போது, அந்த வழியே ஒரு மனிதன் நடந்து வந்தான்.
தூரத்தில் வரும்போதே அவரை பார்த்த புலி, ஏதாவது செய்து அந்த மனிதனை கொன்று, சாப்பிட வேண்டும் என்று நினைத்தது.
அந்த மனிதன், ஏரியை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தான்.
திடீரென்று, “மனிதனே வணக்கம்!” என்று ஒரு குரல் ஒலித்தது.
இந்த காட்டில் தன்னை அழைப்பது யாரென்று சுற்றும்முற்றும் திரும்பி திரும்பி பார்த்தான்.
சற்று தொலைவில் கிழட்டு புலி ஒன்று இருப்பதை பார்த்தான்.
“என்ன பார்க்கிறாய்... நான் தான் உன்னை அழைத்தேன்,” என்றது புலி.
“என்ன வேண்டும் உனக்கு... என்னை ஏன் அழைத்தாய்?” என்றான் மனிதன்.
“உன்னை பார்த்தால், ஏழை மனிதனாக தெரிகிறது. இந்த பொற்காப்பை உனக்கு கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. அதற்காக தான் அழைத்தேன். இதோ இதை வாங்கி கொள்,” என்று தன் கையிலிருந்த தர்ப்பை புல்லை வட்டமாக வளைத்து காண்பித்தது புலி.
தூரத்தில் இருந்து பார்க்கும்போது, தர்ப்பை புல், பொற்காப்பு போலவே தெரிந்தது. 'தன் வறுமையைப் போக்க, இறைவனே புலி வடிவில் பொற்காப்பை தருகிறார்' என்று நினைத்தான் அந்த மனிதன்.
ஆனால், அடுத்த கணமே அவனுக்கு புலியை பற்றிய பயம் தொற்றி கொண்டது. அருகே செல்லும் போது தாக்கி விட்டால் என்ன செய்வது என்ற சந்தேகம் முளைவிட்டது.
பொற்காப்புக்கு ஆசைப்பட்டு, உயிரை விடுவது சரியானதா என்ற கேள்வியும் எழுந்தது. எனவே, தயக்கத்துடன் அங்கேயே நின்றுவிட்டான்.
“என்ன தயக்கம்... வா வந்து வாங்கி கொள்,” என்று ஆசையாக அழைத்தது புலி.
''பொற்காப்பை சரியாக கூட நான் பார்க்கவில்லை. அதற்குள் மறைத்து விட்டாயே... எங்கே அதை இன்னொரு முறை காட்டு,” என்றான் மனிதன்.
“இதோ பார்!” என்று மீண்டும் அந்த தர்ப்பை புல்லை காண்பித்தது புலி. சூரிய ஒளியில் உண்மையிலேயே பொற்காப்பு போலவே காட்சியளித்ததால், நம்பிவிட்டான் மனிதன்.
“நீ புலி ஆயிற்றே... மனிதர்களையும் பிற விலங்குகளையும் சாப்பிடுவது உன் குணமாயிற்றே. அப்படி இருக்கும்போது, உன் அருகே வருவதற்கு எனக்கு எப்படி தைரியம் வரும்?” என்று கேட்டான் மனிதன்.
“நீ சொல்வது உண்மை தான். ஆனால், எனக்கு வயதாகி விட்டது. பல்லும் இல்லை; நகமும் கிடையாது. இன்றோ, நாளையோ என்று வாழ்நாளை எண்ணிக் கொண்டிருக்கிறேன். சாகப் போகும் கிழப்புலியான நான், இந்த ஏரியில், நீராடி, இங்கிருந்து கடவுளை தியானம் செய்து கொண்டிருக்கிறேன்.
“யாகம் செய்தல், வேதம் ஓதுதல், தானம் கொடுத்தல், தவம் செய்தல், சத்திய நெறியில் இருத்தல், தெய்வ நம்பிக்கை, ஆசையின்மை பொறுமை ஆகிய எட்டு தருமங்களையும், நன்றாக அறிந்தவன்; அதன்படி நடப்பவனும் கூட... தற்செயலாக இந்த பொற்காப்பு கிடைத்தது...
“வயதான காலத்தில் இதை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன்... அதனால் இதை யாருக்காவது கொடுக்க ஆசைப்படுகிறேன். அதிலும், உன்னைப் போன்ற ஏழை மனிதனுக்கு கொடுப்பதை பெரும் புண்ணியமாக கருதுகிறேன். வா... வந்து இதை வாங்கிக் கொள்,” என்றது கிழட்டு புலி.
“நீ என்ன சொன்னாலும் உன் அருகில் வருவதற்கு, எனக்குப் பயமாக இருக்கிறது. நீ என்னை அடித்து கொன்றாலும் கொன்று விடுவாய்,” என்றான் மனிதன்.
“மீண்டும் சொல்கிறேன். எனக்கு தர்ம சாஸ்திரம் நன்றாக தெரியும். நீ ஏழை மனிதன் என்பதை தவிர, உன் மீது எனக்கு வேறு எந்த அபிமானமும் கிடையாது. இந்த வழியே எத்தனையோ பேர் சென்றனர். ஆனால், அவர்களுக்கெல்லாம் இந்த காப்பை கொடுக்க வேண்டும் என்று எனக்கு தோன்றவில்லை. உனக்கு கொடுக்க மட்டுமே ஆசையாக இருக்கிறது. ஏனென்றால், நீ பரம ஏழையாக தெரிகிறாய்.
“பசியுள்ளவனுக்கு உணவு கொடுத்தால் அது புண்ணியம்; பசியில்லாதவனுக்கு விருந்தே பரிமாறினாலும் அதனால் என்ன பயன்... விருப்பம் இருந்தால் வந்து வாங்கி கொள். இல்லையென்றால், இந்த பொற்காப்பு யாருக்கும் பயன்பட வேண்டாம் என்று நினைத்து, இந்த ஏரிக்குள் எறிந்து விடுகிறேன்,” என்றது புலி.
புலி இந்த அளவிற்கு பேசியதால், மனிதனுக்கு அதன் மீது நம்பிக்கை வந்தது. 'உண்மையிலேயே இது நல்ல புலி தான்!' என்று நினைத்து, பொற்காப்பை வாங்க முடிவெடுத்து, அதை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தான்.
“ஒரு நிமிடம்... இதை பெறுவதற்கு முன், இந்த ஏரியில் நீராடி சுத்தமாக வா,” என்றது புலி.
இதனால், புலியின் மீது இன்னும் நம்பிக்கை அதிகமாகியது.
ஏரிக்குள் மெல்ல இறங்கினான் மனிதன். ஆனால், அது சேறும், சகதியுமாக இருந்ததால், அவனது கால்கள் சிக்கி கொண்டன; நகரவே முடியவில்லை.
“பயப்படாதே நான் உன்னை சேற்றில் இருந்து விடுக்கிறேன்,” என்றவாறு அவனை நோக்கி நடந்த புலி, அவனை நெருங்கி, சட்டென்று இறுக்கமாக பிடித்து கொண்டது.
இப்படியொரு சம்பவத்தை எதிர்பாராத மனிதன், திடுக்கிட்டான்.
புலியோ தன் கொடிய பசிக்கு நல்ல உணவு கிடைத்த சந்தோஷத்தில் மனிதனை கடித்து கொன்றது.
நீதி: இத்தனை இன்பமாக பேசி புகழ்ந்து, ஏமாற்றுகிற இந்த உலகில் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கணும் குட்டீஸ்...

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X