** ஜி.வி.சரவணன், கிணத்துகடவு: நான் தற்போது எம்.ஏ., பயின்று வருகிறேன். அஞ்சல் வழி கல்வி மூலமாக! என் ஆசை, எப்படியாவது எம்.பில்., படித்து, கல்லூரியில் பேராசிரியராக வேண்டும் என்பதே. ஆனால், சிலர் அந்த கற்பனைக் கோட்டைகளை தகர்த்து விட்டு, விரைவில் ஏதாவதொரு வேலை தேடிக் கொள்; படிப்பெல்லாம் வேண்டாம் என்கின்றனர். தவிர, நீ படித்து முடிப்பதற்குள், வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாகி விடும் என்கின்றனர். தங்களின் ஆலோசனை வேண்டும்!
அறிவுக் கண்ணை திறக்கச் செய்யும் பணி மிக உத்தமமானதுதான்; ஆனால், கல்லூரி பேராசிரியர் பணி எங்காவது உங்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதா? எனக்குத் தெரிந்த பிஎச்.டி.,க்கள் பலர் இன்னும் வேலை கிடைக்காமலோ, தம் படிப்புக்குத் தகுந்த வேலையில் இல்லாமலோ தவிக்கின்றனர். ஏற்கனவே, உங்கள் கையில் ஒரு, "டிகிரி' இருக்கிறது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், "கடன் தருகிறேன் வா... வா...' என அழைக்கின்றனர். நீங்களே, உங்களுக்கு வேலை அமைத்துக் கொள்ளுங்கள். ***
*கோ.பாலகிருஷ்ணன், விழுப்புரம்: சிறிய பெட்டிக் கடை வைத்துள்ளேன் நான். எந்த நேரமும் கடையைச் சுற்றி என் நண்பர்கள் நின்று கொண்டு தொண தொணப்பதால், வியாபாரம் பாதிக்கிறது. இந்தத் தொல்லையிலிருந்து விடுபட என்ன செய்வது?
தொல்லை தரும் ஒவ்வொரு நண்பரையும் தனித்தனியே அழைத்து, நீங்கள் பணச் சிக்கலில் இருப்பதாகவும், அவர்கள் தகுதிகேற்ப கடனுதவி செய்யவும் கேளுங்கள்; அடுத்த நாள் முதல் சுறுசுறுப்படையும் உங்கள் வியாபாரம். அத்துடன், யார் உண்மையான நண்பன் என்பதையும் புரிந்து கொள்ள உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிட்டும்! ***
*கே.சீனிவாசன், ஆண்டிப்பட்டி: டூ-வீலரில் சென்றால் மட்டும் கல்லூரி மாணவிகள் தலை நிமிர்த்திப் பார்க்கின்றனர். சைக்களில் சென்றால் முகத்தைத் திருப்பிக் கொள்கின்றனரே...
"கல்லூரிக்கு நேரமாகி விட்டதே... இந்த டூ-வீலர் இருந்தால் நேரத்திற்கு கல்லூரியை அடையலாமே!' என்ற எண்ணமாகத்தான் இருக்கும்... சிந்தனையை நீர் எங்கோ செலுத்தாதீர்! ***
*எம்.சங்கீதா, பெரியகுளம்: திருமணம் முடிந்தபின், தங்கள், "இனிஷியலை' பெண்கள் கண்டிப்பாக மாற்ற வேண்டுமா?
மாற்ற வேண்டும் என்ற அவசியமே இல்லை. தற்கால நாகரிகம், இங்கிலாந்தில் இருந்து இறக்குமதியான சங்கதிதான், "இனிஷியல்' மாற்றும் விவகாரம். (கொசுறு: கேரள மாநிலத்தில் ஆண் குழந்தைகளுக்கு தந்தையின், "இனிஷியலும்' பெண் குழந்தைகளுக்கு தாயின், "இனிஷியலும்' வைக்கும் பழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.) ***
*தி.சுமித்ரா, திருவள்ளூர்: சிறுநீர் கழிக்கக் கூட கட்டணம் வசூலிக்கும் நம் நாகரிகம் பற்றி, மேலை நாட்டு பயணிகள் என்ன நினைப்பர்?
"பரவாயில்லையே... தெருவையே அசிங்கப்படுத்திக் கொண்டிருந்தவர்கள் நாகரிகமாக நம் வழிக்கு வந்து கொண்டிருக்கின்றனரே...' என எண்ணி மகிழ்வர்.
***
** எம்.சியாமளா, பூந்தமல்லி: கோபப்படக் கூடிய இடங்களில் கோபப்படாமல் இருந்து விடுவது முறைதானா?
இடம், பொருள், ஏவல் தெரியாமல் கோபப்படுவது விவேகமல்லவே! ***