அவுரங்கசீப் | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements
அவுரங்கசீப்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 பிப்
2017
00:00

முகலாய வம்சத்தின் கடைசி பேரரசர் அவுரங்கசீப், நவ., 3, 1618ல் மும்பையிலுள்ள, 'டாஹோட்' என்ற இடத்தில் பிறந்தார். 'சக்ரவர்த்தி' என்ற சொல்லுக்கு முற்றிலும் பொருத்தமானவர் இவர்.
அவுரங்கசீப் மிகவும் பொல்லாதவர். தந்தையே சிறை வைத்தவர்; மக்களை வரிகளால் வாட்டி வதைத்தவர்; மதம் மாற்றியவர் என்று தான் வரலாறு சொல்கிறது. ஆனால், அவரது உண்மை முகமே வேறு.
தனக்கென ஒரு வட்டத்தை உருவாக்கி, அதன்படி வாழ்ந்தவர்; மிகவும் நேர்மையானவர்.
ஷாஜஹானின் கடைசி காலத்தில், அவுரங்கசீப் அவரை கவுரவமான அரண்மனை சிறையில் வைத்திருந்தாரே தவிர, கொடுமை படுத்தவில்லை.
ஷாஜஹானின் உடல், உரிய மரியாதையுடனே அடக்கம் செய்யப்பட்டது. அதுவும், தாஜ்மஹாலில், அவரது பிரியத்துக்குரிய மும்தாஜ் உடலுக்கு அருகிலேயே வைக்கப்பட்டது.
அவுரங்கசீப், 24 மணி நேரத்தில், மூன்று மணி நேரம் மட்டுமே உறங்குவார். வேலை தவிர, மீதமிருந்த ஓய்வு நேரங்களில் இஸ்லாமிய மார்க்க நூல்களை படிப்பதில் செலவிடுவார்; தரையில் தான் படுப்பார்; மாமிசம் உண்ணாதவர்.
அரசாங்க கஜானா பணம் மக்களுக்கு உரியது. அரச குடும்பத்தினர் செலவழிப்பதற்காக அல்ல என்பதில், மிகவும் உறுதியாக இருந்தார் அவுரங்கசீப். தன் சொந்த செலவுகளுக்காக, ஒருபோதும், அவர் கஜானாவை உபயோகித்ததில்லை.
எப்போதும் எளிமையான உடைகளையே அணிவார். ஆபரணங்களை அணியாதவர்; பொன், பொருள் மேல் ஆசையில்லாதவர். வெள்ளி, தங்க பாத்திரங்களை கூட உபயோகிக்க மாட்டார்.
பொதுவாக, மன்னர்கள் தங்கள் பிறந்த நாளில் தகதக உடையணிந்து, உடல் முழுவதும் ஜொலிஜொலிக்கும் நகைகள் அணிந்து மக்களுக்கு காட்சி கொடுப்பதை பாரம்பரியமாக வைத்திருந்தனர். ஆனால், எளிமை விரும்பியான அவுரங்கசீப், தன் பிறந்த நாள் கொண்டாட்டங்களை எல்லாம் அனுமதிக்கவில்லை. அன்றைய தினத்தையும், சாதாரண தினமாகவே எடுத்து கொண்டார்.
அவுரங்கசீப்புக்கு குல்லா தைப்பதில் ஆர்வம் உண்டு. அதே போல, குர்-ஆனை தன் கைப்பட எழுதுவதில், அதீத விருப்பம் கொண்டவர். அந்த இரண்டையும் விற்று, கிடைக்கும் பணத்தில் தான், தனிப்பட்ட செலவுகளை பார்த்து கொண்டார்.
மதுவை, வெறுத்தவர். தன் அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளில் மதுவை தடை செய்தார்; அதே போல கேளிக்கை விடுதிகளை இழுத்து மூடினார்; உல்லாச நிகழ்ச்சிகள் நடத்த கூடாதென்று உத்தரவிட்டார்; போதைப் பொருள்களையும் ஒழித்தார்.
அன்றைய காலகட்டத்தில், இறந்த கணவனின் சடலத்தை எரிக்கும்போதே, அதே நெருப்பில், மனைவியும் குதித்து, தங்கள் உயிரை மாய்த்து கொள்ளும், 'உடன் கட்டை' ஏறும் பழக்கம் இந்துக்களிடையே இருந்தது. குறிப்பாக, ராஜபுத்திரர்களிடையே அதிகமாக இருந்தது.
ஒருமுறை, போர்க்களத்தில் இறந்த ஒரு வீரனின் உடலை எரித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அவன் மனைவியை அந்த நெருப்பில் குதிக்க சொல்லி, சுற்றியிருந்தவர்கள் கட்டாயப்படுத்தினர்.
அங்கு வந்த அவுரங்கசீப், அந்த செயலை தடுத்தார். தங்கள் மத விஷயத்தில் தலையிடக்கூடாதென்று அங்கிருந்தவர்கள் வாதம் செய்தனர். ஆனால், அவுரங்கசீப் விடவில்லை.
'இது அநியாயம். இனி இத்தகைய கொடுமைகள் முகலாயப் பேரரசில் நடக்கக்கூடாது. இந்த சடங்கை தடை செய்கிறேன்...' என்று உத்தரவு பிறப்பித்தார். அதற்காக பல்வேறு பிரிவினரிடமிருந்து எதிர்ப்பைச் சம்பாதிக்க வேண்டியிருந்தது. மிகவும் கஷ்டப்பட்டுத்தான் இந்த சட்டத்தை செயல்படுத்தினர்.
'நவுரோஸ்' என்ற பண்டிகையை அக்பர் உருவாக்கியிருந்தார். மிகவும் உல்லாசமான திருவிழா அது. வண்ணமயமான கொண்டாட்டங்கள் நிறைந்தது. அந்த திருவிழாவின் இறுதியில் பேரரசரின் எடைக்கு சமமான பொன், வைர ஆபரணங்களை மக்களுக்கு கொடுக்கும் வழக்கமிருந்தது.
வீணாக அரசாங்க பணத்தை கேளிக்கைகளுக்காக செலவழிக்க விரும்பாத அவுரங்கசீப், நவுரோஸ் பண்டிகையை தடை செய்தார்.
ஒரு பேரரசராக இருந்தாலும், மிகவும் எளிமையாக வாழ்ந்தவர். அவ்வளவு செலவு செய்து, தன் தந்தை, தாய்க்காக தாஜ்மஹால் கட்டியதையே விரும்பாதவர்.
ஏனெனில், தாஜ்மஹால் கட்டுவதற்கு மக்களிடமிருந்த பணமெல்லாம் உறிஞ்சப்பட்டது; இக்கட்டட வேலையில் மக்கள் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டனர்; உயிரிழப்புகளும் ஏற்பட்டன; அரசு கஜானா படுமோசமாகி போனது.
ஆனால், ஷாஜகானுக்கு மக்கள் முக்கியமாக தெரியவில்லை. தன் மனைவிக்காக கட்டும் கட்டடம் மட்டும் நினைவில் இருந்தது. 1632-ல் ஆரம்பித்த தாஜ்மஹாலின் கட்டடப் பணிகள், 1648ல் தான் நிறைவடைந்தன. தன்னுடைய அன்பு மனைவியின் ஆசையை நிறைவேற்றிய சந்தோஷத்தில், கண்ணீர் வடித்தார் ஷாஜஹான்.
எளிமை விரும்பியான அவுரங்கசீப்பின் கண்களுக்கு, தாஜ்மஹால், அழகாக தெரியவில்லை; துயரமாகவே தெரிந்தது.
அதனால், இன்னொரு கருஞ்சலவைக்கல் மாளிகை கட்டுவதற்காக, ஷாஜஹான் எடுத்த முயற்சிகளை தடுத்தார். இருப்பினும் சில முக்கியமான நினைவு சின்னங்களை கட்டினார் அவுரங்கசீப்.
லாகூரில், 'பாட்ஷாய் மஸ்ஜித்' என்ற மிகப்பெரிய மசூதியை கட்டினார். மெக்காவுக்கு அடுத்தபடியாக, மிகப்பெரிய வெளிப்புற வழிபாட்டு தளத்தை கொண்டது இந்த மசூதி.
டில்லி செங்கோட்டை வளாகத்தில், மோடி மஸ்ஜித் என்ற சிறிய மசூதி ஒன்றையும் கட்டினார். லாகூர் கோட்டையை சுற்றி யிருக்கும், 13 நுழை வாயில்களில் ஒன்றான, ஆலம்கீர் என்ற பிரம்மாண்டமான கட்டடம் அவுரங்கசீப்பால் கட்டப்பட்டது தான்.
அவர் எழுதிய உயில்:
நான் இறந்த பின், எனக்கு நினைவு சின்னங்கள் எதுவும் கட்ட கூடாது. என் கல்லறை மேல் அலங்காரங்களும் இருக்க கூடாது. நான் குல்லாக்கள் தைத்து, விற்று சேர்ந்த பணம் கொஞ்சம் இருக்கிறது. அந்த பணத்தை பயன்படுத்தி என் இறுதி சடங்குகளை செய்யுங்கள்.
அந்த பணத்துக்கு மேல் செலவழிக்க கூடாது. என் இறுதி ஊர்வலத்தில் எந்த வித ஆடம்பரமும் கூடாது. இது போக, திருக்குர்-ஆன் எழுதி, விற்று சேர்ந்த பணத்தை என் பையில் வைத்துள்ளேன். அது புனிதமான பணம். அதை ஏழை மக்களுக்கு தானமாக கொடுத்துவிடுங்கள்.
இவ்வாறு எழுதி இருந்தார்.
அஹ்மத் நகரில், 1707 மார்ச், 3ல் அவரது உயிர் பிரிந்தது. அவரது உயில்படியே இறுதிச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டன.
அவுரங்கசீப்பின் இரண்டாவது மகன் பகதூர் ஷா, அடுத்து ஆட்சியில் அமர்ந்தார். மிகப்பெரிய பேரரசைக் கவனிக்க அவருக்கு திறமையில்லை. அவுரங்கசீப் காலத்திலேயே கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்றுக் கொண்டிருந்த மராட்டியர்கள், அவரது மறைவுக்குப் பின், கொஞ்சம் கொஞ்சமாக முகலாயர்களின் இடங்களை கைப்பற்ற ஆரம்பித்தனர். அதனால், முகலாயர்களின் ஆட்சி கலைந்தது.
எளிமையாகவும், நிர்வாகத்தில் கண்டிப்பாகவும் இருந்ததால் தான், அவுரங்கசீப்பால், முகலாயப் பேரரசை கட்டி காக்க முடிந்தது. அவை இல்லாததால் தான் அவருடைய வாரிசுகள் பேரரசை இழந்தனர்.
ஒரு மனிதரின் இன்னொரு பக்கம் இத்தனை இனிமையானதா என்று ரொம்ப ஆச்சர்யமா இருக்கு இல்ல குட்டீஸ்... யாரையும் மனிதர்களின் ஒரு முகத்தை மட்டும் பார்த்து அவர்களை எடை போடாதீங்க; அவர்களது இன்னொரு முகத்தையும் பாருங்க... சரியா!

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X