மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் ஒவ்வொருவரும், விடுமுறை நாள் வராதா? ஒரு நாள் முழு ஓய்வு கிடைக்காதா? என எண்ணும் அளவுக்கு, நவீன உலகம் மாறி விட்டது. தினமும், வீட்டில் இருப்பவர்களிடமே முழுமையாக இரண்டு வார்த்தை பேச நேரமில்லாமல், பம்பரமாய் சுற்றுகிறோம். ஒரே வீட்டுக்குள் இருந்தும், 'ஷிப்ட்' அடிப்படை வேலையால், அண்ணனும், தங்கையும் பார்த்தே, ஒரு வாரமாகி விடுகிறது.
இச்சூழலால், குடும்ப உறுப்பினருக்கும், நமக்கும் இருக்கும் பிணைப்பு பிளவடைகிறது. ஏதோ உறவினர்கள் போல், 'நல்லா இருக்கியா? சாப்பிட்டாச்சா?' என இரு கேள்விகள் மட்டுமே, பகிரும் நிலை உருவாகி வருகிறது. எப்போதுமே, ஒரு செயலை நாம் தொடரும் போது, அச்செயல் பழக்கமாகி அதற்கு அடிமையாகி விடுகிறோம்.
இந்த மனநிலை தான், தற்போது அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கூடம், டியூஷன், அலுவலகம் என சுழற்சி முறை வாழ்க்கைக்கு அடிமையாகி
விட்டோம். இதற்கிடையில், யாரையேனும் இழந்துள்ளோமா? உறவினர்கள் எப்படி இருக்கிறார்கள்? அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்களை பார்த்தே நிறைய நாள் ஆகிவிட்டதே உள்ளிட்ட எண்ணங்கள், அனைவருக்கும் தோன்றுமா என்றால் கேள்விக்குறிதான்.
ஏனெனில், பொருளாதாரம், போட்டிகள் நிறைந்த உலகில் பயணிக்கும் போது, ஒருவரை முந்த வேண்டும் என்று தான் தோன்றுமே தவிர, உறவுகளோ, குடும்பங்களோ, நம் நினைவுக்கு வருவதில்லை. இதன் விளைவு, வாழ்வு நிறைவாகும் சமயம் நாம் சம்பாதித்த பணம், நோய்கள், நேரமின்மை இவையே நம்முடன் இருக்கும். நம்மை சுற்றி இருக்கும் உறவுகள், அவர்களது வேலையில் மூழ்கியிருப்பார்கள்.
ஆகவே, வாரம் ஒரு முறை அல்லது மாதம் இரு முறை, உறவுகளுக்காக நேரம் ஒதுக்குங்கள்; அந்த நேரத்தை மீண்டும் அனுபவிக்க, மனதில் ஆசையுடன் காத்திருங்கள்; இதையே உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லி கொடுங்கள். அப்போது தான், உறவுகளினால் நமக்கிருக்கும் பலம் தெரியும். அனைத்திலும் முக்கியமான ஒன்று, அனைவருடன் சேரும் போது வாய்விட்டு சிரிப்போம். இதனால், உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு, மனதும் புத்துணர்வடையும். தவிர, பல்வேறு மாற்றங்களையும் நாம் உணரலாம்.
அண்ணன், அக்கா, தங்கை திருமணம் முடிந்திருந்தாலும், மாதம் ஒரு முறை ஒன்று கூடுங்கள். அப்போது, ஒன்றாக அமர்ந்து பேசுவது, குழந்தைகளை சகஜமாக பழக விடுவது, குடும்பத்தின் அன்றைய சூழலை, குழந்தைகளுக்கு எடுத்துக்கூறுவது, ஒன்றாக சாப்பிடுவது உள்ளிட்டவற்றை செய்யுங்கள். அப்போது, அங்கு நடக்கும் ஒவ்வொரு விஷயமும் சுவாரஸ்யமாகவும், நகைச்சுவையாகவும் இருப்பதை உணரலாம். சிரிக்கும் போது, ஒருவரை ஒருவர் அடித்து சிரித்தால், மனரீதியாக மறுமலர்ச்சி ஏற்படுகிறது.
எப்போதும், எந்த இடத்திலும் வாய் விட்டு சிரிக்க வேண்டும். அப்போது, உடலின் நரம்புகள் அனைத்தும் இயங்குகின்றன. இதனால், சிந்திக்கும் திறனும் அதிகரிக்கிறது. மனம் புத்துணர்வடைந்து, புதுமையான எண்ணங்கள் தோன்றும். குழந்தைகள் சரி, தவறுகளை பிரித்து பார்க்கும் அளவுக்கு, எண்ணங்கள் முதிர்ச்சி, அனுபவம் பெறுவர். இவ்வாறு, உறவுகளின் பிணைப்பில், குழந்தைகளை வளர்த்து, அவர்களுக்கு அதன் பலத்தை கற்றுத்தரும் போது, அவர்களின் பாதை லட்சியத்தை அடையும்.