என் அம்மாவுக்கு, 70 வயதாகிறது சரியாக நடக்க முடியவில்லை. மேலும், கால் மூட்டி வீங்கி இருக்கிறது மருத்துவர் ஆர்த்தரைடிசாக இருக்கும் என்கிறார்? ஆர்த்தரைடிஸ்க்கு என்ன சிகிச்சைகள் அளிப்பர் விளக்குங்களேன்?
கலைவாணி, சிட்லபாக்கம்
உடலில் இரண்டு எலும்புகள் சேரும் இடத்தை இணைப்புகள் என்பர். இரண்டு எலும்புகளை ஒன்றாக இணைக்க, இணைப்புத் திசுக்களும் கார்டிலேஜ் திசுக்களும் லிகமென்ட் எனும் தசைநார்களும், குருத்தெலும்புகளும் உதவுகின்றன. கை, கால் மூட்டுகள் மற்றும் உடலில் இரண்டு எலும்புகள் கூடும் இணைப்புகளில் வலி, வீக்கம் இருந்தால் ஆர்த்தரைடிஸ் எனப்படும். இணைப்பு எலும்புகளுக்கு இடையே உள்ள கார்டிலேஜ் எனும் மென்மையான திசுக்களின் அமைப்பு பாதிக்கப்படும் போது குருத்தெலும்புகளும், மூட்டு எலும்புகளும் ஒன்றோடு ஒன்று உராய்ந்து தேய்வதால், வலி, வீக்கம் ஏற்பட்டு ஆர்த்தரைட்டிஸ் பிரச்னை ஏற்படுகிறது.வரக் காரணம் அதிக எடை, பரம்பரை, லிகமென்ட் எனும் தசைநார் கிழிந்து போகுதல், விபத்துகளில் அடிபடுதல், என இப்பாதிப்பு ஏற்பட பல காரணங்கள் உள்ளன. இணைப்பு மூட்டுகளில் வீக்கம், வலி, இறுக்கமான உணர்வு ஆகியவை ஆர்த்தரைடிசின் பொதுவான அறிகுறிகள். நாள்பட்ட ஆர்த்தரைட்டிஸ் பிரச்னையைக் கவனிக்காமல் விட்டால், இணைப்பு எலும்புகளில், நிரந்தரமான பாதிப்பை ஏற்படுத்துவதோடு, சில வகை ஆர்த்தரைட்டிஸ்கள் இதயம், கண்கள், நுரையீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளையும் பாதிக்கலாம்.
இதற்கான பரிசோதனைகள்?
மூட்டுகளின் அசைவுத் தன்மையைப் பொறுத்து பாதிப்பை கண்டுபிடிக்கலாம். இதைத் தவிர, எக்ஸ் ரே மற்றும் ஸ்கேன் பரிசோதனைகளும் உள்ளன. ஆர்த்தரைடிசில் வகைகளும் உள்ளன. நம்முடைய நோய் எதிர்ப்பு செல்களே, நம்முடைய மூட்டுப் பகுதியைத் தாக்கி, வீக்கம் உள்ளிட்ட, பாதிப்பை ஏற்படுத்துவது வேறு வகை ஆர்த்தரைடிஸ். இதை ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ் என்பர். இது ஆட்டோ இம்யூன் பாதிப்பால் ஏற்படுகிறது. இதனால், இளைஞர்கள் குறிப்பாக பாதிக்கப்படுகின்றனர்.நம் முழு எடையும் கால் மூட்டுகளில் தாங்கப்படுவதால் உடல் எடை கட்டுக்குள் இருக்க வேண்டும். மூட்டுப் பகுதியில், மெதுவாக எளிய பயிற்சிகள் செய்வது மூட்டின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கும், மேலும், இறுக்கம் அடைவதைத் தடுக்க சிறந்த வழி. ஆக்குபேஷனல் மூலம், பல பயிற்சிகளை செய்யலாம். சிலருக்கு பாதிப்பு தீவிரமாக இருக்கும்பட்சத்தில், அறுவைச் சிகிச்சை மட்டுமே தீர்வாகும்.
ஷியாம்
எலும்பு நிபுணர், சென்னை.