தமிழர் வாழ்வில் கால்நடைகள் வகிக்கும் பங்கு அளப்பரியது. பண்டைத் தமிழ்க் குடியினரை ஆயர் குடியினர், வேளாண் குடியினர், வேட்டைக் குடியினர் என்று பல்வகை வாழ்க்கை முறைகளை உடையவர்களாகப் பகுத்துப் பார்ப்பார்கள். இம்மூவகைக் குடியினர்க்கும் விலங்கினைச் சார்ந்து வாழ்ந்த ஒரு தொடர்புமுறை இருப்பதை உணரலாம். ஆயர் குடியினர் விலங்குகளை மேய்த்து வாழ்பவர்கள்.
வேளாண் குடியினர் விலங்குகளைப் பழக்கி அவற்றைப் பயிர்த்தொழிலில் ஈடுபடுத்தியவர்கள். வேட்டைக் குடியினர் விலங்குகளை வேட்டையாடி உண்டு வாழ்ந்தவர்கள். ஆக, பண்டைய தமிழர்கள் வாழ்வில், விலங்குகள் தவிர்க்க முடியாத பங்களிப்பாக இருந்திருக்கின்றன. இதில் மாடுகளின் பங்கே முதன்மையானது. மாடுகளில் பசுக்கள் பால்கறக்கவும் காளைகள் வண்டி இழுக்கவும் பயன்பட்டன. மாடுகள் இல்லாத தமிழர் வாழ்வை எண்ணிப் பார்ப்பது கடினம்.
இயந்திரவியல் நுட்பங்கள் அறியாத பண்டைக் காலத்தில் வாழ்ந்த மக்கள் விலங்குகளைப் பழக்கும் கலையை அறிந்திருந்தனர். வீடுகளில் மூக்கணாங்கயிறிட்டு வளர்க்கப்பட்ட மாடுகள் உழவுத் தொழிலுக்கும் வண்டி இழுக்கவும் பயன்பட்டன. மனித வாழ்க்கையில் சக்கரத்தின் கண்டுபிடிப்புத்தான் மிகவும் இன்றிமையாதது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுவார்கள்.
வெறும் சக்கரத்தால் ஆன வண்டிகளை மனிதர்களே இழுத்துப் பார்த்தனர். அவ்விடத்தில் வலிமை பொருந்திய விலங்கான மாடுகளை வண்டி இழுக்கப் பயன்படுத்தினால் பெருஞ்சுமைகளை எடுத்து வரலாம் என்று கண்டுபிடித்தனர். இளமை முதலே ஒரு காளைக் கன்றை வளர்த்துப் பழக்கி, வண்டியில் பூட்டி இழுக்கச் செய்தமையால்தான் தமிழர்களின் உழவு வாழ்க்கை முன்னேற்றப் பாதையில் செல்லத் தொடங்கியது.
மாட்டு வண்டி செய்யும் கலையைத் தமிழர்கள் முற்காலத்திலேயே அறிந்திருந்தனர். பல்வேறு மரப்பொருள்களும் கொஞ்சம் இரும்பும்தான் அவ்வண்டி செய்வதற்குத் தேவையான பொருள்கள். வேளாண் மக்கள் தத்தம் வீடுகளில் கால்நடைகளையும் மாட்டு வண்டிகளையும் வைத்திருந்தனர். எந்த வசதிகளும், வாய்ப்புமில்லாத கடந்த நூற்றாண்டு வரை, தமிழர்களின் போக்குவரத்து சாதனமாகப் பயன்பட்டது மாட்டு வண்டிதான்.
'பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்'
என்று வள்ளுவர் எழுதிய குறள் மாட்டுவண்டியைப் பற்றியது என்பதன்மூலம் அதன் தொன்மை விளங்கும். மயிற்பீலியே ஆனாலும் அளவுக்கு அதிகமாக ஏற்றினால் அவ்வண்டியின் அச்சு முறிந்துவிடும் என்கிறார் வள்ளுவர்.
தச்சர்கள் மாட்டு வண்டி செய்யும் கலையை அறிந்தவர்களாக இருந்தனர். மாட்டு வண்டி செய்வதற்கென்றே உறுதியான மரங்களைப் பயன்படுத்தினர். சக்கரத்தில் பயன்படுத்தப்படும் வட்ட வடிமான விளிம்புப் பகுதிக்கு 'வட்டை' என்று பெயர். அதை உறுதிமிக்க தேக்கு மரத்தில் செய்தனர். அதனால் மிகுதியான பாரத்தையும் வண்டியில் ஏற்றமுடியும். வட்டையிலிருந்து மையத்தில் உள்ள 'குடம்' என்னும் 'சக்கர நடுமையத்திற்கு' வரும் கட்டைகள் 'ஆரக்கால்கள்' எனப்படும்.
குடக்கட்டையில் துளையிடப்பட்டிருக்கும். இவ்வாறு இரண்டு சக்கரங்களுக்கும் இடையில் 'இருசுக்கட்டை'தான் இணைப்பாகப் பயன்படும். இக்கட்டை உறுதியாகவும் இருக்க வேண்டும். எடை குறைவாகவும் இருக்க வேண்டும். குடத்துளையில் அச்சுக் கம்பியை நுழைத்து அச்சாணி பொருத்தியிருப்பார்கள்.
சக்கரத்தின் வெளிவிளிம்புக்கு இரும்புத் தகட்டினால் ஆன பட்டையைக் கட்டுவார்கள். அந்தப் பட்டையும், அச்சும், அச்சாணியும் மட்டுமே மாட்டு வண்டியின் இரும்புப் பொருள்கள். மற்றவை எல்லாம் மரப்பொருள்கள்.
இருசின்மேல் அமைந்திருக்கும் மரச்சட்டம் பாரச்சட்டம் எனப்படும். அது வண்டியின் முன்பின்னாக நீண்டிக்கும். பாரச்சட்டத்தின் முனையில் நுகத்தடி கட்டப்படும். நுகத்தடியின் இருமுனைகளிலும் வண்டியிழுக்கப் பழகிய காளைகளைக் கொண்டுவந்து, பூட்டாங்கயிற்றால் அக்காளைகளின் கழுத்தில் கட்டுவார்கள். அவ்வாறு கட்டுவதால் வண்டியை இழுக்கும்போது காளை, வண்டியிலிருந்து விலகாமல் இருக்கும். நுகத்தடியின் நடுவில் வண்டியை நிலை நிறுத்துவதற்குரிய 'ஏர்க்குச்சி' இருக்கும். வண்டியின் மேல் முதுகில் 'கோணி' எனப்படும் அள்ளைப்படல் போட்டுக்கொள்வார்கள். அது நகராமல் இருக்க இருமருங்கும் முளைக்குச்சிகள் பொருத்தப்பட்டிருக்கும். வண்டியை ஓட்டுபவர் வண்டியின் கழுத்து போன்ற பகுதியில் அமர்ந்துகொள்வார்.
பண்டைக்காலத்தில் பயணங்களுக்கும், வாணிபத்திற்கும் மாட்டு வண்டிகள்தான் பயன்படுத்தப்பட்டன. அவை மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் காரணிகளாக இருந்தன.
மாட்டு வண்டிக்கு அதிக அளவு பராமரிப்பு தேவையில்லை. அவ்வப்போது அச்சாணிக்கு இடுவதற்கென்று வண்டி மை காய்ச்சுவார்கள். உழவுத் தொழிலில், மீதமான வைக்கோல்களும் தாவர அறுவைகளும் மாட்டுக்குத் தீவனமாகின்றன.
மாடும் மாட்டு வண்டியும் பண்டைக் காலம்தொட்டு தமிழர் வாழ்வில் பிரிக்க முடியாத அங்கமாக இருந்திருக்கின்றன. இன்று அவ்வண்டிகள் அருகிப்போய்விட்டன என்பது கவலையளிக்கக்கூடிய செய்தியாகும்.
1. அள்ளைப்படல்
2. கடையாணி
3. வட்டை
4. அச்சு
5. ஆரக்கால்
6. குடம்
7. பட்டை
8. இருசு
9. பாரச்சட்டம்
10. நுகத்தடி
11. ஏர்க்கால்
12. பூட்டாங்கயிறு
- மகுடேசுவரன்