நான் ஏன் பிறந்தேன் (8)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மார்
2017
00:00

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு கட்டுரைத் தொடர். ஜன., 17, 1917-2017.

ராஜா சந்திரசேகர் மற்றும் அவர் சகோதரர் ரகுநாத்துக்கும் எங்களுக்கும் இருந்த நட்புறவு எப்படியிருந்தன என்பது பற்றியும், அவர்கள் எங்களுக்கு எப்படியெல்லாம் உறுதுணையாக இருந்தனர் என்பது குறித்தும் கூற, கடமைப்பட்டுள்ளேன்.
முன்பொரு சமயம், நான், கோவையிலிருந்த போது, ரகுநாத் எனக்கெழுதிய கடிதமே அதற்கு ஆதாரம்.
அவர் அக்கடிதத்தில், என் வீட்டு செலவுக்காக, 25 ரூபாய் கொடுக்கப் பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த தொகை இப்போதைய, 2,500 ரூபாய் மாதிரி! அதிலிருந்து, நான் எவ்வளவு வசதியோடு, வருமானத்தோடு அப்போது இருந்திருப்பேன் என்பதை, நீங்கள் ஊகிக்கலாம். இத்தகைய நட்பும், அன்பும் நிலவி வந்த நிலையில், எங்களுக்குள் அப்படி என்ன தான் கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்று கேட்கிறீர்களா...
சீதா ஜனனம் படத்தில், இந்திரஜித் வேடத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தேன்; அதே படத்தில், விஷ்ணு வேடத்திற்கும், ஒரு ஆள் தேவைப்பட்டது. விஷ்ணு வேடதாரி, ராமனாகவும் வேடமேற்க வேண்டும்.
இந்திரஜித் வேடத்திற்கு மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த என்னை, விஷ்ணு வேடத்திலும் நடிக்கச் சொன்னார்கள்.
இந்த இடத்தில் ஒரு விஷயம் கூற வேண்டும். எந்த விஷயம் சொல்வதென்றாலும், ரகுநாத் மூலமாகவே சொல்வார், சேகர். நாங்கள், அவரிடம் அதிகம் பேச மாட்டோம். எங்களுடைய சங்கடங்கள் மற்றும் தேவைகளை சொல்வதென்றாலும், ரகுநாத்திடம் தான் சொல்வோம்.
'விஷ்ணு வேடத்தையும், நீயே போடு...' என்று ரகுநாத் கூறியதும், 'இதுக்குன்னு தனியா சம்பளம் வாங்கி கொடுக்க சொல்லுங்களேன்...' என்றேன்.
'ஊஹும்... தனியா சம்பளம் கிடையாதுன்னு அண்ணன் சொல்லிட்டாரு...' என்றார் ரகுநாத்.
'அப்போ, நான் ஏன் நடிக்கணும்...' என்றேன்.
'எனக்கு தெரியாதுப்பா... நான் அவர்கிட்டே சொல்லிடறேன்; நீயாச்சு, பெரியவராச்சு...' என்றார் ரகுநாத்.
எனக்கு, பணம் கிடைக்கக் கூடாது என்பது, அவரது நோக்கமல்ல; அவர் இரண்டுங் கெட்டான் நிலையில் இருந்தார். தன் அண்ணனின் வார்த்தையை எதிர்த்து பேசவும் முடியாது; அதே சமயத்தில், என் தேவையும் நியாயம் என்பது, அவர் எண்ணம்.
பெரியவர் சேகர், ஏன் அப்படி பிடிவாதமாக இருந்தார் என்பதற்கு, அவர் வரைக்கும் ஒரு நியாயம் இருந்தது.
அது, இரண்டு, மூன்று ஆண்டுகள் கழித்து தான் எனக்கு தெரிய வந்தது. பட உரிமையாளரிடம் அவர், 'அதுக்கென்ன... ராமச்சந்திரன் இருக்கான்; விஷ்ணு வேடத்தை, அவனை போட்டுக்க சொல்றேன்...' என்று, என்னிடம் அவருக்கு இருந்த உரிமையின் அடிப்படையில், வாக்கு கொடுத்துள்ளார். அதனால், மறுபடியும், எனக்காக பட முதலாளியிடம், எப்படி பணம் கொடுக்க சொல்வார்...
அதனாலேயே, நான் பணமில்லாமல், நடிக்க வேண்டுமென்றும், பணம் தர முடியாது என்றும், கண்டிப்பாக எனக்கு அறிவித்திருந்தார்.
இது, அப்போதே எனக்கு தெரிந்திருந்தால், நான், என் முடிவை மாற்றியிருப்பேன். இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் தான் தெரிந்தது. ஆனால், என்ன பயன்...
இக்கருத்து வேறுபாட்டின் விளைவாக, அந்த சகோதரர்களுக்கும், எங்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை கூட இல்லாமல் ஒதுங்கி விட்டோம். இதனால், எனக்கு தான் நஷ்டமே தவிர, அவருக்கல்ல.
இனிமேல், சினிமா தொழிலில் எனக்கு உத்தரவாதமோ, பாதுகாப்போ கிடையாது. அதனால், என் எதிர்காலத்தை பற்றி ஒரு முடிவுக்கு வரவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டேன்.
ஒருநாள், பத்திரிகை ஒன்றில், ஆள் வேண்டும் என்ற விளம்பரத்தை பார்த்தேன். அதில், சொல்லப்பட்டிருந்த நிபந்தனைகள்:
* குதிரை ஏற்றம் தெரிந்திருக்க வேண்டும்.
* மார்பு சுற்றளவு, 32 அங்குலம் இருக்க வேண்டும்.
* உயரம் குறைந்த பட்சம், ஐந்தரை அடி இருக்க வேண்டும்.
* ஆங்கிலம் சரளமாக, பேச தெரிந்திருக்க வேண்டும்.
நல்ல வேளையாக, ஆங்கிலம் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டுமே தவிர, படித்து, பரீட்சையில் தேறி, 'சர்டிபிகேட்' பெற்றிருக்க வேண்டும் என்று, கேட்கப்பட்டிருக்க வில்லை. அத்துடன், நற்சான்றிதழும் தேவையில்லை என்று குறிப்பிட்டிருந்தனர்.
பட்டாளத்தில், ராணுவ வீரனாக சேர்வதற்குள்ள தகுதிகள் தாம் மேலே குறிப்பிடப் பட்டவை.
அப்போது, பட்டாளத்திற்கு ஆள் சேர்த்த காலம். ஜமேதார் என்ற அந்த வேலைக்கு, என்னை தகுதியாக்கி கொள்ள முடிவு செய்தேன். ஆனால், அவ்வேலைக்கு தயாராகிறேன் என்பது, யாருக்குமே தெரியக் கூடாது. முக்கியமாக, என் தாய்க்கு தெரிந்தால், சம்மதிக்க மாட்டார்கள்.
அதற்காக, என் அம்மாவிடம், 'ஆங்கிலத்தில் பேச தெரிஞ்சவங்க எல்லாம் இப்போ, நடிக்க வந்துட்டாங்க. அவங்களுக்கு, நல்ல வரவேற்பு தர்றாங்க. அதனாலே, நானும், ஆங்கிலம் படிக்க தெரிஞ்சுக்கிட்டா தான் வேஷம் கிடைக்கும். நாலு பேர் என்னை மதிப்பாங்க; தொடர்ந்து நடிக்கிறதுக்கு வாய்ப்பு கிடைக்கும்...' என்றேன்.
என் அண்ணனின் மகளுக்கு, பாடம் சொல்லி தந்த, நாராயண ஐயங்காரிடம், 'எனக்கு மூன்று மாதங்களில், ஆங்கிலம் சரளமாக பேசும் அளவுக்கு, கற்றுக் கொடுக்க வேண்டும்...' என்றேன்; அவரும் சம்மதித்தார்.
ஆங்கில பயிற்சியை, உடனேயே துவங்கி விட்டேன்.
மார்பு சுற்றளவை அதிகப்படுத்த உடற் பயிற்சியும் செய்ய ஆரம்பித்தேன்.
சினிமாவில் நடிக்கவே, இப்பயிற்சிகளை செய்ததாக என் தாய் நம்ப வேண்டுமே... அதற்காக, சங்கீதத்தையும், சாதகம் செய்ய துவங்கினேன்.
சில மணி நேரம் தொடர்ந்து, கத்தி, பாடி, சாதகம் செய்வேன். வர்ணங்கள் கற்றுக் கொண்டேன்; ஒரு வர்ணம் முடித்து, அடுத்த வர்ணத்தை பயிற்சி பெறும் போது, முதலில் பயின்ற வர்ணம் மறந்து விடும்.
என் ஆர்வமெல்லாம் ஜமேதார் வேலையில் இருந்ததே இதற்கு காரணம்.
ஆனாலும், சங்கீத பயிற்சியை நிறுத்தவில்லை.கீர்த்தனைகள் பயின்று, பாடும் அளவுக்கு, தேர்ச்சி அடைந்ததுடன், ஆங்கிலத்தில் ஓரளவு, சரளமாக பேசவும் அறிந்தேன்.
மார்பு சுற்றளவையும் அதிகப்படுத்தினேன். இனி, நான் ஜமேதார் வேலைக்கு தகுதியானவன் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டது.
அதேசமயம், பட்டாளத்து வேலை கிடைத்து, அதற்கு சென்று விட்டால், அப்போது நடித்துக் கொண்டிருந்த, சீதா ஜனனம் படத்தை, முடிக்காமல் எப்படி போவது என்பது பற்றி, நினைக்கவே இல்லை.
எதைப் பற்றியும் கவலையில்லாமல், பட்டாளத்து வேலை மட்டுமே என் ஒரே லட்சியமாக இருந்தது.
தொடரும்.
நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்,
சென்னை.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
05-மார்ச்-201717:34:46 IST Report Abuse
கதிரழகன், SSLC ஜமேதார் பதவிக்கு நேரா ஆள் எடுத்தாங்களா? எங்க பெரியப்பா உலக போரிலே பட்டாளத்துல இருந்தாரு. படிப்பு இல்லாட்டி அடிமட்ட சிப்பாய் பதவிதான் எடுத்த எடுப்பில. எஸ்எஸ்எல்சி படிச்சிருந்தா ஹவில்தார் பதவியில் சேரலாம். அப்புறம் ரொம்ப மெதுவா ரிஸால்தார், ஜமேதார், சுபேதார், சாஹிப், சுபேதார் மேஜர் மாதிரி பதவி எல்லாம் வரும். பட்ட படிப்பு முடிஞ்சு பரீட்ச்சை பாஸ் செஞ்சா லெப்டினண்டு பதவியல தொடங்கலாம். மூணு லெப்டினண்டு பதவி இருக்கு. வட்டிக்கு கொடுக்கையில தோள்சின்னம் பாத்து கொடுக்கணும். ஒரு நட்சத்திரம், ஒரு நட்சத்திரம் மூணு சிங்கம், நட்சத்திரம் வெட்டுக்கத்தி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X