விண்டோஸ் 10 இயக்க முறைமையில் வர இருக்கும் வசதிகள் குறித்து, கம்ப்யூட்டர் மலர் தான் நல்ல கட்டுரை ஒன்றைத் தந்துள்ளது. வேறு இதழ்களில் எதுவுமில்லை. “கிரியேட்டர்ஸ் அப்டேட்” என்ற பெயரே, மேம்படுத்தலில் நிறைய சிறப்புகளை எதிர்பார்க்க வைத்துள்ளது. புதிய தீம் படங்கள் காட்சியே நம்மை வியக்க வைக்கிறது. கூடுதல் வசதிகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
என். சகாயராஜ், தென்காசி.
வர இருக்கும் மேம்படுத்தல் என்ன என்ன புதிய வசதிகள் தரும் என்று பட்டியல் இட்டு விளக்கியமைக்கு நன்றி. இன்னும் புதிய தகவல்கள், வர இருக்கும் வசதிகள் குறித்து வந்தாலும் உடன் தெரிவிக்கவும். புதிய கட்டுரையில் அவற்றை எதிர்பார்க்கும் வாசகர்கள் சார்பாக நன்றி.
என். ஸ்ரீநிவாசன், கரந்தை.
32 மற்றும் 64 பிட் குறித்து கல்லூரியில் பாடக் கட்டுரை படித்து, கேள்விகளுக்குப் பதில்களும் தந்துள்ளோம். ஆனால், உங்கள் கட்டுரை தான் அதற்கிடையேயான வேறுபாட்டினை நல்ல எடுத்துக் காட்டுகளுடன் தந்துள்ளது. குறிப்பாக, மொபைல் போன்களிலும் இது உண்டு என்பது எனக்குப் புதிய செய்தி. கட்டுரையை நிறுத்தி நிதானமாகப் படித்தால் தான் நன்றாகப் புரிகிறது. நல்ல சயின்ஸ் பாடம் போல உள்ளது. எழுதிய ஆசிரியருக்கு பாராட்டுகளும் நன்றியும்.
எஸ். கார்த்திகேயன், திண்டுக்கல்.
ஸ்மார்ட் போன் தொழில் நுட்பத்தில் சுட்டிக் காட்டியுள்ள யு.எஸ்.பி. டைப் சி குறித்து இன்னும் அறிந்து கொள்ள விரும்புகிறேன். தனிக் கட்டுரை ஒன்றில், யு.எஸ்.பி. திறன் வளர்ந்த விதமும், டைப் சி குறித்தும் கூடுதல் டிப்ஸ் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கா. நித்யானந்தம், விருதுநகர்.
க்ளவ்ட் சேவை குறித்த கட்டுரைத் தகவல்கள், அறிவியல் கட்டுரையின் அனைத்து கூறுகளும் உடையனவாக உள்ளது. க்ளவ்ட் கட்டமைப்பு, சேவைகளின் தன்மை, பிரிவுகள், எதிர்காலத்தில் எப்படி இருக்கும் எனப் பல பிரிவுகளில் விளக்கமாகக் கூறியுள்ளது, க்ளவ்ட் குறித்த அனைத்து தகவல்களையும் தருவதாக உள்ளது. மிக்க நன்றி.
ஆ. ஹேமலதா யோகராஜ், தஞ்சாவூர்.
கிரெடிட் கார்ட் அளவில் கம்ப்யூட்டரா? சாத்தியமா? என்ற வியப்பிற்கும், கேள்விக்கும் இடம் இல்லாமல் செய்து வருகிறது இன்டெல் நிறுவனம். முன்பு கம்ப்யூட்டிங் ஸ்டிக் அளித்தது. இப்போது கார்ட் அளவில் கம்ப்யூட்டர் இயக்கத்தினைத் தருகிறது. விரைவில் மக்களிடையே இது கிடைக்கும் போது, எல்லாமே டிஜிட்டல் மற்றும் இணைய மயமாகும். பொற்காலத்தின் திறவு கோலாக இதனைக் கொள்ளலாம்.
ச. உ. பாஸ்கர பாண்டியன், மதுரை.
க்ளவ்ட் அமைப்பு என்பது ஒரே வகை என எண்ணியிருந்தேன். இத்தனை அமைப்புகளும், சேவைப் பிரிவுகளும் உள்ளது என தங்கள் கட்டுரை மூலம் அறிந்து கொண்டேன். தனி நபர்கள் கூடத் தங்களுக்கென க்ளவ்ட் சேவையினை அமைக்கலாம் என்பது புதிய தகவல். அவ்வாறு வைத்து இயக்குபவர்களின் அனுபவத்தினைப் பெற்று கட்டுரையாகத் தர வேண்டுகிறேன்.
பா. இளஞ்சூரியன், கும்பகோணம்.
ஐபோன் பயன்பாடு தமிழகத்தில் பரவத் தொடங்கியுள்ளது. தங்களின் கட்டுரையில் தரப்பட்டுள்ள “அறியாத வசதிகள்” நிச்சயம் இதனைப் பயன்படுத்துவோருக்கு அதிக உதவியாய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
என். சிவசுப்ரமணியன், பெங்களூரு