அக்டோபர், 20, 2016: கன்னியாகுமரி மாவட்டம், வள்ளவிளை கிராமத்திலுள்ள சர்ச் பாதிரியார், எனக்கு போன் செய்து, ரீகா எப்படி இருக்கிறாள், கிராமமே அவளது வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது என்றார்.என் நினைவலைகள் சில மாதங்களுக்கு பின்னோக்கி சென்றது. வள்ளவிளை கிராம மக்கள் சில பேர், என்னை சந்திக்க வந்தனர். எங்கள் கிராமத்திலுள்ள ஒருவரின் குழந்தைக்கு கல்லீரல் பிரச்னை உள்ளது. தந்தை கூலித் தொழிலாளி. அவர்களை பார்க்கவே, சங்கடமாக இருக்கிறது. கிராம மக்கள் சேர்ந்து, இக்குழந்தையை காப்பாற்ற நினைக்கிறோம் என, அவளது பரிசோதனை முடிவுகளை என்னிடம் கொடுத்தனர்.
ஏற்கனவே, ரீகாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவரிடம் பேசினேன். மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்வதற்காக, ரீகாவை சென்னைக்கு அழைத்து வரச் சொன்னேன். ரீகாவை முதலில் சந்தித்த போது, மூச்சுத்திணறல் அதிகபடியாக இருந்தது. அப்பாதிப்பு அவளது நுரையீரல் வரை தொற்றி இருந்தது. முதலில் மூச்சுத் திணறலை சரிசெய்வதற்காக, பிராண வாயு அளித்தோம். மருந்து மாத்திரைகளால் குணப்படுத்த இயலாது. கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை ஒன்றே தீர்வு. அதற்கான முயற்சிகள் மேற்கொண்டோம். ரத்த உறவு மட்டுமே, கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக கொடுக்கலாம் என்பதால், தாய், தந்தையருக்கு, அதற்கான தகுதி இருக்கிறதா என்பதை ஆராய்ந்த போது, முடிவுகள் சாதகமாக அமையவில்லை. எனவே, தமிழ்நாடு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியலில், ரீகாவின் பெயரை பதிவு செய்துவிட்டு காத்திருந்தோம். பல மாதங்களுக்குப் பின், சென்ற ஆண்டு அக்டோபர் மாதம், அவளுக்கான கல்லீரல் கிடைக்கப் பெற்றது. உடனடியாக, கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்தோம். இதில் அவளது உடல் தேறி வந்தது. நுரையீரலில் பிரச்னை இருந்ததால், அவளால் இயல்பாக சுவாசிக்க முடியவில்லை. இரண்டு வாரங்கள், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ரீகா, குணமாகி கொண்டே வந்தாள். இதற்கிடையில் அவளது தங்கை, இதே பிரச்னையில் இறந்து விட்டாள். அது கூட, ரீகாவுக்கு தெரியப்படுத்தவில்லை. ரீகாவுக்கு ஏற்பட்ட பாதிப்பை, மருத்துவ மொழியில், 'ஹெப்படோ பல்மோனரி சிண்ட்ரோம்' என கூறுவர். இது ஏற்பட, பல காரணங்கள் இருந்தாலும், மரபணு கோளாறுகளும் காரணம் என நம்பப்படுகிறது. ரீகாவுக்கு சிகிச்சை நல்ல முறையில் முடிந்திருந்தாலும், வாழ்நாள் முழுக்க, சில மாத்திரைகள் அவள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். ரீகா குணமடைந்ததற்கு, மருத்துவர்கள் மட்டும் காரணமல்ல. வள்ளவிளை, கிராம மக்களும் தான். என்னை முதலில் அவர்கள் சந்தித்த போது, சிகிச்சைக்கு மட்டும், 20 லட்சம் செலவாகும் என்றபோது, அதற்கு நாங்கள் பொறுப்பு என்றதோடு, அனைவரும் சேர்ந்து, அந்த தொகையை கொடுத்துவிட்டனர். கடவுள் நேரடியாக உதவுவதில்லை;
மற்றவர்கள் வழியாக உதவுவார் என்ற கூற்று, நினைவுக்கு வந்தது. மூன்று மாதங்கள், ரீகாவின் குடும்பம் சென்னையில் தங்கியதற்கும், சாப்பாட்டுக்குமான அனைத்து செலவுகளையும், கிராமமே ஏற்றது. இம்மக்களுக்காகவே ரீகா எப்பிரச்னையும் இல்லாமல், குணமடைய வேண்டும் என, நினைத்துக் கொண்டேன்.
நரேஷ்.பி.சண்முகம்
குழந்தைகள் நல கல்லீரல் சிறப்பு நிபுணர்.சென்னை.