இதய மாற்று அறுவைச் சிகிச்சை என்றால் என்ன?
இதயம் முழுமையாக செயல்படாமல் பலவீனமானவர்களுக்கு, அவர்களின் இதயத்தை எடுத்துவிட்டு, வேறு இதயத்தை பொருத்துவதே, இதய மாற்று அறுவைச் சிகிச்சை.
யாருக்குகெல்லாம் இதய மாற்று அறுவைச் சிகிச்சை தேவைப்படுகிறது?
அடிக்கடி இதய பலவீனம் அடைபவர்கள். அதிகபடியான மூச்சுத்திணறல் உள்ளவர்கள், மருந்து மாத்திரை அல்லது வேறு இதய அறுவைச் சிகிச்சைகளால் இதய பிரச்னையை சரிசெய்ய முடியாதவர்கள், சீரற்ற இதயத்துடிப்பு உள்ளவர்கள் போன்றவர்களுக்கு செய்யப்படுகிறது.
யாரிடமிருந்து மாற்று இதயம் பெறப்படுகிறது?
மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து பெறப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை சாலை விபத்துகளில் பாதிப்படைந்து, மூளைச்சாவு அடைபவர்கள் அதிகம்.
இறந்தவர்களிடமிருந்து இதயங்கள் எடுக்கப்படுவதில்லையா? மாற்று இதயம் எவ்வாறு பொருத்தப்படுகிறது?
இல்லை. இதயத்தை எடுப்பவர்களிடமிருந்து, நான்கு மணி நேரத்துக்குள் பொருத்தி செயல்பட வைக்க வேண்டும். இல்லையென்றால், இதயத் தசைகளை பாதுகாக்க முடியாது. ஐஸ் பேக்கில் வைத்து குளிர்வித்த பின் தான், பொருத்துவோம்.
மூளைச் சாவு அடைந்தவரிடமிருந்து எடுக்கப்படும் இதயத்தை துடிக்க வைக்க கருவி உள்ளதா?
உள்ளது. இதற்கு அதிக செலவாகும் என்பதால், இன்னும் இந்தியாவில் பிரபலமடையவில்லை. இதற்காகும் செலவில், ஒரு அறுவைச் சிகிச்சையையே முடித்து விடலாம்.
எந்த காரணங்களால் இதய செயலிழப்பு ஏற்படுகிறது?
இதயத்திலுள்ள தசைகள் பலவீனமடைவது, இதய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவது, அதோடு இதை கவனிக்காவிட்டால் இதயம் பலவீனமடைவது. இதய வால்வுகள் பாதிக்கப்படுவது என, பல்வேறு காரணங்களால், இதய செயலிழப்பு ஏற்படுகிறது.
முதன் முதலில் இதய மாற்று அறுவைச் சிகிச்சை எப்போது நடந்தது?
1967ம் ஆண்டு தெற்கு ஆப்ரிக்காவில் மருத்துவர், கிறிஸ்டியன் பானாட் செய்தார். இருந்தாலும், கடைசி, 20 ஆண்டுகளில் தான், இச்சிகிச்சை பிரபலமாகியது.
மாற்று உறுப்பை மற்றவருக்கு பொருத்தும் போது, உடல் அதை ஏற்றுக் கொள்ளுமா?
கட்டாயம் ஏற்றுக் கொள்ளாது. இதற்காக ஸ்டீராய்டு போன்ற மாற்று மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே, இதய மாற்று அறுவைச் சிகிச்சைகள் முழுமையடைந்தன. அதற்காகத் தான், மாற்று உறுப்புகள் ரத்த வகைகள் ஒன்றாக இருக்கும் நோயாளிகளுக்கு பொருத்தப்படுகிறது.இதய மாற்று அறுவைச் சிகிச்சைக்குப் பின்,
சாதாரண வாழ்வைப் பெற முடியுமா?
நிச்சயமாக அறுவைச் சிகிச்சைக்குப் பின், நோய்த் தொற்றுகள் வேறு சில பாதிப்புகள் ஏற்படாதவாறு இருக்க, நிறைய மருந்துகள் எடுக்க வேண்டி வரும். குறைந்தது ஓர் ஆண்டு காலம், சில மருந்துகளை, தொடர்ந்து எடுக்க வேண்டி வரும்.
இச்சிகிச்சைக்காகும் செலவு?
தனியார் மருத்துவமனைகள் என்றால், 20 லட்சம் ஆகிறது. தமிழ்நாடு உறுப்பு மாற்று அறுவைக்கான காத்திருப்போர் பட்டியலில் பதிவு செய்து தான் பெற முடியும்.
எம்.எம்.யூசுப்
நுண் துளை இதய
அறுவைச் சிகிச்சை நிபுணர்.
சென்னை.
82206 69911