நந்தாவின் செல்போன் அலறியது. புது எண் அழைப்பது யார் என, தெரியவில்லை. எடுத்து ஹலோ சொன்னதும், உன்னோட மனைவி உனக்கு முக்கியமா என, கேட்டான். யார் நீங்க? அவளுக்கு என்னாச்சு எனக் கேட்டேன். உனக்கு உன் மனைவி முக்கியம்ன்னா, 25 லட்சத்தோட வா என்றான். எப்போது எங்கே என சொல்றேன் என்றான். நந்தாவின் சொந்த ஊர் மதுரை. நர்மதா, நந்தாவின் ஊருக்கு பக்கத்து ஊர். கல்லுாரி காலத்தில் இருந்து இருவரும் காதலர்கள். வீட்டில் விஷயத்தை தெரியப்படுத்திய போது ஊர், ஜாதி, மதம், பழக்க வழக்கம் இவை எல்லாம், பிரச்னையாக உருவெடுத்தது. எனவே, வீட்டை விட்டு ஓடிவந்து, சென்னையில் அடைக்கலமாகி, திருமணமும் செய்து கொண்டனர். நந்தாவுக்கும், நர்மதாவுக்கும் நல்ல வேலை கிடைத்தது. இருவரும் நகரத்து வாழ்க்கைக்குள் மூழ்க ஆரம்பித்தனர். ஜீன்ஸ், டி - சர்ட் என, நர்மதாவின் நடை உடை பாவனைகள் மாறின.நந்தாவும் இதை ரசித்தான். மேலும் 'பேஸ்புக், டுவிட்டர்' என, நர்மதாவின் பங்களிப்பை பார்த்து வியந்தான். சுதந்திரமாக இருவரும் இருந்த நிலையில் தான், இப்படியொரு தொலைபேசி அழைப்பு. நந்தா வீட்டிற்கு மன உளைச்சலோடு சென்ற போது, நர்மதா அங்கிருந்தாள். மீண்டும் தொலைபேசி அழைப்பு வர பேசினான். எதுக்கு பணம் கேட்கிறான், மனைவி வீட்டில் இருக்கும் போது என, நினைக்கிறாயா? உனக்கு எம்.எம்.எஸ்., அனுப்பி இருக்கேன் பாரு என்றான். எம்.எம்.எஸ்., பார்த்ததும் அதிர்ந்துவிட்டான் நந்தா. நர்மதா வேறு ஒரு ஆணுடன் நெருக்கமாக இருப்பதை போன்ற படம் வந்திருந்தது. ஏதோ ஒரு சூழ்நிலையில் குடிப்பழக்கம் நர்மதாவிற்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால், ஏற்பட்ட பிரச்னைகளே மேலே சொன்னவை. இதற்கு காவல் நிலையம் வரை சென்று, சம்பந்தப்பட்ட ஆளை கைது செய்து, பிரச்னையை முடித்தனர். பின், என்னிடம் கவுன்சிலிங்குக்கு வந்தனர். ஒரு குடும்பத்தில் ஆண் தவறு செய்வதை விட, பெண் தவறு செய்தால் குடும்பம் சீரழிந்துவிடும். குடியால் மானம், மரியாதை இழக்க நேரிடும் என்றேன். அதோடு குடிப்பழக்கத்தால் அல்சர், வயிற்றுப்புண், மன அழுத்தம், புற்றுநோய் போன்ற பல பாதிப்புகள் வரும் என்றதோடு, பல நாட்கள் வரச் சொல்லி ஆலோசனை வழங்கினேன்.
மனோகரி,
மனநல ஆலோசகர், பாண்டிச்சேரி.