இளவரசன் ப்ருத்திவி! (3) | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements
இளவரசன் ப்ருத்திவி! (3)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 பிப்
2017
00:00

சென்றவாரம்: மாறுவேடத்தில் சென்ற மன்னரும், அமைச்சரும் அரண்மனை திரும்பினர். அவர்களை சந்திக்க ஓடிவந்தாள் மைத்ரேயி. இனி -

அழகு, அறிவு, சுறுசுறுப்பு என அனைத்திலும், சிறந்து விளங்குபவள் மைத்ரேயி. இவளது தந்தை, மந்திரியின் முன்னாள் மெய்காப்பாளர். அவரும், அவர் மனைவியும் நோயில் இறந்து விட, இந்த குழந்தையை தங்களுடனேயே வளர்த்தனர் மந்திரி தம்பதியர். மகாராணிக்கு, இவளை மிகவும் பிடிக்கும் என்பதால், அங்கேயும் போய் அரட்டை அடிப்பாள்.
மகாராஜாவின், மாறுவேட ரகசியத்தை அறிந்த ஒரே பெண் மைத்ரேயி! அரண்மனை வாயிலில் அவர்கள் நிற்பதையும், காவல்காரன் அவர்களுடன் தகராறு செய்வதையும் பார்த்தவள், திடுக்கிட்டு, வேகமாக வாயிலுக்கு சென்று, ''இவர்கள், மகாராஜாவின் மதிப்பிற்குரிய விருந்தினர்கள். இவர்களை உடனே உள்ளே விடாமல், என்ன தகராறு செய்கிறாய்?'' என்று காவல்காரனை அதட்டினாள்.
''மரியாதைக்குரிய விருந்தினரே! இவன் உங்களை வேண்டுமென்றே தடுக்கவில்லை... இவன் வேலைக்கு புதிது. அறியாமல் செய்த தவறை தயை கூர்ந்து மன்னித்து விடுங்கள். மகாராஜாவும், மந்திரியும் உங்களின் வரவிற்காக மிக ஆவலுடன், வெகுநேரமாக காத்து கொண்டிருக்கின்றனர். வாருங்கள்,'' என்று உள்ளே அழைத்து சென்றாள்.
'நீ மட்டும் தக்க தருணத்தில் வந்திருக்காவிடில், எங்கள் கதி... உன் உதவியால் நாங்கள் தப்பித்தோம். இனிமேல், நாங்கள் வெளியே புறப்பட்டால், நீ வாயிற்காப்பாளனாக மாறிவிடு; புரிகிறதா...' என்று கூறினர்.
அரண்மனையில் -
இருவரும் உடையை மாற்றிக்கொண்டு, அறையை விட்டு வெளியே வந்து அமர்ந்தனர்.
பேச்சை ஆரம்பித்தார் மகாராஜா.
''ராஜேந்திரா! எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. எப்படி இருந்தாலும், அந்த லச்சினை மோதிரம், அவளிடம் இருப்பது உகந்தது அல்ல... அதை திரும்ப வாங்கிவிடுவது தான் நல்லது...'' என்றார் மகாராஜா.
''இல்லை மகாராஜா... நாம் வேண்டுமென்றே அந்த மோதிரத்தை அவர்களுக்கு கொடுக்கவில்லை. இது விதியின் விளையாட்டு. நாமாக அதை திரும்ப கேட்டால், வீண் விவாதங்களும், பிரச்னையும் தான் வரும். 'இது என் அரச முத்திரை... ஜாக்கிரதையாக வைத்துக்கொள்' என்று சொல்லியா கொடுத்தோம்... இன்று வரை, அந்த மோதிரம் உங்கள் விரலை விட்டு நழுவி விழுந்ததே இல்லை...
''மேலும், உங்களின் இத்தனை ஆண்டு ஆட்சியில் நாம் மாறுவேடத்தில் செல்லாத ஊர்கள் இல்லை; கிராமங்கள் இல்லை; நகர்புறங்கள் இல்லை. ஆயினும், இன்று, நாம் செல்ல வேண்டிய கிராமத்துக்கு செல்லாமல், சமஷ்ட்டிப்பூர் கிராமத்திற்கு சென்றது ஏன்...
''பச்சை கம்பளம், கிளி கொஞ்சும் அந்த அழகிய கிராமத்திற்கு செல்ல வைத்தது ஏன்... நம்மையும் மீறிய ஒரு சக்தி, நம்மை இயக்கியது தான் என்பதை நாம் ஒப்பு கொள்ள வேண்டும் அல்லவா...
''மற்ற எந்த கிராமங்களிலும் கிட்டாத மிக பண்பான வரவேற்பு. அப்படியே நெகிழ வைத்து விட்டதல்லவா... இதுநாள் வரை மாறுவேடத்தில் எத்தனையோ ஊர்களுக்கு சென்றிருக்கிறோம். அங்கெல்லாம், ஒரு வாய் தண்ணீர் கூட அருந்தாத நீங்கள், இன்று காலை, எத்தனை ஆர்வத்துடன் ருசித்து ருசித்து அந்த கம்பங் கூழையும், வெஞ்சனத்தையும், தயிரையும் ஒரு கை பார்த்தீர்கள்...
''ஏன் நானும் தான். 'ஓ! என்ன ருசி; என்னவொரு கை மணம்!' நினைக்க நினைக்க, என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. இவையெல்லாமே, எதிர்காலத்தில் ஏதோவொரு பிணைப்பை, ஏற்படுத்த ஒரு அடிகோலியாகும் என்றே தோன்றுகிறது.
''அந்த மோதிரம், விவசாயி இம்புலி மனைவி சின்னியிடமே இருக்கட்டும். அதை பற்றி அவர்கள் மூச்சுவிட கூடாது. மிகவும் பத்திரமாக பாதுகாத்து, எதிர்காலத்தில் அந்த மோதிரத்தின் உரிமையாளரிடம் ஒப்படைக்கும் பொறுப்பு, அவளை சார்ந்தது என்பதை மட்டும், அவளுக்கு மிக ஜாடையாக தெரிவித்து விட வேண்டும். அதையும், உடனே இன்று இரவிற்குள் செய்து விட வேண்டும். அதற்குரிய மிக நம்பகமான ஆள் நமக்கு தேவை...'' என்றார் மந்திரி.
''ஆம் ராஜேந்திரா! நீ சொல்வது முற்றிலும் சரி. இனியும் தாமதிக்காமல், அந்த ஆளை உடனே வரவழைத்துவிடு,'' என்றார் மகாராஜா.
அச்சமயம் பார்த்து, இவர்கள் முன், ''வணக்கம் மன்னா! வணக்கம் பிதாஜி!'' என்று சொல்லி அமர்ந்தாள் மைத்ரேயி.
இவளை பார்த்ததும், இருவருக்கும், நம்பகமான ஆள் கிடைத்த சந்தோஷம்.
''உன்னிடம் மிகவும் முக்கியமான விஷயங்கள் நிறைய பேச வேண்டி இருக்கிறது... இப்போது உன் உதவி தேவை. சற்று தயவு பண்ணும்மா!'' என்றார் மந்திரி.
''ம்ம்ம்... இன்று காலை, உங்களுக்கு எப்பேர்ப்பட்ட உதவி செய்தேன். அதற்கு நன்றியாக, நீங்கள் என்ன செய்துவிட்டீர்கள்... வேறு ஒருவராக இருந்தால், பாதி ராஜ்ஜியத்தை எனக்கு பரிசாக கொடுத்திருப்பார். பட்டத்து இளவரசருக்கு என்னை மனைவியாக்கி, வருங்காலத்து மகாராணி என்று அறிவித்திருப்பார். இதில் நீங்கள் எனக்கு எதை செய்தீர்கள்?''
''ஆம் மைத்ரேயி! நீ சொல்வது முற்றிலும் சரி தான். ஆனாலும், பட்டத்து இளவரசர் இன்னும் பிறக்கவே இல்லையே... அவர் இனி பிறந்து, அவருக்கு திருமண வயது எட்டும்போது, நீ தலை நரைத்து, பற்கள் முற்றிலும் போய் படு கிழவியாகி இருப்பாயே... அந்த பயல் உன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதிப்பானா... நீயே சொல்,'' என்றார் மகாராஜா.
''அது போகட்டும்... இப்போது என்ன விஷயம்... தயவு செய்து சொல்ல முடியுமா?'' என்று மிடுக்காக கேட்டாள் மைத்ரேயி.
'இன்று காலை, விதி எங்களை அழைத்து சென்றது, சமஷ்ட்டிப்பூர் என்ற கிளிகொஞ்சும் மிக அழகிய கிராமம். அங்கு தான் இம்புலியையும், அவன் மனைவி சின்னியையும் சந்தித்தோம். சின்னியிடம் அரச லச்சினை பதித்த மோதிரத்தை தவற விட்டோம். நீ தான் அவர்களிடம் இருந்து வாங்கி வர வேண்டும்' என்றனர் இருவரும்.
''மகாராஜா! பிதாஜி! நான் கட்டாயம் செய்வேன். அரச லச்சினையை தொலைப்பது, அபாயகரமானது என்று நான் சொல்ல தேவையில்லை. அந்த அதி முக்கிய மோதிரத்தை, உடனே திரும்ப பெற முயற்சி ஏதும் செய்யாமல், இவ்வளவு நேரம் வரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள்...
''எப்பேர்பட்ட இக்கட்டில் நீங்கள் மாட்டிக் கொண்டிருக்கிறீர்கள்... படிப்பறிவு இல்லாத அந்த விவசாயி, அதை விற்க ஏற்பாடுகள் செய்திருக்கலாம் அல்லது நண்பர்களிடம் காண்பித்து, 'இதோ பார்த்தீர்களா... அந்த இரண்டு பேர் என் மனைவிக்கு கொடுத்த பரிசு' என்று சொல்லி அவர்களை ஆச்சர்யத்தில் மூழ்கடித்திருக்கலாம்...
''மகாராஜா! நினைக்கவே மிகவும் பயமாக இருக்கிறது. நம் குலதெய்வம் தான் நம்மை காப்பாற்ற வேண்டும்... சரி... நான் உடனே புறப்படுகிறேன். போகும் காரியத்தில் ஜெயித்துவிட்டால், இரவு எவ்வளவு நேரமானாலும், திரும்பி விடுவேன். ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், திரும்பி வர, இரண்டு நாட்கள் கூட ஆகலாம்... கவலைப்படாதீர்கள்; எப்படியும் நல்ல செய்தியுடன் தான் திரும்புவேன்...
''பிதாஜி! கபிலனை வாயில் காப்பாளனாக உடனே போக சொல்லுங்கள். ஒருவேளை அந்த சமஷ்ட்டிப்பூர் கூட்டம் வந்தால், அவர்களை சமாளித்து, மிக லாவகமாக அரசர் முன் கொண்டு வந்து விடுவான். அதனால், அவனிடமும் ஜாடையாக விஷயத்தை தெரிவித்து விடுங்கள். என்னை போல கபிலனுக்கும், உங்களின் மாறுவேட நாடகம் தெரியுமல்லவா... மகாராஜா எனக்கு ஒரு சிறு உதவி செய்ய வேண்டும்!'' என்றாள் மைத்ரேயி.
''சொல்லும்மா... என்ன உதவி, சற்றும் தயங்காமல் சொல்!'' என்றார் மகாராஜா.
''மகாராணிக்கு இரவு தவறாமல் மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை, தேனில், இரண்டு தேக்கரண்டி கஷாயத்தை கலக்கிக்கொடுக்க வேண்டும். இப்போது நான்கு மணி அல்லவா... நான் கொடுத்து விட்டு தான் வந்தேன். வேளை தவறாமல் கொடுத்தால் தான் உறங்குவார்.
''கட்டிலுக்கு பக்கத்திலுள்ள மேஜை மேல் தேக்கரண்டி, தேன், கஷாயம் எல்லாம் இருக்கிறது. தயவு செய்து நீங்களே இதை கொடுத்து விடுங்கள்; மற்ற பணிப்பெண்களை நம்பவேண்டாம். அவர்கள் கொடுத்தாலும் மகாராணியார் சாப்பிடாமல் பிடிவாதம் பிடிப்பார்.
''தயவு கூர்ந்து சிரமத்தை பார்க்காதீர்கள். இப்போது நான் அவர்களிடம் விடைபெற்று செல்ல முடியாது. நான் புறப்படுகிறேன்... என்னை ஆசிர்வதியுங்கள் மகாராஜா!'' என்று, அவர்களின் காலில் விழுந்து விடைபெற்றாள் மைத்ரேயி.
புன்சிரிப்புடன், ''உத்தரவு!'' என்று சொல்லி, தலை அசைத்தார் மன்னர்.
- தொடரும்...

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X