இது உங்கள் இடம் | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
இது உங்கள் இடம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

05 மார்
2017
00:00

நமக்கு நாமே பகையாகலாமா?
எத்தனையோ போராட்டங்களுக்கு பின், நமக்கென்று ஓர் கவுரவம் கிடைத்து, அதை மகளிர் தினமாக கொண்டாடுகிறோம். ஆனால், இன்றும், 'பெண்ணுக்கு பெண்ணே எதிரி...' என்று சொல்வதற்கேற்ப, சில விஷயங்களில், பெண்களாகிய நாம் கீழ்மைத் தனமாகவே நடந்து வருகிறோம்.
குழந்தை இல்லா பெண்ணை, 'மலடி...' என்றழைத்து, அவளது பெண்மையை அசிங்கப் படுத்துகிறோம். கணவனை இழந்த பெண்களை தீண்டத்தகாதவர்களாக கருதி, நல்ல விஷயங்களில் இருந்து ஒதுக்கி வைக்கிறோம். அத்துடன், அவள் பொட்டு, பூ வைத்து விட்டால், தவறாக பேசி, அவள் மனதை காயப்படுத்துகிறோம்.
ஒரு கணம், அப்பெண்ணிற்கு ஏற்பட்ட நிலைமை நமக்கு ஏற்பட்டால் எவ்வளவு வேதனைப்படுவோம் என்று நம்மில் பலர் சிந்திப்பதே இல்லை.
இனிமேலாவது, நம் இனத்தை, நாமே குறை கூறும் போக்கை கைவிட்டு, பெண்களை குறை கூறும் பழமொழிகளை, பரணுக்கு அனுப்புவோம்.
அடுத்த மகளிர் தினம், பெண்களின் ஒற்றுமையை, உலகுக்கு உணர்த்தட்டும்!
— வி.திவ்யலட்சுமி, சென்னை.

பிராக்டிக்கல் பாதர்!
நீண்ட நாட்களுக்கு பின், என் நண்பரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. நல விசாரிப்புக்கு பின், அவரது பிள்ளைகளை பற்றி விசாரித்தேன்.
'பெரியவன் நல்லா படிச்சு, எல்.ஐ.சி.,யில் ஆபிசரா வேலை பார்க்கிறான். மற்ற ரெண்டு பேருக்கும் படிப்பு ஏறல. அதுக்காக அவங்கள, படி படின்னு அடிக்கவா முடியும்... ஒருத்தனுக்கு மொபைல்போன் மேல் ரொம்ப ஆசை; எப்பவும் அதை வைச்சு நோண்டிக்கிட்டே இருப்பான். அதனால, அவன் மனசுப்படியே, ஆறு மாத பயிற்சியான, மொபைல் ரிப்பேர் மற்றும் சர்வீஸ் படிப்பு படிக்க வைச்சேன். இப்ப, சொந்தமா, ஒரு மொபைல்கடை வச்சுக் கொடுத்திருக்கேன். நல்ல வருமானம் வருது; அவன் தான் குடும்பத்தை பாத்துக்கிறான்.
'அடுத்தவனுக்கு, பெயின்டிங்க் செய்ய விருப்பம். அவன் போக்கிலேயே விட்டுட்டேன். இப்ப பெரிய பெரிய பங்களா, கல்லூரி, அலுவலகங்கள்ன்னு, 'கான்ட்ராக்ட்' எடுத்து, பெயின்டிங்க் வேலை செய்றான். பத்து பேருக்கு வேலை தர்றான். இதை விட என்ன வேணும்...' என்று, தன் இரண்டு மகன்களை பற்றி, பெருமையோடு சொன்னார்.
படிப்பு ஒன்றே பிரதானம் என, பிள்ளைகளை கட்டாயப்படுத்தி, விருப்பமில்லாத கோர்ஸை எடுக்க வைத்து, அவர்களை கஷ்டப் படுத்துவதற்கு பதில், பிள்ளைகளுக்கு எந்த துறையில் விருப்பமோ, அதில் ஈடுபடுத்தி, தொழில் துவங்க வழி வகை செய்து கொடுப்பது நல்லது. அதை கடைப்பிடித்து, இன்று சமுதாயத்தில் தன் பிள்ளைகளையும் நிலை நிறுத்திய என் நண்பர், 'பிராக்டிக்கல் பாதராகவே' எனக்கு தெரிந்தார்.
— எம்.எஸ்.வி.அருண், செங்குன்றம்.

மதிப்பெண்களா... மனநலமா?
பள்ளி இறுதித்தேர்வு எழுதப் போகும் மாணவர்களின் பெற்றோருக்கு, அன்பான வேண்டுகோள்:
மிகவும், மோசமான நிலையில் இருக்கும், இன்றைய கல்வி துறையில், 200க்கு, 198 மதிப்பெண் எடுத்தால் மட்டுமே, விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்கிறது. 180க்கு கீழ் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களின் நிலை, கவலைக்கிடமாக உள்ளதால், பெற்றோர், தங்கள் பிள்ளைகளை, 'படி... படி...' என்று, நெருக்கடி கொடுக்கின்றனர்.
விளையாடுவதற்கு கூட அனுமதிப்பது இல்லை; இப்படி ஓய்வில்லாமல் படித்தால், பிள்ளைகளுக்கு, மன உளைச்சல் தான் ஏற்படும்.
இதனால், உடலில், அட்ரினலின் சுரப்பி, கார்டிசால் என்கிற ஒருவித விஷ திரவத்தை உற்பத்தி செய்து, ரத்தத்தில் கலக்க செய்கிறது; இந்த ரத்தம், மூளைக்கு செல்வதால், மூளையில் உள்ள நியூரான் செல்கள் இறந்து விடும். இதனால், நோய் எதிர்ப்பு சக்தியை, பிள்ளைகள் இழந்து விடுவர்.
இடைவிடாமல் படித்து, வெற்றி பெற்றவர்களாக கருதப்படுவோர், பிற்காலத்தில், வாழ்க்கையில் தோற்று போன வரலாறு எத்தனையோ உண்டு.
அதனால், பெற்றோர் மற்றும் ஆசிரியரே... எப்போதும் மாணவர்களை படி படி என்று தொல்லை படுத்தாமல், வாழ்க்கை கல்வியையும், மனிதநேயத்தையும் கற்றுக் கொடுங்கள்; எதிர்காலத்தில், அவர்கள் முழுமையான மனிதர்களாக மாறுவர்.
மதிப்பெண்களை விட, மனநலமே முக்கியம் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்!
— வை.தட்சிணாமூர்த்தி, புதுச்சேரி.

பயனுள்ள சேவை!
அரசு மேல்நிலைப் பள்ளியில், பகுதி நேர ஆசிரியராக பணிபுரியும் நண்பர், பள்ளிக்கு அருகில், சிறிய அளவில், 'ஸ்டேஷனரி' கடை நடத்தி வருகிறார்.
கடையின் வெளிச் சுவரில், தகவல் பலகை வைத்துள்ளார். அதில், முக்கிய தினங்கள், தலைவர்கள் பிறந்ததினம், நினைவு தினம் மற்றும் பொது அறிவு தகவல்கள் என, தினமும் ஒரு புதிய தகவலை எழுதி வைக்கிறார்.
அவ்வழியே பள்ளி செல்லும் மாணவ, மாணவியரும், மற்றவர்களும் இதைப் படித்து செல்கின்றனர்.
சமீபத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளுக்கான தேதி வெளியிடப்பட்டது. அன்றிலிருந்து, தகவல் பலகையில், வழக்கமான தகவல்களுக்கு மேலே, 'பிளஸ் 2 தேர்வுக்கு, இன்னும், 50 நாட்களே உள்ளன; 10ம் வகுப்பு தேர்வுக்கு இன்னும், 45 நாட்களே உள்ளன...' என்று தினமும் எழுதி வைக்கிறார்.
இதனால், மாணவர்களிடையே, தகவல் பலகையின் மீதான ஆர்வம், அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து, மாணவர்களிடம் கேட்ட போது, 'தேர்வு நெருங்கி விட்டது என்பதை, தினமும் யாரோ ஒருவர் சொல்வதைப் போல, உணர்கிறோம்...' என்றனர்.
நண்பரிடம் கேட்ட போது, 'இத்தகவல் பலகையில் செய்தியை எழுத, இரண்டு, மூன்று நிமிடங்கள் தான் ஆகிறது. ஆனால், இதன் காரணமாக, மாணவர்களிடையே காணும் மகிழ்ச்சி, பயன், பரபரப்பு மனதிற்கு திருப்தி அளிக்கிறது...' என்கிறார். நல்ல விஷயம் தானே!
ப.சீனிவாசன், கோடியக்கரை.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X