மூத்தவன் பங்கு ! - ஜோதிர்லதா கிரிஜா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2011
00:00

வெளியே உறை மீது காணப்பட்ட கையெழுத்தைப் பார்த்ததுமே, அது தன் மாமியாரிடமிருந்து தான் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்ட சரசுவதிக்கு, முகம் சுண்டிப் போயிற்று. எப்போதும் கணவன் அலுவலகத்திலிருந்து திரும்பிய பின், தன் மாமியாரின் கடித உறையைப் பிரிக்காமலே, அவனிடம் கொடுப்பது வழக்கம். என்னதான் அவனுடைய மனைவியேயானாலும், அவனுக்கு வரும் கடிதத்தைப் பிரித்துப் படிப்பது, பண்பாட்டுக் குறைவு என்பது, பனிரெண்டாம் வகுப்பு வரையில் படித்திருந்த அவளுக்குத் தெரிந்தே இருந்தது.
எனினும், இன்று அதைப் பிரித்துப் படிப்பது என்று அவள் தீர்மானித்தாள். காரணம், ஒவ்வொரு கடிதத்திலும், அவள் நூற்றுக்கணக்கில் அவனிடம் பணம் கேட்டு எழுதிக் கொண்டிருந்தாள். இவ்வளவுக்கும் தனசேகரன் மாதந்தோறும் அவளை உடன் வைத்துப் பராமரித்த தன் அண்ணனின் பெயருக்கு, தன் பங்காய் அறுநூறு ரூபாய் அனுப்பிக் கொண்டிருந்தான். ஒருத்தியின் சாப்பாட்டுச் செலவுக்கு அதற்கு மேல் அனுப்ப வேண்டியதில்லை என்பது அவளது கருத்து.
இந்தப் பணம் சாப்பாட்டுச் செலவுக்கு மட்டும்தான் என்பது போல், தன் உடம்பு சுகமில்லாமல் போய், மருத்துவச் செலவு செய்ய நேரும் போதெல்லாம், இவ்வளவு செலவு ஆயிற்று என்று சொல்லி, அதை அண்ணனுக்கு அனுப்பி வைக்கச் சொல்லிக் கேட்டு மாமியார் தவறாமல் தனசேகரனுக்குக் கடிதம் எழுதி விடுவாள். பணம் கேட்காமல் எந்தக் கடிதமும் அவளிடமிருந்து அது வரையில் வந்ததில்லை.
தன் மைத்துனர், குறைவான சம்பளக்காரர் என்பது அவளுக்குத் தெரிந்துதான் இருந்தது. எனினும், அதற்காக அவள் மாமியார் விஷயத்தில், தன் கணவன் அதிகமாய் செலவு செய்ய வேண்டும் என்பதை ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை.
"என் வீட்டுக்காரரர் நன்றாய்ப் படித்தார்; படிப்புக்கு ஏற்ற நல்ல வேலை கிடைத்தது. அதிகம் சம்பாதிக்கிறவன், அதிகம் செலவு செய்ய வேண்டும் என்று எங்கே எழுதி வைத்திருக்கிறதாம்?' என்பதே அவளது மனப்போக்காக இருந்தது.
எனினும், தனசேகரன் தன் அம்மாவின் மேல் உயிராக இருப்பவன் என்பதோடு, கோபக்காரன் என்பதாலும், அது பற்றிச் பேச அவள் தயங்கினாள்.
இந்த ஓராண்டு மணவாழ்க்கையில், அவர்களுக்குள் சண்டை - சச்சரவு வந்ததில்லை. ஆனால், மற்றவர்களிடம் அவன் தன் கோபத்தை வெளிப்படுத்திய தருணங்களைக் கண்டு, அவள் பயந்து போனதுண்டு. தன் அறையைச் சரியாக மெழுகாத பணிப்பெண்ணை, அவன் குரல் உயர்த்திக் கடிந்து பேசியதைக் கேட்டதுதான், அவனது முன்கோபத்தைத் தெரிந்து கொள்ள அவளுக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு.
தாமதமாய் நாளிதழ் எடுத்து வந்த பையனை, அவன் வாங்கு வாங்கென்று வாங்கிவிட்டான். "ஏதோ இன்னிக்குத் தவறிடிச்சு. விட்டுடுங்க...' என்று அவள் குறுக்கிட்டு அவனுக்குப் பரிந்து பேசிய போது, அவன்தான் என்னமாய் விழிகளை உருட்டி அவளைப் பார்த்தான். "போ உள்ளே... இதுக்கெல்லாம் நீ வராதே...' என்று, பற்களைக் கடித்தவாறு அவன் சொன்னது இரண்டாம் வாய்ப்பு. அவளுக்கும், அவனுக்குமிடையே அதுகாறும் சண்டையோ, வாக்குவாதமோ வந்ததில்லை என்றாலும், அவன் கோபக்காரன் என்பது, மேற்சொன்ன இரண்டு நிகழ்வுகளால் மட்டுமின்றி, மேலும் சிலவற்றாலும் தெரிந்து போய்விட்டதால், இந்த விஷயம் பற்றிப் பேச்செடுக்க அவள் அஞ்சினாள்.
அவள் ஒரு முடிவுக்கு வந்தவளாய், அந்தக் கடிதத்தைப் பிரித்தாள்.
அன்புள்ள தனசேகருக்கு... ஆசீர்வாதம். நீயும், சரசுவும் சவுக்கியமாய் இருக்கிறீங்களா? இங்கு உன் அண்ணன், அண்ணி, இரண்டு குழந்தைகள் எல்லாரும் சவுக்கியம். வழக்கம் போல் நான்தான் சவுக்கியமாக இல்லை. ரத்த அழுத்தம் அதிகமாகி, டாக்டருக்கு இந்த மாதம் எண்ணூறு ரூபாய் போல் செலவாகிவிட்டது. கூடிய சீக்கிரம் உன் அண்ணனுக்கு என் மருத்துவச் செலவுக்கான பணத்தை அனுப்பி வைக்கவும்.
உன் மூலமாகவும், ஒரு பேரக் குழந்தையைக் கொஞ்சும் ஆசையில் இருக்கிறேன். இந்தக் காலத்துப் பிள்ளைகள் சிலரைப் போல பிள்ளைப் பேற்றை ஒத்திப் போட்டுக் கொண்டிருக்கிறீர்களா என்ன? அப்படி எல்லாம் செய்யாதீர்கள். கூடிய விரைவில் நல்ல சேதியை எதிர்பார்க்கிறேன். உன் அன்புள்ள அம்மா, மங்களநாயகி!
சரசுவதி தன்னையும், மீறி ஒரு முடிவுக்கு வந்தாள். மனம் அது தவறு என்று சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, அந்தக் கடிதத்தைச் சுக்கல் சுக்கலாய் கிழித்து, ஜன்னல் வழியாக வெளியே வீசினாள். ஆடி மாதத்துக் காற்றில், காகிதத் துணுக்குகள் பல திசைகளிலும் பறந்து சென்றதைப் பார்த்த பின், தன்னறைக்குப் போய்ப் படுத்துக் கொண்டாள்.
ஒரு திடீர் உந்துதலில் அப்படிச் செய்து விட்டாளே தவிர, நெஞ்சு திக், திக்கென்று அடித்துக் கொண்டது. பிரச்னைக்கு அது ஒன்றும் நிரந்தர தீர்வு அளிக்கப் போவதில்லை எனும் நினைப்பும் எழுந்து அவளைத் தொல்லைப்படுத்தியது. அடுத்து, இன்னொரு கடிதம் வராமலா இருக்கும் எனும் கேள்வியால், தான் அவ்வாறு செய்திருக்க வேண்டாம் என்றும் தோன்றியது. சமயம் பார்த்து, அது பற்றிப் பேசிவிட வேண்டியதுதான் என்றும் முடிவு செய்தாள். "என்னதான் சொல்கிறான்...' என்று பார்க்கலாம். பயந்து, பயந்து சும்மா இருந்தால், இதற்கு எப்படித்தான் முடிவு கட்டுவதாம்?
அவர்களுக்குத் திருமணமாகி, இருவரும், அவன் பணிபுரிந்து கொண்டிருந்த ஊட்டிக்குச் சென்று, மறு மாதமே தனசேகரன் தன் அம்மாவை வரவழைத்து விட்டான். அவளிடம், அது பற்றி அவன் எதுவுமே பேசவில்லை. "அம்மாவை உடனே அனுப்பி வைக்கச் சொல்லி அண்ணனுக்கு எழுதினேன். வர்ற ஞாயிற்றுக்கிழமை வர்றாங்க...' என்று மட்டுமே, ஒரு தகவலாக அவன், அவளிடம் தெரிவித்தபோது, அவளுக்குச் சற்றே எரிச்சலும், வியப்பும் ஏற்பட்டது.
ஆனால், அந்த அறிவிப்பிலேயே அவனது தன்மை வெளிப்பட்டதாய்த் தோன்றியதில், அவள் வாயடைத்துத்தான் போனாள்.
எப்படி எதிரொலிப்பது என்று தோன்றாமல், அவள் சில கணங்கள் போல் எதுவும் சொல்லாதிருக்கவே, "நான் சொன்னது காதிலே விழுந்திச்சில்லே?' என்று அவன் கேட்டதும், "வரட்டும்ங்க!' என்று கூறி, அவள் ஒரு வலுக்கட்டாயப் புன்சிரிப்பை உதிர்க்க வேண்டியதாயிற்று.
எனினும், ஊட்டியின் காலநிலை ஒத்துக் கொள்ளாததால், இரண்டு மாதங்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க மாட்டாமல், சென்னைக்கே தன் மூத்த மகனோடு இருக்கப் போய்விட்டாள் மங்களநாயகி.
அவர்கள் வீட்டில் தரைத் தொலைபேசி இல்லை; கைப்பேசிதான் இருந்து. தனசேகரன் அதை எடுத்துச் சென்று விடுவான். ஏதேனும், அவசரம் என்றால், மிக அருகில் இருந்த பொதுத் தொலைபேசிக் கூண்டுக்குப் போகுமாறு அவளுக்குச் சொல்லி வைத்திருந்தான். தான் பேச வேண்டியிருந்தால், பக்கத்து வீட்டுத் தொலைபேசியில் அழைப்பதாய் சொல்லி, அதற்கான அனுமதியையும் அந்த வீட்டு அம்மாவிடம் கேட்டுப் பெற்றிருந்தான்.
ஒரு வாரம் கழிந்தபின், ஒரு நாள் அலுவலகத்திலிருந்து திரும்பிய தனசேகரன், வழக்கம் போல் தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கினான். பிறகு, சாப்பாட்டு மேசையருகே அமர்ந்து, சிற்றுண்டி அருந்தியவாறு, அப்போது பாதி ஓடிக் கொண்டிருந்த நாடகத்தைப் பார்த்தான்.
"இத பாரு... நீ புதுசா இந்த வீட்டுக்குள்ள அடி எடுத்து வெச்சவ. இந்தக் கேள்வியெல்லாம் நீ கேக்க வேண்டியது அநாவசியம்!'
"புதுசா அடி எடுத்து வெச்சா, நான் அந்நியமாயிடுவேனா? நான் உங்க பொஞ்சாதிங்க. நான் அப்படித்தான் பேசுவேன். "உங்கண்ணன் மாசம் ஐநூறு ரூபா குடுத்துட்டு, சந்தோஷமா இருக்காரு. எல்லாச் செலவையும் நீங்களே செய்யறீங்களே...'ன்னு கேட்டா, அது ஒரு தப்பா?'
"தப்புதான். இன்னொரு வாட்டி எங்கண்ணனைப் பத்தி எதுனா நமுட்டை அசச்சே... தெரியும் சேதி!'
"என்ன பண்ணுவீங்க... அடிப்பீங்க! பதில் சொல்ல வழியில்லாட்டி ஆம்பளைங்க பண்ணுறது அதானே?'
"பதில் சொல்ல வழி இல்லாம இல்லே. சொல்றேன் கேட்டுக்க... எங்கண்ணன் இல்லாட்டி நான் இல்லை; இந்த உத்தியோகம் இல்லை. அதுக்கு வழி செஞ்ச பட்டப் படிப்பு இல்லே. தெரியுமா?
"அவன் என்னமாப் படிப்பான் தெரியுமா? எல்லாத்துலேயும் கிளாஸ்ல பர்ஸ்ட்டு; நான் சுமார்தான். இருந்தாலும், எங்கப்பா
என் சிறு வயதிலேயே காலமாயிட்டதால், நாலு வீடுகள்லே வேலை செஞ்சு சம்பாரிச்சுக்கிட்டு, இருந்த எங்கம்மாவால எங்களைப் படிக்க வைக்க முடியலை. ஆனா, அண்ணன் ஒன்பதாம் வகுப்போட தானாவே படிப்பை நிறுத்திட்டு, குடும்பப் பொறுப்போட லாரி க்ளீனர் வேலைக்குப் போச்சு. நீ படிடான்னு என்னைய ஸ்கூலுக்கு அனுப்பிடிச்சு. படிப்படியா முன்னுக்கு வந்து கார் மெக்கானிக்கா எங்கண்ணன் ஒசந்திச்சு. நான் தான் பட்டதாரியானேன். இன்னைக்கு நான் இருக்கிற பவிசு எங்கண்ணனால எனக்கு வந்ததுதான். அத்தத் தெரிஞ்சுக்க முதல்ல...'
ஏதோ ஓர் உள் உணர்வால், கணவனின் பக்கம் திரும்பிப் பார்த்த சரசுவதி, அதிர்ந்து போனாள். தனசேகரன் சாப்பிடுவதை நிறுத்தியிருந்தான். அவன் தொண்டைக் குமிழ் மேலும், கீழும் ஏறி இறங்கியவாறாக இருந்தது. அவன் கண்கள் நிறைந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
""என்னங்க... ஏன் அழறீங்க?'' தொலை இயக்கி மூலம் அவள் தொலைக்காட்சி நாடகத்தை நிறுத்தினாள்.
""எங்க வீட்டுக் கதை மாதிரியே இருக்கிறதால அழுகை வந்திரிச்சு. "டிவி' நாடகத்துல வர்ற அண்ணன் லாரி க்ளீனர் வேலைக்குப் போறான். எங்கண்ணன் காலையில பத்திரிகை போடுவான்; மதியம் கார் ஷெட் கழுவுவான்; சாயந்திரம் தோட்ட வேலை செய்வான். ராத்திரி சினிமாத் தியேட்டர்ல சோடா, கலர் விக்கப் போவான்...
""டிவியில வர்ற தம்பிக்காரன் சொன்ன மாதிரி, அவன் இல்லாட்டி நான் இல்லை; இந்த உத்தியோகம் இல்லை. அதுக்கு வழி செஞ்ச இந்தப் பட்டப் படிப்பு இல்லே... நான் முன்னுக்கு வரணும்ன்றதுக்காகத் தன்னோட வாழ்க்கையைத் தியாகம் செஞ்சவன் எங்கண்ணன்,'' என்று தொண்டை கரகரக்க சொல்லிவிட்டு, தனசேகரன் முகத்தைச் சாப்பாட்டு மேசை மீது கவிழ்த்துக் கொண்டு அழுதான். குலுங்கிய அவன் தோள்களை ஆதரவாய் தொட்டுத் தேற்றிய சரசுவதியின் கண்ணீரும் மேசை மீது சொட்டி, சிதறியது. ***

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாலாஜி - வெள்ளூர்,இந்தியா
19-ஜன-201112:36:09 IST Report Abuse
பாலாஜி இந்த காலத்து சில மனைவிகள் படிக்க வேண்டிய கதை. என்ன தான் கணவன் என்றாலும் அவனை பெற்றடுத்த தாய் தந்தையாரை மறக்கக் கூடாது.
Rate this:
Share this comment
Cancel
Anu - Chennai,இந்தியா
17-ஜன-201114:17:50 IST Report Abuse
Anu மனதைத் தொட்டு விட்டது.
Rate this:
Share this comment
Cancel
சூப்பர் பாஸ் - chennai,இந்தியா
17-ஜன-201109:30:37 IST Report Abuse
சூப்பர் பாஸ் அருமையான கதை வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X