பாதை போட்டவர்! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements
பாதை போட்டவர்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 பிப்
2017
00:00

கை நாட்டு அம்மா; கையெழுத்து மட்டுமே போட தெரிந்த அப்பா என்ற, அடித்தட்டு குடும்பத்தில் பிறந்தவன். இன்று எழுத்தாளராகவும், பத்திரிகையாளனாகவும், பள்ளி ஆசிரியராகவும் பலர் போற்ற பணியாற்ற காரணம், வைத்தியநாதன் என்ற ஒருவர் போட்ட பாதை தான்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள, 10 கிராமங்கள், ஒரு பண்ணையாரின் கீழ் இருந்தன. அனைவரும் பண்ணையின் அடிமைகள். ஒரு தொடக்க பள்ளி மட்டுமே இருந்தது.
வைத்தியநாதன் சற்று வசதி உடைய வீட்டுப்பையன். தொடக்கப் பள்ளியை, செம்போடையில் முடித்து, திருச்சி, செயின்ட் ஜோசப் கல்லூரியில், பி.காம்., முடித்தார். 50 ஆண்டுகளுக்கு முன், பல வங்கிகளும், முன்னணி நிறுவனங்களும் அவரை அள்ளிப்போக தயாராக இருந்தன. ஆனால், எங்கள் ஊரை, பண்ணையாரின் அடிமை தனத்திலிருந்து மீட்க நினைத்த அவர், தனக்கு வந்த வாய்ப்புகளை உதறி, கல்வியால் எங்கள் மக்களை மீட்க முயற்சிகளை துவங்கினார்.
அதிகாரிகளை சந்தித்து, முதலில் ஒரு நூலகத்தை எங்கள் ஊருக்கு கொண்டு வந்தார். அடுத்து, உயர்நிலை பள்ளியை கொண்டு வர அதிகாரிகளை அணுகினார். 'இடத்தை காட்டுங்கள் பள்ளிக்கு அங்கீகாரம் தருகிறோம்' என்றனர். ஊரே, பண்ணையாரிடம் இருந்தது. படித்தால் பண்ணை வேலைக்கு யாரும் வர மாட்டார்கள்... தங்களையே எதிர்க்கும் சூழல் வரும் என்பது பண்ணையாரின் பயம். எனவே, அவர் பள்ளிக்கு இடம் தர முடியாது என்று கூறிவிட்டார்.
ஒரு முடிவிற்கு வந்த வைத்தியநாதன், ஊரிலிருந்த ஒரு பிரதான மண்சாலையின் நடுவே, 10 அறைகளையுடைய கட்டடத்தை கட்டினார். சாலையை ஆக்கிரமித்து விட்டதாக, பலரை தூண்டிவிட்டார் பண்ணையார். அதற்கு வைத்தியநாதன், 'நான் ஒரு பாதையை தான் அடைத்தேன். பல்லாயிரக் கணக்கானோருக்கு, வாழ்க்கை பாதை இங்கிருந்து துவங்கும்' என்றார். வாகனங்கள் இல்லாத காலம் என்பதால், போக்குவரத்தில் பெரிய பிரச்னை எதுவும் ஏற்படவில்லை. அதற்கு பின், நடந்ததெல்லாம் வரலாறு.
தொழிலதிபர்களாக, கல்வியாளர்களாக, படைப்பாளர்களாக, தாங்கள் சார்ந்த துறைகளில் ஜொலிப்பவர்களாக பலரை உருவாக்கியிருக்கிறது இப்பள்ளி.
அதற்கு காரணமான அந்த புண்ணியவான், காற்றில் கரைந்துவிட்டாலும், நான் உட்பட பல்லாயிரக்கணக்கானோர், உண்ணும் ஒவ்வொரு பருக்கையிலும் அவர் உள்ளார்.
- த.நாகேந்திரன், ஆசிரியர், நாகப்பட்டினம்.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X