நினைத்துப் பார்க்கிறேன் | கலைமகள் | Kalaimagal | tamil weekly supplements
நினைத்துப் பார்க்கிறேன்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 பிப்
2017
00:00

அன்று 9.11.1980 என ஞாபகம். எழும்பூர் அரிமா சங்க தலைவர் என்ற வகையில் 'மகளிர் - சிறுவர்' தினம் கொண்டாட வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தேன். அதற்கு நடிகர்கள் உலக நாயகன் கமலஹாசன், தேங்காய் சீனிவாசன், உசிலைமணி, நடிகைகள் தீபா, விஜயசந்திரிகா முதலானோர்களைக் கலந்து கொள்ள வேண்டினேன்.
அக்கால கட்டம் பொற்காலம். நான் கலாநிகேதன் சபாச் செயலாளர் என்பதால் கலைஞர்களோடு நெருங்கிப் பழக வாய்ப்புக் கிடைத்தது. சிறுவன் கமல் 27.08.61 அன்று அவரது சகோதரி நளினியின் பரதநாட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் நாடக வசனத்தை நடித்துக் காட்டி ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுதல்களைப் பெற்றார். அவருக்கு அப்போது வயது 6 அல்லது 7 இருக்கலாம். நான் அவருக்கு மாலை அணிவித்து வருங்கால நட்சத்திர நடிகன் என்று பாராட்டினேன். அவர் தந்தை சீனிவாசன் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். இந்நிகழ்ச்சியை நினைவுபடுத்தி எங்கள் மகளிர் சிறுவர் கொண்டாட்டத்தில் பங்கேற்றுச் சிறுவர்களுக்குப் பரிசளிக்க வேண்டினேன். அன்று அவருக்கு முக்கியமான படப்பிடிப்பு. தீபாவளி ரிலீஸ் படம். ஆகவே சிலர் நம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டார் என பயமுறுத்தினர். இருப்பினும் எனக்க வாக்களித்தபடி வருகை தந்து நிகழ்ச்சியில் பங்கு கொண்ட சிறுவர்களை பாராட்டிப் பரிசு வழங்கி எல்லோரையும் மகிழ்வித்தார். மேலும் அவர் பிறந்ததின விழாவில் அவரது ரசிகர் மன்றத்தின் சார்பாக அரிமா ரத்த வங்கியில் ரத்த தானம் செய்ததை மறக்க இயலாது. நான் எழுதிய நினைவு அலைகள் புத்தக வெளியீட்டு விழாவிற்கு வருகை தர வேண்டினேன். அப்புத்தகத்தில் உள்ள புகைப்படங்களைப் பார்த்து அபூர்வமான படங்கள் (பொக்கிஷம்) என்றார்.படப்பிடிப்பிற்காக அமெரிக்கா செல்வதால் என அழைப்பை ஏற்க இயலாததற்கு வருந்தித் தன் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொண்டார். சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தின் இருப்பினும் எல்லோருடன் இனிமையாக பேசி பழகக் கூடியவர். என்னால் மறக்க முடியாதவர்.
இக்காலக் கட்டத்தில் இதுமாதிரி என்னைப் போன்ற சாமானியர்கள் நடிகர்களை அழைக்க முடியுமா? எல்லாம் வியாபார ரீதியாக மாறி விட்டது ஏன் சில பத்திரிகை நிருபர்களும் இதுபோல் பின்பற்றுவது வருத்ததிற்குரியது.
மூதறிஞர் ராஜாஜி லேசில் ஒப்புதல் அளிக்க மாட்டார். ஆம் அல்லது இல்லை! என்ற பதி்லதான். பிறகு சிவாஜியின் வீரபாண்டிய கட்டபொம்மன், டி.கே.எஸ். சகோதரர்களின் ராஜராஜ சோழன், சிவகாமியின் சபதம், அவ்வையார், போன்ற நாடகங்களுக்குத் தலைமறை தாங்கி உரையாற்றினார்.
பெருந்தலைவர் காமராஜ் பேச்சு குறைவு - செயல்நிறைவு ஒரு ஆண்டு விழாவில் கலந்து ஒரு நிமிடத்தில் பேச்சை முடித்தார். திருமுருக கிருபானந்தவாரியாரின் கம்பராமாயண விரிவுரை மற்றும் சிவாஜியின் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்திற்கும் வருகை தந்து வாழ்த்தினார்.
திரு பக்தவத்சலம் தினசரி பத்திரிகையை படித்துக் கொண்டே நம் அழைப்பை ஏற்பார். அவர் செயலில் ஒரு அவதானம் என்றால் மிகையாகாது.
திருமுருக கிருபானந்த வாரியார், திரு. கி.வா. ஜகன்னாதன் இருவரும் தமிழ்த் தொண்டர்கள். சிலேடையாகப் பேசுவதில் வல்லவர்கள். மக்களிடம் தமிழ்ப் பற்றை வளர்த்தவர்கள். கி.வா.ஜ. அவர்கள் ராஜ ராஜ சோழன் நாடகத்திற்குத் தலைமை தாங்கி வெகுவாகப் பாராட்டினார்.
அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி அடுக்கு மொழியில் பேசுவதில் சிறந்தவர்கள். இவர்கள் பேச்சைக் கேட்க மக்கள் கூட்டம் அலைமோதும். பல இளைஞர்கள் இன்று மேடையில் பேசும்போது இவர்களைப் பின்பற்றுகிறார்கள் என்பது உண்மை. இருவரையும் பல நிகழ்ச்சிகளுக்கு அழைத்துள்ளேன்.
திரு. மு. வரதராசனார் பழகுவதற்கு இனியவர். ஒரு நாடகத்திற்குத் தலைமை தாங்கினால் அழகிய தூய தமிழில் பேசி ஒவ்வொரு பாத்திரத்தையும் விமர்சிப்பது தனி அழகு.
திரு ஏ.என். சிவராமன் பத்திரிகையில் ஓய்வின்றி உழைப்பவர். ராஜ ராஜ சோழன் நாடகத்திற்குத் தலைமை தாங்கி வெகு நேர்த்தியாக பாராட்டி தினமணியிலும் விமர்சனம் செய்தார்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருவரும் ஒரு நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினால் கடைசி வரை இருந்து அழகாக விமர்சிப்பார்கள். எம்.ஜி.ஆர். நடன நிகழ்ச்சிக்கு வருவதானால் கலைஞரின் திறமையைப் பற்றியும், அவர்கள் குடும்பத்தைப் பற்றியும், நட்டுவனாரைப் பற்றியும் தீவிரமாக விசாரிப்பார். சிவாஜி கணேசன் பேச்சில் நகைச்சுவை வெகுவாகக் கலந்திருக்கும். இவர்கள் இருவரின் எல்லா நாடகங்களும் கலாநிகேதனில் இடம் பெற்றன.
கவியரசு கண்ணதாமன் பேச்சில் கவிதை கமழும், அவர் பேச்சைக் கேட்கும் ரசிகர்கள் மகுடிக்குப் பாம்பு மகிழ்வதுபோல் தங்களையே மறந்து விடுவார்கள். கே.பி. சுந்தராம்பாள் பாராட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். இவ்விழாவில் கவிஞர் எஸ்.டி. சுந்தரம், நடிகர் கே. சாரங்கபாணி, பாடகர் டி.எம். சௌந்தர்ராஜன் முதலியோரும் கலந்து கொண்டனர்.
திரு. ம.பொ.சிவஞானம், ராஜா சர் முத்தைய்ய செட்டியார் இவர்களுக்கு நேரம் குறிப்பிட்டுப் பேசச் சொல்ல முடியாது உற்சாகத்தில் நேரம் போவதே தெரியாது.
புரட்சித் தலைவி ஜெயலலிதா. இவர் சிறுமியாக இருந்தபோதும் தங்கையாக இருந்தபோது பரத நாட்டிய நிகழ்ச்சியையும், காவிரி தந்த கலைச் செல்வி போன்ற நாட்டிய நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்தது எனக்குப் பெருமை அளிக்கிறது. காரணம், அப்போது அவர் தமிழக முதல்வர் ஆவார் என்று நினைத்தேனா! மற்றும் சோ ஒரு பெரிய வழக்கறிஞர், எழுத்தாளர், நடிகர், தயாரிப்பாளர் எனற பலமுகம் கொண்டவர்.
இவர் என் ஆத்மார்த்த நண்பர். இவரை 5 நிகழ்ச்சிகளுக்கு அழைத்த கௌரவித்தேன். அறிஞர் அண்ணா தலைமையில் 'சம்பவாமி யுகே.. யுகே' என்ற நாடகத்திற்குத் தலைமை தாங்க வைத்துப் பெருமைப்படுத்தினேன். முடிவாக என் 85வது பிறந்த விழாவில் கலந்து கொண்டு பல தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அவர் கையால் கொடுக்க ஏற்பாடு செய்தேன். என் வாழ்நாளில் இது மறக்க முடியாத செயல். ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதா, சோ ஆகியோரது அகால மரணம் நாட்டிற்குப் பெரிய பேரிழப்பாகும்.
மேற்கண்ட எல்லாத் தலைவர்களும் மறைந்தாலும் அவர்களது புகழ் என்றென்றும் மறையாது என்பது திண்ணம்.

- கலாநிகேதன் பாலு

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X