பள்ளிக்கூட நிகழ்வுகள், பசுமையான நினைவுகள்; ஈரமணலில் பதியும் காலடித்தடம் போல் நிற்கிறது. திருச்சியில், உயர்நிலை பள்ளியில், படிக்கும்போது, என் உறவுப் பெண் இருவர் என்னுடன் படித்தனர். அவர்கள் இரட்டையர்.
அதில், ஷப்ரீன் மிகவும் குறும்புக்காரி. ஆப்ரீன் அமைதியானவள்; பொறுமைமிக்கவள். ஷப்ரீன் கணிதவியல் பிரிவும், ஆப்ரீன் வணிகவியல் பிரிவும் படித்தனர்.
ஒருநாள், தோழியருடன் கூடைப்பந்து விளையாடி கொண்டிருந்தாள் ஷப்ரீன். அப்போது, பள்ளியில் புதிதாக சேர்ந்த ஆசிரியை, மைதானத்தின் அருகே போய் கொண்டிருந்தார். ஷப்ரீனின் உடன் இருந்த தோழியர், 'அந்த புதிய ஆசிரியை மீது பந்தை எறிந்தால், சாக்லேட் வாங்கி தருகிறோம்' என்று கூற, அவளும், ஆசிரியை மீது பந்தை எறிந்தாள்.
கோபமும், வெறுப்புமாக அவளை பார்க்க, ஓடி ஒளிந்து கொண்டாள். ஆசிரியை வணிகவியல் வகுப்பிற்கு வர, அங்கிருந்த ஆப்ரீனை, ஷப்ரீனாக நினைத்து, கோபத்துடன் கண்டித்து, காதை திருக, ஆப்ரீன், ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றாள். உடன் இருந்த வகுப்பு மாணவியர், 'அவர்கள் இரட்டையர்கள்' என்று கூறி, கணிதவியல் வகுப்பிலிருந்த ஷப்ரீனை அழைத்து வந்தனர்.
உருவ ஒற்றுமையை பார்த்து, திகைத்து நின்ற ஆசிரியையிடம், ஷப்ரீன் நடந்ததை கூறி, மன்னிப்பு கேட்க, வகுப்பிலிருந்த மாணவியரும், ஆசிரியையும் சிரித்து மகிழ்ந்தனர். சிந்தையில் பதிந்த இந்த நிகழ்வை, இன்று நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.
- இ.எஸ்., காஜாமலை.