உமேஷின் சொந்த ஊர் நாகப்பட்டினம்; திருமணமானவர். ஐந்து வயதில் ஒரு மகன் இருக்கிறார். சென்னையில், ஒரு கம்பெனியில், ஐ.டி., பிரிவில் பணிபுரிகிறார். உமேஷ் பணிபுரியும், அதே நிறுவனத்தில் பணிபுரிபவர் ஷீலா; திருமணமானவர். மூன்று வயதில், ஒரு குழந்தை உண்டு.
உமேஷ் ஒரு நாள் என்னிடம் ஆலோசனைக்கு வந்தார். விசாரித்த போது தான் தெரிந்தது, உமேஷுக்கு ஷீலாவின் மேல், ஓர் ஈர்ப்பு. ஷீலாவின் கவனத்தை ஈர்க்க, அவரை தினம் பார்க்க ஆரம்பித்தார். ஏதோ ஒரு கட்டத்தில், ஷீலாவின் மேல் ஈர்ப்பு அதிகமாகி இருக்கிறது. இருவருமே, ஒருவரை ஒருவர் சாராதவர்கள், சம்பந்தமே இல்லாதவர்கள். ஓரளவு தான் பழக்கம்; ஆனால் நெருக்க மில்லை. மற்றவர்களோடு, கூட்டத்தோடு கூட்டமாக மட்டுமே சந்திப்பேன் என்றார். அதற்கு நான், அப்போது அவளை கவருவதற்காக, அவள் விரும்பும் படியாக, அல்லது அவள் கேட்கும் படியாக பாடுவது, பேசுவது, பார்ப்பது என, கவனத்தை ஈர்க்க முயற்சி செய்திருப்பீரே, என்றேன். அவளும், உங்கள் பேச்சை ரசித்து புன்னகைப்பாள். ஆனால், பதில் எதுவும் சொல்வதில்லை. இப்படி இருக்கிறதா? உங்கள் நிலைமை என்றதற்கு, ஆம்! என, தலை குனிந்து கொண்டார். மருத்துவர்கள் இதை, 'கவன ஈர்ப்பு காதல்' என்கின்றனர். இது முழுமையான காதல் அல்ல. உங்களுக்குள் காதல் உணர்வு நிரம்பி இருக்கிறது. ஆனால், அவளுக்குள் அதுபோன்ற உணர்வு இருக்காது. நிலைமை இப்படி இருந்தாலும், இருவருமே ஒருவரையொருவர் ரசிப்பீர்கள். அவள், தனிமையில் சந்திப்பதையோ, நெருக்கத்தையோ அனுமதிக்க விரும்ப மாட்டாள். பின் எதற்கு, எதையோ யோசித்து, கிடைக்காத ஒரு நபரின் மீது அன்பு வைத்து, அதுவே அதிகமாகி பிரச்னையில் முடிய வேண்டும். அதிலும், ஏற்கனவே திருமணமானவர் வேறு என்றேன். இல்லை, இது ஒரு ஈர்ப்பு மட்டுமே என புன்னகைத்தார். அவருக்கு ஆலோசனை வழங்க ஆரம்பித்தேன். இது முதல் காதல் கிடையாது. அதிலும், நீங்கள் திருமணமானவர் வேறு. எனவே, இந்த கவன ஈர்ப்பு காதலை தவிர்த்து விடுங்கள். இல்லையேல், நாளடைவில், இது மன அழுத்தத்தில் கொண்டு விடும். அழகான தங்களின் குடும்பத்தையும், சம்பந்தமே இல்லாமல், வேறு ஒரு பெண்ணின் வாழ்க்கையையும் பாதிக்கக்கூடும் என்றேன்.
தேன்மொழி, மனநல ஆலோசகர், சென்னை.