பொதுவாக, ஆண்களை விட பெண்களுக்குதான் கண்ணீர் அதிகம் வருகிறது.
அதென்ன, பெண்கள் மட்டும் இப்படி எடுத்ததற்கெல்லாம் கண்ணீர் வடிக்கின்றனர் என்று நம்மில் பலருக்கு சந்தேகம் இருக்கும். இதற்கு காரணம் என்ன தெரியுமா?
ஆண்கள் வெளியுலக அனுபவங்களால், நெகிழ்ந்து போகாத நெஞ்சம் உடையவர் களாக இருக்கின்றனர். மாறாகப் பெண்களோ இளகிய நெஞ்சமும், இரக்க சுபாவமும் உடையவர்களாக இருக்கின்றனர். அதனால்தான், எதற்கெடுத்தாலும் உடனே கண்கலங்கி விடுகின்றனர்.
இதற்கு அறிவியல் காரணமும் இருக்கிறது. பெண்களின் விழிகளில், கண்ணீர் சிந்தும் படியான சுரப்பிகள் அமைந்திருப்பதே, அவர்களின் கண்ணீர் வெள்ளத்துக்கு காரணம்.
நாம் அழும்போது நம் கண்ணில் என்ன நடக்கிறது தெரியுமா?
விழி இமைகளுக்கு அடியில் உள்ள சின்னஞ்சிறிய சுரப்பிகள் கண்ணீரை உண்டாக்குகின்றன. இந்த தயாரிப்பு நிகழ்வது கண்களை கழுவி சுத்தமாக்கவே.
நம் உணர்வுகள் பொங்கி எழும்போது, நரம்புகள் இந்தச் சுரப்பிகளுக்கு உடனே தகவல் தந்து, கண்ணீரை சிந்தச் செய்கின்றன.
கண்ணீரை அடக்குவதால், உணர்வுகளுக்கு அதிக அழுத்தம் தருவதோடு, கண்களைச் சுத்தமாக்கும் வாய்ப்பையும் நாம் இழந்துவிடுகிறோம். நம் இதயமும், இளகாமல் இறுகி கல்லாக துவங்கிவிடுகிறது. நரம்பு வியாதிகளும், மெல்ல மெல்ல வந்து பற்றி கொள்கின்றன.
அழ வேண்டிய நேரத்தில் நன்றாக அழுதுவிடுங்கள்; கூச்சப்படாதீர்கள். உங்களுக்கு நரம்புத் தளர்ச்சி நோய் வராமல் தடுப்பதற்காகவே, மனம் அழுகையை வரவழைக்கிறது. வருகிற அழுகைக்கு தாழ்போட்டு அடைக்காதீர்கள். வரட்டும் வழிவிடுங்கள். உங்கள் உடலும், உள்ளமும் சுத்தமாகும்; மனம் தெளிவடையும்; மூளையின் துன்பச்சுமை குறையும்.
அழுதால் நம்மைப் பற்றி மற்றவர்கள், என்ன நினைப்பார்களோ என்ற நினைப்பு, நம் அழுகைக்கு கதவடைத்து விடுகிறது. அதே சமயத்தில், நரம்பு தளர்ச்சிக்கு கதவு திறந்து விடுகிறது என்ற உண்மையை நாம் உணர்வதே இல்லை.
துக்கத்தால் மட்டுமல்ல, ஆனந்தத்தாலும், அன்பினாலும், நம் உள்ளம் விம்மி, விழிகளில் வெள்ளம் பெருகுகிறது.
'நம் கடினமான இதயத்தின் மீது, குருட்டுத்தனம் என்ற புழுதி படிந்திருக்கிறது. அதை கழுவி துடைக்கும் மழை தான் கண்ணீர்' என்று அழகாகச் சொன்னார் அமர இலக்கிய மேதை சார்லஸ் டிக்கன்ஸ்.
அழுத்தப்பட்ட உணர்வு களுக்கு வழி திறந்து மனதை வெளிச்சமும், காற்றோட்டமும், சுதந்திரமும் உடையதாக ஆவதற்கு கனடாவில் ஒரு மருத்துவ மையம் ஏற்படுத்தியிருக்கின்றனர்!
அங்கே வந்து கண்ணீர் விட்டு, ஆனந்தப் பட்டு, சுகப்பட்டுத் திரும்புகின்றவர்கள், கண்ணீரைப் பற்றி புகழ்ந்து கூறியிருக்கின்றனர்.
நெஞ்சை நெகிழ வைக்கும் நிகழ்ச்சிகளை படிக்கும் போதும், பார்க்கும்போது கண்ணீர் விடுங்கள். அன்பு கொண்டவர்களைப் பிரியும் போதும், சந்திக்கும் போதும் கண்கலங்குங்கள். கண்ணீர் அன்பின் சின்னமாகும்!
இனி, பெண்களை மட்டும் அழவைப்பதோடு, நீங்களும் அழுங்க ஆண்களே... சரியா...